ஞாயிறு, 1 மே, 2011

பிறிதொரு மழைநாளில்... (சிறுகதை)

என் உறவுக்காரர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சற்றே சுவாரஸ்யமாக இருந்தது. சற்று கற்பனை சேர்த்து ஒரு கதையாக எழுதவும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பத்திரிகையிலும் பிரசுரமாகி சற்று கூடுதல் சந்தோஷத்தையும் கொடுத்தது.மிக சுமாரான கதைஓட்டமாக இருந்தாலும் விறுவிறுவென ரிலே ரேஸ்போல எழுதி முடித்துவிட்டது லேசான ஆசுவாசத்தை எனக்குத் தந்தது. நல்ல கதை இனி வருங்காலத்தில் நிச்சயமாக எழுத முடியும் என்ற நம்பிக்கையோடு.. கதைக்கு போகிறேன்...!
பிறிதொரு மழைநாளில்...                                            
காலைச் சூரியன் தன் திகிப்பைத் துவக்காத..அதே சமயத்தில் அதி உன்னதக் கதிர்களை பாய்ச்ச எத்தனித்த உத்தமப் பொழுது.. விடிந்துவிட்டதால் நடந்து சென்று டீ குடிக்கும் நோக்கத்தோடு எழுந்து விட்டேன். விடிந்து நேரமாகியும் இன்னும் சோம்பல் முறிக்காத ஆனந்தக் கண்ணீரைத் தாங்கி நிற்கும் கரு மேகங்கள் மனசுக்கு ரம்மியமாக இருந்தது.
பொடிசுகள் பள்ளிக்குச் செல்லும் நேரம் அது. புத்தகமூட்டைகளோடு அவர்கள் செல்வதைப் பார்த்தபோது என் பள்ளி நாட்களைத் தொலைத்துவிட்ட ஏக்கம் வந்தது. பக்கத்து கிராமத்திலிருந்து நடந்தே செல்லும் கொளுத்து வேலை செய்வதற்கே பிறந்த தொழிலாளர்கள் விறுவிறுவென என் வீட்டைக் கட‌ந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் அந்த சிறு தூறலுக்கும் அட்டையாய் உடலைச் சுருக்கிக் கொண்டு என் வீட்டு திண்ணையில் ஒதுங்கி நின்று மழையை சபித்தார்கள். சென்னை செல்லும் பிரதான சாலையின் ஓரமாய் இருக்கிறது என் வீடு. விடியற்பொழுதில் வீட்டில் என் மகளே டீப் போட்டுக் கொடுத்தாலும்கூட‌ அது என்னமோ டீக்கடையில் தினத்தந்தியை புரட்டிப் பார்த்துக் கொண்டே நான்கைந்து மிளாறுகள் உள்ளே செல்லும்போது அன்றைய பொழுது முழுதாய் விடிந்துவிட்டதைபோலத் தோன்றும். அதன்பிறகு மெல்ல‌ வீட்டுக்கு வந்து மகள் கையால் இன்னொரு டீ. இந்த தூறலை ரசித்தபடி ஒரு கோப்பை தேநீரை ருசித்தால்..? எவ்வளவு திவ்யமாய் இருக்கும்?
''எத்தனைவாட்டி சொல்லி இருக்கேன் வாப்பா...டீக்கடையில் போய் டீக் குடிக்காதீங்கன்னு...அது என்ன ஈமானோ.. டீ கூட போட்டுக் கொடுக்காத மகளா?'னு நாலு பேரு என்னைய நினைச்சா உங்களுக்கு சந்தோஷம்ல வாப்பா..?"- ‍மகள் சுமையாவின் வசவுகள் என் மனதுக்குள் ஒலித்தது. மனசுக்குள் சிரித்துக் கொண்டேன். என் தேநீர் ரசனை அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தாலும் பிரயோஜனமில்லை. அவளுக்கு நான் இப்போது ஒரு வயதான குழந்தை. என்ன.. குழந்தைக்கு 55 வயசு. அவ்வளவுதான்!
மழையை ரசித்தபடி வேஷ்டி சட்டையில் மெல்லிய தூறலை உள்வாங்கிக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தேன். வீட்டுக்குள்ளிருந்து வழக்கம்போல சுமையாவின் குரல் சன்னமாய் கேட்டது.
''காலங்காத்தால வெள்ளையும் சொள்ளையுமா மழையில நனைஞ்சுக்கிட்டு எங்கதான் போறாரோ..அப்புறம் காய்ச்சலா படுத்துக்கிட்டா யாரு பார்க்குறது...?"
தூறலிலன் வீர்யம் இப்போது குறைந்திருந்தது. கோளாறாய் போன ஏ.சியில் அடிக்கும் சாறலைப் போல வானம் நமநமத்திருந்து. திண்ணையில் ஒதுங்கியவர்களும் என்னைப்பார்த்து கலைந்தார்கள்.
''ஒரு குடையை எடுத்துட்டு போங்க வாப்பா!"‍- கண்டிப்பான குரலில் வாசலுக்கு வந்து என்னைப் பார்த்து கத்தினாள் என் மகள் சுமையா. - என் மகளின் கோபம் எப்போதுமே அழகு. இந்த மழைநாளில் இன்னும் அழகாய் இருந்தது அந்தக் கோபம்!
பல்லாங்குழிகளாய் மழைத் த‌ண்ணியை சுமந்தபடி ரோடு கிடந்தது. முழங்கால் வரை வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடந்தேன். சேறின் கறை பட்டால் சுமையா திட்டுவாள். மனதிற்குள் எப்போதும் மகள் நினைப்புதான் எனக்கு. ஒரே மகள்..செல்ல மகள். அவளை ஒரு செவிலியராக ஆக்கிக் காட்டவேண்டும் என்ற என் கனவை நிறைவேற்றியவளாயிற்றே...! பொதுவாக தகப்பன்கள் தன் மகளை டாக்டராக்கி இன்ஜினியராக்கி கற்பனை காணுவார்கள். நான் கண்ட கனவோ வேறு மாதிரியானது.

ப்போது எனக்கு 30 வயது. திருமணம் ஆகி மூன்று வருடங்கள் கழித்து பிறந்தவள்தான் சுமையா. பிறந்து இரண்டு வாரம் இருக்கும். இதே போல ஒரு மழைநாளில்தான் தூக்கம் வராமல் தவித்துக் கிடந்தேன். மெல்ல மெல்ல அக்னிப் பழம் ஒன்று என் வயிற்றுக்குள் முளைவிட்டதைப்போல ஒரு வலி. திண்ணையில் எழுந்து உலாவிக் கொண்டிருந்தேன். கூடத்தினுள் என் மனைவி மரியம் ''ரே ரே ரே..." என அவளுக்கு தெரிந்த ஒற்றைத் தாலாட்டில் குழந்தை சுமையாவை தூங்க வைக்க பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருந்தாள். என் வலிக்கு கணம் சேர்ப்பதைப்போல மகள் அங்கு அழுகையை தொடர்ந்த வண்ணம் இருந்தாள். நல்லவேளை மாமியார் எதேசையாய் அன்று தன் மகளை விசாரித்துவிட்டுப் போக கிராமத்திலிருந்து வந்திருந்தாள். மாமியாருக்கு ஊரில் நாச்சியார் என்ற பேரும் உண்டு. கொஞ்சம் நாட்டு வைத்தியம் தெரியும். காய்ச்சல் தலைவலிகளுக்கு இவர் சொல்லும் பரிகாரம் மற்றும் பத்தியத்தால் குணம் கண்டவர்கள் பாதிப் பேர். மாமியார் கை பட்டதால் லேசாய் வலி குறைந்திருந்தது. ஆனால் வயிற்றில் வேறு பெரிய கோளாறு இருப்பதாக எனக்குப் பட்டது. என் மனைவி பச்சை உடம்புக்காரி என்பதால் மாமியாரே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
எனக்கு அரசாங்க ஆஸ்பத்திரியென்றாலே அலர்ஜிதான். மாமியார்காரியின் பிரியத்திற்காக அங்கு சென்றேன். போகும் வழியில் ஆட்டோக்காரன் வேறு மழைக்குப் பிரியமான சாலைகளில் நிதானத்தை தொலைத்து ஓட்டிச் சென்று சேர்த்தான். அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கே உரிய பினாயில், நாப்தலின் இன்னபிற‌ வாசனை நெடிகளோடு ஏதோ இனம் புரியாத பயமும் என் மனதை நிறைத்திருந்தது. முகப்பிலே இருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவைக் கடக்கும்போது கேட்கும் அழுகைக் குரல்கள் ஒப்பாரி இத்யாதிகள் ஏனோ என்னையும் பயமுறுத்தும். இந்த காரணங்களுக்காகத்தான் நான் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வருவது இல்லை. விதி வலியதுதானே...! அவசர சிகிசை வார்டில் என்னை உட்கார வைத்திருந்தார் என் மாமியார். உள்ளே ஒரு நோயாளிக்கு திட்டிக் கொண்டே ஊசி போட்டுக் கொண்டிருந்தாள் ஒரு நர்ஸ். அரசாங்க ஆஸ்பத்திரிகளில் ஊசியைவிட கடுமையானது நர்ஸ்களின் வசவுகள் என நினைத்துக் கொண்டேன். எனக்கு வலி கூடிக் கொண்டே போனது. படுத்தவாறே கால்களுக்கு இடையே கைகளை கட்டிக் கொண்டு உடம்பை சற்று ஒருக்களித்து படுத்துக் கிடந்தேன். அப்படி படுத்தவாக்கில் கைகளை முறுக்கிக் கொண்டால் வயிற்றுவலி வேறு எங்கோ இடம் பெயர்ந்துவிட்டதைப்போல மாயத் தோற்றத்தை காட்டிச் சென்றது. திரும்பவும் நேராக படுக்க எத்தனித்தபோது வலி உயிரை வாங்கியது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.
''என்னம்மா ஆச்சு இந்த ஆளுக்கு? இங்கன படுக்க வச்சிருக்க... எந்திரிக்க சொல்லும்மா!"‍கணீர் என்ற குரல். சற்றுமுன் ஒரு நோயாளியை அதட்டி ஊசி போட்ட அதே வெண்கலக் குரல். நான் வீம்பாய் உடம்பை சுருக்கி கண்களை இடுக்கி வலியால் முனகுவதைப்போல பாவனை செய்தேன். ''வயித்துக்கு சரியில்லைம்மா...  ரெண்டு நாளா ராப்பூராம் ஒரே நோவு தாயீ... இஞ்சி கசாயம் கொடுத்தும் வயித்துப் புரட்டல் நிக்கல.." எனக்குப் பதிலாய் என் மாமியாரே பேசினார்.
''நீ அவருக்கு என்னம்மா வேணும்?"
''எ மக புருஷன்.. மருமவன் இவரு..."
''இவங்க வீட்டுல வரலையா?"
''இவுக அம்மா மட்டும்தான்...அதும் உடம்புக்கு சரியில்லாம கெடக்கு. எ மக‌
பச்ச உடம்புக்காரி.. எங்க வீட்டுலயும் வெளியூருக்குப் போயிருக்காங்க‌. அதான் நான் வந்தேன்!"
''சரி சரி...இந்தா சீட்டு, இதுல ஸ்கேன், எக்ஸ் ரே, ரத்த டெஸ்ட்டுக்கு எழுதி இருக்கேன். பக்கத்து வார்டுக்கு கூட்டிட்டுப் போமா..ஏ முனியாண்டி.. இந்த ஆளை ஸ்ட்ரெசர்ல வச்சு அந்த கடைசி பெட்டுல அட்மிட் பண்ணிக்கய்யா.. அதுக்கு முந்தி டெஸ்ட் எடுத்துட்டு வந்திரு... ஏ கனகா அதுக்குள்ள அந்தப் பெட்டை கொஞ்சம் மாத்தி வையி!" உத்தரவுகள் கடுகடுப்பாய் பறந்தபடி இருந்தன. ச‌வத்தை தூக்கும் லாவகத்தோடு என்னை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி டெஸ்ட்டுகள் எடுத்து கடைசியில் அந்த மூத்திரவாடை அடிக்கும் கடைசி பெட்டில் கிடத்திவிட்டு சென்றான் முனியாண்டி. இன்னொரு நர்ஸ் வந்து ஒரு ஊசியைப் போட்டாள். மயக்கமாய் வந்து கண்கள் சொருகி உறக்கம் வந்தது எனக்கு!
''சாப்பாடு வாங்காத ஆளுங்க சாப்பாடு வாங்கிக்கங்க...ஏ வேலாயுதம்..வேலாயுதம்...எங்கய்யா அந்த ஆளு..நைட்டு மட்டும் சாப்பாடு வாங்குறான். காலையில காணாமப் போயிர்றான்.. ஆளை அனுப்பி வச்சிரு கமலா... ஏ புள்ள பெறாக்கு பாக்காம போயி பெட்டுல படு.. சீஃப் டாக்டர் ரவுண்ட்ஸ் வர்ற நேரம்!"- கத்தல் குரலில் கண் விழித்தேன். அதே ராட்சஸிதான். இவளுக்கெல்லாம் நர்ஸ் வேலை யார் கொடுத்தது? காலை சாப்பாட்டு நேரம் என்பது விளங்கியது. வண்டியில் பிரெட் பால் வாங்கிக் கொண்டு பெட்டுக்கு வந்தபடி இருந்தார்கள். எனது இடது கையில் ஊசி செருகப்பட்டு வெள்ளை பேண்டேஜ் போட்டு  தலைக்கு மேல் க்ளுக்கோஸ் பாட்டில் தொங்கியது. மெல்ல எழுந்திருக்க முயன்றேன். நான் எழ எத்தனிப்பதை உணர்ந்த என் மாமியார் சிறுநீர்ப்பை  மாட்டியிருப்பதாகச் சொன்னார். மீண்டும் தலையணையில் சரிந்து அந்த வார்டை இடவலமாக.. வல இடமாக பார்வையால் துலாவினேன். ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியின் வார்டுக்கே உரிய சகல லட்சணங்களுடன் இருந்தது அந்த வார்டு. அதை வர்ணிக்க தேவையில்லை என்றே தோன்றுகிறது. நான் படுத்திருக்கும் பெட் மற்ற நோயாளிகளின் பெட்டைவிட அழகாய் இருப்பதாய் எனக்குத் தோன்றியது.
லேசான குரலில் மாமியாரிடம் டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்டேன்.
அப்பன்டீஸாம். ஓட்டல் சாப்பாடு.. பட்டினியாக கிடந்தது எல்லாம் தப்பு என்று சொன்னாராம்.
உண்மைதான். அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் இருந்தேன். சினிமா ஆசையால் சென்னைக்கு ரயிலேறினேன். எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை அப்போது. எப்படியோ உறவுக்காரப் பையனின் ஒண்டுக் குடித்தன மேன்ஷனில் அட்டையைப்போல ஒட்டிக் கொண்டு வாய்ப்பு தேடும் காலத்தில் அல்சரும் கூடவே மஞ்சள் காமாலையும் வந்து ஆளை உருக்கிவிட்டது. பேச்சுலர் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே..!     
ன்னும் இரண்டு நாட்களில் அப்பன்டீஸ் ஆபரேஷன். ஐய்யோ.. இன்னும் இரண்டு நாட்களா..? மல்லிகா.. அந்த ஆஸ்பத்திரியின் தலைமை செவிலியராம். வந்தநாள் முதலாய் என்னையும் எல்லோரையும் கடுகடுப்பான வார்த்தைகளால் எப்போதும் மிரட்டி உருட்டி உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருக்கும் அதே நர்ஸ்தான். பக்கத்து பெட்காரரிடம் மல்லிகா நர்ஸ் குறித்து விசாரித்தேன். அந்த ஆள் ஒரு மாசமா இதே வார்டில் இருக்கிறாராம். என்ன எழவு நோயோ தெரியவில்லை. அந்த ஆளிடம் கேட்கத் தோன்றவில்லை. இந்த மல்லிகா மூஞ்சியைப் பார்த்துக் கொண்டு இங்கு படுத்துக்கிடக்கும் அந்த ஆள் நிச்சயம் சபிக்கப்பட்ட ஜென்மமாகத்தான் இருப்பார் என நினைத்துக் கொண்டேன். ''திமிரு பிடிச்ச பொம்பளை, ராங்கிக் காரி, தலைக்கனம் பிடிச்ச கழுதை, வாயாடி.." ‍இதெல்லாம் அந்த வார்டில் அந்த மல்லிகா நர்ஸ் இல்லாதபோது கேட்ட அவர்குறித்த வசவுகள்தான்! நானும் அதை ஆமோதித்தேன்.
''கவருமென்ட் சம்பாத்தியம்னா இம்புட்டு திமிறா..கோவமாவா நோயாளிகள்கிட்ட இருக்கணும்."
  நர்ஸ்னாலே எனக்கு அன்னை தெரசா, நைட்டிங்கேல் போன்ற பெண்மணிகளின் பிம்பங்கள்தான் ம‌னதிற்குள் நிழலாடியது. பரிவோடு நோயாளிகளை கவனிக்கத்தானே இந்தப் பொம்பளைக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்குது? கிரிமினல்கள் போலீஸ்காரர்களாக ஆவதைப்போல கொலைகாரர்கள் டாக்டர்கள் ஆவதைப்போல இந்த புரையோடிய சமுதாயத்தில் மல்லிகா போன்ற ராங்கிக்காரிகளும் நர்ஸாகி விட்டார்கள் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். ஹார்லிக்ஸ், பிஸ்கெட், இளநீர் என என்னைப் பார்க்க வந்து பாசம் காட்டிய சொந்தங்களிடமும் 'இதென்ன சந்தை மடமா?' என திட்டி விரட்டாத குறையாக அனுப்பியிருக்கிறாள் அந்த நர்ஸ் மல்லிகா. என் மனைவி சொன்னபோது பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டேன். அடுத்தடுத்த தினங்களில் மல்லிகா நர்ஸ் ஊசி குத்தும்போது கூடுதலாக வலிப்பதைப்போல ஒரு பிரம்மை. 
ன்று காலை 10 மணிக்கு  ஆபரேஷன்...வழக்கம்போல மல்லிகா நர்ஸ் தன் வெக்கையேறிய‌ குரலில், ''ஏ! தம்பி இன்னிக்கு சாயங்காலம் உனக்கு ஆபரேஷன். தண்ணிகிண்ணிய குடிச்சித் தொலைச்சிறாத‌..எதையும் சாப்பிட்டுறாத.. என்ன புரியுதா..?"
பேசப் பிடிக்காததால் முறைத்தபடி சரி என்பதுபோல் தலையாட்டிவைத்தேன்.
'இவளுக்கு இந்த மரியாதை போதும் ஜமீல்..'- ‍மனசுக்குள் கனன்றேன்.
ஆபரேஷனும் ஒரு சுபயோகமில்லாத தினத்தில் நடந்து முடிந்தது. ஏழாம் நாள் தையல் பிரித்துவிட்டார்கள். மகள் பிள்ளைப் பெத்துக் கிடப்பதால் என் மாமியார்தான் அங்கு எனக்கு யாதுமாகி நின்றார். கிளம்பும்போது என்னை எதையும் சுமக்கவிடாமல் உடமைகள் அனைத்தையும் தன் தோளில் சுமந்து கொண்டு என்னோடு நடந்தார். அம்மா வராத குறையை மாமியார் தீர்த்து வைத்தது மல்லிகா நர்ஸின் சுடு சொற்களில் வெந்து நொந்த என் மனதுக்கு மிக ஆறுதலாக இருந்தது. அந்த கணத்தில் ஆண்பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாத அந்த மகராசிக்கு நல்ல (மரு)மகனாக இருக்க விரும்பினேன்.
 ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தோம். மாத்திரைகளை விழுங்கும்போதெல்லாம் 'ஏய்.. இன்னிக்கு மாத்திரை சாப்பிட்டியா?..' என்று கடுவன்பூனையைப்போல மல்லிகா நர்ஸின் குரலும் ஏனோ மனதுக்குள் அசரீரியாய் கேட்டது. 'அதென்ன ஏய்..? ஆடுமாடுகளைபோல!'...அழகாக கூப்பிடுவதற்கென்றே வைக்கப்பட்டிருக்கிற என் பெயரை இந்த பாதகத்தி ஒருநாள்கூட‌ கூப்பிடாதது கோபத்தைக் கிளறிவிட்டது. அன்று என் வாழ்வின் முக்கியமான ஒரு முடிவை எடுத்தேன். என் செல்ல மகள் சுமையாவை ஒரு நல்ல செவிலியராக்க வேண்டுமென்று! இதோ இன்று அவள் வளர்ந்து என் விருப்பத்துக்கு மதிப்பளித்து நர்ஸிங் படித்து அந்த மல்லிகா வேலைபார்த்த அதே மாவட்ட தலைமை மருத்துவமனையில் நர்ஸாக சேர்ந்து ஒரு வருடம் முடியப் போகிறது.
''பாய்..! டீயை எடுத்துக்கங்க!" டீக்கடை ‍முருகானந்தம் குரலில் நிகழ்காலத்துக்கு வந்தேன். மனதுக்குள் சாதித்துவிட்ட பூரிப்பு பொங்கி பிரவாகித்துக் கிடந்தது.
''என்ன மாமா! சுமையா ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டாளா?" என் மகளோடு வேலை பார்க்கும் சுமதி அவளது ஸ்கூட்டியை நிறுத்திய‌வாறு என்னை நோக்கிக் கேட்டாள். இவள் அதே மாவட்ட தலைமை மருத்துவமனையில் உதவி மருந்தாளுனராக பணி புரிகிறாள். ''இன்னிக்கு நைட் டூட்டிம்மா! அதனால வீட்டுலதான் இருக்கா!" என்றேன். ''சரி மாமா..வீட்டுக்குப் போய் அவகிட்டே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு அப்புறமா ஆஸ்பத்திரிக்குப் போறேன்..நீங்களும் வர்றீங்களா மாமா?" என்றாள். ''இல்லைடா.. நீ போ நான் பேப்பர் படிச்சுட்டு சாவகாசமா வர்றேன்!" என்று சொல்லிவிட்டு அவள் சென்றதும் கொஞ்ச நேரம் தினத்தந்திக்குள் மூழ்கிப்போனேன். என் சிந்தனை மீண்டும் பின்னோக்கியது. சுமையாவை படிக்க வைக்க நான் பட்ட கஷ்டங்கள்.. ஒரு விபத்தில் மனைவி மரியத்தை பறி கொடுத்தது. எல்லாம் காட்சிப்படிமங்களாய் வந்து போனது. மிகுந்த சிரமங்களுக்கிடையே சுமையாவை ஒரு பையனுக்கு கட்டி வைத்தேன். மருமகன் டிப்ளமா முடித்துவிட்டு இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். மகளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. நான் தாத்தா ஆகும் அந்த நாளுக்காக ஏங்கிக் கிடக்கிறேன்.. தினத்தந்தியில் பக்கங்களும் டீ கப்பில் டீயும் தீர்ந்திருந்தன.
ல்ல மழைநாள் அன்று! கொள்ளைப்புறத் தென்னை மரம் சாய்ந்துவிடுமளவுக்கு பெய்யென பெய்யும் பேய் மழை! சுமையா ஞாபகம் வந்தது எனக்கு. டூட்டி முடியும் நேரமாச்சே.. இந்த மழையில நல்லா நனைஞ்சிடுவாளே என் பொண்ணு' அழைக்கக் கிளம்பினேன். ரெயின் கோட்டை மாட்டிக் கொண்டு நடையைக் கட்டினேன். ஆஸ்பத்திரியில் சுமையாவின் தோழி சுமதி எதிர்ப்பட்டாள். ''ஏன் மாமா மழையில நனையுறீங்க? சுமையாக்கிட்டதான் ஸ்கூட்டி இருக்குல்ல.. இன்னிக்கு உங்களை வகையா திட்டப் போறா..!" சொல்லிவிட்டுச் சென்றாள். மெல்ல சுமையா இருக்கும் வார்டுப்பக்கம் சென்றேன். வார்டுக்குள் நுழையும் முன் வராண்டாவில் கும்பலாய் கூட்டம். 

''இந்தச் சிறுக்கிக்கு பெரிய மனுஷங்கன்னு மட்டு மருவாதி வேணாம். அவவீட்டுக்குள்ள நொழைஞ்சமாதிரில்ல வெளில வெரட்டிவிடுறா..இவளுக்கெல்லாம் நல்ல சாவே வராது.."கூட்டதில் ஒரு வயதான பெண்மணி முணுமுணுத்தது என் காதில் ஒலித்தது.
''இந்த சுமையா டார்ச்சர் தாங்க முடியலை.. அங்கே நிக்காத இங்கே நிக்காதனு கடுகடுனுதான் எப்பவும் இருப்பா.. வீட்டுல என்ன டார்ச்சரோ நம்ம தாலிய நெதமும் அறுக்குரா.." என் வயதுக்காரர் ஒருவர் என்னைக் கடக்கும்போது சத்தமாகவே சொல்லிவிட்டுப் போனார். எனக்குள் உயிர் கறுகும் வாசம்.  'ஐய்யோ என் வீட்டிலேயே ஒரு மல்லிகாவா?' மனசை ஏதோ ஒன்று பிசைய அங்கு நிற்கப் பிடிக்காமல் வீட்டை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். வானம் வெளிறிக் கிடந்தது என் மனதைப்போலவே!
முக்கிய செய்திகளில் காற்றழுத்த தாழ்வு மையம் கொண்டிருப்பதாகவும் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை வாசித்துக் கொண்டிருந்தார் ஒருவர் டி.வி‍யில்! சாய்வு நாற்காலிக்குள் முதுகைக் கொடுத்து அப்படியே கண்கள் மூடிக் கிடந்தேன். வெளியே பைக் சத்தம் கேட்டது. சுமையா வந்துவிட்டாள்.
''என்ன வாப்பா.. சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்க.. சுமதி கூப்பிட்டும் கவனிக்காத மாதிரி போனீங்களாமே.. மேலுக்கு சரியில்லையா? மழைநேரம் ஏன்ப்பா இப்படி நனையுறீங்க...நான் என்ன சின்னக் குழந்தையா டெய்லி என்னைக் கூட்டிட்டு வர்றதுக்கு?" சுமையா பேசிக் கொண்டே போனாள்.
''சுமையா உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்!" என்றேன். டி.வி‍யில் செய்திகள் முடிந்து விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது. புரியாமல் குழப்பத்துடன் டி.வி‍யை அணைத்துவிட்டுவந்து என் அருகே மண்டி போட்டு உட்கார்ந்தாள் சுமையா.
நான் மல்லிகா நர்ஸில் ஆரம்பித்து வயதான பெண்மணி விட்ட சாபம் வரை எல்லாம் சொன்னேன். தலை குனிந்தபடி இருந்தாள். நான் பேசி முடித்தவுடன் நிமிர்ந்து பார்த்த என் மகளின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. எனக்கும் அழுகை வர எத்தனித்த கணத்தில் பேச ஆரம்பித்தாள்.
''வாப்பா... நான் வேலை பார்க்குறது அரசாங்க ஆஸ்பத்திரி. இங்க வர்றவங்க எல்லாருமே ‌கிராமத்து ஜனங்க.. எனக்கும் அன்னை தெரசா மாதிரி நைட்டிங்கேல் அம்மையார் மாதிரி பேர் எடுக்கணும்னுதான்ப்பா ஆசை. அந்தக் கனவுலதான் உங்க வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து இந்த வேலைக்கு ஆசைஆசையாய் வந்தேன். ஆனா வந்தபிற‌குதான் தெரியுது..இங்கே அன்பு மட்டும் போதாதுனு! ரொம்ப அன்பை மட்டும் காட்டிக் காட்டி ஒரு கட்டத்துல கேணச்சினே என் காதுபடவே பேசுனாங்க. மாத்திரையை சாப்பிடாமல் கொட்டுறது.. கண்டகண்ட இடங்களில் எச்சில் துப்புரது. தேவையில்லாம குடும்பத்து சங்கதிகள் பேசி வம்பள‌க்கிற‌துன்னு இந்த இடத்தையே என் அன்பு வேற மாதிரி ஆக்கிடுச்சு.. இங்கே அன்பையும்கூட காட்டமாக காட்ட வேண்டியிருக்குப்பா... எனக்கு முன்னாடி இங்கே மல்லிகா நர்ஸ் இந்த ஆஸ்பத்திரியை அவ்வளவு கண்ட்ரோலா வச்சிருந்ததா டைரக்டர் ஒருநாள் மீட்டிங்ல சொன்னார். மாத்திரை சாப்பிடு.. ஊசி போட்டுக்கோ, ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடி எதையும் சாப்பிடாதேனு அந்த நர்ஸ் காட்டுன கடுமையைத்தான் இப்ப காட்டுறேன்.. ஒருநாளும் அவங்களை ஆடுமாடு மாதிரி நினைச்சுப் பார்க்கலை..நோயாளிகள் குழந்தைகள் மாதிரி.. அன்போடு கொஞ்சம் கண்டிப்பும்  இருந்தாத்தான் பூரணமா குணமடைவாங்க வாப்பா! இப்பச் சொல்லுங்க வாப்பா.. நான் பண்ணுனது தப்பா?" !" என்றாள் சுமையா என்ற மல்லிகா.  ''இல்லைம்மா.. நீ செஞ்சது சரிம்மா!" ஆறுதலாய் மகள் முகத்தை கைகளில் ஏந்தினேன்.
 றுநாள் விடிந்ததும் மல்லிகா நர்ஸைப் பார்க்க முடிவெடுத்துக் கிளம்பினேன்.  ஏனோ பார்க்க முடிந்தால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று என் மனம் நினைத்தது. மழையின் உபயத்தால் சாலைகள் எல்லாம் பிசுபிசுத்துக்கிடந்தன . மல்லிகா நர்ஸுக்கு ரொம்ப வயதாயிருக்குமோ..? இந்த ஊரில் இருப்பாரா? என் மகள் குத்துமதிப்பாய் சொன்ன ஒரு தெருவில் மல்லிகா நர்ஸை விசாரிக்க கிளம்பினேன். அபத்தமாய் இருந்தாலும் எப்படியாவது கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு அலைந்ததில் அந்த வீட்டை கடைசியில் கண்டுபிடித்தே விட்டேன். என் மகள் சொன்ன தெருவில் முதல் வீடாய் இருந்தது அந்த வீடு. 'மல்லிகை இல்லம்' ரசனையாய் மனதுக்கு ரம்மியமாய் தோட்டங்கள் சூழ அழகாக இருந்தது அந்த வீடு. காலிங் பெல் அழுத்தி காத்திருக்க.. உள்ளே இருந்து ஒரு வயதானவர் வந்தார்.. ''மல்லிகா நர்ஸ் இருக்காங்களா?" என்றேன். ''என்ன விஷயம் உள்ளே வாங்க...!" என்றார். என்ன சொல்வது தெரியாமல் ஒரு கணம் விழித்தேன்.. ''இல்ல..அவங்க எனக்கு நிறைய‌ உதவி செஞ்சிருக்காங்க...கொஞ்சநாள் முன்னாடிதான் வெளியூர்ல இருந்து வந்தேன்.. அதான்.." சுருக்கமாய் சொன்னேன். ''பரவாயில்லைங்க இப்ப மீண்டு வந்துட்டேன்.. அவ என்னைவிட்டு போயி இன்னியோட மூணு வருஷமாச்சு!" என்றவர் நீண்ட பெருமூச்சு ஒன்றை உதிர்த்தார். எனக்கு காலுக்குக் கீழே உலகம் நழுவியது. 'மல்லிகா நர்ஸ் இறந்துவிட்டாளா?' அதிர்ச்சியில் நின்றேன்.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்!
''சாவறதுக்கு முன்னாடி வரை நர்ஸாத்தான் இருந்தா. வைராக்கியக்காரி.. ரிட்டயர்ட் ஆகியும் இங்கே செய்யது அம்மாள் க்ளினிக்ல நர்ஸா இருந்தா.. என்னமோ இந்த வேலையை அவ வேலையா பார்க்கலை.. கடைசி வரை நர்சாவே வாழ்ந்து சாவ‌ணும்னு சொல்லுவா...ஆஸ்பத்திரில நைட் டூட்டி பார்க்குறப்போ நெஞ்சுவலியில போய் சேர்ந்துட்டா... இன்னியோட மூணு வருஷமாச்சு வேத்து மனுஷா இத்தனை பேரு துக்கம் விசாரிக்க வந்திண்டுதான் இருக்கா.. நிஜமாலுமே கொடுத்து வச்சவ அவ..!" விரக்தியாய் சிரித்தபடி பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார் அந்தப் பெரியவர். அங்கே மல்லிகா நர்ஸ் அதே நர்ஸ் யூனிபார்மில் புன்னகை பூத்தபடி படமாக சிரித்துக் கொண்டிருந்தாள். 










 

1 கருத்து:

6domains சொன்னது…

Free classified online website Just Visit & Post ur ads - www.classiindia.com