செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

டரியலிஸக் கவிதைகள்!‍ பாகம்-1 -காக்கை கூகூவென கூவும்!

பொடிவைத்துப்
பேசினார் தாத்தா
தும்மியது குடும்பம்!

மணக்க மணக்க
கணவனுக்கு 
மசாலா அரைத்த 
அதே அம்மிக்குளவியில் 
அவன் ரத்தம் பார்த்தால் 
பத்தினிப் பெண்!

முற்றும் துறந்த முனிவனை 
கேமரா பார்த்தது!

கனவில் நெளியும் 
பாம்பைவிட
 நீளமானது 
பாம்பு குறித்த அவன் பயம்! 

ரெண்டு பொண்டாட்டிக்காரன்மேல் 
புதிதாய் ஒருத்திக்குக் காதல்..
வானம் மும்மாரி பொழிய 
இனி முப்போகம் சம்போகம்தான்!

டெல்லிக்கு ராசானாலும்
திஹார் பக்கம் போகாதே!

நிமிர்ந்த நன்னடை 
நேர்கொண்ட பார்வைப்பெண்ணுக்கு
வரனே அமையவில்லை!

ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் 
கொஞ்சநாளில்
தூங்கிப்போனார்!

வரலாற்று சிறப்புமிக்க 
அந்த சந்திப்பில் 
வரலாறுக்குப்பதில்
பொருளாதாரத்தைப் பேசினார்கள்!

கறுக்கலில் 
கம்மாய்ப்பக்கம் 
குத்தவச்சவனை
நான்கைந்து கருக்கருவா
குத்திக் கிழித்தது!

ஜெனரல் பாடி மீட்டிங்கில் 
ஒரு பாடி கிடந்தது!

புன்சிரிப்பால் வருத்தப்பட்டான் 
பல்வலிக்காரன்!

அவள் விழியோரம் ஈரம்..
காக்கை எச்சம்!

டாக்டர் பிள்ளை நோயாளி
வாத்தியார் பிள்ளை மக்கு..
‍சொன்னவன் ஒரு பேக்கு!

இன்னமும்கூட கடிதம் எழுதுகிறார் என் அப்பா!
சீரியல் நடிகைகள் வரும் 
ரியல் எஸ்டேட் விளம்பரத்தையும் 
சீரியஸாய் பார்க்கிறாள் என் அம்மா! 

கேன்சருடன் சிரிக்கும் 
அவன் ப்ளட் க்ரூப் கூட‌
'பி பாஸிட்டிவ்' என்கிறது!

ஆற்றில் வெள்ளம்..
கழுவாமல் திரும்பினான்!

புள்ளி வைக்காமல்
சக்தி போட்ட கோலம் 
சகதியானது
மழையினால்!

பூமி கொசுக்களாலும் 
தவளைகளாலும் 
பாம்புகளாலும்
கூடவே 
பசிப்பிணிகளாலும் 
நிறைந்திருக்கிறது! 

புண்பட்ட நெஞ்சை
புகைவிட்டு ஆற்றிய‌
பெட்ரோல் பங்க் சிறுவனுக்கு
வேலை பறிபோனது!

தியேட்டர் டிக்கெட் கவுன்டருக்குள்
முண்டியெடுத்து வரிசையில் நின்று 
முகமறியா மனிதனிடம் 
டிக்கெட் பெற்று 
வெற்றிக் களிப்பெய்திய காலம்
பொற்காலம்!

நம் தொடைதட்டி,
"அடுத்த சீன்ல ராஜீவு ராதாவை கெடுக்கப்போறான்"
என்று முன்கதை மொழிந்த 
ஆர்வக்கோளாறு ரசிகனெல்லாம்
இப்போது உலகில் இல்லை!

கார்த்திகை மாதத்து நாய்போல‌
மார்கழி மாதத்து வீதியில் 
கன்னியர்தன் கண்களுக்காய் 
அலைகிறான் ஒருவன்!

இன்னமும் 
சாலிடர் டயனோரா
 ப்ளாக் அன்ட் ஒயிட் டி.வி பார்ப்பவர்கள்
பெருஞ்சிக்கனக்காரர்கள் மட்டுமல்ல!

15 வருடங்களாக 
எங்கள் ஆன்டெனாவை கழற்றவில்லை
காரணம்..
காக்கை குருவி எங்கள் சாதி!

தமிழகத்தின் விடிவெள்ளி 
11 மணிக்கே துயில் எழுவார்!
தமிழகத்தின் எழுச்சி நாயகனுக்கோ 
சிட்டுக்குருவி லேகியம்தான் உணவு!

சரக்குக் கப்பலும்
தரைதட்டிக் கவிழ்ந்தது!

சிறுகுடல் பெருங்குடலை தின்பதற்குள்
குடல்குழம்பு சாப்பாடு வந்தது!

தன்விதியை எண்ணி 
நொந்து கிடக்குது 
மார்க்கெட் மீன்!

டாஸ்மாக்கைக் கடக்கும்போது 
யாரோ உள்ளிருந்து அழைப்பதாய்
ஓர் உணர்வு..
மனப்பிராந்தி?

கடைசி அடியில்
கபாலம் திறந்தது..
ஆனால்
உயிர் மிச்சம் இருக்குது!

கோடுபோட்ட நோட்டில் 
கவிதை எழுதுபவனெல்லாம்
மொக்கைக் கவிஞனே!

லாரியிலிருந்து விழுந்து
இறந்த சித்தாள்
சிறுவன் கையில் 
பாதி தின்ற போண்டா! 

பெருசின் இறுமலால்
பிரிந்து படுத்தனர் 
புதுமணத் தம்பதியர்!

தூக்கத்திலிருந்தபோது
அவனைச்சுற்றி சாக்பீஸால்
கோடு கிழித்தார் ஒரு போலீஸ்காரர்..
கடைசிவரை 
எழவே இல்லை அவன்!

முயற்சி தெருவினையாக்கியது..
சுயதொழிலில் நஷ்டம்!

கூடுவிட்டு கூடுபாய்ந்து 
காதல் செய்தவர்கள்
கூடிக் களித்ததும்
கூலிப்படை வைத்து 
காதல் கணக்கு
தீர்த்துக் கொண்டனர்!

அவன்
போரடித்ததால் 
கொலை செய்தான்!

கூவத்தில் புதைந்த பிணத்தை
நிஜமாகவே 
வலைவீசி தேடுகிறது போலீஸ்!

என்கடன் 
வட்டிக் கட்டிக்கிடப்பதே!

முதல் கோணல் முற்றிலும் கோணலல்ல..
அப்படியே..
கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும்!

பள்ளி கொண்ட பெருமாளை
ஆற்று வெள்ளம்
கொண்டு போனது!

மேதாவிலாசம் கொண்டவனுக்கு
சுயவிலாசமிட்ட தபால் அனுப்பக்கூட 
விலாசம் இல்லை!

காதலில் விழுந்த அவனுக்கு
முதலில் எலும்பு முறிந்தது!

கணவன் மீது 
கொஞ்சம் பாசம் இருந்ததால்
ஸ்லோ பாய்சன் கொடுத்தாள்!  

ஜெட் ஏர்வேஸில் 
விமானியாக இருந்தாலும் 
அவனை 'பேமானி' என்றழைத்தான் 
ஒரு ஆட்டோக்காரன்!

'சென்னைக்கு மிக அருகில் 
விக்கிரவாண்டியில் வீடுமனை விற்பனைக்கு' 
என்பவனை கொல்வதா..புதைப்பதா? 
அல்லது கொன்று புதைப்பதா?

ரயில்பாதையோர 
குடிசையில் வசித்தாலும்
தற்கொலை எண்ணம் 
ஒருமுறையும் வரவில்லை
மினிம்மாக்கு!

கழிவிறக்கம் காணாதவன்மீது
கழிவிரக்கம்..
கேஸ்ட்ரோஎன்ட‌ரொலஜி டாக்டருக்கு!

அவனுக்கு
பசித்த நல்வயிறை
படைத்திட்ட கடவுள்
அப்பமுடன் அவல் பொரியை
தானே எடுத்துக் கொண்டார்!

தொழில் சூடுபிடித்தபோது
அவளுக்கு
நோய் வந்தது!

ஆலகால விஷத்தை
ஏககாலத்தில்
அவளுக்குக் கொடுத்தான்
காதல் கணவன்!

1 கருத்து:

Prabu Krishna சொன்னது…

எல்லாமே அருமை.

பாஸ் கொஞ்சம் கொஞ்சமா போடுங்கள்.

உங்கள் வலைப்பூ லோட் ஆக அதிக நேரம் எடுக்கிறது.