புதன், 8 டிசம்பர், 2010

ரத்த சரித்திரமும்...யுத்த சரித்திரமும்!

ரத்தசரித்திரம்...சின்னவயதில் பள்ளிப் பாடப்புத்தகத்தில் படித்த ஹமுராபியின் சட்டத் தொகுப்பு ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு? 'கண்ணுக்கு கண்! பல்லுக்குப்பல்!.' இதுதான் படத்தின் ஒன்லைன். 'ஆந்திராவின் அனந்தபுர் மாவட்டத்தில் பிறந்து சூழ்நிலையால் தாதாவாக மாறி பின் ஆந்திர சூப்பர் ஸ்டார் என்.டி.ஆரால் பாலிடிக்ஸில் நுழைந்து ஆந்திராவையே கலக்கியெடுத்த பரிதலாரவியை 2005‍ல் பழிதீர்த்து வஞ்சம் தீர்த்தான் அவனால் பாதிக்கப்பட்ட சூரி என்பவன்.' அந்த பழிவாங்கலின் இருண்ட பக்கங்களை தனக்கே உரிய அசத்தல்மேக்கிங்கில் படம்பிடித்துக் காட்டி இருக்கிறார் ராம்கோபால்வர்மா.
டப்பிங் படமாக இருப்பதாலும் அந்த ஆந்திரா லேண்ட்ஸ்கேப் தமிழ்நாட்டோடு பொருந்தாமல் அந்நியமாகிப் போவதாலும் ஆரம்பத்திலிருந்தே நம்மால் காட்சிகளோடு ஒன்றிப்போக முடியவில்லை. ஆனாலும் இந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும். இந்தப்படத்தை அழகாக தன் குரலில் தமிழில் நேரேட் செய்திருக்கிறார் கௌதம் மேனன். படத்தின் பெரிய ப்ளஸ் சூர்யா. தன் அசத்தலான நடிப்பை வெளிக் காட்டியிருக்கிறார். ரௌத்ரம் பொங்க அவர் வேட்டைநாயாக பழிதீர்க்க அலைவதிலாகட்டும்.. தன் எதிரியை கொல்ல அவர் போடும் திட்டங்கள் தோற்றுப்போன‌ இயலாமையில் குமுறுவதிலாகட்டும் சூர்யா சூப்பர்யா! சூர்யாவின் பவர்ஃபுல் கண்களே பலகாட்சிகளில் காட்சிக்கான கணம் சேர்க்கிறது.
பிரதாப் ரவி கேரக்டரில் விவேக் ஓபராய் அப்படியே கேரக்டரோடு பொருந்திப் போகிறார். அவருக்கு இந்தப்படம் நல்ல மைலேஜ். படத்தின் துவக்க காட்சிகளில் காட்டப்படும் நிஜ‌ பரிதலா ரவியின் பாசிட்டிவ் பக்கங்களை நம் மனதோடு ஒன்றச் செய்வதில் விவேக் ஓப‌ராயின் நடிப்பு பெரும்பங்கு வகிக்கிறது. என்.டி.ராமாராவ் கேரக்டரில் சத்ருஹன் சின்ஹாவை நடிக்க வைத்திருக்கும் ஆர்.ஜி.வி‍யின் புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆகவேண்டும். படத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியில் குண்டு வெடித்தவுடன் பதறி ஓடும்போது சூப்பர் ஸ்டார் இமேஜை தூள்தூளாக்கி ஒரு கோழையாக உருவகப்படுத்தி இருப்பது க்ளாஸ். ஆந்திராவில் இந்தக் காட்சிக்காக சிலர் கொந்தளித்துக்கிடப்பதாககேள்வி. சின்னச் சின்ன கேரக்டரில்கூட நல்லநடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஃப்ரேம் பை ஃப்ரேமிலும் யூனிட் கணக்கில் ரத்த சாயத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ரத்தத்தை காட்டாமல் சரித்திரத்தை எழுதக்கூடாது என நினைத்திருப்பார்போல இருக்கிறது. சில நேரங்களில் நமக்கேகூட நம்மை யாரும் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம்வருகிறது. ஆக்ஷன்காட்சிகளை மெதுவான மோஷன் ஃப்ரேம்களாக (96 ஃப்ரேம்ஸ்) காட்டி இருப்பது உண்மையில் படு மிரட்டல். உண்மைச் சம்பவம் என்றபோதிலும் இந்தப்படம் உண்மையைக் கையாளவில்லை என்ற கொந்தளிப்பு ஆந்திராவில் இருக்கிறது. நிஜத்தில் பரிதலா ரவி, சூரியால் கொல்லப்படவில்லை என்கிறார்கள் சிலர். முதுபெரும் நக்ஸலைட் போராளி கொண்டப்பள்ளி சீத்தாராமைய்யாவின் இயக்கம் சார்ந்த கொள்கைகள் கோட்பாடுகள் இதில் காட்டப்படாமல் மழுங்கடிக்கப்பட்டு பழிவாங்கல் அர‌சியல் மட்டுமே படத்தில் பேசப்பட்டிருக்கிறது என்கிறார்கள் சிலர். அதெல்லாம் கிடக்கட்டும். பரிதலா ரவியின் வாழ்க்கையைத் தேடிப் பிடித்து படித்தால் கழுத்தை அறுத்து, பிறப்பு உறுப்பை துண்டித்து கொலைசெய்த விஷயங்களெல்லாம் காணக்கிடக்கிறது. 'சொன்னது கொஞ்சம்..சொல்லாதது உச்சம்' என்பதும் விளங்கிறது. இந்த ரத்தத்துக்கே இன்டெர்வெல்லுக்குள் தியேட்டர் பாதி காலியாகிவிடுகிறது. போதும்டா சாமீ!
டெய்ல் பீஸ்-1: இந்தி, தெலுங்கில்  பார்ட்- ஒன் ,பார்ட்- டூவாக இப்படம் விரிவாக‌ ரிலீஸாகி இருக்கிறது. முதல்பாதி பரிதலாரவியின் அரசியல் என்ட்ரியோடு முடிகிறது. பார்ட் -டூ தான் நாம் பார்ப்பது. முதல் பாதி சில விஷயங்களோடு சேர்த்து  சுருக்கமாக எடிட் செய்து  நமக்கு பழிவாங்கலின் சரித்திரமாக ரிலீஸாக்கி இருக்கிறார்கள்.
டெய்ல் பீஸ்-2: படத்தில் டயலாக்குகள் இயல்பாக,‌ நன்றாக இருக்கிறது. வசனம்: என் முன்னாள் விகடன் நண்பன் த.செ.ஞானவேல்!

சூர்யா ரசிகர்களுக்கும் ராம்கோபால்வர்மாவின் ரசிகர்களுக்கும் இந்தப்படம் பிடிக்கும். மற்றபடி இது அவர்கள் சொல்லிக்கொள்வதுபோல நல்ல சினிமாவோ உலக சினிமாவோ அல்ல.


டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.. இது மாம‌னிதனின் நிஜமான‌ யுத்த சரித்திரம்!
முதலில் சொல்லி விடுகிறேன் இது சினிமா அல்ல. ஒரு வாழ்க்கைப்பதிவு!
சாதிய வர்க்கபேதத்திற்கு எதிராக தன் வாழ்நாள்முழுவதையும் செலவிட்ட ஒரு உன்னதமான மனிதனின் வாழ்க்கையை கண்முன் காட்டி இருக்கிறார்கள். இந்தப்படம் நான் டவுசர் போட்டுத் திரிந்த காலத்திலிருந்து பேசப்பட்டு வந்த ஒரு விஷயம். 2000‍ல் அரசியல்சூழ்ச்சிகளையெல்லாம் தாண்டி தியேட்டரைத் தொட்டிருந்தது. மாநில மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக பல தடைகள் இருந்து வந்தது. சமீபத்தில் தமிழில் அழகாக ரிலீஸாகி இருப்பதன் பின்ணணியில் இருந்த‌ அந்த முதுகெலும்புள்ள மனிதர்களுக்கு நன்றிகள் பல! இந்தப்படத்துக்காக 'என்.எஃப்.டி.சி'(தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்)‍க்கு வாழ்த்துகள்! ஒரு சாதீய தலைவனாக மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுவரும் ஒரு மகோன்னதமான மனிதனின் வாழ்க்கையை ஆய்ந்து அச்சு பிசகாமல் கேப்ஷூலாக தந்திருப்பதற்காக டைரக்டர் ஜப்பார் படேலுக்கு வாழ்த்துகள். முன்பு ஆங்கிலத்தில் வந்தபோது அதை பார்ப்பதற்கான சூழல் அப்போது எனக்கு இல்லை. இன்று இந்தப்படத்தைப் பார்த்தபோது பெருமிதமாகவும் இனம்புரியாத சந்தோஷமாகவும் உணர்ந்தேன். டாக்டர் அம்பேத்கராக மம்மூட்டி வாழ்ந்திருக்கிறார். நடிப்பில் மம்மூட்டியாகவே தெரியவில்லை. கமல்ஹாசனைப்போல போலி மேதாவித்தனத்தைக் காட்டாமல் அம்பேத்கரை உள்வாங்கி  பிரதிபலித்திருக்கிறார் மம்மூட்டி.
அம்பேத்கர் பற்றி அதிகம் படிக்காதவர்கள் அவசியம் இந்தப்படத்தைப்பார்க்கவேண்டும். எனக்கு படம்முழுமைக்கும் பிடித்திருந்தாலும் குறிப்பாக காந்திஜியோடு தொடர்புடைய‌ இவர் பேசும் வசனங்கள் எல்லாம் விருப்பமான  நெருப்பு! நண்பர்களிடம், 'மகாத்மாக்கள் மகாத்மாக்களாக இருப்பதுதான் பிரச்னை. அவர்கள் மனிதர்களாக இருந்தாலே இங்கு பிரச்னையில்லை!' என்பதும், 'என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள கேட்கும் நீங்கள் ஏன் காந்திஜியின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள சொல்ல மறுக்குறீர்கள்?' எனும்போதும்.. காந்தியைப்பார்த்து, 'தயவுசெய்து உண்ணாவிரதமெனும் ஆயுதத்தை அடிக்கடி கையிலெடுக்காதீர்கள்!' என்று விரக்தியின் உச்சத்தில் சொல்லும்போதும் நம்மை அறியாமல் படத்தை மறந்து சிலிர்க்க நேரிடுகிறது. பட்டப்படிப்பின்போது இந்தியாவிலும் பாரிஸ்டர் படிக்கும் காலத்தில் லண்டனிலும் அவர் அடக்குமுறைக்கு ஆளாகுமிடமெல்லாம் நிஜமான  வரலாற்றுபதிவு. ஒரு தேர்ந்து தெளிந்த மனிதருக்கே உரிய கோபத்தை அழகாக அம்பேத்கர் வெளிப்படுத்தும்போது நம்மனதை பிசைகிறது. இட ஒதுக்கீடுக்கான அவர் குரல் இன்றைய‌ நிகழ்கால அரசியல் சூழலை பிரதிபலிப்பதன் மூலம் எத்தனை தெளிவான விரிவான எதிர்காலம் குறித்த ஆழ்ந்த பார்வை அவருக்கு இருந்திருக்கிறது  என்பதுவிளங்கும். எதையும் தவிர்த்துவிடாமல் நுட்பமான பதிவுகளாக தரவேண்டும் என்ற  சிரக்தை காட்சியமைப்புகளில் தெரிகிறது. குறிப்பாக‌ உடல்நலத்தில் அக்கறை இல்லாதவராக தன் இன மக்களுக்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து செல்லும்போது காட்டப்படும் முகபாவங்களிலும் மனநிம்மதிக்காக இசைக்கருவிகளைக் கையாளும் இடங்களிலும் சமூகப் போராளி பாத்திரத்தில் மம்மூட்டியின் பாத்திரத் தேர்வு நியாயம் செய்கிறது. 'என்னை இப்போது தேசவிரேதியாக உருவகப்படுத்தி வருகிறார்கள்.. அதைப்பற்றி வருத்தம் எனக்கில்லை. வருங்கால இந்திய வரலாற்றில் என் கருத்துக்ளின் நியாயம் பேசப்படும்!'  என்ற அவரின் தீர்க்கமான கொள்கைப்பற்றும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. எல்லாவற்றையும் தாண்டி அவரின் குடும்ப பாசம் கொள்கை தாகம் இரண்டையும் அழகாக ரத்தின சுருக்கமாக காட்டி இருக்கிறார்கள்.
  மனைவி ரமாபாயாக  சோனாலி குல்கர்னி அற்புதமாக நடித்திருக்கிறார். ('மே மாதம்' படத்தின் நாயகியாக மார்கழிப்பூவே..மார்கழிப்பூவே' பாடுவாரே அவரேதான்!)
'டாக்டர் அம்பேத்கரை நான் முற்போக்கு சிந்தனை கொண்ட பூனா பிராமணர் என்றல்லவா நினைத்திருந்தேன்!' என்று காந்தி தன் சகாக்களிடம்  சொல்லுமிடம் அருமையான ஒற்றை வரியிலான நுண்ணரசியல் பதிவு!  சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சாசன நிர்ணயக்குழுவின் தலைவராக அவர் நியமிக்கடும்போதுகூட அவருக்கு நிகழ்ந்த புறக்கணிப்பு, மோசமான தன் உடல்நிலை எல்லாவற்றையும் தாண்டி அரசியலமைப்பு சாசனத்தை அவர் தனியொரு மனிதனாக உருவாக்கிக் காட்டியதை பாராளுமன்றம் அங்கீகாரம் செய்திருக்கும் இடம் அப்படியே கண்முன் காட்டப்பட்டிருக்கிறது. அவரின் கோபங்கள் நியாயங்கள் அனைத்தும் எந்தவித புனைவு, திரிபுகள் இன்றி அப்படியே காட்டி இருப்பது படத்தின் பெரிய சிறப்பு! 
படமே ஒரு பாடமாக கண்முன் விரியும்போது குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் வியப்பதில் அர்த்தமில்லை என்றே தோன்றுகிறது.
சினிமா என்பதையும் தாண்டி ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது!

1 கருத்து:

அறிமுகத்தவம் சொன்னது…

அன்புத் தோழருக்கு வணக்கம்,

எமது தளத்தில் இருந்து மற்றுமொரு இணைய சஞ்சிகையாக அறிமுகத்தவத்தினை வெளியிடுகிறோம். இதில் பல பதிவர்களின் நல்ல எழுத்துக்களை வெளியிடுகிறோம். முதல் பதிப்பில் தங்களின் படைப்பும் வெளியிடப்பட்டு இருக்கிறது. பார்த்துவிட்டு கருத்துக் கூறவும், இவற்றில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் என்னிடம் கூறுங்கள், நீக்கிவிடுகிறோம். தாங்கள் மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்.

இங்ஙனம்,

அங்கிதா வர்மா,
தலைமை ஆசிரியர் - பாண்டிச்சேரி வலைப்பூ