வெள்ளி, 8 ஜனவரி, 2010

ஷங்கர் தி டைரக்டர்! (சினிமா டைரக்டர் அல்ல!)

"நல்லாக்கவுண்டம்பாளையத்தில் நானும் என் தாத்தாவும் பார்க்காத, விளையாடாத தோப்பு எதுவும் இல்லை. பேரன் மீது அளவற்ற பாசம். என்னைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி ஒவ்வொரு தோப்பாக அழைத்துச் செல்வார்.என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த தாத்தா, ராகிங் குற்றத்துக்காக நான் கல்லூரியில் இருந்து ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது, கலங்கிப்போனார். திறமையைவிட ஒழுக்கமே பெரிது எனப் போதித்த தாத்தா, மன உளைச்சலின் உச்சத்தில் என்னுடன் ஒரு வார்த்தையும் பேசாமல் தன் உயிரைப் போக்கிக்கொண்டார். வாழ்க் கையை-யும் உலகத்தையும் புரியவைக்கத் தன் உயிரைத் தந்த தாத்தா ரெங்கையா கவுண்டரின் அன்புக்கு என் அத்தனை வெற்றிகளும் சமர்ப்பணம்!''
- நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் சங்கர். சென்னை-யின் முன்னணி ஐ.ஏ.எஸ்., அகாடமிகளில் சங்கரு-டையதும் ஒன்று. கடந்த வருடம் தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 96 பேர்களில் 36 பேர் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள். வருடம் ஒன்றுக்கு 300-க்கும் அதிகமானவர்களை சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயார் செய்து அனுப்புகிறார். திருச்செங்கோடு பக்கம் ஓர் உள்ளடங்கிய கிராமத்தில் பிறந்து, முதல் தலைமுறைக் கல்வி பெற்ற சங்கர், இப்போது ஒவ்வொரு வருடமும் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்--களை உருவாக்குகிறார். ஆனால், இவர் நான்கு முறை சிவில் சர்வீஸ் எழுதி தோல்விகளைத் தழுவியவர் என்பதுதான் ஆச்சர்யம்!

"ஊத்தங்கரையில்தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். ஐந்து பாடங்களிலும் சேர்த்து நான் எடுத்த மதிப்பெண்கள் மொத்தமே 32-தான். பருத்திக் காட்டில் வேலை பார்த்து என்னைப் படிக்க வைத்த என் அப்பா, 'நீ படிக்க லாயக்கு இல்லை' என்று, நல்லாக்கவுண்டம்பாளையத்தில் இருந்த என் தாத்தா வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அங்கு ஒரு வருடம் தறி வேலை பார்த்தேன். அடுத்த வருடம் நல்லசமுத்திரம் பள்ளியில் சேர்க்கப்பட்ட போது, முதல் நாளே இங்கிலீஷ் வாத்தியார் என்னைப் புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னார். தட்டுத் தடுமாறிப் படித்து முடித்ததும் நான் நன்றாகப் படித்ததாகச் சொல்லி, ஒரு சாக்லேட் பரிசு அளித்தார். நான் முதன்முதலாகப் பாராட்டின் சுவையைருசித்தேன்.
விளைவு... 10-ம் வகுப்பில் நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். ப்ளஸ் டூ முடித்து கல்லூரியில் சேர வேண்டும். ஆனால், இன்றைய இளைஞர்கள் பலரைப்போல டைரக்டர் கனவு என்னைஆட்டிப் படைத்தது. 'இம்ப்ரூவ்மென்ட் எழுதுகிறேன்' என்ற பெயரில், தியேட்டர் தியேட்டராகச் சென்று சினிமா பார்க்கத் தொடங்கினேன். அப்புறம் பரீட்சையில் என்ன இம்ப்ரூவ்மென்ட் வரும்? ஏற்கெனவே எடுத்ததைவிடக் குறைவான மதிப் பெண்கள்தான் வந்தன.
கல்லூரியில் பி.எஸ்ஸி., அக்ரி சேர்ந்தேன். அந்த வயதின் குறும்பு, வைஷ்ணவி என்ற பெண்ணை நான் ராகிங் செய்ய, அது பெரிய பிரச்னை ஆனது. ஒரு வருட காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். என் தாத்தா இறந்தது அப்போது தான்.
என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணிய தாத்தாவின் மரணத்தைத் தொடர்ந்து, ஒரு வருடம் கழித்து அதே கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்தேன். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் இரண்டாம் வருடத்துக்குப் போயிருந்தனர். அப்போது என்னிடம், படிக்க வேண்டும்... எதையாவது அடைய வேண்டும் என்ற வெறி மட்டுமே மிச்சம் இருந்தது. காலத்தின்விளையாட்டில் எந்தப் பெண்ணை நான் ராகிங் செய்தேன் என்று கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டேனோ, அதே வைஷ்ணவியுடன் எனக்குக் காதல்.

கல்லூரி முடித்தபோது மறுபடியும் சினிமா ஆசை. அப்பா ஒயின் ஷாப்பில் வேலை பார்க்க... நான் ஒன்றரை வருட காலம் சினிமாக் கனவுடன் சென்னையில் சுற்றிக்கொண்டு இருந்தேன். அப்போது என்னைப் பார்த்த உறவினர் ஒருவர், 'இப்படியே வீணாப்போகப் போறியா? ஞான ராஜசேகரன்னு ஓரு ஐ.ஏ.எஸ்., இருக்கார். இப்பவும் அவர் அரசு அதிகாரிதான். ஆனா 'மோகமுள்'னு நல்ல படம் இயக்கலையா? நீயும் படிச்சு நல்ல நிலைமைக்கு வா. அப்புறமா சினிமா பண்ணு' என்று சொன்ன வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தன.
எம்.எஸ்ஸி., அக்ரி படிக்க என்ட்ரன்ஸ் எழுதினேன். அரசு ஃபெல்லோஷிப்புடன் ஹரியானாவில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை முடித்ததும் 'அப்படியே சிவில் சர்வீஸ் எழுதலாம்' என்று டெல்லிக்குக் கிளம்பினேன். வீட்டில் மிகக்கடுமையான வறுமை. 'ஆயிரம் ரூவா சம்பளத்துலயாவது ஒரு வேலைக்குச் சேர்' என்று அப்பா நெருக்கினார். 'சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க' என்று இந்தப் பக்கம் வைஷ்ணவி நெருக்கினாள். ஆனால், எதையும்விட முடியவில்லை. என் சிரமம் அறிந்த வைஷ்ணவி டெல்லிக்கு வந்து, வேலைபார்த்துக் கொண்டே என்னைப் படிக்கவைத்தாள். 2001, 2002 இரண்டு வருடங்களும் நான் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி இறுதிக் கட்டம் வரை போனாலும் வெற்றி கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில்தான் என் அப்பா தேவராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார்.
வாழ்வில் இதன் பிறகு நான் தோற்பதற்கு எதுவும் இல்லை. மனம் சமன்பட்டு இருந்தது. ஐ.ஏ.எஸ்., தேர்வில் மூன்றாவது, நான்காவதுமுறை யாகவும் தோல்விகள். இந்தப் பக்கம் திருமணத் துக்கான நெருக்கடி. ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில், இத்தனை வருட காலம் சிவில் சர்வீஸ் தேர்வில் கிடைத்த அனுபவத்தைவைத்து, ஓரு அகாடமி தொடங்கலாம் என்று திட்டமிட்டேன். என் அம்மா தான் சேர்த்துவைத்திருந்த 720 ரூபாய் பணத்தைத் தன் பங்காகக் கொடுத்தார். அண்ணா நகரில் 36 மாணவர்களுடன் முதல் வருடம் அகாடமி ஆரம்பித்தது. இப்போது வருடம் ஒன்றுக்கு 300-க்கும் அதிகமானவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறேன். என்னைப் படிக்கவைத்த என் மனைவியை இப்போது ஐ.ஐ.டி-யில் பி.ஹெச்டி., படிக்கவைத்துக் கொண்டு இருக்கிறேன்.
என்னுடன் படித்தவர்கள், என்னிடம் படித்தவர்கள் எத்தனையோ பேர் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது பெருமையாகவும், பொறாமையாகவும் இருக்கும். அரசு அலுவலகங்களுக்குச் செல்ல நேர்கையில் அங்குள்ள அதிகாரிகளைப் பார்க்கும்போது, மனது லேசாகவலிக்கத்தான் செய்யும். ஆனாலும், நான் ஜெயித்திருந்தால், நான் மட்டும்தான் ஐ.ஏ.எஸ்., ஆகியிருப்பேன். தோற்றதினால் இன்று பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன். என் தோல்விகள் எனும் படிக்கட்டுகளில்தான் இத்தனை வெற்றியாளர்கள்!'' - அனுபவத்தின் வார்த்தைகளை அழுத்தி உச்சரிக்கிறார் சங்கர்!
(எனது நண்பரும் ஆசிரியருமான திரு.சங்கரின் பேட்டி இந்தவாரம் ஆனந்தவிக‌டனில் வெளிவந்திருக்கிறது. தொடர் தோல்விகளையும் படிக்கட்டுகளாக்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதராணம்தான் இவர். பேட்டி கண்ட என் நண்பன் பாரதி தம்பிக்கும் வாழ்த்துக்கள் பல! வெல்டன் சங்கர்ஜி! )

 
 

கருத்துகள் இல்லை: