செவ்வாய், 30 நவம்பர், 2010

நச்சு ஞாபகங்கள்!

டிசம்பர் 2, 1984 நள்ளிரவு... மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால்.. அங்கிருக்கும்  'யூனியன் கார்பைடு ' தொழிற்சாலையிலிருந்து நச்சுவாயு பரவத் தொடங்கியது. உடனடியாக 3,828 பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கண்பார்வை பறிபோனது. காற்றின் எதிர்த் திசையில் ஓடிய மக்கள் ஈக்களைப் போலச் சுருண்டு விழுந்து செத்தனர். முதல்வர் அர்ஜூன்சிங் போபால் நகரை விட்டுத் தப்பிச் சென்றார்.


டிசம்பர் 3 1984.. நகரெங்கும் பிணக்குவியல். எல்லாம் முடிந்த பிறகு, முதல்வரும் அதிகாரிகளும் திரும்பி வந்தனர். கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கில் 10‍வது குற்றவாளியாக யூனியன் கார்பைடு சேர்க்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் 20,000 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். 5,00,000‍க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

டிசம்பர் 7,1984.. தொழிற்சாலையைப் பார்வையிட வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டு, விருந்தினர் மாளிகையில் வைத்து உபசரிக்கப்படுகிறார். இந்திய அரசு வாக்களித்திருந்தபடி, ஆண்டர்சன் பிணையில் விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பாக ம.பி முதலமைச்சர் அர்ஜூன்சிங்கின் சிறப்பு விமானத்தில் வழியனுப்பி வைக்கப்படுகிறார்.

ஜூன் 7,2010.. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 7 நிர்வாகிகளுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு. உடனடியாக பிணையில் அவர்கள் விடுவிப்பு!

22,146‍‍ -போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் உண்மையான எண்ணிக்கை.

5,295  -அரசு கூடுதல் நிவாரண உதவி அளிப்பதற்காக அங்கீகரித்துள்ள புள்ளி விவரங்களின்படி இறந்து போனவர்களின் எண்ணிக்கை.

5,50,095-  நிரந்தரமாக மற்றும் பகுதியளவில் முடமாகிப் போனவர்கள், புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோரின் மொத்த எண்ணிக்கை.

36,913- அரசு கூடுதல் நிவாரண உதவி அளிப்பதற்காக அங்கீகரித்துள்ள புள்ளி விவரங்களின்படி முடமாகிப்போனோர், பிறவகைகளில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த என்ணிக்கை.

1500 கோடி ரூபாய்- அரசு அறிவித்துள்ள கூடுதல் நிவாரணத் தொகை.

1000 கோடி ரூபாய் - யூனியன் கார்பைடு நிறுவனம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்‌டோருக்கு நஷ்ட ஈடாக அளித்த 47 கோடி அமெரிக்க டாலரை வங்கிகளில் சேமிப்பாக வைத்திருந்ததன் மூலம் இந்திய அரசுக்குக் கிடைத்த வட்டிப் பணம்; அதாவது, லாபம்!
அந்த 1500 கோடி ரூபாய்க்குள் இந்த 1000 கோடி ரூபாயும் அடங்குமென்றால் பாதிக்கப்பட்டோரில் வெறும் 15 சதவீதப் பேருக்கு மட்டுமே உதவி கிடைக்குமென்றால், இதற்குப் பெயர் நிவாரணமா?  



கருத்துகள் இல்லை: