செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

டரியலிஸக் கவிதைகள்!‍ பாகம்-1 -காக்கை கூகூவென கூவும்!

பொடிவைத்துப்
பேசினார் தாத்தா
தும்மியது குடும்பம்!

மணக்க மணக்க
கணவனுக்கு 
மசாலா அரைத்த 
அதே அம்மிக்குளவியில் 
அவன் ரத்தம் பார்த்தால் 
பத்தினிப் பெண்!

முற்றும் துறந்த முனிவனை 
கேமரா பார்த்தது!

கனவில் நெளியும் 
பாம்பைவிட
 நீளமானது 
பாம்பு குறித்த அவன் பயம்! 

ரெண்டு பொண்டாட்டிக்காரன்மேல் 
புதிதாய் ஒருத்திக்குக் காதல்..
வானம் மும்மாரி பொழிய 
இனி முப்போகம் சம்போகம்தான்!

டெல்லிக்கு ராசானாலும்
திஹார் பக்கம் போகாதே!

நிமிர்ந்த நன்னடை 
நேர்கொண்ட பார்வைப்பெண்ணுக்கு
வரனே அமையவில்லை!

ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் 
கொஞ்சநாளில்
தூங்கிப்போனார்!

வரலாற்று சிறப்புமிக்க 
அந்த சந்திப்பில் 
வரலாறுக்குப்பதில்
பொருளாதாரத்தைப் பேசினார்கள்!

கறுக்கலில் 
கம்மாய்ப்பக்கம் 
குத்தவச்சவனை
நான்கைந்து கருக்கருவா
குத்திக் கிழித்தது!

ஜெனரல் பாடி மீட்டிங்கில் 
ஒரு பாடி கிடந்தது!

புன்சிரிப்பால் வருத்தப்பட்டான் 
பல்வலிக்காரன்!

அவள் விழியோரம் ஈரம்..
காக்கை எச்சம்!

டாக்டர் பிள்ளை நோயாளி
வாத்தியார் பிள்ளை மக்கு..
‍சொன்னவன் ஒரு பேக்கு!

இன்னமும்கூட கடிதம் எழுதுகிறார் என் அப்பா!
சீரியல் நடிகைகள் வரும் 
ரியல் எஸ்டேட் விளம்பரத்தையும் 
சீரியஸாய் பார்க்கிறாள் என் அம்மா! 

கேன்சருடன் சிரிக்கும் 
அவன் ப்ளட் க்ரூப் கூட‌
'பி பாஸிட்டிவ்' என்கிறது!

ஆற்றில் வெள்ளம்..
கழுவாமல் திரும்பினான்!

புள்ளி வைக்காமல்
சக்தி போட்ட கோலம் 
சகதியானது
மழையினால்!

பூமி கொசுக்களாலும் 
தவளைகளாலும் 
பாம்புகளாலும்
கூடவே 
பசிப்பிணிகளாலும் 
நிறைந்திருக்கிறது! 

புண்பட்ட நெஞ்சை
புகைவிட்டு ஆற்றிய‌
பெட்ரோல் பங்க் சிறுவனுக்கு
வேலை பறிபோனது!

தியேட்டர் டிக்கெட் கவுன்டருக்குள்
முண்டியெடுத்து வரிசையில் நின்று 
முகமறியா மனிதனிடம் 
டிக்கெட் பெற்று 
வெற்றிக் களிப்பெய்திய காலம்
பொற்காலம்!

நம் தொடைதட்டி,
"அடுத்த சீன்ல ராஜீவு ராதாவை கெடுக்கப்போறான்"
என்று முன்கதை மொழிந்த 
ஆர்வக்கோளாறு ரசிகனெல்லாம்
இப்போது உலகில் இல்லை!

கார்த்திகை மாதத்து நாய்போல‌
மார்கழி மாதத்து வீதியில் 
கன்னியர்தன் கண்களுக்காய் 
அலைகிறான் ஒருவன்!

இன்னமும் 
சாலிடர் டயனோரா
 ப்ளாக் அன்ட் ஒயிட் டி.வி பார்ப்பவர்கள்
பெருஞ்சிக்கனக்காரர்கள் மட்டுமல்ல!

15 வருடங்களாக 
எங்கள் ஆன்டெனாவை கழற்றவில்லை
காரணம்..
காக்கை குருவி எங்கள் சாதி!

தமிழகத்தின் விடிவெள்ளி 
11 மணிக்கே துயில் எழுவார்!
தமிழகத்தின் எழுச்சி நாயகனுக்கோ 
சிட்டுக்குருவி லேகியம்தான் உணவு!

சரக்குக் கப்பலும்
தரைதட்டிக் கவிழ்ந்தது!

சிறுகுடல் பெருங்குடலை தின்பதற்குள்
குடல்குழம்பு சாப்பாடு வந்தது!

தன்விதியை எண்ணி 
நொந்து கிடக்குது 
மார்க்கெட் மீன்!

டாஸ்மாக்கைக் கடக்கும்போது 
யாரோ உள்ளிருந்து அழைப்பதாய்
ஓர் உணர்வு..
மனப்பிராந்தி?

கடைசி அடியில்
கபாலம் திறந்தது..
ஆனால்
உயிர் மிச்சம் இருக்குது!

கோடுபோட்ட நோட்டில் 
கவிதை எழுதுபவனெல்லாம்
மொக்கைக் கவிஞனே!

லாரியிலிருந்து விழுந்து
இறந்த சித்தாள்
சிறுவன் கையில் 
பாதி தின்ற போண்டா! 

பெருசின் இறுமலால்
பிரிந்து படுத்தனர் 
புதுமணத் தம்பதியர்!

தூக்கத்திலிருந்தபோது
அவனைச்சுற்றி சாக்பீஸால்
கோடு கிழித்தார் ஒரு போலீஸ்காரர்..
கடைசிவரை 
எழவே இல்லை அவன்!

முயற்சி தெருவினையாக்கியது..
சுயதொழிலில் நஷ்டம்!

கூடுவிட்டு கூடுபாய்ந்து 
காதல் செய்தவர்கள்
கூடிக் களித்ததும்
கூலிப்படை வைத்து 
காதல் கணக்கு
தீர்த்துக் கொண்டனர்!

அவன்
போரடித்ததால் 
கொலை செய்தான்!

கூவத்தில் புதைந்த பிணத்தை
நிஜமாகவே 
வலைவீசி தேடுகிறது போலீஸ்!

என்கடன் 
வட்டிக் கட்டிக்கிடப்பதே!

முதல் கோணல் முற்றிலும் கோணலல்ல..
அப்படியே..
கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும்!

பள்ளி கொண்ட பெருமாளை
ஆற்று வெள்ளம்
கொண்டு போனது!

மேதாவிலாசம் கொண்டவனுக்கு
சுயவிலாசமிட்ட தபால் அனுப்பக்கூட 
விலாசம் இல்லை!

காதலில் விழுந்த அவனுக்கு
முதலில் எலும்பு முறிந்தது!

கணவன் மீது 
கொஞ்சம் பாசம் இருந்ததால்
ஸ்லோ பாய்சன் கொடுத்தாள்!  

ஜெட் ஏர்வேஸில் 
விமானியாக இருந்தாலும் 
அவனை 'பேமானி' என்றழைத்தான் 
ஒரு ஆட்டோக்காரன்!

'சென்னைக்கு மிக அருகில் 
விக்கிரவாண்டியில் வீடுமனை விற்பனைக்கு' 
என்பவனை கொல்வதா..புதைப்பதா? 
அல்லது கொன்று புதைப்பதா?

ரயில்பாதையோர 
குடிசையில் வசித்தாலும்
தற்கொலை எண்ணம் 
ஒருமுறையும் வரவில்லை
மினிம்மாக்கு!

கழிவிறக்கம் காணாதவன்மீது
கழிவிரக்கம்..
கேஸ்ட்ரோஎன்ட‌ரொலஜி டாக்டருக்கு!

அவனுக்கு
பசித்த நல்வயிறை
படைத்திட்ட கடவுள்
அப்பமுடன் அவல் பொரியை
தானே எடுத்துக் கொண்டார்!

தொழில் சூடுபிடித்தபோது
அவளுக்கு
நோய் வந்தது!

ஆலகால விஷத்தை
ஏககாலத்தில்
அவளுக்குக் கொடுத்தான்
காதல் கணவன்!

ஞாயிறு, 1 மே, 2011

பிறிதொரு மழைநாளில்... (சிறுகதை)

என் உறவுக்காரர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சற்றே சுவாரஸ்யமாக இருந்தது. சற்று கற்பனை சேர்த்து ஒரு கதையாக எழுதவும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பத்திரிகையிலும் பிரசுரமாகி சற்று கூடுதல் சந்தோஷத்தையும் கொடுத்தது.மிக சுமாரான கதைஓட்டமாக இருந்தாலும் விறுவிறுவென ரிலே ரேஸ்போல எழுதி முடித்துவிட்டது லேசான ஆசுவாசத்தை எனக்குத் தந்தது. நல்ல கதை இனி வருங்காலத்தில் நிச்சயமாக எழுத முடியும் என்ற நம்பிக்கையோடு.. கதைக்கு போகிறேன்...!
பிறிதொரு மழைநாளில்...                                            
காலைச் சூரியன் தன் திகிப்பைத் துவக்காத..அதே சமயத்தில் அதி உன்னதக் கதிர்களை பாய்ச்ச எத்தனித்த உத்தமப் பொழுது.. விடிந்துவிட்டதால் நடந்து சென்று டீ குடிக்கும் நோக்கத்தோடு எழுந்து விட்டேன். விடிந்து நேரமாகியும் இன்னும் சோம்பல் முறிக்காத ஆனந்தக் கண்ணீரைத் தாங்கி நிற்கும் கரு மேகங்கள் மனசுக்கு ரம்மியமாக இருந்தது.
பொடிசுகள் பள்ளிக்குச் செல்லும் நேரம் அது. புத்தகமூட்டைகளோடு அவர்கள் செல்வதைப் பார்த்தபோது என் பள்ளி நாட்களைத் தொலைத்துவிட்ட ஏக்கம் வந்தது. பக்கத்து கிராமத்திலிருந்து நடந்தே செல்லும் கொளுத்து வேலை செய்வதற்கே பிறந்த தொழிலாளர்கள் விறுவிறுவென என் வீட்டைக் கட‌ந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் அந்த சிறு தூறலுக்கும் அட்டையாய் உடலைச் சுருக்கிக் கொண்டு என் வீட்டு திண்ணையில் ஒதுங்கி நின்று மழையை சபித்தார்கள். சென்னை செல்லும் பிரதான சாலையின் ஓரமாய் இருக்கிறது என் வீடு. விடியற்பொழுதில் வீட்டில் என் மகளே டீப் போட்டுக் கொடுத்தாலும்கூட‌ அது என்னமோ டீக்கடையில் தினத்தந்தியை புரட்டிப் பார்த்துக் கொண்டே நான்கைந்து மிளாறுகள் உள்ளே செல்லும்போது அன்றைய பொழுது முழுதாய் விடிந்துவிட்டதைபோலத் தோன்றும். அதன்பிறகு மெல்ல‌ வீட்டுக்கு வந்து மகள் கையால் இன்னொரு டீ. இந்த தூறலை ரசித்தபடி ஒரு கோப்பை தேநீரை ருசித்தால்..? எவ்வளவு திவ்யமாய் இருக்கும்?
''எத்தனைவாட்டி சொல்லி இருக்கேன் வாப்பா...டீக்கடையில் போய் டீக் குடிக்காதீங்கன்னு...அது என்ன ஈமானோ.. டீ கூட போட்டுக் கொடுக்காத மகளா?'னு நாலு பேரு என்னைய நினைச்சா உங்களுக்கு சந்தோஷம்ல வாப்பா..?"- ‍மகள் சுமையாவின் வசவுகள் என் மனதுக்குள் ஒலித்தது. மனசுக்குள் சிரித்துக் கொண்டேன். என் தேநீர் ரசனை அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தாலும் பிரயோஜனமில்லை. அவளுக்கு நான் இப்போது ஒரு வயதான குழந்தை. என்ன.. குழந்தைக்கு 55 வயசு. அவ்வளவுதான்!
மழையை ரசித்தபடி வேஷ்டி சட்டையில் மெல்லிய தூறலை உள்வாங்கிக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தேன். வீட்டுக்குள்ளிருந்து வழக்கம்போல சுமையாவின் குரல் சன்னமாய் கேட்டது.
''காலங்காத்தால வெள்ளையும் சொள்ளையுமா மழையில நனைஞ்சுக்கிட்டு எங்கதான் போறாரோ..அப்புறம் காய்ச்சலா படுத்துக்கிட்டா யாரு பார்க்குறது...?"
தூறலிலன் வீர்யம் இப்போது குறைந்திருந்தது. கோளாறாய் போன ஏ.சியில் அடிக்கும் சாறலைப் போல வானம் நமநமத்திருந்து. திண்ணையில் ஒதுங்கியவர்களும் என்னைப்பார்த்து கலைந்தார்கள்.
''ஒரு குடையை எடுத்துட்டு போங்க வாப்பா!"‍- கண்டிப்பான குரலில் வாசலுக்கு வந்து என்னைப் பார்த்து கத்தினாள் என் மகள் சுமையா. - என் மகளின் கோபம் எப்போதுமே அழகு. இந்த மழைநாளில் இன்னும் அழகாய் இருந்தது அந்தக் கோபம்!
பல்லாங்குழிகளாய் மழைத் த‌ண்ணியை சுமந்தபடி ரோடு கிடந்தது. முழங்கால் வரை வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடந்தேன். சேறின் கறை பட்டால் சுமையா திட்டுவாள். மனதிற்குள் எப்போதும் மகள் நினைப்புதான் எனக்கு. ஒரே மகள்..செல்ல மகள். அவளை ஒரு செவிலியராக ஆக்கிக் காட்டவேண்டும் என்ற என் கனவை நிறைவேற்றியவளாயிற்றே...! பொதுவாக தகப்பன்கள் தன் மகளை டாக்டராக்கி இன்ஜினியராக்கி கற்பனை காணுவார்கள். நான் கண்ட கனவோ வேறு மாதிரியானது.

ப்போது எனக்கு 30 வயது. திருமணம் ஆகி மூன்று வருடங்கள் கழித்து பிறந்தவள்தான் சுமையா. பிறந்து இரண்டு வாரம் இருக்கும். இதே போல ஒரு மழைநாளில்தான் தூக்கம் வராமல் தவித்துக் கிடந்தேன். மெல்ல மெல்ல அக்னிப் பழம் ஒன்று என் வயிற்றுக்குள் முளைவிட்டதைப்போல ஒரு வலி. திண்ணையில் எழுந்து உலாவிக் கொண்டிருந்தேன். கூடத்தினுள் என் மனைவி மரியம் ''ரே ரே ரே..." என அவளுக்கு தெரிந்த ஒற்றைத் தாலாட்டில் குழந்தை சுமையாவை தூங்க வைக்க பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருந்தாள். என் வலிக்கு கணம் சேர்ப்பதைப்போல மகள் அங்கு அழுகையை தொடர்ந்த வண்ணம் இருந்தாள். நல்லவேளை மாமியார் எதேசையாய் அன்று தன் மகளை விசாரித்துவிட்டுப் போக கிராமத்திலிருந்து வந்திருந்தாள். மாமியாருக்கு ஊரில் நாச்சியார் என்ற பேரும் உண்டு. கொஞ்சம் நாட்டு வைத்தியம் தெரியும். காய்ச்சல் தலைவலிகளுக்கு இவர் சொல்லும் பரிகாரம் மற்றும் பத்தியத்தால் குணம் கண்டவர்கள் பாதிப் பேர். மாமியார் கை பட்டதால் லேசாய் வலி குறைந்திருந்தது. ஆனால் வயிற்றில் வேறு பெரிய கோளாறு இருப்பதாக எனக்குப் பட்டது. என் மனைவி பச்சை உடம்புக்காரி என்பதால் மாமியாரே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
எனக்கு அரசாங்க ஆஸ்பத்திரியென்றாலே அலர்ஜிதான். மாமியார்காரியின் பிரியத்திற்காக அங்கு சென்றேன். போகும் வழியில் ஆட்டோக்காரன் வேறு மழைக்குப் பிரியமான சாலைகளில் நிதானத்தை தொலைத்து ஓட்டிச் சென்று சேர்த்தான். அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கே உரிய பினாயில், நாப்தலின் இன்னபிற‌ வாசனை நெடிகளோடு ஏதோ இனம் புரியாத பயமும் என் மனதை நிறைத்திருந்தது. முகப்பிலே இருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவைக் கடக்கும்போது கேட்கும் அழுகைக் குரல்கள் ஒப்பாரி இத்யாதிகள் ஏனோ என்னையும் பயமுறுத்தும். இந்த காரணங்களுக்காகத்தான் நான் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வருவது இல்லை. விதி வலியதுதானே...! அவசர சிகிசை வார்டில் என்னை உட்கார வைத்திருந்தார் என் மாமியார். உள்ளே ஒரு நோயாளிக்கு திட்டிக் கொண்டே ஊசி போட்டுக் கொண்டிருந்தாள் ஒரு நர்ஸ். அரசாங்க ஆஸ்பத்திரிகளில் ஊசியைவிட கடுமையானது நர்ஸ்களின் வசவுகள் என நினைத்துக் கொண்டேன். எனக்கு வலி கூடிக் கொண்டே போனது. படுத்தவாறே கால்களுக்கு இடையே கைகளை கட்டிக் கொண்டு உடம்பை சற்று ஒருக்களித்து படுத்துக் கிடந்தேன். அப்படி படுத்தவாக்கில் கைகளை முறுக்கிக் கொண்டால் வயிற்றுவலி வேறு எங்கோ இடம் பெயர்ந்துவிட்டதைப்போல மாயத் தோற்றத்தை காட்டிச் சென்றது. திரும்பவும் நேராக படுக்க எத்தனித்தபோது வலி உயிரை வாங்கியது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.
''என்னம்மா ஆச்சு இந்த ஆளுக்கு? இங்கன படுக்க வச்சிருக்க... எந்திரிக்க சொல்லும்மா!"‍கணீர் என்ற குரல். சற்றுமுன் ஒரு நோயாளியை அதட்டி ஊசி போட்ட அதே வெண்கலக் குரல். நான் வீம்பாய் உடம்பை சுருக்கி கண்களை இடுக்கி வலியால் முனகுவதைப்போல பாவனை செய்தேன். ''வயித்துக்கு சரியில்லைம்மா...  ரெண்டு நாளா ராப்பூராம் ஒரே நோவு தாயீ... இஞ்சி கசாயம் கொடுத்தும் வயித்துப் புரட்டல் நிக்கல.." எனக்குப் பதிலாய் என் மாமியாரே பேசினார்.
''நீ அவருக்கு என்னம்மா வேணும்?"
''எ மக புருஷன்.. மருமவன் இவரு..."
''இவங்க வீட்டுல வரலையா?"
''இவுக அம்மா மட்டும்தான்...அதும் உடம்புக்கு சரியில்லாம கெடக்கு. எ மக‌
பச்ச உடம்புக்காரி.. எங்க வீட்டுலயும் வெளியூருக்குப் போயிருக்காங்க‌. அதான் நான் வந்தேன்!"
''சரி சரி...இந்தா சீட்டு, இதுல ஸ்கேன், எக்ஸ் ரே, ரத்த டெஸ்ட்டுக்கு எழுதி இருக்கேன். பக்கத்து வார்டுக்கு கூட்டிட்டுப் போமா..ஏ முனியாண்டி.. இந்த ஆளை ஸ்ட்ரெசர்ல வச்சு அந்த கடைசி பெட்டுல அட்மிட் பண்ணிக்கய்யா.. அதுக்கு முந்தி டெஸ்ட் எடுத்துட்டு வந்திரு... ஏ கனகா அதுக்குள்ள அந்தப் பெட்டை கொஞ்சம் மாத்தி வையி!" உத்தரவுகள் கடுகடுப்பாய் பறந்தபடி இருந்தன. ச‌வத்தை தூக்கும் லாவகத்தோடு என்னை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி டெஸ்ட்டுகள் எடுத்து கடைசியில் அந்த மூத்திரவாடை அடிக்கும் கடைசி பெட்டில் கிடத்திவிட்டு சென்றான் முனியாண்டி. இன்னொரு நர்ஸ் வந்து ஒரு ஊசியைப் போட்டாள். மயக்கமாய் வந்து கண்கள் சொருகி உறக்கம் வந்தது எனக்கு!
''சாப்பாடு வாங்காத ஆளுங்க சாப்பாடு வாங்கிக்கங்க...ஏ வேலாயுதம்..வேலாயுதம்...எங்கய்யா அந்த ஆளு..நைட்டு மட்டும் சாப்பாடு வாங்குறான். காலையில காணாமப் போயிர்றான்.. ஆளை அனுப்பி வச்சிரு கமலா... ஏ புள்ள பெறாக்கு பாக்காம போயி பெட்டுல படு.. சீஃப் டாக்டர் ரவுண்ட்ஸ் வர்ற நேரம்!"- கத்தல் குரலில் கண் விழித்தேன். அதே ராட்சஸிதான். இவளுக்கெல்லாம் நர்ஸ் வேலை யார் கொடுத்தது? காலை சாப்பாட்டு நேரம் என்பது விளங்கியது. வண்டியில் பிரெட் பால் வாங்கிக் கொண்டு பெட்டுக்கு வந்தபடி இருந்தார்கள். எனது இடது கையில் ஊசி செருகப்பட்டு வெள்ளை பேண்டேஜ் போட்டு  தலைக்கு மேல் க்ளுக்கோஸ் பாட்டில் தொங்கியது. மெல்ல எழுந்திருக்க முயன்றேன். நான் எழ எத்தனிப்பதை உணர்ந்த என் மாமியார் சிறுநீர்ப்பை  மாட்டியிருப்பதாகச் சொன்னார். மீண்டும் தலையணையில் சரிந்து அந்த வார்டை இடவலமாக.. வல இடமாக பார்வையால் துலாவினேன். ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியின் வார்டுக்கே உரிய சகல லட்சணங்களுடன் இருந்தது அந்த வார்டு. அதை வர்ணிக்க தேவையில்லை என்றே தோன்றுகிறது. நான் படுத்திருக்கும் பெட் மற்ற நோயாளிகளின் பெட்டைவிட அழகாய் இருப்பதாய் எனக்குத் தோன்றியது.
லேசான குரலில் மாமியாரிடம் டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்டேன்.
அப்பன்டீஸாம். ஓட்டல் சாப்பாடு.. பட்டினியாக கிடந்தது எல்லாம் தப்பு என்று சொன்னாராம்.
உண்மைதான். அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் இருந்தேன். சினிமா ஆசையால் சென்னைக்கு ரயிலேறினேன். எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை அப்போது. எப்படியோ உறவுக்காரப் பையனின் ஒண்டுக் குடித்தன மேன்ஷனில் அட்டையைப்போல ஒட்டிக் கொண்டு வாய்ப்பு தேடும் காலத்தில் அல்சரும் கூடவே மஞ்சள் காமாலையும் வந்து ஆளை உருக்கிவிட்டது. பேச்சுலர் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே..!     
ன்னும் இரண்டு நாட்களில் அப்பன்டீஸ் ஆபரேஷன். ஐய்யோ.. இன்னும் இரண்டு நாட்களா..? மல்லிகா.. அந்த ஆஸ்பத்திரியின் தலைமை செவிலியராம். வந்தநாள் முதலாய் என்னையும் எல்லோரையும் கடுகடுப்பான வார்த்தைகளால் எப்போதும் மிரட்டி உருட்டி உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருக்கும் அதே நர்ஸ்தான். பக்கத்து பெட்காரரிடம் மல்லிகா நர்ஸ் குறித்து விசாரித்தேன். அந்த ஆள் ஒரு மாசமா இதே வார்டில் இருக்கிறாராம். என்ன எழவு நோயோ தெரியவில்லை. அந்த ஆளிடம் கேட்கத் தோன்றவில்லை. இந்த மல்லிகா மூஞ்சியைப் பார்த்துக் கொண்டு இங்கு படுத்துக்கிடக்கும் அந்த ஆள் நிச்சயம் சபிக்கப்பட்ட ஜென்மமாகத்தான் இருப்பார் என நினைத்துக் கொண்டேன். ''திமிரு பிடிச்ச பொம்பளை, ராங்கிக் காரி, தலைக்கனம் பிடிச்ச கழுதை, வாயாடி.." ‍இதெல்லாம் அந்த வார்டில் அந்த மல்லிகா நர்ஸ் இல்லாதபோது கேட்ட அவர்குறித்த வசவுகள்தான்! நானும் அதை ஆமோதித்தேன்.
''கவருமென்ட் சம்பாத்தியம்னா இம்புட்டு திமிறா..கோவமாவா நோயாளிகள்கிட்ட இருக்கணும்."
  நர்ஸ்னாலே எனக்கு அன்னை தெரசா, நைட்டிங்கேல் போன்ற பெண்மணிகளின் பிம்பங்கள்தான் ம‌னதிற்குள் நிழலாடியது. பரிவோடு நோயாளிகளை கவனிக்கத்தானே இந்தப் பொம்பளைக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்குது? கிரிமினல்கள் போலீஸ்காரர்களாக ஆவதைப்போல கொலைகாரர்கள் டாக்டர்கள் ஆவதைப்போல இந்த புரையோடிய சமுதாயத்தில் மல்லிகா போன்ற ராங்கிக்காரிகளும் நர்ஸாகி விட்டார்கள் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். ஹார்லிக்ஸ், பிஸ்கெட், இளநீர் என என்னைப் பார்க்க வந்து பாசம் காட்டிய சொந்தங்களிடமும் 'இதென்ன சந்தை மடமா?' என திட்டி விரட்டாத குறையாக அனுப்பியிருக்கிறாள் அந்த நர்ஸ் மல்லிகா. என் மனைவி சொன்னபோது பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டேன். அடுத்தடுத்த தினங்களில் மல்லிகா நர்ஸ் ஊசி குத்தும்போது கூடுதலாக வலிப்பதைப்போல ஒரு பிரம்மை. 
ன்று காலை 10 மணிக்கு  ஆபரேஷன்...வழக்கம்போல மல்லிகா நர்ஸ் தன் வெக்கையேறிய‌ குரலில், ''ஏ! தம்பி இன்னிக்கு சாயங்காலம் உனக்கு ஆபரேஷன். தண்ணிகிண்ணிய குடிச்சித் தொலைச்சிறாத‌..எதையும் சாப்பிட்டுறாத.. என்ன புரியுதா..?"
பேசப் பிடிக்காததால் முறைத்தபடி சரி என்பதுபோல் தலையாட்டிவைத்தேன்.
'இவளுக்கு இந்த மரியாதை போதும் ஜமீல்..'- ‍மனசுக்குள் கனன்றேன்.
ஆபரேஷனும் ஒரு சுபயோகமில்லாத தினத்தில் நடந்து முடிந்தது. ஏழாம் நாள் தையல் பிரித்துவிட்டார்கள். மகள் பிள்ளைப் பெத்துக் கிடப்பதால் என் மாமியார்தான் அங்கு எனக்கு யாதுமாகி நின்றார். கிளம்பும்போது என்னை எதையும் சுமக்கவிடாமல் உடமைகள் அனைத்தையும் தன் தோளில் சுமந்து கொண்டு என்னோடு நடந்தார். அம்மா வராத குறையை மாமியார் தீர்த்து வைத்தது மல்லிகா நர்ஸின் சுடு சொற்களில் வெந்து நொந்த என் மனதுக்கு மிக ஆறுதலாக இருந்தது. அந்த கணத்தில் ஆண்பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாத அந்த மகராசிக்கு நல்ல (மரு)மகனாக இருக்க விரும்பினேன்.
 ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தோம். மாத்திரைகளை விழுங்கும்போதெல்லாம் 'ஏய்.. இன்னிக்கு மாத்திரை சாப்பிட்டியா?..' என்று கடுவன்பூனையைப்போல மல்லிகா நர்ஸின் குரலும் ஏனோ மனதுக்குள் அசரீரியாய் கேட்டது. 'அதென்ன ஏய்..? ஆடுமாடுகளைபோல!'...அழகாக கூப்பிடுவதற்கென்றே வைக்கப்பட்டிருக்கிற என் பெயரை இந்த பாதகத்தி ஒருநாள்கூட‌ கூப்பிடாதது கோபத்தைக் கிளறிவிட்டது. அன்று என் வாழ்வின் முக்கியமான ஒரு முடிவை எடுத்தேன். என் செல்ல மகள் சுமையாவை ஒரு நல்ல செவிலியராக்க வேண்டுமென்று! இதோ இன்று அவள் வளர்ந்து என் விருப்பத்துக்கு மதிப்பளித்து நர்ஸிங் படித்து அந்த மல்லிகா வேலைபார்த்த அதே மாவட்ட தலைமை மருத்துவமனையில் நர்ஸாக சேர்ந்து ஒரு வருடம் முடியப் போகிறது.
''பாய்..! டீயை எடுத்துக்கங்க!" டீக்கடை ‍முருகானந்தம் குரலில் நிகழ்காலத்துக்கு வந்தேன். மனதுக்குள் சாதித்துவிட்ட பூரிப்பு பொங்கி பிரவாகித்துக் கிடந்தது.
''என்ன மாமா! சுமையா ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டாளா?" என் மகளோடு வேலை பார்க்கும் சுமதி அவளது ஸ்கூட்டியை நிறுத்திய‌வாறு என்னை நோக்கிக் கேட்டாள். இவள் அதே மாவட்ட தலைமை மருத்துவமனையில் உதவி மருந்தாளுனராக பணி புரிகிறாள். ''இன்னிக்கு நைட் டூட்டிம்மா! அதனால வீட்டுலதான் இருக்கா!" என்றேன். ''சரி மாமா..வீட்டுக்குப் போய் அவகிட்டே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு அப்புறமா ஆஸ்பத்திரிக்குப் போறேன்..நீங்களும் வர்றீங்களா மாமா?" என்றாள். ''இல்லைடா.. நீ போ நான் பேப்பர் படிச்சுட்டு சாவகாசமா வர்றேன்!" என்று சொல்லிவிட்டு அவள் சென்றதும் கொஞ்ச நேரம் தினத்தந்திக்குள் மூழ்கிப்போனேன். என் சிந்தனை மீண்டும் பின்னோக்கியது. சுமையாவை படிக்க வைக்க நான் பட்ட கஷ்டங்கள்.. ஒரு விபத்தில் மனைவி மரியத்தை பறி கொடுத்தது. எல்லாம் காட்சிப்படிமங்களாய் வந்து போனது. மிகுந்த சிரமங்களுக்கிடையே சுமையாவை ஒரு பையனுக்கு கட்டி வைத்தேன். மருமகன் டிப்ளமா முடித்துவிட்டு இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். மகளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. நான் தாத்தா ஆகும் அந்த நாளுக்காக ஏங்கிக் கிடக்கிறேன்.. தினத்தந்தியில் பக்கங்களும் டீ கப்பில் டீயும் தீர்ந்திருந்தன.
ல்ல மழைநாள் அன்று! கொள்ளைப்புறத் தென்னை மரம் சாய்ந்துவிடுமளவுக்கு பெய்யென பெய்யும் பேய் மழை! சுமையா ஞாபகம் வந்தது எனக்கு. டூட்டி முடியும் நேரமாச்சே.. இந்த மழையில நல்லா நனைஞ்சிடுவாளே என் பொண்ணு' அழைக்கக் கிளம்பினேன். ரெயின் கோட்டை மாட்டிக் கொண்டு நடையைக் கட்டினேன். ஆஸ்பத்திரியில் சுமையாவின் தோழி சுமதி எதிர்ப்பட்டாள். ''ஏன் மாமா மழையில நனையுறீங்க? சுமையாக்கிட்டதான் ஸ்கூட்டி இருக்குல்ல.. இன்னிக்கு உங்களை வகையா திட்டப் போறா..!" சொல்லிவிட்டுச் சென்றாள். மெல்ல சுமையா இருக்கும் வார்டுப்பக்கம் சென்றேன். வார்டுக்குள் நுழையும் முன் வராண்டாவில் கும்பலாய் கூட்டம். 

''இந்தச் சிறுக்கிக்கு பெரிய மனுஷங்கன்னு மட்டு மருவாதி வேணாம். அவவீட்டுக்குள்ள நொழைஞ்சமாதிரில்ல வெளில வெரட்டிவிடுறா..இவளுக்கெல்லாம் நல்ல சாவே வராது.."கூட்டதில் ஒரு வயதான பெண்மணி முணுமுணுத்தது என் காதில் ஒலித்தது.
''இந்த சுமையா டார்ச்சர் தாங்க முடியலை.. அங்கே நிக்காத இங்கே நிக்காதனு கடுகடுனுதான் எப்பவும் இருப்பா.. வீட்டுல என்ன டார்ச்சரோ நம்ம தாலிய நெதமும் அறுக்குரா.." என் வயதுக்காரர் ஒருவர் என்னைக் கடக்கும்போது சத்தமாகவே சொல்லிவிட்டுப் போனார். எனக்குள் உயிர் கறுகும் வாசம்.  'ஐய்யோ என் வீட்டிலேயே ஒரு மல்லிகாவா?' மனசை ஏதோ ஒன்று பிசைய அங்கு நிற்கப் பிடிக்காமல் வீட்டை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். வானம் வெளிறிக் கிடந்தது என் மனதைப்போலவே!
முக்கிய செய்திகளில் காற்றழுத்த தாழ்வு மையம் கொண்டிருப்பதாகவும் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை வாசித்துக் கொண்டிருந்தார் ஒருவர் டி.வி‍யில்! சாய்வு நாற்காலிக்குள் முதுகைக் கொடுத்து அப்படியே கண்கள் மூடிக் கிடந்தேன். வெளியே பைக் சத்தம் கேட்டது. சுமையா வந்துவிட்டாள்.
''என்ன வாப்பா.. சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்க.. சுமதி கூப்பிட்டும் கவனிக்காத மாதிரி போனீங்களாமே.. மேலுக்கு சரியில்லையா? மழைநேரம் ஏன்ப்பா இப்படி நனையுறீங்க...நான் என்ன சின்னக் குழந்தையா டெய்லி என்னைக் கூட்டிட்டு வர்றதுக்கு?" சுமையா பேசிக் கொண்டே போனாள்.
''சுமையா உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்!" என்றேன். டி.வி‍யில் செய்திகள் முடிந்து விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது. புரியாமல் குழப்பத்துடன் டி.வி‍யை அணைத்துவிட்டுவந்து என் அருகே மண்டி போட்டு உட்கார்ந்தாள் சுமையா.
நான் மல்லிகா நர்ஸில் ஆரம்பித்து வயதான பெண்மணி விட்ட சாபம் வரை எல்லாம் சொன்னேன். தலை குனிந்தபடி இருந்தாள். நான் பேசி முடித்தவுடன் நிமிர்ந்து பார்த்த என் மகளின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. எனக்கும் அழுகை வர எத்தனித்த கணத்தில் பேச ஆரம்பித்தாள்.
''வாப்பா... நான் வேலை பார்க்குறது அரசாங்க ஆஸ்பத்திரி. இங்க வர்றவங்க எல்லாருமே ‌கிராமத்து ஜனங்க.. எனக்கும் அன்னை தெரசா மாதிரி நைட்டிங்கேல் அம்மையார் மாதிரி பேர் எடுக்கணும்னுதான்ப்பா ஆசை. அந்தக் கனவுலதான் உங்க வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து இந்த வேலைக்கு ஆசைஆசையாய் வந்தேன். ஆனா வந்தபிற‌குதான் தெரியுது..இங்கே அன்பு மட்டும் போதாதுனு! ரொம்ப அன்பை மட்டும் காட்டிக் காட்டி ஒரு கட்டத்துல கேணச்சினே என் காதுபடவே பேசுனாங்க. மாத்திரையை சாப்பிடாமல் கொட்டுறது.. கண்டகண்ட இடங்களில் எச்சில் துப்புரது. தேவையில்லாம குடும்பத்து சங்கதிகள் பேசி வம்பள‌க்கிற‌துன்னு இந்த இடத்தையே என் அன்பு வேற மாதிரி ஆக்கிடுச்சு.. இங்கே அன்பையும்கூட காட்டமாக காட்ட வேண்டியிருக்குப்பா... எனக்கு முன்னாடி இங்கே மல்லிகா நர்ஸ் இந்த ஆஸ்பத்திரியை அவ்வளவு கண்ட்ரோலா வச்சிருந்ததா டைரக்டர் ஒருநாள் மீட்டிங்ல சொன்னார். மாத்திரை சாப்பிடு.. ஊசி போட்டுக்கோ, ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடி எதையும் சாப்பிடாதேனு அந்த நர்ஸ் காட்டுன கடுமையைத்தான் இப்ப காட்டுறேன்.. ஒருநாளும் அவங்களை ஆடுமாடு மாதிரி நினைச்சுப் பார்க்கலை..நோயாளிகள் குழந்தைகள் மாதிரி.. அன்போடு கொஞ்சம் கண்டிப்பும்  இருந்தாத்தான் பூரணமா குணமடைவாங்க வாப்பா! இப்பச் சொல்லுங்க வாப்பா.. நான் பண்ணுனது தப்பா?" !" என்றாள் சுமையா என்ற மல்லிகா.  ''இல்லைம்மா.. நீ செஞ்சது சரிம்மா!" ஆறுதலாய் மகள் முகத்தை கைகளில் ஏந்தினேன்.
 றுநாள் விடிந்ததும் மல்லிகா நர்ஸைப் பார்க்க முடிவெடுத்துக் கிளம்பினேன்.  ஏனோ பார்க்க முடிந்தால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று என் மனம் நினைத்தது. மழையின் உபயத்தால் சாலைகள் எல்லாம் பிசுபிசுத்துக்கிடந்தன . மல்லிகா நர்ஸுக்கு ரொம்ப வயதாயிருக்குமோ..? இந்த ஊரில் இருப்பாரா? என் மகள் குத்துமதிப்பாய் சொன்ன ஒரு தெருவில் மல்லிகா நர்ஸை விசாரிக்க கிளம்பினேன். அபத்தமாய் இருந்தாலும் எப்படியாவது கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு அலைந்ததில் அந்த வீட்டை கடைசியில் கண்டுபிடித்தே விட்டேன். என் மகள் சொன்ன தெருவில் முதல் வீடாய் இருந்தது அந்த வீடு. 'மல்லிகை இல்லம்' ரசனையாய் மனதுக்கு ரம்மியமாய் தோட்டங்கள் சூழ அழகாக இருந்தது அந்த வீடு. காலிங் பெல் அழுத்தி காத்திருக்க.. உள்ளே இருந்து ஒரு வயதானவர் வந்தார்.. ''மல்லிகா நர்ஸ் இருக்காங்களா?" என்றேன். ''என்ன விஷயம் உள்ளே வாங்க...!" என்றார். என்ன சொல்வது தெரியாமல் ஒரு கணம் விழித்தேன்.. ''இல்ல..அவங்க எனக்கு நிறைய‌ உதவி செஞ்சிருக்காங்க...கொஞ்சநாள் முன்னாடிதான் வெளியூர்ல இருந்து வந்தேன்.. அதான்.." சுருக்கமாய் சொன்னேன். ''பரவாயில்லைங்க இப்ப மீண்டு வந்துட்டேன்.. அவ என்னைவிட்டு போயி இன்னியோட மூணு வருஷமாச்சு!" என்றவர் நீண்ட பெருமூச்சு ஒன்றை உதிர்த்தார். எனக்கு காலுக்குக் கீழே உலகம் நழுவியது. 'மல்லிகா நர்ஸ் இறந்துவிட்டாளா?' அதிர்ச்சியில் நின்றேன்.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்!
''சாவறதுக்கு முன்னாடி வரை நர்ஸாத்தான் இருந்தா. வைராக்கியக்காரி.. ரிட்டயர்ட் ஆகியும் இங்கே செய்யது அம்மாள் க்ளினிக்ல நர்ஸா இருந்தா.. என்னமோ இந்த வேலையை அவ வேலையா பார்க்கலை.. கடைசி வரை நர்சாவே வாழ்ந்து சாவ‌ணும்னு சொல்லுவா...ஆஸ்பத்திரில நைட் டூட்டி பார்க்குறப்போ நெஞ்சுவலியில போய் சேர்ந்துட்டா... இன்னியோட மூணு வருஷமாச்சு வேத்து மனுஷா இத்தனை பேரு துக்கம் விசாரிக்க வந்திண்டுதான் இருக்கா.. நிஜமாலுமே கொடுத்து வச்சவ அவ..!" விரக்தியாய் சிரித்தபடி பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார் அந்தப் பெரியவர். அங்கே மல்லிகா நர்ஸ் அதே நர்ஸ் யூனிபார்மில் புன்னகை பூத்தபடி படமாக சிரித்துக் கொண்டிருந்தாள். 










 

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

அஹம் தமன்னாஸ்மி!

நண்பன் 'போடாங்கோ' என்றான்.
'கோ'வுக்குப் போனேன்!



'ராதா மகளைவிட
ராதா அழகு' என்கிறான்
என் நண்பன்
போடாங்கோ!

முகத்தின் அழகு
பெயரில் வழிகிறதாம்
அமலா பால்!


ஹன்சிகா மோத்வானிக்கும்
சிலை வைப்பான்
ஒரு தட்டுவாணிப்பயல்!


நேற்றுவரை
அஹம் தமன்னாஸ்மி!




செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

முத்தம் செய்!

தேவதையை
இதுவரை நான் கண்டதில்லை
ஆனால் நிச்சயம்
உன் சாயலில் இருப்பாள்!

 செல்போன்கள் மாறினாலும்
ந‌ம்காதலுக்கு மட்டும் உண்டு
லைஃப் டைம் வேலிடிட்டி!

கண்ணாடி பார்த்து
திருத்தம் செய்கிறாய்
இனி கண்ணாடி
தன்னை திருத்திக் கொள்ளும்!



'அஜீத் சூர்யாவைவிட
நீ தான்டா அழகு!'‍
பொய் சொன்ன வாய்க்கு
முத்தம் வைக்கிறேன்!

காலை
மாலை
இரவு
- டாக்டரின் பிரஸ்கிரிப்ஷன் போல்
மூவேளை முத்தத்தால்
உயிர்த்துக் கிடக்குதென் ‌
இதயம்!   


காபி என்று
 எதையோ கொடுத்தாய்
 கஷாயம் தோற்றது..
நீ மிச்சம் வைத்த
 தேநீர் மட்டும்
 தேனாய் இனித்தது!


சுதந்திரமாய்
 பட்டொளி வீசி
 கொடியில் பறக்குது
 உன் தாவணி!

தேனிலவு அழைத்துபோகா
முட்டாள் கணவன்
நானாகத்தான் இருப்பேன்..
'நம் வாழ்க்கையே நீண்ட தேனில‌வுதானே' என்றாய்!



வெள்ளாவி வச்சு உன்னை
 வெளுக்கவும் இல்லை
 வெயிலுக்கு காட்டாமல் உன்னை
 வளர்க்கவும் இல்லை..
 ஆனாலும்
 யாத்தே யாத்தே எனக்கு என்னாச்சோ!


'போனவாரம்தானே கொடுத்தேன்' என்கிறாய்
 'அது போனவாரம்'என்கிறேன் நான்
 உனக்கு எப்போதும் நான்‌
காதல் கைப்புள்ள தான்!



'என்னைவிட்டுப் போயிடாதடா' என்கிறாய்
நான் பிரிந்து செல்வதே
உன்னைவிட்டு எப்போதும்
பிரியாமல் இருக்கத்தான்!


என்ன பாவம் செய்தாய்
என் கண்ணில் விழுந்தாய்...
என்ன புண்ணியம் செய்தேன்
என் கண்ணில் விழுந்தாய்!

உனக்கு கிறித்தவ மதம்
 பிடித்துவிட்டுப் போகட்டும்...
எனக்கு காதலிக்கும்போது மட்டுமே
மதம் பிடிக்கும்!

என் காதலை நிராகரித்த பெண்களுக்காய்
இப்போது கோவிலே  கட்டலாம்
உனக்கு தாலியைத் தவிர என்ன கட்டலாம்?

உன் ஞாபக மழையில்
நனைந்து நனைந்து
எனக்கு ஜலதோஷம்
இப்போது தும்மினாலும்
உன் சத்தம்!

என் கவிதைகளுக்கு கருவானவள்
எனக்கும் சேர்த்து கரு சுமந்தாள்!


    சனி, 5 பிப்ரவரி, 2011

    தமிழர் சமயத்தின் நீட்சியே இஸ்லாம்!

    சமயம்... நன்னெறிகளோடு மக்கள் வாழ நல்வழி காட்டுபவைகளே சமயங்கள் ஆகும். சமைத்தல் என்பதற்கு உண்பதற்கேற்றவாறு உணவுப் பொருட்களைப் பக்குவப்படுத்துதல் என்பது பொருளாகும். சமயம் என்பதும் மனித மனத்தை எந்த மூடாக்குகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் பக்குவப்படுத்தி வைக்க உருவானதுதான். அனைத்து சமயங்களும் பொதுமையான கொள்கைகளைக் கொண்டவையாகும். சர்வதேச சட்டங்களும் இதை மையமாக வைத்தே உருவாகி இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இஸ்லாம் என்ற அந்த மதம் உன்மத்தம் அன்று மிக உன்னதமானதும் இந்த பொதுமைக் கொள்கைகளை உலகுக்கு எடுத்துச் சொன்ன நவீன மார்க்கமும் ஆகும். இத்தகு சிறப்பு வாய்ந்த இஸ்லாம் என்ற மதம் தமிழர் சமயத்தின் நீட்சி என்பதே இக்கட்டுரையின் நோக்கம். தொல்தமிழரின் சமய மெய்யியல் கொள்கைகளும், தமிழரின் வழக்குகளும் வழக்காறுகளும் எவ்வாறு இஸ்லாமோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை விளக்கமாகவும் தமிழ் மொழியின் தாக்கங்கள் உலக மொழிகளிலும் குறிப்பாக சமய இலக்கியங்களிலும் எந்த அளவில் ஊடுருவியுள்ளனவென்பதை இக்கட்டுரை விளக்குகிறது. தனிமனிதனைக் கடந்து உணர்த்தி நிற்கும் அண்டத்தை அல்லது ஒன்றை (கடவுள், இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே சமயம் ஆகும். 'ச‌மயம்' என்பது வாழ்வின் பல்வகைச் சூழ்நிலைக்கும், ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு நிலைக்கும் ஏற்ப மனிதன் தன் நடத்தையை அமைத்துக்கொள்ள உதவியாய் அமைந்த ஒரு கருதுகோள். எல்லாத் தமிழரும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். .  
    ஆதிச் சமூகம்.. தமிழ்ச் சமூகம்:
    உலகில் தோன்றிய முதல் இனம் தமிழனமே என்றும், அவ்வினம் வெள்ளத்தால் அழிந்துபட்ட குமரிக் கண்டத்தில் என்றும் அறியப்படுகின்றது. அம்முதல் இனம் கொண்டிருந்த கடவுள் நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கென்றே ஒரு சமயமும் மெய்யியல் கோட்பாடுகளும் வளர்ந்தன. அச்சமயத்தின் பெயர் அறியப்படவில்லையாயினும் அதனை தமிழ்ச்சமயம் அல்லது தமிழர்சமயம் என அழைப்பதில் தவறில்லை எனலாம்.
    குமரி நாட்டுக் கொள்கை:

    ஒருவரது வரலாற்றை அவர் உண்மையாகப் பிறந்த காலத்தினின்றும் இடத்தினின்றும் தொடங்கல் வேண்டும். அஃதன்றி வேறொரு காலத்திலும், வேறொரு நாட்டிலும் பிறக்காதவராகக் கொள்ளின், அவ்வரலாறு உண்மையானதாக இருக்க இயலாது. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிய குமரி நாடே! ஏழ்குணகாரை நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்தெங்கநாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குறும்பனை நாடு, ஏழ்குன்ற நாடு என 49 உட்பிரிவுகளாகவும், குமரிக் கொல்லம் என்ற மலைநாட்டையும் சேர்த்து 50 குறுநிலப்பகுதிகளாக குமரிக் கண்டம் விளங்கியது. உலகின் மொழியியல் சமய, சமூக, நாகரிக வரலாறுகளைக் குமரிக் கண்டத்திலிருந்து தொடங்காதவரை தமிழ்ச்சமூகத்தின் வரலாறு முழுமை பெறாது. இப்பெரும் நிலப்பரப்பை பாண்டிய மன்னர் கட்டி ஆண்டனர். கடல்கோளுக்கு முன்னும் பின்னும் ஆண்டிருந்த பாண்டிய மன்னர்கள் பற்றி இலக்கியங்கள் பேசுகின்றன. மூன்று ஊழிகள் குமரிக் கண்டத்தை அழித்ததாகச்சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு ஊழியின் போதும், முதல் இடை என்றவாறு தமிழ்க்கழகங்கள் செயல்பட்டுவந்ததாகவும் இறையனார் அகப்பொருள் கூறுகிறது. அகத்தியனும், இறையனாரும், முருகனும், முரஞ்சியூர் முடி நாகராயிரும், நதியின் கிழவனும் உள்ளிட்ட நான்காயிரத்து நானூற்று நாப்பத்தி ஒன்பது புலவர்கள் முதல் கழகத்தில் பணியாற்றிவர்கள். பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை உள்ளிட்ட பல இலக்கியங்கள் ஆங்கே படைக்கப்பட்டன. காய்சின வழுதிப் பாண்டியன் முதல் கடுங்கோன் வரை 89 மன்னர்கள் வரை ஆண்டிருந்தனர். குமரிக் கண்டம் முற்றிலும் அழிந்துபோன காலத்தில் வாழ்ந்திருந்த மன்னரின் பெயர் தெளிவாக இல்லை. கி.மு 20000 ஆண்டுகளில் குமரிக் கண்டம் என்ற நிலப்பரப்பில் வாழ்ந்திருந்தபோது நகரிய நாகரிகத்தில் வாழ்ந்திருந்தனர். அதற்குச்சான்றாகவே இன்றைய பூம்புகார் நகருக்கு கிழக்கேயுள்ள கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வால் அறியப்படுகிறது. உலக இலக்கியங்களில் திணை இலக்கியம் என்பது தமிழுக்கே உரியது. மனிதனையும் கடவுளையும் உயர்திணையாக தமிழர்கள் மட்டுமே கருதினர். மற்ற அனைத்தும் அஃறிணையாக கருதப்பட்டது. மேலும் கவின் கலை, இசை, வானியல், கணிதவியல் போன்ற முதிர்ந்த நிலைகளை குமரிக் கண்டத் தமிழன் கொண்டிருந்தான்.
    இலக்கியத் தடயங்கள்:
    'பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள' என சிலப்பதிகாரம் சொல்கிறது. இவ்வெள்ளச்செய்தியை கனானிய, உகாரிய, எகிப்திய இலக்கியங்களும் உறுதிப்படுகித்துகின்றன. அவாய்(HAWAAI ) தீவின் இவ்வுலகம் வெள்ளத்தால் அழிந்த கதையை தம் மொழியில்(Kai-a-ka-hina-lil) ( sea that made the cheifs fall down) என்றும், ஓசரிஸ்(OSARIS )என்ற மன்னர் கடலில் மூழ்கி இறந்ததையும் அவனது மகனான ஓரஸ் (HORUS)என்பவனும் கடலில் மூழ்கியதை எகிப்திய ஆதி இலக்கியங்களில் காணலாம். மேற்கண்ட செய்திகளின் அடிப்படையில் ஏறக்குறைய எல்லா சமயங்களும் எடுத்துரைக்கின்றன. ஒரே செய்தியை எவ்வாறு உலக இலக்கியங்கள் ஒரே நோக்கில் கூறுகின்றன என்பதை ஆய்வு செய்யும்போது இச்செய்திகளோடு தொடர்புகளுடைய மக்கள் தொடக்கக் காலத்தில் ஓரினமாகவோ அல்லது ஓரினத்தின் வழிவந்தவர்களாகவோ இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.



    தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமிய சிந்தனைகள்:
    ‘சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்! என்கிற நபிமொழிக்கு ஒப்பாக
    ‘திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
    படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
    உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்’ என்று நம்மாழ்வார் இறைவனைப் பற்றிக் கூறியதைக் காணலாம்.
    திருக்குர்-ஆனில் 'அவரே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அதற்கு முன்னர் அவனுடைய அர்ஷ் நீரின்மீது இருந்தது.' என்று உலகம் படைக்கப்பட்டவிதத்தை விளக்குகிறது.
    உந்துவளி கிளர்ந்த வூழூ மூழியும்
    செந்தீச்சுடரிய வூழியும் பனியோடு
    தண்பெய றலைஇய வூழிவு மவையிற்
    றுணமுறை வெள்ள மூழ்கி யார்தருபு
    மீண்டும் பீடுயிர் பீண்டி யவற்றிற்கும்
    உள்ளீடாகிய விரு நிலத் தூழியும்' என்கிறது பரிபாடல். எனவே படைப்புத் தொழில் பற்றிய கருத்து, தமிழில் சொல்லப்பட்டு தமிழர் குடியேறிய நாடுகளிலும் சிற்சில மாற்றங்களுடன் சொல்லப்பட்டன என்ற உண்மை, மேற்கண்ட செய்திகளால் உறுதிப்படுகிறது.
    ஏகத்துவ அரசியல் நோக்கில் இஸ்லாம்:
    இஸ்லாம் முன்வைக்கும் ஏகத்துவக் கொள்கையான ஓரிறை அரசியல் நபிகள் நாயகத்தின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் இஸ்லாமியர்களுக்கு புதிய உண்மைகளை உருவாக்கித் தருகின்றன. வணக்கத்திற்குரியவன் அல்லாவைத் தவிர வேறுயாருமில்லை (லாயிலாஹா இல்லல்லாஹு) அவன் தனித்தவன் (வஹ்தஹு) அவனுக்கு யாதொரு இணையுமில்லை (லாஷரீக்கலஹு) அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக. அல்லாஹ் தேவையற்றவன், யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (குல்ஹுவல்லாஹுஅஹது, அல்லாஹுஸமது. லம் யலித், வலம் யூலது வலம் யக்குன்லஹு, குஃபுவன் அஹது) என்பதாக பல நிலைகளில் இது அறியப்படுகிறது. இந்த ஏகத்துவக் கொள்கை, புராதான இந்திய சமூகத்தின் கி.மு.7 முதல் 4ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட வேத, உபநிடத காலங்களில் இயற்கை கடவுள்வணக்கம் தாண்டிய மற்றொரு நிலையில் ஓரிறை தத்துவமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இறையின் அவதாரமா, தூதரா - உருவமா, அருவமா என்பதான எல்லை தாண்டி இது செயல்படுகிறது.
    ரிக், யசூர், சாம அதர்வண வேதங்களில் ஏக இறை குறித்த கருத்தாக்கங்கள் இடம் பெற்றுள்ளன. உபநிடதங்களின் சில சுலோகங்கள் கீழ்கண்டவாறு உள்ளன. அவன் ஒருவனே வேறு எவரும் இல்லை (ஏகம் ஏவம் அத்விதயம்) அவனுக்கு பெற்றோர்களும் இல்லை. பாதுகாவலரும் இல்லை (நா கஸ்ய கஸ்சிச் ஜனித நா கதிபத்) அவனுக்கு நிகராக எதுவுமில்லை. (நா தஸ்தி பிரதிம அஸ்தி)
    கி.பி. 2ம் நூற்றாண்டிலேயே வானுறையும் தெய்வம் / இவ்வுலகு இயற்றினான் / ஆதிபகவன் / மெய்ப்பொருள் - என்பதான ஏகச் சிந்தனையை கடவுள் கோட்பாடாக வள்ளுவம் கூறுவதையும் சொல்லலாம்.
    இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பாரசீகத்தின் ஜெராஷ்ட்ரிய மதமும் 'ஆஹுராமஷ்டா' எனும் அறிவில் மிகைத்த கடவுள் பற்றி குறிப்பிடுகிறது. பார்சிகளின் புனித நூலான 'தசாதிர்' இறைவனை ஆதியும் அந்தமும் இல்லாதவன், வடிவமோ அமைப்போ இல்லாதவன், அவன் ஒருவன், அவனைப்போல எவருமில்லை என்பதாக குறிப்பிடுகிறது. இம்மத கோட்பாடுகளெல்லாம் நபிமுகமது இஸ்லாத்தை வடிவமைப்பதற்கு முற்பட்ட காலத்தின் தத்துவக் குரல்களாகும்.
    நபிமுகமதுவிற்கு முன்பே கஃபாவில் அரபு பழங்குடிகள் லாத், உஜ்ஜா, மனாத், ஹுபல் என பல பெண் கடவுள் சிலைகளை வணங்கி வந்துள்ளனர். இவற்றினூடே உயர்ந்த வகைப்பட்ட தந்தைக் கடவுளாக அல்லா என்ற சந்திரக் கடவுளையும் வணங்கி வந்துள்ளனர். இளம்பிறை முஸ்லிம்களின் அடையாளமாதற்கு இதுவே காரணமாகும். யூதர், கிறிஸ்தவர், பகாயிகள், தங்களின் சந்தோசம், துயரத்தின் குறியீடாக 'யா அல்லா' என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார்கள். நபிமுகமதுவின் தந்தையின் பெயர் கூட அப்துல்லா என்பதாகும். இதில் கூட 'அல்லா' என்ற சொல் இணைந்துள்ளது. அக்கால கட்டத்தில் ஏமன் மக்கள் வணங்கிய தெய்வத்திற்கு அர்ரகுமான் என்று பெயர். ரகுமானா என்ற யூத மொழிச் சொல்லின் வடிவமான யூதர்களை ஒன்று திரட்ட பயன்பட்ட அர்ரகுமான் சொல் அல்லாவின் பெயருக்கு மாற்றாக திருக்குர்ஆனின் முதல் ஐம்பது சூராக்களில் முக்கியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
     இஸ்லாத்தின் முக்கிய கடமையென வலியுறுத்தப்பட்டு உலக முஸ்லிம்களால் நாளொன்றுக்கு ஐந்து நேரம் என வரையறுக்கப்பட்ட இறைவனை வணங்கும் தொழுகை முறையானது நபி முகமதுவின் வழிமுறையாக பின்பற்றப்படுகிறது. நபிமுகமதுவின் காலகட்டத்திற்கு முன்பே சிரியாவில் வாழ்ந்த சாபியீன்கள் என்னும் மக்கள் சமய சடங்காக ஒரு நாளைக்கு ஏழு தடவை தொழுகை நடத்தியவர்கள் ஆகும. இஸ்லாத்தில் அவர்கள் பின்பற்றிய ஐந்து நேர தொழுகையின் அதேகாலம் உள்வாங்கப்பட்டுள்ளது. மேலும் மிகப்பழமை வாய்ந்த இந்திய வகைப்பட்ட, வைதீக சாதீய மரபுகளுக்கு மாற்றான யோக மரபின் கூறுகளோடு தொழுகையின் அம்சங்கள் ஒத்திருப்பதை கவனிக்கலாம். பதஞ்சலியின் யோக சூத்திரத்திற்கு கி.பி.4ம் நூற்றாண்டிலேயே வியாச பாஷ்யம் விரிவுரையை வியாசர் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    தொழுகையின் அமைப்பு முறையில் இடம் பெறும் காட்சிநிலைகள் இகாமத் சொன்னவுடன் நிற்கும் நிலை சமஸ்திதி, அல்லாஹு அக்பர் சொல்லி தக்பீர் கட்ட கையை உயர்த்துதல் கர்ண சக்தி விகாஸகா, ருகூவுக்கு செல்லும் குனிந்தநிலை ஸமன்சித்தி விகாஸகா ஸமியல்லஹுலிமன்ஹமீதா என நிமிரும் நிலை சக்ரவாகாசனம், பூமியில் நெற்றிபட சுஜுது செய்யும் நிலை அர்த்த சிரசாசனம், அமர் நிலையில் பூமி தொடும் நிலை வஜ்ராசனம், தலையை திருப்பி ஸலாம் கொடுத்தல். அர்த்த மத்ஸ யேந்திராசனம் என்பதாக யோக, தியான மரபின் கூறுகளோடு தொழுகை பின்னிப் பிணைந்திருப்பதையும் கவனத்திற்கொள்ளலாம்.
    கலாச்சார ஒற்றுமைகள்:
    பழந்தமிழ் சமூகப் பழக்கங்களில் ஒன்றான திருமணத்தின்போது மணமகளுக்கு மணமகன் பரிசப்பணம் வழங்குதல் எனும் நிகழ்வு இஸ்லாத்தில், மணமகன், மணமகளுக்கு மஹர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பதோடு ஒத்துப்போவதையும் கவனிக்கலாம்.
    அரேபிய முற்காலச் சூழலில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்துள்ளது. கதிஜாநாயகி தனியாக முதலீடு செய்த வர்த்தக தொழிலில்தான் நபித்துவம் பெறுவதற்கு முன்பே நபி முகமது ஈடுபட்டிருந்தார்கள் என்கிற செய்தியும் கவனத்திற்குரியது.
    இஸ்லாத்தை காலத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு நபி முகமது வடிவமைத்தது நிகழ்ந்துள்ளது. இதில் வகாபிகள் பேசும் தூய்மைவாதத்திற்கு இடம் எதுவுமில்லை. முன்பிருந்த சமய சமூக பழக்கங்களின் வளர்முகத் தன்மை கொண்ட சாரம்சத்தை சூழலுக்கேற்றவாறு இஸ்லாம் உள்வாங்கிக் கொண்டது என்பதே இவைகூறும் ஆழமான செய்திகளாகும். 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்று சொன்ன திருவ‌ள்ளுவரின் விருந்தோம்பல் கோட்பாடு இஸ்லாமியர்களின் தனித்த‌ அடையாள சிறப்புகளில் ஒன்று!

    மானுடவியல் ஆதாரங்கள்:
    வரலாற்று பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கி.பி.3ம் நூற்றாண்டிலேயே அரேபியாவிற்கு வடக்கே ரோமானிய பேரரசும், கிறிஸ்தவமும், வடகிழக்கே பாரசீகப் பேரரசும் யூத மதமும் அதிகாரத்தில் நிலை பெற்றிருந்ததை காணலாம். இப்ராஹிம் நபியும் அவர்தம் மகன் இஸ்மாயீல் நபியும் புதுப்பிக்கக் கட்டிய உலகின் முதல் வணக்கஸ்தலம் தான் கஃபா என்னும் இறையில்லம். நபி முகமதுவுக்கு முற்பட்ட காலத்திலும் நாயக வாழ்வின் முற்பகுதிகளிலும் கஃபா பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாளமாகவே இருந்தது. குறைஷு', ஹுதைல், சிமிட்டிக் உள்ளிட்ட இன மக்கள் ஹோபல். லாத், உஜ்ஜா, மனாத் உள்ளிட்ட முன்னூற்றி அறுபதுக்கும் மேற்பட்ட தெய்வச் சிலைகளை கஃபத்துல்லாவில் வணங்கி வந்தனர். நபி முகமதுவால்தான் இத்தகு புற மத அடையாளங்கள் நீக்கப்பட்டு கஃபா இஸ்லாமியப் பண்பாட்டு அடையாளமாக நிலைபெறுகிறது.
    இஸ்லாத்தின் இறுதிக் கடமையை ஹஜ் என்னும் புனிதக் கடமையை நிறைவேற்றுதலாக உள்ளது. ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் இஹ்ராம் என்னும் வெள்ளாடை தரித்தலும் மக்காவின் எல்லைப் புறமான மினாவில் தங்கி அங்கு ஷைத்தானை கல்லெறிவதும், கஃபாவைச் சுற்றி ஏழுமுறை வலம் வந்து இரண்டு ரக்அத்து தொழுவதும், அங்குள்ள உஹறஸ்ருல் அஸ்வத் பளிங்கு கல்லை முத்தமிடுவதும், சபா, மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடுவதும், இறுதி நிகழ்வாக பலியிடுதலான குர்பான் கொடுப்பதும், அரேபிய கலாச்சார சூழல் சார்ந்து, திருக்குர்ஆன் அங்கீகரித்த நபிகள் நாயகத்தின் நடைமுறைகளாகும். இந்துக்கள் கோவில்களில் நிற்க வைத்து கும்பிடுகிறார்கள், முஸ்லிம்களோ தர்காக்களில் படுக்கப்போட்டு கும்பிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுவதைப்போல கஃபாவை சுற்றி வலம் வருவதை கோயிலை சுற்றி வலம் வருவதாகவும், ஹஸ்ருல் அஸ்வத்தை முத்தமிடுவதை கறுப்பு நிற கல்லை வணங்குவதாகவும், முடி களைவதை கோயில் கடமை முடித்துவிட்டு மொட்டை போடுவதாகவும் அர்த்தப்படுத்திப் பார்க்க சாத்தியமுள்ளதாக மானுடவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே தான் தர்கா நிகழ்வுகளையோ, ஹஜ்ஜின் அமல்களையோ மேலோட்டமாகவோ எந்திரகதியாகவோ இல்லாமல் வரலாற்று சூழல், வடிவம், உள்ளடக்கம் சார்ந்தும் அணுக வேண்டியுள்ளது.
    இஸ்லாத்திற்கு முற்பட்ட காலங்களில் அரேபிய நாடுகளில் ஆசியப் பிரதேசங்களில் மட்டுமல்ல உலகமெங்கும் பழங்குடி சமுதாய மக்களின் சமய வழக்கங்களில் ஒன்றாக கடவுளுக்காக பலியிடுதல் என்கிற வழக்கம் உள்ளது. வேதகாலப்பழக்கமும் நடைமுறையும் இது. சமண புத்த மதங்களின் உருவாக்கத்தின்போது கால்நடைகளை தெய்வத்திற்கு பலியிடுதல் தடுக்கப்பட்டது. இதற்கான சமூகக் காரணம் வேட்டைச் சமூகத்திலிருந்து விவசாய சமூகத்திற்கு மாறியதுதான். புராத‌ன விவசாய சமூகத்தில் கால்நடைகள் பங்களிப்பு மிக தேவையாயிருந்தது. எனவே அது அம்மத நம்பிக்கைகளில் தடை செய்யப்பட்டிருந்தது. எந்திரமயமாக்கப்பட்ட தொழிலுற்பத்தி சமுதாயத்தில் விவசாய உற்பத்தி கூட கால்நடைகளின் தேவை குறைந்து விட்டது. இக்காலத்தில் வைதீக இந்து மதம் பசுவதைதடை என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட, தலித்திய மற்றும் சிறுபான்மையின மக்களின் உணவுப்பழக்கத்தில் கை வைக்கப்பார்க்கிறது சைவம் உயர்ந்தது. அசைவம் தாழ்ந்தது என்ற பிராமய கருத்தாடலை திரும்பவும் உயிர்ப்பிக்க முயல்கிறது.
    இச்சூழலில் இஸ்லாம் கூறும் ஹஜ் கடமையை நிறைவேற்றுகையில் ஆட்டையோ ஒட்டகத்தையோ பலியிடுதல் (குர்பான் கொடுத்தல்) இபுராகீம் நபீ அவர்தம் மகனார் இஸ்மாயிலை இறையாணையின் படி பலிகொடுக்க முன் வந்ததையும் அவர்களது இறைபக்தியையும் இறை அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையிலான ஒரு பாரம்பரியமான நடைமுறையாகும். இதன் வரலாற்று அர்த்தம் என்பதே மனிதப்பலி தடுக்கப்பட்டு விலங்கினப்பலி மாற்றாக முன்வைக்கப்பட்ட சம்பவமாகும். எனவே குர்பான் கொடுத்தலிலும் புற வடிவம் அகவடிவம் என்கிற இருநிலைகள் உள்ளன. இச்செயலின் புறவடிவ சில பகுதிகளைப் பார்த்தால், பிற சமய நடவடிக்கையான கிராமப்புற தெய்வங்களுக்கு ஆடு, மாடு பலியிடுதல் போலத் தோன்றும். எனவே குர்பான் கொடுக்கும் முறை நோக்கம் உள்ளிட்ட அகவடிவமும் மிக முக்கியமானதாகப் படுகிறது.

    புவியியல் விழுமியங்கள்:
    வடி(WADI) என்ற அரேபிய சொல்லுக்கு ஆறு என்று பொருள். வடி என்ற சொல்லும் திரிபுபடாத தமிழ்ச் சொல்லே! நகர்(NEHR), யாறு(YOR)என்ற பெயரில் ஆறுகள் இருக்கின்றன. இன்னும் தெளிவாக 'வடி அல் உருமா( WADI AL RUMMA) என்ற ஆறு, மெசபதோமியாவையும் 'வடி அல் சிறுகன்' (WADI AL SIRHAN) என்ற ஆறு சிரியாவையும் அரேபியாவுடன் இணைக்கின்றன.
     அரேபியாவின் 'யாமென்' என்ற வார்த்தையில்கூட 'யா' என்ற தமிழ்ச் சொல்லே முன்னெட்டாக உள்ளது‌  யா என்பதற்கு தெற்கு என்று பொருள். 'மண்' என்பது மணலை மட்டுமல்லாது இடத்தையும் குறிக்கும். தென்பகுதியில் கண்டறியப்பட்ட நாடு என்பதால் யாமென் ஆயிற்று. 'ஓமன்' என்ற நாட்டின் பெயர்கூட 'உவர் மண்' என்ற நெய்தல் நிலத்தை சார்ந்தே பயர் வைக்கப்பட்டிருக்கலாம். இன்றும் தென் தமிழக கிராமம் ஒன்றின் பெயர் உவரி என்று இருக்கிறது.  இங்கிருந்து போன முத்துக்களின் அழகில் சொக்கிப் போய் சாலமன் (சுலைமான்) மன்னன் அகாபா வளைகுடா பகுதியில் உள்ள துறைமுக நகருக்கு உவரி என்றே பெயரிட்டு இன்றளவும் புழக்கத்தில் உள்ளது. இது போல கால்தீயா (கல்தேயம்), பெர்ஷியா(பார்த்தீயா), எலம் (ஈழம்), எரிதிரை (சிவப்புக் கடல்- எரித்ரேனியன் கடல் ) என இந்தப் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. இதன் மூலமாக  அரேபிய கண்டம் என்பது குமரிக் கண்டத்தின் நீட்சி என அளவிடலாம். அங்கிருக்கும் மலைகளும் ஆறுகளும் தொன்மக்கதைகளும் தமிழ் மூலத்தைக் கொண்டுள்ளன என்பதை சொல்லாய்வுகள் வாயிலாக புரிந்து கொள்ளலாம். அவ்வளவு ஏன்..அரேபியாவில் குடியேறிய முதல் குழுவின் தலைவர் என்று 'ஆத்'(AADH) என்பவரை திருக்குர்ஆன் சொல்கிறது. அதுவும்கூட ஆதி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே என்றும் கணக்கிட்டுக் கொள்ளலாம். 'ஆதி' என்ற தமிழ்ச் சொல்லே முதன்மையானவன் என்பதை விளக்கும்.
    முடிவுரை:
    புவியியலாளரின் கருத்துப்படி கி.மு 12000 -10000 ஆண்டுகளில் குமரிக் கண்டத்துத் தமிழர்கள் மேலைநாடுகள் நோக்கிப் புலம் பெயர்ந்தனர் எனக் கொள்ளலாம். கிமு 4000 35000 ஆண்டுகளில் பாரசீக வளைகுடா வழியில் படையெடுத்துச் சென்று பாபிலோனை வெற்றி கொண்டு அங்கு மிகச் சிறந்த நகரிய நாகரிகத்தை ஏற்படுத்தியவர்கள் வரலாற்றில் சுமேரியர்கள் என்று அழைக்கபடுகின்றனர். சுமேரியர்கள் தமிழர்களே என்பதற்கான பல்வேறு சான்றுகளும் மேலை இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன. 'சமர்' என்ற தமிழ்ச் சொல்லுக்குப் போர் என்பதே பொருளாகும் சமரியர் தான் பின்னாளில் சுமேரியர் எனப்பட்டனர். கி.மு3000 முதல் 2500 ஆண்டுகளில் குடியேறிய எபிரேய மக்கள், சிந்துவெளித் தமிழர்களே என்பதற்கான சான்றுகளும் மேலை இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன‌. தமிழர்களின் சமயம் நோக்கிய அணுகுமுறையை, சிந்தனைகளை, நடைமுறைப் போக்குகளை, வரலாற்றை தமிழர் சமயம் என்ற இக்கட்டுரை விளக்க முயலும்   
     
    மேற்கோள்கள்:
    முஸ்லிம்களும் தமிழகமும் - டாக்டர் எஸ்.எம்.கமால்
    தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு - A.K. ரிபாயி
    கல்வெட்டு காலாண்டிதழ்
    இஸ்லாமிய கலைக் களஞ்சியம் - எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம்
    பண்பாட்டை அணுகும் புதிய பார்வை - தொ.பரமசிவன்
    தமிழர் சமயம்‍- கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா
    திண்ணை.காம்
    இஸ்லாம் தமிழர் சமயம்‍- ம.சோ.விக்டர்

    செவ்வாய், 14 டிசம்பர், 2010

    லந்தலாலா கவிதைகள்! -by 'ரெட்சிப்'ரோபோ

    லந்தலாலா கவிதைகள்! -by 'ரெட்சிப்'ரோபோ


    செல்போன் நனைவதால்
    பிடிக்கவில்லை
    'சென்னை மழை!'

    கொசுவின்
    கடியினும்
    கொடிது
    அதன்
    ராகமாலிகை!

    பீட்டர் இங்லாண்டில்
    பீட்டர்விடும்
    பீட்டர் தம்பி
    உள்ளே போட்டிருப்பதோ
    பீத்த டவுசர்!

    'அதிரசம்'‍
    - ஒரு பலகாரத்துக்கும்
    அதி ரசமாய்
    பேர் வைத்தவன் தானடா
    உண்மைத் தமிழன்!
    'பத்து பேருக்கு
    ஃபார்வர்டு செய்தால்
    நல்லது நடக்கும்'என‌
    நள்ளிரவில்
    மெஸேஜியவனை
    மேலுலகம்
    'ஃபார்வர்டு' செய்!

    காணாமல்போன‌
    சிட்டுக்குருவிக்காய்
    கட்டுரை எழுதும்
    யாரேனும்
    நம் சொந்த ரத்தம்
    மூட்டைப் பூச்சிக்காய்
    எழுதுங்களேன்!

    ராமதாஸின்
    மாம்பழத் தாகத்துக்கும்
    மாஸாதான் தீர்வா?
    இன்னமும்
    மார்கழி மாதங்களில்
    'உள்ளம் உருகுகிறார்' டி.எம்.எஸ்!
    'செல்லாத்தா மாரியாத்தா'க்களை
    துணைக்கு அழைக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி!

    மதுரை தெப்பக்குளத்தை
    கடக்கும் போதெல்லாம்
    ஞாபகத்தில் வருது
    மரிக்கொழுந்து வாசமும்..
    ராமராஜன் லிப்ஸ்டிக்கும்!
    ஆயிரம் தலைசீவிய
    அபூர்வ சிகைமணி
    'கோபி சலூன்!'

    ஐந்திலும் வளையமாட்டேன்!
    ஐம்பதிலும் வளையமாட்டேன்!
    வேணும்னா
    நூறுல வளைஞ்சிக்கிறேன்!

    'உழைப்பே உயர்வைத் தரும்!'
    எல்லாஞ்சரி..
    யாருடைய உழைப்பு.. யாருக்கு?

    நகரத்து வாழ்க்கையின்
    இறுமாப்பைச் சொல்லி
    பகலிலும் ஒளிருது
    சோடியம் விளக்கு!

    மரப்பாச்சி பொம்மை
    செய்த பெருந்தச்சன்கள்
    உலகமயமாக்கலில்
    பெருந்துச்சமென ஆனார்கள்!

    'ஏட்டு'சித்தப்பாவுக்கு ஏ.வி.எம் ராஜன் முகம்!
    'எட்டாப்பு'சித்திக்கு ஊர்வசிசாரதா முகம்!
    வாழ்க்கை துலாபாரமானதால்
    குடும்பபாரம் சுமக்கிறாள்
    போலீஸ் குவார்ட்டர்ஸில்
    'ஆயாவாக!'

    சந்தித்த‌
    ஐந்தாம் நிமிடத்தில்
    'அப்புறம்' என்பவனை
    அப்புறம் எப்போதும்
    சந்திக்காதே!

    சாகா வரம் பெற்ற‌
    எழுத்துக்குச் சொந்தக்காரன்
    விபத்தில் மறித்துப்போனான்!

    பொண்டாட்டியின்
    தாலி அறுத்து
    விஜய் கட்-‍அவுட்டுக்கு
    பாலாபிஷேகம்
    செய்தவன் பொண்டாட்டியின்
    தாலி அறுத்தான்
    அஜீத் ரசிகன்!


    பேனுக்கும்
    வலிக்குமென்று
    'உச்'கொட்டி
    ஈறெடுத்த அப்பத்தாக்கள்
    ஈறேழு உலகத்திலும்
    இப்போதில்லையடா!

    'அண்டமெனும்
    பண்டத்தில்
    நீயொரு பிண்டம்'
    இதை
    புரிஞ்சுக்காதவன் எவனும்
    பூமிக்குத் தண்டம்..
    போடா முண்டம்!

    காதலைச் சொன்னபொழுதில்
    பாலகால ஔவையாராகி
    ‍'நண்பேன்டா'என்றவள்
    காதல் மணம் செய்துகொண்டு
    சூல்பெருத்த சூழ்ச்சியை
    என்னவென்பேன்?

    ஒரு குடம் தண்ணி ஊத்தி
    ஒரு பூ பூத்தாச்சு..
    ரெண்டு குடம் தண்ணிஊத்தி
    அந்தப் பூ செத்தாச்சு!

    நந்தவனத்தில் ஓர் ஆன்ட்டி!- அவ
    நாளொரு புருஷனை வேண்டி- கண்ணில்
    கொண்டு வந்தாள் ஒரு தூண்டி! -அவ
    புருஷன் ஆகிட்டான் எப்பவோ போண்டி!
    ஜிகுஜிக்கான் ஜிகுஜிக்கான் ஜிக்கான்!‌

    டே தம்பி!
    ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும்
    'ரெட்சிப்' இருக்கு
    அது 'கப்சிப்'னு இருக்குறதுனால‌
    வாழ்க்கை 'சப்'புனு இருக்கு!

    எம்.ஜி.ஆர்...
    நம்பியார்...
    டே தம்பி!
    ரெண்டுல நீ யார்?

    தனியொருவனுக்கு
    உணவில்லையெனில்
    'டீ' வாங்கிக் கொடுத்திடுவோம்!

    ராவானால்
    ராவாக அடிக்கும்
    ராஜேஷ் பயலையும்
    மாவாவால்
    வாயைக் கெடுத்த‌
    மகேஷ் பயலையும்
    காதலில் ஜெயிக்க வைத்தது
    செல்வராகவன் சினிமா!

    தேங்காப்பூ..
    சுடுகஞ்சி..
    கொஞ்சம் இனிப்பேந்தி
    பாயாசமாச்சு
    ....விலாஸில்!


    கன்ணெதிரே
    கரையும்
    குச்சி ஐஸ் வாழ்க்கை!
    சீக்கிரம் தின்னு..
    இல்லைனா மண்ணு!

    பிரியாணி..
    பிரியாமணி..
    ஒற்றுமை ஒன்றுதான்
    'லெக்பீஸ்' நன்றுதான்!

    புதன், 8 டிசம்பர், 2010

    ரத்த சரித்திரமும்...யுத்த சரித்திரமும்!

    ரத்தசரித்திரம்...சின்னவயதில் பள்ளிப் பாடப்புத்தகத்தில் படித்த ஹமுராபியின் சட்டத் தொகுப்பு ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு? 'கண்ணுக்கு கண்! பல்லுக்குப்பல்!.' இதுதான் படத்தின் ஒன்லைன். 'ஆந்திராவின் அனந்தபுர் மாவட்டத்தில் பிறந்து சூழ்நிலையால் தாதாவாக மாறி பின் ஆந்திர சூப்பர் ஸ்டார் என்.டி.ஆரால் பாலிடிக்ஸில் நுழைந்து ஆந்திராவையே கலக்கியெடுத்த பரிதலாரவியை 2005‍ல் பழிதீர்த்து வஞ்சம் தீர்த்தான் அவனால் பாதிக்கப்பட்ட சூரி என்பவன்.' அந்த பழிவாங்கலின் இருண்ட பக்கங்களை தனக்கே உரிய அசத்தல்மேக்கிங்கில் படம்பிடித்துக் காட்டி இருக்கிறார் ராம்கோபால்வர்மா.
    டப்பிங் படமாக இருப்பதாலும் அந்த ஆந்திரா லேண்ட்ஸ்கேப் தமிழ்நாட்டோடு பொருந்தாமல் அந்நியமாகிப் போவதாலும் ஆரம்பத்திலிருந்தே நம்மால் காட்சிகளோடு ஒன்றிப்போக முடியவில்லை. ஆனாலும் இந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும். இந்தப்படத்தை அழகாக தன் குரலில் தமிழில் நேரேட் செய்திருக்கிறார் கௌதம் மேனன். படத்தின் பெரிய ப்ளஸ் சூர்யா. தன் அசத்தலான நடிப்பை வெளிக் காட்டியிருக்கிறார். ரௌத்ரம் பொங்க அவர் வேட்டைநாயாக பழிதீர்க்க அலைவதிலாகட்டும்.. தன் எதிரியை கொல்ல அவர் போடும் திட்டங்கள் தோற்றுப்போன‌ இயலாமையில் குமுறுவதிலாகட்டும் சூர்யா சூப்பர்யா! சூர்யாவின் பவர்ஃபுல் கண்களே பலகாட்சிகளில் காட்சிக்கான கணம் சேர்க்கிறது.
    பிரதாப் ரவி கேரக்டரில் விவேக் ஓபராய் அப்படியே கேரக்டரோடு பொருந்திப் போகிறார். அவருக்கு இந்தப்படம் நல்ல மைலேஜ். படத்தின் துவக்க காட்சிகளில் காட்டப்படும் நிஜ‌ பரிதலா ரவியின் பாசிட்டிவ் பக்கங்களை நம் மனதோடு ஒன்றச் செய்வதில் விவேக் ஓப‌ராயின் நடிப்பு பெரும்பங்கு வகிக்கிறது. என்.டி.ராமாராவ் கேரக்டரில் சத்ருஹன் சின்ஹாவை நடிக்க வைத்திருக்கும் ஆர்.ஜி.வி‍யின் புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆகவேண்டும். படத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியில் குண்டு வெடித்தவுடன் பதறி ஓடும்போது சூப்பர் ஸ்டார் இமேஜை தூள்தூளாக்கி ஒரு கோழையாக உருவகப்படுத்தி இருப்பது க்ளாஸ். ஆந்திராவில் இந்தக் காட்சிக்காக சிலர் கொந்தளித்துக்கிடப்பதாககேள்வி. சின்னச் சின்ன கேரக்டரில்கூட நல்லநடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஃப்ரேம் பை ஃப்ரேமிலும் யூனிட் கணக்கில் ரத்த சாயத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ரத்தத்தை காட்டாமல் சரித்திரத்தை எழுதக்கூடாது என நினைத்திருப்பார்போல இருக்கிறது. சில நேரங்களில் நமக்கேகூட நம்மை யாரும் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம்வருகிறது. ஆக்ஷன்காட்சிகளை மெதுவான மோஷன் ஃப்ரேம்களாக (96 ஃப்ரேம்ஸ்) காட்டி இருப்பது உண்மையில் படு மிரட்டல். உண்மைச் சம்பவம் என்றபோதிலும் இந்தப்படம் உண்மையைக் கையாளவில்லை என்ற கொந்தளிப்பு ஆந்திராவில் இருக்கிறது. நிஜத்தில் பரிதலா ரவி, சூரியால் கொல்லப்படவில்லை என்கிறார்கள் சிலர். முதுபெரும் நக்ஸலைட் போராளி கொண்டப்பள்ளி சீத்தாராமைய்யாவின் இயக்கம் சார்ந்த கொள்கைகள் கோட்பாடுகள் இதில் காட்டப்படாமல் மழுங்கடிக்கப்பட்டு பழிவாங்கல் அர‌சியல் மட்டுமே படத்தில் பேசப்பட்டிருக்கிறது என்கிறார்கள் சிலர். அதெல்லாம் கிடக்கட்டும். பரிதலா ரவியின் வாழ்க்கையைத் தேடிப் பிடித்து படித்தால் கழுத்தை அறுத்து, பிறப்பு உறுப்பை துண்டித்து கொலைசெய்த விஷயங்களெல்லாம் காணக்கிடக்கிறது. 'சொன்னது கொஞ்சம்..சொல்லாதது உச்சம்' என்பதும் விளங்கிறது. இந்த ரத்தத்துக்கே இன்டெர்வெல்லுக்குள் தியேட்டர் பாதி காலியாகிவிடுகிறது. போதும்டா சாமீ!
    டெய்ல் பீஸ்-1: இந்தி, தெலுங்கில்  பார்ட்- ஒன் ,பார்ட்- டூவாக இப்படம் விரிவாக‌ ரிலீஸாகி இருக்கிறது. முதல்பாதி பரிதலாரவியின் அரசியல் என்ட்ரியோடு முடிகிறது. பார்ட் -டூ தான் நாம் பார்ப்பது. முதல் பாதி சில விஷயங்களோடு சேர்த்து  சுருக்கமாக எடிட் செய்து  நமக்கு பழிவாங்கலின் சரித்திரமாக ரிலீஸாக்கி இருக்கிறார்கள்.
    டெய்ல் பீஸ்-2: படத்தில் டயலாக்குகள் இயல்பாக,‌ நன்றாக இருக்கிறது. வசனம்: என் முன்னாள் விகடன் நண்பன் த.செ.ஞானவேல்!

    சூர்யா ரசிகர்களுக்கும் ராம்கோபால்வர்மாவின் ரசிகர்களுக்கும் இந்தப்படம் பிடிக்கும். மற்றபடி இது அவர்கள் சொல்லிக்கொள்வதுபோல நல்ல சினிமாவோ உலக சினிமாவோ அல்ல.


    டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.. இது மாம‌னிதனின் நிஜமான‌ யுத்த சரித்திரம்!
    முதலில் சொல்லி விடுகிறேன் இது சினிமா அல்ல. ஒரு வாழ்க்கைப்பதிவு!
    சாதிய வர்க்கபேதத்திற்கு எதிராக தன் வாழ்நாள்முழுவதையும் செலவிட்ட ஒரு உன்னதமான மனிதனின் வாழ்க்கையை கண்முன் காட்டி இருக்கிறார்கள். இந்தப்படம் நான் டவுசர் போட்டுத் திரிந்த காலத்திலிருந்து பேசப்பட்டு வந்த ஒரு விஷயம். 2000‍ல் அரசியல்சூழ்ச்சிகளையெல்லாம் தாண்டி தியேட்டரைத் தொட்டிருந்தது. மாநில மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக பல தடைகள் இருந்து வந்தது. சமீபத்தில் தமிழில் அழகாக ரிலீஸாகி இருப்பதன் பின்ணணியில் இருந்த‌ அந்த முதுகெலும்புள்ள மனிதர்களுக்கு நன்றிகள் பல! இந்தப்படத்துக்காக 'என்.எஃப்.டி.சி'(தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்)‍க்கு வாழ்த்துகள்! ஒரு சாதீய தலைவனாக மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுவரும் ஒரு மகோன்னதமான மனிதனின் வாழ்க்கையை ஆய்ந்து அச்சு பிசகாமல் கேப்ஷூலாக தந்திருப்பதற்காக டைரக்டர் ஜப்பார் படேலுக்கு வாழ்த்துகள். முன்பு ஆங்கிலத்தில் வந்தபோது அதை பார்ப்பதற்கான சூழல் அப்போது எனக்கு இல்லை. இன்று இந்தப்படத்தைப் பார்த்தபோது பெருமிதமாகவும் இனம்புரியாத சந்தோஷமாகவும் உணர்ந்தேன். டாக்டர் அம்பேத்கராக மம்மூட்டி வாழ்ந்திருக்கிறார். நடிப்பில் மம்மூட்டியாகவே தெரியவில்லை. கமல்ஹாசனைப்போல போலி மேதாவித்தனத்தைக் காட்டாமல் அம்பேத்கரை உள்வாங்கி  பிரதிபலித்திருக்கிறார் மம்மூட்டி.
    அம்பேத்கர் பற்றி அதிகம் படிக்காதவர்கள் அவசியம் இந்தப்படத்தைப்பார்க்கவேண்டும். எனக்கு படம்முழுமைக்கும் பிடித்திருந்தாலும் குறிப்பாக காந்திஜியோடு தொடர்புடைய‌ இவர் பேசும் வசனங்கள் எல்லாம் விருப்பமான  நெருப்பு! நண்பர்களிடம், 'மகாத்மாக்கள் மகாத்மாக்களாக இருப்பதுதான் பிரச்னை. அவர்கள் மனிதர்களாக இருந்தாலே இங்கு பிரச்னையில்லை!' என்பதும், 'என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள கேட்கும் நீங்கள் ஏன் காந்திஜியின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள சொல்ல மறுக்குறீர்கள்?' எனும்போதும்.. காந்தியைப்பார்த்து, 'தயவுசெய்து உண்ணாவிரதமெனும் ஆயுதத்தை அடிக்கடி கையிலெடுக்காதீர்கள்!' என்று விரக்தியின் உச்சத்தில் சொல்லும்போதும் நம்மை அறியாமல் படத்தை மறந்து சிலிர்க்க நேரிடுகிறது. பட்டப்படிப்பின்போது இந்தியாவிலும் பாரிஸ்டர் படிக்கும் காலத்தில் லண்டனிலும் அவர் அடக்குமுறைக்கு ஆளாகுமிடமெல்லாம் நிஜமான  வரலாற்றுபதிவு. ஒரு தேர்ந்து தெளிந்த மனிதருக்கே உரிய கோபத்தை அழகாக அம்பேத்கர் வெளிப்படுத்தும்போது நம்மனதை பிசைகிறது. இட ஒதுக்கீடுக்கான அவர் குரல் இன்றைய‌ நிகழ்கால அரசியல் சூழலை பிரதிபலிப்பதன் மூலம் எத்தனை தெளிவான விரிவான எதிர்காலம் குறித்த ஆழ்ந்த பார்வை அவருக்கு இருந்திருக்கிறது  என்பதுவிளங்கும். எதையும் தவிர்த்துவிடாமல் நுட்பமான பதிவுகளாக தரவேண்டும் என்ற  சிரக்தை காட்சியமைப்புகளில் தெரிகிறது. குறிப்பாக‌ உடல்நலத்தில் அக்கறை இல்லாதவராக தன் இன மக்களுக்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து செல்லும்போது காட்டப்படும் முகபாவங்களிலும் மனநிம்மதிக்காக இசைக்கருவிகளைக் கையாளும் இடங்களிலும் சமூகப் போராளி பாத்திரத்தில் மம்மூட்டியின் பாத்திரத் தேர்வு நியாயம் செய்கிறது. 'என்னை இப்போது தேசவிரேதியாக உருவகப்படுத்தி வருகிறார்கள்.. அதைப்பற்றி வருத்தம் எனக்கில்லை. வருங்கால இந்திய வரலாற்றில் என் கருத்துக்ளின் நியாயம் பேசப்படும்!'  என்ற அவரின் தீர்க்கமான கொள்கைப்பற்றும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. எல்லாவற்றையும் தாண்டி அவரின் குடும்ப பாசம் கொள்கை தாகம் இரண்டையும் அழகாக ரத்தின சுருக்கமாக காட்டி இருக்கிறார்கள்.
      மனைவி ரமாபாயாக  சோனாலி குல்கர்னி அற்புதமாக நடித்திருக்கிறார். ('மே மாதம்' படத்தின் நாயகியாக மார்கழிப்பூவே..மார்கழிப்பூவே' பாடுவாரே அவரேதான்!)
    'டாக்டர் அம்பேத்கரை நான் முற்போக்கு சிந்தனை கொண்ட பூனா பிராமணர் என்றல்லவா நினைத்திருந்தேன்!' என்று காந்தி தன் சகாக்களிடம்  சொல்லுமிடம் அருமையான ஒற்றை வரியிலான நுண்ணரசியல் பதிவு!  சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சாசன நிர்ணயக்குழுவின் தலைவராக அவர் நியமிக்கடும்போதுகூட அவருக்கு நிகழ்ந்த புறக்கணிப்பு, மோசமான தன் உடல்நிலை எல்லாவற்றையும் தாண்டி அரசியலமைப்பு சாசனத்தை அவர் தனியொரு மனிதனாக உருவாக்கிக் காட்டியதை பாராளுமன்றம் அங்கீகாரம் செய்திருக்கும் இடம் அப்படியே கண்முன் காட்டப்பட்டிருக்கிறது. அவரின் கோபங்கள் நியாயங்கள் அனைத்தும் எந்தவித புனைவு, திரிபுகள் இன்றி அப்படியே காட்டி இருப்பது படத்தின் பெரிய சிறப்பு! 
    படமே ஒரு பாடமாக கண்முன் விரியும்போது குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் வியப்பதில் அர்த்தமில்லை என்றே தோன்றுகிறது.
    சினிமா என்பதையும் தாண்டி ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது!