வெள்ளி, 3 டிசம்பர், 2010

நந்தலாலா‍ -'நறுக்' விமர்சனம்

முதலில் ஜப்பானிய‌ 'கிக்குஜிரோ'வின் தழுவல் என்று  ஒப்புக் கொண்ட நேர்மைக்காக மிஷ்கினுக்கு ஒரு கைகுலுக்கல்!  இணையத்தின் உபாயத்தால் 'நந்தலாலா தன் சொந்தலாலா இல்லையென்பதால் நொந்தலாலாவாகிவிட்டார் மிஷ்கின்!'  ஆனாலும் படம் எனக்கு பிடித்திருக்கிறது விமர்சனங்களைத் தாண்டி! ஒரு நல்ல கலைப் படைப்பு ஏதேனும் ஒரு உணர்வு நரம்பை உங்களுள் மீட்ட வேண்டும். இந்தப் படத்தில் பல இடங்கள் என்னைக் கவர்ந்தது. காரணம் 'அன்பு'சால் மனிதர்களை காட்சிப் படுத்தியிருந்த விதம்! 'கிக்குஜிரோ’ தழுவல் என்ற ஒரே காரணத்துக்காக இதை இந்த அளவுக்கு இணையத்தில் கும்மி எடுப்பது தவறு. சுறா, எறா என்று மொக்கைப் படங்களைப் பார்த்து செத்துக் கிடந்த கண்களுக்கு இது அற்புதமான படம். ஒரு படத்துக்கு உயிர் கொடுக்க தன்னால் முடியும் என்பதை தன் மயிலிறகு இசையால் மீண்டும் நிரூபித்திருக்கிறார் இசைஞானி. இளையராஜா இல்லையென்றால் படம் இந்த அளவுக்கு மனசிற்குள் உட்கார்த்திருக்காது என்பது நித‌ர்னம்! படத்தின் விளம்பரங்களில் தன் பெயருக்கு முன் இளையராஜாவை முன்னிலைப் படுத்தியமைக்காக மிஷ்கினுக்கு வாழ்த்துகள்! மிஷ்கினின் நடிப்பும் பல இடங்களில் நிறைவாகவே இருக்கிறது. அந்த சின்னப் பையனின் உடல்மொழியில் மிகைத்தன்மை தெரிகிறது.. ஸ்நிக்தா தமிழ்ப் பெண்போலவே இல்லை.. வயதான அம்மாவாக ரோஹிணியைக் காட்டுவத‌ற்குப் பதில் வேறு யாரையேனும் காட்டியிருக்கலாம். முதிர்ச்சியான உடல் அமைப்பு அவரிடம் இல்லாததால் இளையராஜாவின் தாலாட்டுப் பாடலின் 'டெம்போ' காட்சியமைப்பில் இல்லாமல் போய்விடுகிறது. கால்கள் மீது மிஷ்கினுக்கு அப்படி என்ன 'க்ரேஸோ!'  கால்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஃப்ரேமை அழகாக்கி இருப்பது இதிலும்  தொடர்கிறது. 'க்ரெடிட் கோஸ் டூ' மகேஷ் முத்துசுவாமி! முக்கியமான ஒரு குறை..படத்தின் அழகியலுக்காக பயன்படுத்திய ஒரு உத்தி சொதப்பலாகிவிட்டது. கேரக்டர்கள் ஒரு சீன் முடிவடையும்போது ஃப்ரீஸாகி அப்படியே நிற்கிறார்கள். அது ஏன்? பார்க்க அழகாக இருந்தாலும் எதார்த்தம் இதில் மிஸ்ஸாகிறது மிஷ்கின். இப்படி நெருடல்கள் 'நந்தலாலா'வில் ஆங்காங்கே இருந்தாலும் படம் சொல்லவரும் சேதி என்ன? 'அன்பு'என்ற ஒற்றை வார்த்தை! அதற்காக ஒருமுறை நிச்சயம் நந்தலாலா பார்க்கலாம்.. 'கிக்குஜிரோ’வை மறந்து!     

    1 கருத்து:

    பெயரில்லா சொன்னது…

    நல்லதொரு படம், எந்திரனை விட நன்றாக இருக்கு, ஒரு முறைப் பார்க்கலாம். அவ்வளவு தான். மிஷ்கின் இன்னும் நல்ல படங்களை தந்தால் நன்றாக இருக்கும்.