வியாழன், 11 ஜூன், 2009

வட போச்சே....!




நிருபன்னா பரபரன்னு திரியணும்கிறது நிஜம்தான். பரபரப்பைத் தாண்டி நிதானம் வேணும்னு சமீபத்துல நடந்த சம்பவம் ஒண்ணு மூலம் தெரிஞ்சுக்கிட்டேன். கேட்டுட்டு அவசரக்குடுக்கைனு நீங்க திட்டுனாலும் பரவாயில்லை. சொல்லியே தீரணும்கிறது என்னோட கட்டாயம்! நடந்ததை அப்படியே சொல்லிடுறேன். புலனாய்வு செய்திகளென்றால் எனக்கு சிக்கன் புலாவ் சாப்பிட்ட மாதிரி. ஆவி உலக அனுபவங்கள், மண்டையோட்டுச்சாமி, சுருட்டுச்சாமி, சொக்கலால் பீடிச்சாமி என்று நான் தேடியலைந்த பரபரப்பில் நடந்த காமெடிக்கூத்து இது. கல்லூரிகால நண்பனின் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் ரெண்டுவிட்ட (என்ன கண்றாவி இது!) அண்ணன் ஒருவர் சொன்ன சேதி இது. ‘ஏனுங்க தம்பி.. எங்க ராமநாதபுரத்தில ஒரு அம்மாவுக்கு மாகாளி அம்மன் வந்து நாடாளுமன்ற எலெக்ஷ‌ன்ல யார்யாரெல்லாம் ஜெயிக்கப்போறாங்கன்னெல்லாம் சொல்லுது! ஒர் எட்டு பாத்துப்போட்டு போங்க..அந்தப்பாட்டியோட நம்பரை எஸ்.எம்.எஸ் பண்றேன்’னு சொல்ல.. மண்டைக்குள் மகுடி ஊதி அடுத்த செகண்ட் அஸைன்மெண்ட் ஓ.கே வாங்கி தட்கல்லில் ராமநாதபுரத்துக்கு டிக்கெட் புக் பண்ணினேன். இடைப்பட்ட நேரத்தில் அங்கே இருந்த ஜோல்னாப்பை முன்னாள் நிருப நண்பனிடம் சொல்லி ரூம் போடச் சொன்னேன் ( ‘மறக்காமல் ஏ.சி இருக்கணும் நண்பா! சென்னையில ஆபிஸ்பூரா ஏ.ஸில இருந்து பழகிருச்சு உடம்பு!’ ) பாட்டியை அழைத்தேன். நான் ரிங் செய்த அடுத்த செகண்டே அட்டெண்ட் பண்ணியது மறுமுனை. என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், ‘நாளைக்கே கிளம்பி வாங்க தம்பி. ராமநாதபுரத்துல என்னைத் தெரியாத ஆளுங்களே கிடையாது. இங்கே வந்ததும் கால் பண்ணுங்க.. நான் செப்பேதி நீக்கு அர்த்தமையுந்தா? ’ என்று மட்டும் சொல்லிவிட்டு கட் பண்ணியது மறுமுனை. (அட சுந்தரத் தெலுங்கு!)
 5.30-க்கு ரயில் கிளம்புவதற்குள் இருப்புக் கொள்ளவில்லை எனக்கு. ‘ராமநாதபுரத்தில கருவாடு ஃபேமஸாமே... நெய் மீன் நெத்திலி மீன் கருவாடுன்னா எனக்கு உசுரு. அப்புறம் அடிக்குற வெயிலுக்கு அஸைன்மெண்ட் முடிஞ்சதும் ஒரு கூறாவது வாங்கியாறணும். அங்கே நம்ம லோக்கல் நிருபனுக்கு காப்புக் கட்டி அவன் செலவுல பால்கொடம் தூக்கிற வேண்டியதுதான். தீவுக்கு போய் கிங் ஃபிஸர்ல குளிச்சா என்ன சுகமா இருக்கும்! கைப்புள்ள... பைக்கைக் கிளப்பு!’ என மைண்ட் வாய்ஸ் உச்சஸ்தாயியில் கேட்க, அடுத்த செகண்ட் எழும்பூரில் நின்றது என் பைக்.
லோயர் பெர்த்தில் சீட் கிடைத்த சந்தோஷத்தில் ஜே.கே ரித்தீஷைவிட குஷியானேன். எட்டரை மணிக்கே விழுப்புரத்தில் வெஜ் சாப்பாட்டோடு கெட்டித்தயிர் ரெண்டு டப்பாக்கள் வாங்கி கவிழ்க்க.. பத்துமணிக்கு செம தூக்கம்! யாரோ ஒரு புண்ணியவானின் எழுப்பலில் 3.45 மணிக்கு நான் ராமநாதபுரத்தில் நின்றேன். ஆட்டோக்காரருக்கு பேரம் பேசாமல் 60 ரூபாயை கொடுத்து நண்பன் உபயத்தில் கம்பிளித் தூக்கம் போட்டுவிட்டு விழித்தால் மணி 9!
‘அட! டைம் போனதே தெரியலையே! சூப்பர் மச்சி!’ மனசுக்குள் மானசீகமாக அந்த ஜோல்னாவை நினைத்துக் கொண்டு மொபைலில் அந்த பாட்டியின் நம்பரை தேடிப்பிடித்து கால் செய்தேன். அது ஒரு வித்தியாசமான தெலுங்கு பாட்டை என் காதுக்கு தாரை வார்த்தது. அநேகமாக அம்மன் பாட்டாக இருக்கும். பாட்டி என் அழைப்பை அட்டெண்ட் செய்யவில்லை. லோக்கல் நிருப நண்பன் பவ்யமாக வந்து நின்று டிபனுக்கு அழைத்தான். ‘நண்பா! உங்க எழுத்துல சமீபகாலமா ஒரு ஃபயர் தெரியுது.’
‘ஓ தேங்க்ஸ்!’ ( அது டெஸ்க்கில் என் எழுத்துக்களோடு லோல்படும் சோடாப்புட்டி ஒருத்தனின் கைங்கர்யம் என்று சொல்ல மனசு வரவில்லை எனக்கு!)
‘ஆமா... ஆசிரியர்கூட ஸ்பெஷலா என்னைப் பாராட்டினார்.’&பொய் சொன்னேன். (ஆசிரியர் கேபினுக்குள் இதுவரை அடியேன் போனதில்லை. ஆசிரியரின் குரலை யாமறியேன் பராபரமே!)
அவனுடன் கால் டாக்ஸிக்குள் என்னைத் திணித்துக் கொண்டேன். அவன் இன்னும் என்னை வரம் கொடுக்க வந்த தேவதூதன் போலவே மையமாக பார்த்துக் கொண்டிருந்தான். (ஏரியா ரிப்போர்ட்டர்களே இப்படித்தான். பாவம் என்ன செய்ய?)
‘சார்! நீங்க இந்த தடவை எந்த ஆவியைப் பிடிக்க வந்துருக்கீங்க?’
‘அப்படின்னு எந்த வெண்ணெய் வெட்டி உங்ககிட்டே சொன்னான் பிரதர்?’ -
பயல் சப்தநாடிகள் ஒடுங்கிப்போய் அமைதியாகிவிட்டான்.
‘சும்மா சொல்லுங்க சார் ராமநாதபுரத்துல என்ன விசேஷம்?’
‘பிரதர்.. இப்ப நாம ஸ்பாட்டுக்குத்தான் போறோம். செம கலக்கல் நியூஸ். நாளைக்கு நான் சேதுல கிளம்புன பிறகு அந்த அதிர்ச்சியை நீங்க ஃபீல் பண்ணுவீங்க. ப்ளீஸ் ஸ்பாட்டுக்கு போற வரைக்கும் அமைதியா இருங்க!’ என்றேன் சஸ்பென்ஸை உடைக்க மனமில்லாமல்!
பயலின் முகம் வெளிறிப்போனதை மிர்ரரில் பார்த்தேன்.
பாட்டியின் ஞாபகம் வர.. கால் செய்தேன். நல்லவேளை முதல் அழைப்பில் எடுத்துவிட்டாள்.
‘பாட்டி இப்ப நாங்க அங்கேதான் கிளம்பி வந்துட்டு இருக்கோம். அட்ரஸ் சொல்லுங்க.. என்னது.. மணிக்கூண்டா? ஓ.. மணிக்கூண்டுக்கு பக்கத்திலயா?... கோணியம்மன் கோவிலா.. டவுன் ஹால் கிட்டேயா?.. தோ வந்துர்றோம். நானும் உங்க ஊரு நண்பர் ஒருவரும் வர்றோம்... வச்சிடுறேன்!’ என்றேன்.
ஏரியா பார்ட்டி, ‘மணிக்கூண்டு ராமநாதபுரத்தில இல்லை சார்.. அது சென்ட்ரல் கிளாக்க்கா இருக்கும்!’ என்றான்.
அடுத்த செகண்ட் டிரைவரைவிட்டு அட்ரஸ் விசாரிக்க சொன்னேன். அவன் பத்து நிமிடங்கள் அழைந்து முகம் வெளிறிப்போய் வந்தான்.
‘சார் அப்படி ஒரு கோவிலே ராமநாதபுரத்தில இல்லையாம்... கீழக்கரை பக்கத்தில கூனியம்மன்னு ஒரு கோவில் இருக்காம்!’ என்றான். ஏரியா பார்ட்டியும் ஆமோதிப்பது போல் தலையாட்டினான்.
‘என்ன பிரத்ர்! ஏரியால இருக்குறீங்க.. ஒரு ஏரியாகூட தெரிஞ்சுக்குறாம இருக்கீங்க.. என்னமோ போங்க. மெட்ராஸ்ல எங்கூட வந்து பாருஙக. மூலை முடுக்கெல்லாம் எனக்கு அத்துப்படி!’ என்றேன்.
பயல் அமைதியாய் என் மொபைலை வாங்கி பாட்டியிடம் பேசினான். ‘என்னது டவுன் ஹாலா? அதுக்கு பக்கத்தில மணிக்கூண்டா? பக்கத்துலேயே கோணியம்மன் கோவிலா? நாங்க நீங்க சொல்லுற மணிக்கூண்டு கிட்டேதான் இருக்கோம். ஆனா மணிக்கூண்டுகிட்டே மார்க்கெட் மட்டும்தான் இருக்கு!’ என்றான். ஏதேதோ பாட்டியிடம் ரூட் கேட்டவன் லேசாக முகம் வெளிறி என்னைப் பார்த்துக் கொண்டே ‘ஓகே பாட்டி.. இந்த அட்ரஸ் போதும்.’ என்றபடி கட் செய்து மொபைலை என்னிடம் தந்தான்.
‘சார் பாட்டிகிட்டே நீங்களே இனிமே பேசுங்க. அதுக்கு முன்னாடி கோயமுத்தூர்ல இன்னொரு ராமநாதபுரம் இருக்கு. அதை முதல்ல தெரிஞ்சுக்கங்க!.. டிரைவர் வண்டியை நிறுத்துப்பா!’ என்றபடி கோபமாக இறங்கிப் போனான். நான் அவசரஅவசரமாக பாட்டிக்கு டயல் செய்தேன்.
‘பாட்டி! அது கோயமுத்தூர் ராமநாதபுரமா? அப்படியா.. நான் இப்போ மதுரை ராமநாதபுரத்துல நிக்குறேன்! சாரி பாட்டி இன்னிக்கு என்னால வரமுடியாது!’ என்றபடி பெருகி வழிந்த வியர்வையைத் துடைத்தபடி டிரைவரைப் பார்த்தேன். அவன் தலையில் அடித்துக் கொண்டு என்னைப்பார்த்து சிரித்தான்.
பின்குறிப்பு: இதில் நான் என்பது நான் அல்ல.. அந்த அப்பாவி நிருபன்தான் நான்! சுற்றமும்  அதன் பின்னணியும் அலசி ஆராய்ந்தால் சம்மந்தப்பட்ட அந்த நண்பர் யார் என்று தெரியும். ஹிஹி ஹிஹி...!

கருத்துகள் இல்லை: