வியாழன், 3 டிசம்பர், 2009

விபத்துகளின் தேசம்!



அதிக விபத்துக்கள் நடக்கும் தேசம் என்ற பெருமை இப்போது இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. 2006--லிருந்து இப்போதுவரை இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் என்கிறது பி.பி.சி-யின் சர்வே. மோசமான காயமானவர்களின் எண்ணிக்கை மட்டுமே 20 லட்சமாம்!
இதெல்லாவற்றையும்விட இந்த விபத்துக்களால் ஏற்பட்டிருக்கும் சமூக பொருளாதார பாதிப்புகள்தான் அதிர்ச்சியில் நம்மை உறைய வைப்பவை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை இழக்கிறதாம்! பெரும்பாலான விபத்துக்கள் மிகவும் பின்தங்கிய பகுதிகளில்தான் நிகழ்கிறது. அதனால் 70 சதவீத குடும்பங்கள் தங்கள் முக்கிய வருமானம் ஈட்டுபவர்களை


    main wage earner ) இழந்துவிடுகின்றன. எயிட்ஸ், டி.பி, மலேரியா போன்ற இந்தியாவில் பெருகிவரும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது கூடுதலான வேதனைத் தகவல்! விபத்துக்கள் தனி மனிதனின் கவனக்குறைவு அல்ல.. ஒட்டுமொத்த தேசத்தின் கவனக் குறைவு! விதி மீறல்கள் பெருகிப் போனதற்கு அரசின் கவனக் குறைவுதான் முக்கியக் காரணம். இந்திய அரசியல் அமைப்பில் விபத்துக்களுக்கான சட்டதிட்டங்கள் முன்பில்லாத வகையில் கடுமையாக்கப்படாவிட்டால் ஒழிய விபத்துக்கள் குறைய வாய்ப்பில்லை! அதற்கு நம் அரசியல்வாதிகள் ஒருமித்து கைகோர்க்க வேண்டும். இல்லையென்றால் இன்னும் சில வருடங்களில் இந்த தேசம் மனித வளத்தை விபத்துக்களாலேயே இழந்து நிற்கும்!’’ என்று சொல்கிறார் டெல்லியைச் சேர்ந்த ரோஹித் பலுஜா என்ற சாலைப் பாதுகாப்பு தன்னார்வலர். சாலை பாதுகாப்புக்கென்றே தனியே ஒரு ஏஜென்ஸி அமைப்பை மத்திய மாநில அரசுகள் தங்கள் ஆட்சியில் கொண்டுவர வேண்டும்!’ என்று அவர் எச்சரிக்கை மணி அடிக்கிறார். மிக சமீபத்தில் இந்த புள்ளி விபரம் மத்திய அரசின் கவனத்துக்குப் போக, அதிரடியாக மனித வள மேம்பாட்டு துறையில் நாட்டின் பல்வேறு உயர் அமைப்புகளில் பதவி வகித்து வரும் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சஞ்சீவி சுந்தர் என்பவரின் தலைமையில்  சாலை பாதுகாப்புக்கென ஆய்வை மேற்கொள்ள ஒரு கமிட்டியை நியமித்துள்ளது. ‘‘கிட்டத்தட்ட போருக்கு தயாராகவேண்டிய மனநிலையோடு மத்திய அரசு செயல்பட வேண்டிய நேரம் இது! ‘சாலை பாதுகாப்பு பொறியியல்’, ‘ஓட்டுனர்களுக்கு திறமையான பயிற்சி, சாலைவிதிகளை கண்காணிக்கும் அமைப்பு போன்றவற்றை வடிவமைத்து வருகிறது இந்த கமிட்டி. கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட எங்கள் ஆய்வில் விபத்துக்கான மிக முக்கிய காரணியாக புலப்பட்டது ஒரு விஷயம். அது..‘லைசன்ஸ் எடுப்பதில் நடக்கும் முறைகேடுகள்’ மற்ற எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மிக எளிதாக பணம் கொடுத்து ஓட்டுனர் உரிமம் வாங்கும் முறை இந்தியாவில் உள்ளது. 80 சதவீத விபத்துக்கள் லைசன்ஸ் உரிமத்தை முறையாக வாங்காதவர்களால்தான் நிகழ்கிறது என்பதையும் நாங்கள் ஆய்வில் கண்டு பிடித்தோம். விபத்துக்களை குறைக்க முறையான  ஓட்டுனர் உரிமை வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் போதும்!’’ என்று சொல்கிறார் சஞ்சீவி சுந்தர். 

கருத்துகள் இல்லை: