திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ஒரு ஹீரோவும்.. இரண்டு நாட்களும்..!



பொதுவா ஒரு பேட்டி எடுக்க போறப்போ அட்ரீனலின் சுரப்பி தன் வேலையைக் கச்சிதமா செய்ய ஆரம்பிச்சிரும். நடிகைன்ன ஒரு கிளுகிளுப்பும், அரசியல்வாதினா ஒரு பரபரப்பும்.. எனக்கு பிடிச்ச பிரபலம்னா ஒரு பரவசநிலைக்கும் போயிருவேன். ஆனா என்னமோ தெரியலை.. மேலே சொன்ன எந்த தினுசிலயும் சேராத ஒரு புது ஃபீலிங் அன்னிக்கு! முக்கு ரோட்டுல திடீர்னு முளைச்ச பிள்ளையார் போல தெக்கத்தி சைடுல இருந்து கோடம்பாக்கத்துல கொடியேத்த வந்தவரு அவரு. நடிக்கிறதை தவிர எல்லா மேட்டர்லயும் மீட்டர்ல சூடு வச்ச ஆட்டோதான் அவர். கடையெழு வள்ளல்கள் பாரி ஓரியையே காரி துப்புற அளவுக்கு வாரி வழங்குறதுல பேரெடுத்துறணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியிற டரியல் பார்ட்டி! அவரை வச்சு படமெடுக்க கோடம்பாக்கத்துல ஃபீல்டு அவுட் ஆன டைரக்டர்கள் எல்லாம் கையில ஸ்கிரிப்ட் பேட வச்சுக்கிட்டு திரியுறதால்லாம் நிறைய கேள்விப்பட்டிருந்தேன். எல்லாத்துக்கும் அவர் கத்தை கத்தையாக கொண்டு வந்திருந்த கரென்சிதான் காரணம். அஸைன்மெண்ட் கொடுக்கும்போதே, ‘‘நிருபா! நீ அந்த ஆளை வச்சு சீரியஸ் அட்டெம்ட் பண்ணாதே.. ச்சும்மா படிச்சு பார்த்தாலே ஏரியாவே சிரிப்புல குலுங்கணும்! நோண்டி நொங்கெடுக்குற.. கிண்டிக்கிழங்கெடுக்குற கட்டுரைதான் வேணும்.. சம்ஜே!’’ என்றார் சீனியர்.
முகத்துல வெட்டுக்காயம் மட்டும் போட்டா அசப்புல தாதா மாதிரி இருக்குற அவர்கிட்டே போய் இந்த மாதிரி பேட்டி எடுத்தா என் போட்டியை உருவுனாலும் உருவிடுவாரோன்னு ஒரு பயப்பந்து வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாமல் உருண்டது!
‘ஐயோ.. வேற யாரையாச்சும் அனுப்பக்கூடாதா?’- ஆரம்பத்துல மனசுக்குள்ள அப்படித்தான் நினைச்சேன். ஆனா அங்கே போய் நின்னதும்தான் தெரிஞ்சது அது.. வயிறு புண்ணான வாய்ப்புனு!
எக்கச்சக்க பயத்தோடு மிச்சசொச்ச தைரியத்தோடும் அவரைப் பார்க்க ஒரு ஓட்டலுக்கு போயிருந்தேன். பொதுவா வெளியாளுங்களை அங்கே வச்சுதான் பார்ப்பாராம். போஸ்டர்லதான் ஆளு பார்க்க ரௌத்ரமா இருந்தாரு... நான் உட்கார்ந்திருந்த டேபிளுக்கு பரபரவென வந்த ஆளைப் பார்த்து எனக்கு செம ஷாக்!
மனுஷன் புனுகுப் பூனைக்கு பேன் பார்த்துவிட்ட மாதிரி ஒரு ஹேர்ஸ்டைலோட குள்ளக் கத்திரிக்காயாக என் முன்னே நின்றார். ஜிகுஜிகு காஸ்ட்யூமில் ரணகளமாய் பார்க்கவே வித்தியாசமா இருந்தாரு. அந்த இருட்டுலயும் அதீத தன்னம்பிக்கையோட முகத்தையே மறைக்கிற கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு கிடுகிடுனு படியேறி நான் உட்கார்ந்த இடத்துக்கு வந்தார். கிச்சுகிச்சு கீச்சு குரலில், ‘‘அண்ணே.. தப்பா எடுத்துக்காதீங்க! வர்ற வழியில ஃபாரின் மீட்டிங் ஒண்ணு.. அதை ஃபைசல் பண்ணிட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சு.’’-அப்படியே பக்கோடா காதரின் மெச்சூர்டு வாய்ஸ் போலவே இருந்தது அவர் குரல்! ஸாரி கேட்பதில் கிராமத்து வெள்ளந்தித் தனத்தை ஏகத்துக்கும் காட்டினார் நம்ம ஹீரோ. எனக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம். தயங்கித் தயங்கி நான் கேள்விகளை ஒவ்வொன்றாக வீசினேன். ஆரம்பத்தில் நம்மளை போட்டுப் பொளந்துருவாரோன்னு ஒரு பயம். மெள்ளமெள்ள பயம் விலகி ஒரு கட்டத்தில், ‘இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ குறும்பு ஆகாதுண்ணே!’ என்று நான் அவரை கிள்ளாத குறைதான். அந்த அளவுக்கு ஏடாகூட பேட்டிக்கு நன்றாகவே ஒத்துழைத்தார் நம்ம ஹீரோ. இடைஇடையே எனக்கு என்ன ஜூஸ் வேண்டும் என்று கேட்டு வெயிட்டரை அழைத்து, ‘ஒன் சாத்துக்குடி ஜூஸ்.. மேக் இட் ஃபாஸ்ட்!’ என்று உத்தரவு வேறு! மூன்று மணிநேரம் மூன்று ஜூஸ்களோடு நான் எடுத்து முடித்த பேட்டி அப்படியே அச்சுக்குப் போனால் நம்மளை அச்சுவெல்லமாக்கி பொங்கல் கிண்டிடுவாரோன்னு எனக்கு பயம். பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே விடை பெற்றேன். புத்தகம் கடைக்கு வந்ததும் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. நடுக்கத்தோடு அட்டெண்ட் பண்ணினால் மறுமுனையில் அதே பக்கோடா காதர் குரலில், ''அண்ணே.. பின்னிட்டீங்க.. நாளாபக்கமும் போன்கால்ஸ்ணே. நல்ல ரீச்சுனே.. உலகம்பூரா தெரிய வச்சுட்டீங்க..சூப்பர்ணே.. ஃப்ரீயா இருந்தா வீட்டுப்பக்கம் வாங்க.. வச்சுறவாண்ணே!’’ என்று அண்ணன் மேல் அண்ணன் போட்டு எனக்கு விம்மல் வரவைத்தார். நம்பவே முடியவில்லை. வீட்டுக்கு கூப்பிட்டு நம்மளை விருந்தாக்கிடுவாரோன்னு ஒரு பயம். அடுத்தமுறை சந்திக்கக் கூடாது என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். ஆனால் மனுஷனுக்கு எல்லா திசையும் சுக்ரதிசை. இன்டெர்நெட்டில் ஜோக்ஸ், வலைப்பூ சிரிப்பு என சகல மீடியாக்களிலும் எங்கும் நீக்கமற நான் எடுத்த அந்தப் பேட்டியை போட்டு காமெடி குருமா கிண்டி இருந்தது இணையக் கூட்டம் ஒன்று! அடுத்து அவர் நடித்த படமும் சுமாரைத்தாண்டி சூப்பராக ஓட.. பார்ட்டிக்கு கோடம்பாக்கத்து முட்டு சந்துகளிலிலும் மூத்திர சந்துகளிலும்கூட கட்-அவுட் வைத்தார்கள் அடிப்பொடிகள். அப்போதுதான் இன்னொரு காமெடி பேட்டியெடுக்க வாய்ப்பு வந்தது எனக்கு.. ஆனால் ரணகளமான ரங்கோலி ஐடியாவோடு. என்னதான் ‘நெகட்டிவ் பப்ளிசிட்டி கோயிந்தாக’ இருந்தாலும் இந்த ரணகள ஐடியாவுக்கு ஒத்துக்கிடுவாரா? -தயக்க மயக்கங்களை கலைத்துவிட்டு போன் போட்டேன். ‘‘அண்ணே..நான் ஃபாரின் கிளம்பிக்கிட்டு இருக்கேன்.. எதுனாலும் நம்ம அசிஸ்டெண்ட்ஸ்கிட்ட பேசுங்க. புதுசா அடுத்த படத்துக்கு ஆபிஸ் போட்டுருக்கேன்.. அங்கே வந்துருங்க.. மறக்காம உங்க போட்டோகிராபரையும் கூட்டிட்டு வந்துருங்க.. கிடா வெட்டி பொங்கல் வச்சுறலாம்..’’ -பலத்த சிரிப்போடு பேசிவிட்டு லைன் கட் பண்ணினார் நம்ம ஹீரோ.
ஒருவாரம் கழித்து அவர் கொடுத்த ஆபீஸ் அட்ரஸுக்கு போனால் அந்த ஏரியா முழுக்க பிரியாணி வாசம் கமகமத்தது. ஹீரோ பேர் சொல்லி டிஸ்கஷன் என்ற பேரில் குடல் குழம்பும் தலைக்கறியுமாக அந்தக் காலை வேலையிலேயே அஞ்சப்பர்&முனியாண்டி விலாஸை வரவழைத்திருந்தனர். உள்ளே பிராந்தியோடு பிராந்திய மொழிகளின் அத்தனை படங்களின் டி.விடிகளிலிருந்து நம்ம ஹீரோவுக்காக ஓப்பனிங் ஸாங்குக்கு ஸீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள் உதவி இயக்குநர்கள் சிலர்.
‘‘அண்ணனை அந்த அளவுக்கு டெரரா கேள்வி கேட்டும் உங்க மேல கோபப்படலை பார்த்தீங்களா.. அதான் அண்ணனோட ஸ்பெஷாலிட்டி! நீங்க அவரை மடக்கிக் கேள்வி கேட்டும் அவர் எப்படி சமயோசிதமா பதில் சொன்னாரு பார்த்தீங்கள்ல.. வேற ஒரு ஆள்னா டென்ஷனாகிருப்பான்! அவரை மாதிரி மனுஷன் இனிமேல பொறக்க முடியாது. எம்.ஜி.ஆர்கூட அடிச்சுட்டுதான் காசு கொடுப்பாரு.. ஆனா அண்ணன் அடிவாங்கிட்டு காசு கொடுப்பாருண்ணே...’’ -உதவி இயக்குநர் ஒருவர் அநியாயத்துக்கு ஃபீலிங் பீப்பீ வாசித்தார்.
சற்றுநேரத்தில் மின்னல்போல வந்தார். ஐடியாவைக் கேட்டவர் அந்த ரிலே பேட்டிக்கு சினிமா ரேஞ்சுக்கு ஒத்துழைத்தார். இரண்டு நாட்கள்.. நான் இழுத்த இழுப்பிற்கெல்லாம் தன் ஸ்டைலில் ஒத்துழைத்தார். ஃபுல் ட்ராபிக்கை தன் பக்கம் ஈர்த்தார். பீச்சில் படகோட்டி எம்.ஜி.ஆரானார். ஒரு பஸ்ஸ்டாண்டை வாடகைக்கு வாங்கி அட்றாசிட்டி பண்ணினார்..எல்லாத்துக்கும் மேலா அந்தப் பக்கம் போன ஒரு டிராஃபிக் போலீஸ் இவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்ததுதான் உச்சபட்ச அதிர்ச்சி. ’இது எல்லாமே ஆளுங்கட்சியின் செல்வாக்கில் வந்ததா..இல்லை பணத்தின் செல்வாக்கில் வந்ததா’ என மனசுக்குள் பட்டிமன்றமே நடத்தினேன். ’இரண்டுமே’ என்பதுதான் என் மனசாட்சியின் பதில்! போறபோக்கில் நம்ம ஹீரோ போட்டோகிரஃபருக்குக் கொடுத்த போஸைப் பார்த்தே ‘என்னது சினிமா ஷ¨ட்டிங்கா?’ என்று பலபேர் விளக்கம் கேட்க... என்னால் பதில் சொல்லி மாளவில்லை.
‘‘சார்.. இப்படி உங்களை வச்சு காமெடி பண்ணுறது வருத்தமில்லையா?’’
‘‘நாலு பேருக்கு நாம தெரியணும்னா எதும் தப்பில்லைண்ணே.. என்ன குட்டிக் கரணம் வேணும்னாலும் போடலாம் தப்பில்லை!’’-பகபகவென நாயகன் டயலாக்கை பேசிவிட்டு மீசையை நீவி விட்டுக் கொண்டார்.
அந்த அஸைன்மெண்ட் முடித்துவிட்டு கிளம்பும் வழியில் அவர் காரிலேயே ட்ராப் செய்தார். வரும்போது சிக்னலில் அவர் கார் நிற்கும்போது ஓடிவந்து காரைத் துடைத்து காசுக்காக நின்றது வாண்டுகள் பட்டாளம். கார் நம்பரை நோட் செய்து பணம் கேட்க சரியாக அங்கே காலை மாலை ரெண்டு வேளையும் ஆஜராகிவிடுகிறார்களாம் அந்த சிறுவர்கள். அவர்களுக்கு சுளையாக நூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து, ‘பிரிச்சு எடுத்துக்கங்க!’ என்றார். ‘‘இதே சென்னைக்கு காசில்லாம ரோட்டுல நடந்து போயிருக்கேண்ணே.. அரை வயிறு கால்வயிறு தான் சாப்பாடு... எத்தனையோ பண்ணி இன்னிக்கு கடவுள் புண்ணியத்தால பணம் சேர்த்துட்டேன். ஆனா நம்பிக்கையா கூடமாட ஒத்தாசையா வச்சிக்க ஒரு பயலை சம்பாதிக்கலை.. இன்னும் கொஞ்சநாள்ல இங்கே இருக்குற பயலுக என் பணத்தையெல்லாம் சுரண்டிடுவானுங்க.. அதுக்குள்ள பெருசா செட்டிலாகிடணும்.. சினிமால்லாம் நமக்கு வேஸ்ட்ணே.. ஏதாச்சும் பண்ணணும்.. இல்லைன்னா பழைய மாதிரி ரோட்டுக்கு வந்துருவேன்..’’ அர்த்தத்தோடு சொல்லிவிட்டு சடாரென டாபிக் மாற்றினார். ரோட்டோரம் புதுசாய் முளைத்திருந்த ஒரு ஏரியா தலைவரின் தட்டி போர்டுகளைப் பார்த்து, ‘‘அட.. இங்கே பாருங்கண்ணே... எனக்கு போட்டியா எவனோ கிளம்பி இருக்கான்.. யார்னு உடனே விசாரிக்கச் சொல்லணும்ணே!’’ என்று கலகலவென சிரிக்க ஆரம்பித்த அந்த ஹீரோ இப்போ பரமபத விளையாட்டில் அடுத்த கட்டமாக ஏணியில் எம்பி ’எம்பி’ எங்கேயோ போய்விட்டார். ‘ஏதாச்சும் பண்ணணும்ணே’ என்று அவர் விளையாட்டாக சொல்லவில்லை என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது!
- தெக்கத்திப்பையன்.

கருத்துகள் இல்லை: