விக்ரமாதித்யனின் 'தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப் பிசாசுகள்' அண்மையில் படித்தேன். தமிழ் நவீன இருப்பின் குறியீடாக இருக்கும் இவர் வார்த்தைகளில் எந்த ஜோடனையும் இல்லை. காமத்தையும் தனக்குள் பொங்கி எழுகின்ற வக்கிரத்தையும் அப்படியே எழுதுகிறார். 'உலகத்திலேயே வேறு எங்கே இருப்பதையும்விட இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் தூரமும் இடைவெளியும் அதிகம்' என்று சொல்லும் இவர் கூற்றில் உண்மை இருக்கிறது. அதனால்தானோ என்னவோ நிறைவேறாத பெருந்துயரத்தின் அயர்ச்சி வரிகளில் தெறிக்கிறது (பல இடங்களில் எல்லைமீறி இருந்தாலும்)
கலையே காமத்தின் இன்னொரு வடிவம்தானே? கஜூரஹோ, கோனார்க் சிற்பங்கள் காட்டாத வக்கிரமா? காமசூத்திரமும் கொக்கோகமும் சொல்லாத வக்கிரமா? வக்கிரம் என்ற சொல்லே ஒரு உணர்வுதான் என்கிறார். காமத்தைக் கடந்துவிட்டால் காமம் அன்பாக மாறிவிடும் என்னும் ஓஷோவின் நியதியை ஓரளவு நியாயம் கற்பிக்கின்றன இவரின் இந்த (வக்கிர) எழுத்துக்கள்!
'அதிர்ச்சியூட்டி கவனம் ஈர்க்கவோ ஆபாசம் எழுதி காசுபார்க்கவோ என்ற நோக்கமுமின்றி வனவெளி சர்ப்ப புணர்ச்சியாய் இயல்பாய் உடம்பே மனசாகிப் போனதைக் கவிதையாக்கித் தந்திருப்பதாக' வித்யாஷங்கர் அணிந்துரையில் சொல்லியிருப்பது சற்றேறக்குறைய நிஜம்தான்!
''செழிக்கச் செழிக்கத் தின்றால்
சீச்செயென்று போகாதோ!" என்று கேள்வி கேட்கிறார். ஊடாகவே ''வாகாகப் படுக்கக்கிடைத்தால் வக்ரமாய் எழுதமாட்டேன்!" என்று சொல்பவரை என்னவென்று சொல்லி நோவது? மொத்த தொகுப்பில் காமமும் வக்கிரமும் சில நியாயங்களும் விரவிக்கிடக்கின்றன. அதில் குறிப்பாக பெண்ணையும் காமத்தையும் கொண்டாடும் இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆயிரம் இருந்தாலும்
பூக்களையும் பெண்களையும்
பிரிந்திருப்பது பெரும்துயரம்
பெண்களும் பூக்களும்
நட்சத்திரங்களும் வானமும்
இல்லவேயில்லை இவன் வாழ்வில்
வசந்தமும் வண்ணத்துப்பூச்சிகளும் கூடத்தாம்
பூ வாங்கிக்கொண்டு
போக இடமுமில்லை
பெண் போகம்
போதும் என்றாகவுமில்லை
பூப்போல
பெண்
பெண்ணுக்குத் தக
போகம்
வடிவம்
வடிவத்துள் சாராம்சம்
இருந்தாலும்
இருக்கிறதுதானே உத்தி
பெண்ணும் போகமும்
புரிந்துகொள்ள இயலாத
மாயை போல
உண்மை
பெண்ணெனும் பெருந்தேவி
பின்னும் பின்னும்
பூட்டி
போய்க் கொண்டிருக்கிறாள்
அவள்
ஆதிசக்தி ஸ்வரூபம்
ஆவுடைநாயகி பிம்பம்
அதையறிந்துதான் சும்மா இருப்பது
திரும்பத்திரும்ப
புறக்கணித்து வந்தாள்
மறுபடி மறுபடி
ஒதுக்கி வைத்தாள்
காமக்கனல் சுட்டெரிக்க
காலடியில் விழுந்தான் இவன் சரணாகதியாக
வெட்கமறியாத ஆசையில்
வேண்டித் தொழுதுநின்றான் அடைக்கலமாக
மூண்டுவரும் மோகத்தழலில்
மனசை ஒப்படைத்தான் அபயமாக
தத்தளிப்புத் தாளாது தனிமை பயமுறுத்த
தன்னகங்காரம் கழன்று வணங்குகிறான் தஞ்சமாக
ஆயிரம் இருந்தாலும்
ஒரு பெண் இல்லையென்றால்?
கோடிகோடிக்கு அதிபதியென்றாலும்
பெண்போகம் கொடுப்பினை இல்லையென்றால்?
எல்லாம்
அப்படிக்கப்படித்தான்
எதுவும்
மூளிதான்
- விக்ரமாதித்யன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக