வெள்ளி, 29 மே, 2009

சினிமாவுக்கு கோடம்பாக்கம்...சிவில் சர்வீஸுக்கு அண்ணா நகர்!




சினிமாவுக்கு கோடம்பாக்கம் போல இப்போ சிவில் சர்வீஸ் எனப்படும் மத்திய அரசின் தேர்வாணைக்குழு நடத்தும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுக்கு அண்ணாநகர் என்றாகிவிட்டது!






வருடா வருடம் மே மாதம் முதல் வாரத்தில் எப்போதும் அண்ணாநகரின் ஒவ்வொரு அவென்யூவும் பிஸியாகிவிடும்.  டீக்கடையில் ‘மச்சான் இந்த டைம் பர்வீன் தல்ஹா சொதப்பி எடுத்துட்டாங்க. போன தடவை நல்ல கொஸ்டீன்ஸ் கேட்டாங்க. ..வீட்டுல சண்டையோ என்னமோ’... ‘மாப்ளே! ராய்பால்  இந்த தடவை ரொம்ப லிபரல்... ஜோக்கெல்லாம் அடிச்சுக்கிட்டே கேள்வி கேட்டாரு..’- இப்படி இவர்கள் பேசுவது எல்லாமே நாட்டின் உயர்ந்த போட்டித் தேர்வான ஐ.ஏ.எஸ்-ன் நேர்முகத் தேர்வு அனுபவங்களைப் பற்றித்தான்.
பத்து வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எட்டாத கனியாக இருந்த ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்வில் இப்போது தமிழக மாணவர்கள் கலக்க ஆரம்பித்துவிட்டார்கள். 2008 -க்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் 42 மாணவர்கள் ஐ.ஏ.எஸ் வெற்றிக் கோட்டை தொட.. இந்த வருடம் 96 மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள் என்ற இனிப்பான செய்தி கிட்டியுள்ளது. அதில் பாதி பேருக்கு மேல் சாமானியர்களாக இருந்து சிகரம் தொட்டவர்கள்.
‘‘ஐ.ஏ.எஸ்னாலே ஏதோ ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் பசங்கதான் பாஸாவாங்க.. அப்புறம் அதுக்குல்லாம் இந்தி தெரியணும் டெல்லி போய் படிக்கணும்’னெல்லாம் கவுண்டமணி ரேஞ்சுக்கு பயமுறுத்துவாங்க. ஆனா இங்கே அண்ணாநகர்ல சின்ஸியரா ஒரு வருஷம் படிச்சா போதும். ஏதாவது ஒரு சர்வீஸ் நிச்சயம் வாங்கிறலாம். என்னோட 6 வருஷ உழைப்பைவிட எங்க அப்பா அம்மா என்மேல வச்சிருக்குற நம்பிக்கை ரொம்ப பெருசு!’’ என்று வெற்றி பெற்ற பெருமிதத்தோடு பேசுகிறார் சசிகாந்த் செந்தில் இந்திய அளவில் 9-வது ரேங்க்கும் தமிழ்நாட்டில் முதல் ரேங்கும் எடுத்திருக்கிறார்.
‘‘கஷ்டப்பட்டு படிச்சா ஐ.ஏ.எஸ் ஆகிடலாம்னு சொல்வாங்க. ஆனா இஷ்டப்பட்டு படிச்சாலே போதும் கஷ்டபட தேவையில்லை. ஏன்னா எனக்குத் தெரிஞ்சு இந்த தேர்வு இருக்கிறதுலேயே கஷ்டமா இருக்குறது போல தெரியுற மிக எளிதான தேர்வு. நல்ல திட்டமிடல் தெளிவான உழைப்பு இருந்தா தினமும் 3 மணிநேரம் படிச்சாகூட போதும் உங்களால்கூட நிச்சயம் ஐ.ஏ.எஸ் ஆகமுடியும். ஆனால் தோல்விகளைக் கண்டு துவளாத மனசு உங்களுக்கு இருக்கணும். ஏன்னா நான் 5 தடவை தோல்வி அடைஞ்சு என்னோட 6-வது முயற்சியில ஜெயிச்சிருக்கேன்.’’ என்கிறார் ஆனந்த். திருநெல்வேலியில் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 67-வது ரேங்க் வாங்கி ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கிறார். எற்கனவே 2006-ல் இன்டெர்வியூ வரை சென்று நான்கைந்து மார்க்கில் சர்வீஸை தவறவிட்டவர் இவர். 
‘‘பொதுவா முஸ்லீம் பெண்கள் அதிகம் படிக்குற சூழல் இங்கே கம்மி. எனக்கு கல்யாணம் வேற ஆச்சு. என் மகள் கர்ப்பமா இருக்குறப்போ அகாடமிக்கு படிக்க வந்தேன். ஞாயிற்றுக்கிழமை மட்டுமே கிளாஸ். 4-வது முயற்சியில எனக்கு 520&வது ரேங் கிடைச்சிருக்கு. என்னோட கணவரும் என் குடும்பமும் கொடுத்த சப்போர்ட்டில் இப்போ 2009- ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்க ஆரம்பிச்சுட்டேன். இந்த முறை முழுமுயற்சியா களத்துல இறங்கப்போறேன். நிச்சயம் அடுத்த வருடம் டாப் 10ல ஒரு ஆளா இருப்பேன்!’’ நம்பிக்கையோடு பேசுகிறார் குல்சார்.


காலேஜ் பக்கம் போகாமலே ஐ.ஏ.எஸ் தேர்வில் பாஸாகி இருக்கிறார் மைக்கேல் ஜெரால்டு என்ற இளைஞர்.
‘‘நான் ஒரு மெடிக்கல் ரெப். தினமும் ஒரே மாதிரியான லேகியம் விற்குற பொழைப்புனு அளுத்து சளிச்சுக்குவேன். 5 வருஷத்துக்கு முன்னாடி நம்பிக்கையே இல்லாமதான் நான் அண்ணாநகர் படிக்க வந்தேன். எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனே  இறையன்பு ஐ.ஏ.எஸ்தான். டாக்டர் என்ஜினீயர்தான் ஐ.ஏ.எஸ் பாஸாவாங்கனு இருந்த நினைப்பை அவர்தான் உடைத்தெறிஞ்சார். தபால் வழில பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சு முடிச்சுட்டு படிக்க உட்கார்ந்தேன். சும்மா சொல்லக்கூடாது. இது என்னோட 5-வது முயற்சி. இந்த முறை ஐ.ஆர்.எஸ் கிடைச்சிருந்தாலும் என்னாலேயே நம்ப முடியலை. ஏன்னா ஸ்கூலும் பிரைவேட்டா எழுதி பாஸானவன் நான். எனக்கு ஆசானா அறிமுகமான ஒரே ஆள்னா அது கணேஷ் சார்தான்! எப்பவும் மெதுவா பைக் ஓட்டுவேன் அன்னிக்குனு பார்த்து என்னை அறியாம ஆக்ஸலேட்டரை முறுக்க.. ‘மெதுவா பைக் ஓட்டுலே! மனசுக்குள்ள என்ன பெரிய கலெக்டர்னு நினைப்பா’னு கேட்டாங்க. முன்ன அப்படி கேட்டிருந்தா கோபம் பொத்துக்கிட்டு வந்திருக்கும். ‘ஆமாண்ணே... நான் கலெக்டர்ணே’னு சொன்னேன். என்னைய வித்தியாசமா பார்த்துட்டு போனாரு அந்த ஆட்டோக்காரர்.’’- அதிர்வேட்டாய் சிரிக்கிறார் மைக்கேல் ஜெரால்டு.
காக்கிச் சட்டை கமல்ஹாசனைப்போல இருக்கும் ருடால்ஃபுக்கு தமிழ்சினிமாவின் காக்கி யூனிஃபார்ம் போட்டவர்கள் தேவ தூதர்களாம்!
‘‘சின்ன வயசில இருந்தே ஆர்மி ஆபிஸரா ஆகிடணும்னு கனவோட இருந்தேன். எம்.ஏ சோஷியாலஜி படிச்சு முடிச்சதும் ராணுவத் தேர்வுக்கு கடுமையா உழைச்சேன். கடைசி கட்டத்துல உடல்தேர்வுல பெயிலாகிட்ட்டேன். இனி நம்ம வாழ்க்கையே போச்சுனு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ‘காக்கினு ஒரு யூனிஃபார்ம் இருக்கே. அதைப் போட்டுக்கிட்டு மக்களுக்கு நல்லது பண்ணலாமே’னு கணேஷ் சார் நம்பிக்கை கொடுத்தார். போன வருஷம் ஐ.ஏ.எஸ் தேர்வுல பெயிலானாலும் இப்போ இரண்டாவது முயற்சியில 305-வது ரேங்க்ல ஐ.பி.எஸ் கிடைச்சிருக்கு. உலக சினிமாக்கள்ல நேர்மையான போலீஸ் ஸ்டோரிகளை டிவிடிகள்ல பார்த்துக்கிட்டு இருக்கேன்!’‘ குழந்தையின் குதூகலத்தோடு பேசுகிறார் ருடால்ஃப்!
அண்ணா யுனிவர்சிட்டியில் எலெக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்த வம்சதாரா முதல்முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் பாஸாகி இருக்கிறார். ‘‘காலையில சீக்கிரம் எழுந்திருக்கவே பத்து தடவை யோசிக்குற ஆளு நானு. இப்போ பொறுப்பு கூடி இருக்கு சார்!’’ என்று அளவாக பேசுகிறார் வம்சதாரா.
‘‘498-வது ரேங்க் கிடைச்சதுனால ஐ.ஆர்.எஸ்தான் கிடைக்கும். சின்ன வருத்தம் இருக்கு. ஆனாலும் அடுத்த தடவை எப்படியும் ஐ.ஏ.ஏஸ் தேர்வாகிடுவேன்’’ நம்பிக்கையோடு சியர் அப் காட்டுகிறார் விமல்ராஜ்.
அடுத்து வெள்ளந்தியாய் பேசிய  வீரபாண்டியனை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. சில வருடங்களுக்கு முன் தினசரி ஒன்றில் ‘புரோட்டாக் கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக் கொண்டே படித்த மதுரை மாணவன் ப்ளஸ்-டூ தேர்வில் மாநில அளவில் சாதனை’ என்று செய்தியில் இடம் பிடித்தவர். முதல்வர் கலைஞர் அந்த செய்தியை படித்து ஒரு லட்சம் ரொக்கப் பரிசு கொடுத்தார். அந்த உற்சாகத்தில் மதுரையில் இருந்து சென்னை லயோலாவுக்கு சமூகவியல்  படிக்க வந்தவர் இன்று ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கிறார்.





‘‘ புரோட்டா மாஸ்டரா பனியனோட ‘படிச்சு ஐ.ஏ.எஸ் ஆகி மக்களுக்கு சேவை செய்வேன்’னு ஒரு வேகத்துல சொல்லிப்புட்டேன். என்னை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக்கிடணும்னு ஆசைப்பட்ட எங்க அப்பாவை, ‘பஞ்சாரம் வைக்கக்கூட துப்பில்ல..கூமுட்ட கோழிக்கு வீடுபூரா முட்டைபோட ஆசைப்பட்டுச்சாம்’னு கிண்டல் பண்ண ஆளுங்களே இப்போ, ‘வைராக்கியக்காரன்யா நீயி! உன்மகனை கடைசில கலெக்டர் ஆக்கிப்புட்டியேய்யா!’னு சொல்றாங்களாம். அப்பா அலுமினிய பாத்திரங்களை சைக்கிள்ள வச்சுக்கிட்டு வீடுவீடா போய் வித்துட்டு வர்ற தொழில் செய்றாரு. அம்மா அரசு ஆஸ்பத்திரில துப்புறவுத் தொழிலாளியா இருக்காங. ஒரு பொண்ணு அதிகாரியா இருந்தாலே நம்ம சமூகத்துல என்னென்ன பிரச்னைகளை சந்திக்கணும்.. ஒரு சக்கிலியப் பெண்ணை எப்படி நடத்துவாங்கனு நீங்களே யோசிச்சுக்கங்க. ஆனா அவ்வளவு கஷ்டத்திலும் அவங்க என்மேல வச்ச நம்பிக்கையை குறைச்சுக்கலை. நான் எவ்வளவோ சம்பாதிக்குற வாய்ப்புகள் வந்தும் போகாம அண்ணாநகர்ல ‘சினர்ஜி அகாடமி’யில ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகுற பசங்களுக்கு சோஷியாலஜி பாடம் எடுத்துக்கிட்டே ஐ.ஏ.எஸ் தேர்வை எழுதிக்கிட்டு இருந்தேன். என்வீட்டுல ‘உனக்கு சரின்னு பட்டதை செய் ராசா!’னு சொல்லி உற்சாகப் படுத்துனாங்க. நான் துடி என்ற அமைப்பின் மாநில தலைவரா இருந்தேன். அந்த பொறுப்பை துறந்துட்டு படிக்க உட்கார்ந்தேன்.  சரியா போன நாடாளுமன்ற தேர்தல் அப்போ முதல்முறையா ஐ.ஏ.எஸ் தேர்வை எழுத ஆரம்பிச்சேன். ஒவ்வொரு வருஷமும் ஏதாவது ஒரு ஸ்டேஜ்ல தோல்வி எட்டிப்பார்க்கும். தோத்துட்டதா நினைக்காம அதெல்லாம் அடுத்தமுறை தவறுகளை திருத்திகறதுக்கான பாடம்னு நினைச்சு கூடுதல் தன்னம்பிக்கையோட தேர்வை அணுகுவேன். அதிலும் கடந்த 2007-ல இன்டெர்வியூ வரை போய் செலக்ட் ஆகலை. அதுக்காக வருத்தபடலை. எனக்கு என் திறமை மேல தீர்க்கமான நம்பிக்கை உண்டு. நல்ல உடுப்பு ஷ¨ வாங்க முடியாத நான் கடன்வாங்கிப் போட்டுக்கிட்டுதான் இன்டெர்வியூ போனேன். இந்திய அளவில் 54-வது இடத்தைப் பிடிச்சு ஐ.ஏ.எஸ் ஆகிட்டேன். இன்னிக்கு நான் நாலுபேருக்கு ரோல்மாடலா மாறி இருக்கேன்னு நினைக்கையில் சந்தோஷமா இருக்கு.’’ என்று பணிவோடு பேசுகிறார் வீரபாண்டியன்.
 ‘‘நீங்க நம்புனா நம்புங்க. நான் பி.காம் டிகிரியை பத்து வருஷமா படிச்ச ஆளு நான். அந்த அளவுக்கு படிப்புல வீக்கான ஆளு சார் நானு!  பார்க்குறதுக்கு பணக்கார வீட்டு பையன் மாதிரி இருந்தாலும் வீட்டுல ரொம்ப கஷ்டம். அப்பா தச்சு வேலை செஞ்சு படிக்க வச்சார். ஒரு காலத்துல அடுத்த வேலை சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். அவ்வளவு கஷ்டத்திலயும் எங்க அப்பா என்னை சென்னை நியூ காலேஜ்ல பி.காம் படிக்க வச்சார். படிப்பைவிட பிஸினஸ் பண்றதுலதான் எனக்கு அவ்வளவு ஆர்வம். தேவையில்லாம என்னன்னமோ பண்ணிக்கிட்டு பணத்தை விரயமாக்கிட்டு குடும்பத்துக்கு கஷ்டத்தைக் கொடுத்துக்கிட்டு சராசரி பையனா வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். அப்போ ஒருநாள் சுப்பாராவ்ங்கிற ஒரு ரிட்டையர்டு ஜட்ஜ்ஜை எதேச்சையா சந்திக்குற சூழல் வந்துச்சு. அவர்தான் சிவில் சர்வீஸ் பத்தி எனக்கு சொன்னார். என்னமோ தெரியலை. அவரை மாதிரி ஒரு அதிகாரியா ஆகணும்னு அந்த நிமிஷம் முடிவு செஞ்சேன். பொது நிர்வாகமும் வரலாறும் என் விருப்பப் பாடங்களா தேர்ந்தெடுத்து   கிட்டத்தட்ட 2 வருஷம் பிரபா ஐ.ஏ.எஸ் அகாடமியிலதான் என் ஜாகையே. மத்தவங்களுக்கு எப்படியோ நான் வாங்குன 398-வது ரேங்க் ரொம்ப சராசரி மாணவனான எனக்கு அதிகபட்சம்தான். இப்போ ஐ.ஆர்.எஸ் கிடைக்கும். ஆனாலும் இந்த வருஷமும் ஐ.ஏ.எஸ் எழுதப்போறேன்.’’ என்று நம்பிக்கையோடு பேசுகிறார் 29 வயதான சான் பாஷா!
‘‘இப்போ 442-வது ரேங்க் கிடைச்சிருக்கு. மிடில் கிளாஸ்தான் நாங்க. நான் ஐ.ஏ.எஸ் பாஸ் ஆகணும்னு அம்மா எனக்காக மெட்டீரியல் கலெக்ட் பண்ணித் தருவாங்க. நான் தூங்குற வரை அவங்களும் முழுச்சிருந்து மெட்டீரியல் தயாரிச்சுக் கொடுத்தாங்க. வீட்டுலயும் அம்மாதான் எனக்கு டீச்சர்.’’ என்று சொல்லி சிரிக்கிறார் கண்ணன்.
எல்லோரையும் போல சாஃப்ட்வேரில் கலக்க வேண்டும் என்று நினைத்து பெரிய ‘யூ டர்ன்’ போட்டு சர்வீஸ் வந்திருக்கிறர் பாலாஜி. தற்போது ஐ.பி.எஸ் தேர்வாகி இருக்கிறார்.


 ‘‘திருச்சி துறையூர்ங்க எனக்கு. கிண்டி என்ஜினீயரிங் காலேஜ்ல எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் படிச்சாலும் எனக்கு சின்னவயசுல இருந்தே ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் ஆகணும்னு ஆசைனெல்லாம் இவங்களை மாதிரி நான் சொல்ல மாட்டேன். என் ஜினீயரிங் முடிச்சுட்டு நல்லா சம்பாதிக்கணும்னு நினைச்சுதான் அண்ணா யுனிவர்ஸிட்டி வந்தேன். சும்மா ட்ரை பண்ணுவோமேனு முயற்சி செஞ்சேன். 238-வது ரேங்க் கிடைச்சு ஐ.பி.எஸ் கிடைச்சிருக்கு. மெல்ல மெல்ல உங்களை மாதிரி ஆளுங்க பேட்டி எடுக்க வர்றப்போ  ‘அஞ்சாதே’ படத்தோட ஹீரோ நரேன் மாதிரி நல்ல போலீஸா மாறிக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். பொதுவா ஐ.பி.எஸ் படிக்க  ஜிம் போய் உடம்பை ஆஜானுபாகுவா வச்சுருக்கணும்... செம உயரமா இருக்கணும்னெல்லாம் தப்பா நம்ம பசங்க நினைக்கிறாங்க. நார்மலான காவலர்கள் இருக்குற உயரத்தைவிட கம்மியா இருந்தாகூட ஓரளவு பார்க்குற அளவுக்கு நார்மல் உடம்போட இருந்தாபோதும். நல்ல சமயோசித புத்தியும் ஆளுமைத் திறனை மட்டுமே பார்க்குறாங்க. இங்கே புத்திசாலித்தனத்துக்குத்தான் அவங்க மார்க் போடுறாங்க. ரொம்ப கூச்ச சுபாவம் உள்ள என்னால ஐ.பி.எஸ் ஆக முடிஞ்சதுன்னா நிஜமாலுமே ஐ.பி.எஸ் ஆகணும்னு உழைச்சு அதில இப்போ சாதிச்சுட்டும் இருக்குற  விஜயகுமார் ஐ.பி.எஸ், செந்தில்வேலன் ஐ.பி.எஸ் மாதிரியான மனிதர்களை என்னனு சொல்றது? அவங்களை இனிமேல் ரோல்மாடலா நினைச்சுக்கிட்டு சர்வீஸ§க்கு போகப் போறேன். என்னோட முதல் முயற்சியிலயே ஐ.பி.எஸ்&க்கு செலக்ட் ஆகி இருக்கேன். பொறுப்பான அதிகாரியா இந்தியாவோட எந்த மூலைக்கு கேடர் ஒதுக்கி அனுப்பினாலும் வேலை பார்க்குற மனசோட வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. பார்க்கலாம்!’’ என்கிறார் தன்னம்பிக்கையோடு!
இவரைப்போலவே ஐ.பி.எஸ் கிடைத்து காவல்துறை மீது காதலாகி கிடக்கிறார் தினேஷ். முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ் ரேங்க் கிடைத்திருப்பது அவரே எதிர்பார்க்கததாம்.
‘‘சும்மா எழுதிப்பார்ப்போமேனு நினைச்சுதான் கோச்சிங் சேர்ந்தேன். அப்புறம் வாராவாரம் வைக்குற டெஸ்ட்ல நல்ல மார்க் வாங்கணும்னு எழுதுனேன். ஆனா இவ்ளோ சீக்கிரத்துல முதல் முயற்சியிலயே ஐ.பி.எஸ் ஆவேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை பாஸ்!’’ என்கிறார் தினேஷ்!
ஐ.ஏ.எஸ் படிப்புக்கு வேலை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இளமுருகு. எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்த இவர் ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டே தொடர்ந்து 5 வருடங்கள் எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்.
‘‘கிட்டத்தட்ட மூன்று வருஷ தொடர் முயற்சிக்கு அப்புறம் எனக்கு வெற்றி கிடைச்சிருக்கு. போன வருஷமே இன்டெர்வியூ வரை போய் செலக்ட் ஆகலை. எனக்கு பி.எல் படிச்சுட்டு அரசியல்வாதியா ஆகணும்கிறதுதான் கனவா இருந்துச்சு. அப்பாவுக்கு நான் கால்காசு சம்பாதிச்சாலும் அது அரசாங்க உத்தியோகமா இருக்கணும்னு ஆசை. என்னை எப்படியாச்சும் ஒரு அதிகாரியா பார்க்கணும்னு கனவு கண்டார். என்னோட 33-வது வயசுல அந்தக் கனவை பார்க்குறதுக்குள்ள அவர் இறந்துட்டார். ஒவ்வொரு முறையும் நெகடிவ்வா ரிசல்ட் வர்றப்பவும் அப்பாவுக்காக நாம பாஸ் பண்ணிடணும்னு ரிசல்ட் வந்த அடுத்தநாளே படிக்க உட்கார்ந்துடுவேன். இன்னிக்கு எங்க ஒட்டுமொத்த குடும்பமும் என்னோட வெற்றியை நினைச்சு பூரிச்சு கிடக்கு. எனக்கென்னமோ அப்பாவோட ஆசிர்வாதம்தான் பாஸாகிட்டேன்னு நினைக்கிறேன்!’’ சந்தோஷம் பொங்க சொல்கிறார் இளமுருகு.
ஐ.பி.எஸ் தேர்வாகியுள்ள நிர்மலாவுக்கு இது மூன்றாவது முயற்சி. ‘‘பொம்பளைப்புள்ளைக்கு எதுக்கு இவ்வளவு பிடிவாதம்.. வேற ஏதாச்சும் படிச்சு சம்பாதிக்க சொல்லலாம்ல.. இல்லைனா காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துருங்கனெல்லாம் அம்மா அப்பாக்கிட்டே அட்வைஸ் பண்ணவங்களை இப்போ நினைச்சு பார்க்கிறேன்!’’ என்கிறார் படு சென்டிமெண்ட்டாக!
‘‘தோற்றம் முக்கியம் அல்ல. நம்ம ஆளுங்க சில பேரு சினிமா பார்த்துட்டு ஐ.ஏ.எஸ்னாலே தளபதி படத்துல வர்ற அரவிந்த்சாமி மாதிரி செக்கச் சிவப்பா  இருக்கணும்னு நினைக்கிறாங்க. நான் காலேஜ் படிச்சது என்ஜினீயரிங்னாலும் ரொம்ப சாதாரண தோற்றம் உள்ளவன். ஆனா எனக்கு எப்பவும் அதை பத்தின வருத்தம் துளியும் இருந்ததில்லை. 4 வருஷம் தொடர்ந்து விடாம விரட்டி இப்போ கலெக்டர் கனவை நிறைவேத்திட்டேன். வடகிழக்கு மாநிலங்கள்ல கேடர் ஒதுக்கினாலும் கலெக்டராக நான் ரெடி!’’ என்கிறார் முத்துக்குமார். 
மனோதைரியம் மட்டுமே மூலதனமாக வைத்து தொடர்ந்து பதினோரு வருஷம் போராடி முதல்முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீதர்.



‘‘97-ல முதல் முறையா என்ஜினீயரிங் முடிச்ச சூட்டோடு எழுத ஆரம்பிச்சேன். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால தொடர்ந்து விடாமல் வருஷா வருஷம் தேர்வு எழுதிக்கிட்டே இருந்தேன். 2001-ல ஐ.ஏ.எஸ்ல மெயின் தேர்வு வரை போயும் இன்டெர்வியூவுக்கு கூப்பிடலை. இந்த நிலைமை 2006 வரை தொடர்ந்துச்சு. திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்துல நானே ஆசிரியரா பாடம் எடுத்துக்கிட்டே படிச்சதனால அந்த அனுபவத்தை வச்சே இப்போ சாதிச்சுருக்கேன்’’ என்று சொல்லும் ஸ்ரீதர் 589-வது ரேங்க் எடுத்திருக்கிறார். ஐ.ஆர்.எஸ் கிடைத்திருந்தாலும் அடுத்த ஆண்டும் எழுதப் போகிறாராம்.
சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளையில் பயின்றவர்களில் இந்த ஆண்டு 25-க்கும் மேலானவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள் இலவச பயிற்சி எடுத்த அருண்சுந்தர் ராமநாதன் மற்றும் சத்ய சுந்தரம் போன்றோர் மிகவும் வசதி குறைந்த விவசாயக் குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் அருண் சுந்தர் தமிழக அளவில் 22-வது ரேங்க் எடுத்திருக்கிறார். இவரைத் தவிர மீதமுள்ளவர்கள் ஐ.பி.எஸ் ஐ.ஆர்.எஸ் ரேங்க் கிடைத்தும் திருப்தி இல்லாததால் மீண்டும் தேர்வை எழுதப் போகிறார்கள்.

456-வது ரேங் எடுத்திருக்கும் சுப்ரியா பிஸியான டாக்டர் கம் குடும்பத் தலைவி. இவரும் இந்த ஆண்டு மீண்டும் தேர்வை எழுதப்போகிறார்.
ஐ.ஏ.எஸ் தேர்வை தமிழில் எழுதி இன்டெர்வியூ வரை தமிழில் பேசுபவர்களுக்கு வெற்றி கிடைக்காது என்ற விதியை கடந்த சில வருடங்களாக உடைத்தெறிந்த வாலிபர்களுள் இந்த ஆண்டு சக்தி என்ற மதுரைக்காரர் உடைத்திருக்கிறார். மதுரை மாநகராட்சியில் தணிக்கைத்துறையில் இன்ஸ்பெக்ட்டராக இருக்கும் சக்தி இம்முறை ஐ.ஆர்.எஸ் தேர்வாகி இருக்கிறார்.

  
3 முயற்சிகளுக்குப் பிறகு மனம் தளராமல் 4-வது வருடமாக தேர்வு எழுதிய சுப்புலட்சுமிக்கு இந்த முறை ட்ரிபுள் டிலைட் சந்தோஷம். டி.என்.பி.எஸ்சியில் தேர்வாகி டெபுடி கலெக்டராக சமீபத்தில்தான் தேர்வானார். தற்போது இந்திய ஐ.ஏ.எஸ்ஸ§ம் தேர்வாகி உள்ளார். ஜூன் 4-ம் தேதி கல்யாணம் வேறு பொண்ணுக்கு. ‘‘இத்தனை வருஷம் கஷ்டப்பட்டதுக்கு அடுத்தடுத்து நல்லநல்ல விஷயங்களா என் வாழ்க்கையில நடக்குது! வெறும் சாதனையா இது இருந்திடாம சமுதாயத்துக்கு நல்ல விஷயங்களை பண்ணணும்’’ என்கிறார் சந்தோஷமாக.
உங்களை நம்புறோம் ஆபிஸர்ஸ்!

 டெய்ல் பீஸ்:

ஐ.ஏ.எஸ் படிப்புக்கு டெல்லி போய்தான் படிக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி இப்போது சென்னையிலேயே அதே தரத்தில் கோச்சிங் கிடைக்கிறது என்பதுதான் நம்மவர்களுக்கு நல்ல செய்தி. இரண்டு வருடங்களுக்கு முன் ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த நந்தகுமார் முழுக்க முழுக்க சென்னையில் படித்தவர்தான். தமிழக அரசு நடத்தும் ‘மத்திய அரசி குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்’, சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளையின் இலவச பயிற்சி மையம் தவிர மிகவும் திறமையான மாணவர்களை உருவாக்குவதில் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி, கணேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி, பிரபா ஐ.ஏ.எஸ் அகாடமி மற்றும் சினர்ஜி அகாடமி போன்ற பிரபல பயிற்சி மையங்கள் இருக்கின்றன. அகாடமி வைத்திருப்பவர்கள் எல்லோருமே சில வருடங்களுக்கு முன் ஐ.ஏ.எஸ் தேர்வில் இன்டெர்வியூ வரை போய் தேர்வாகாமல் போனவர்கள் தான்! இந்த வருடம் தேர்வான 93 மாணவர்களில் 70&க்கும் மேலான மாணவர்கள் இந்த பயிற்சி மையங்களில் படித்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் விருப்பப்பாடத்தையும் பொது அறிவுத்தாளையும் எல்லா அகாடமியிலும் தேர்வு செய்து படித்திருக்கிறார்கள். இதனால் இந்த முறை 70 மாணவர்களை உருவாக்கிய பெருமை மேலே சொன்ன அனைத்து அகாடமிகளுக்குமே சேரும்.
 ‘‘5 வருஷம் 6 வருஷம் போராடுன எங்க அனுபவமே ஒரு அகாடமி அரம்பிச்சு வாழ்நாள் கேரியரா அதை எடுத்துக்குற அளவுக்கு ஆர்வத்தை தூண்டி விட்டுருது. எங்க அகாடமிகளுக்குள்ள போட்டி எதுவும் கிடையாது. ஒவ்வொரு அகாடமியும் ஒவ்வொரு பாடத்தில சிறப்பா இருப்போம். ஒரு அகாடமியில பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பாங்க.. இன்னொன்னுல புவியியல் படிப்பாங்க இன்னொன்னுல வரலாறு சேர்வாங்க. எங்களுக்குள்ல நல்ல அன்டர்ஸ்டாண்டிங் இருக்குறதால ஒருத்தர் இன்னொருத்தரோட அகாடமியை பரிந்துரைக்குற அளவுக்கு நட்போட இருக்கோம். இதனாலேயே மாணவர்கள் அவங்க சாய்ஸ்ல படிக்குற வாய்ப்பு இங்கே கிடைக்குது. கூடிய விரைவில் அண்ணா நகரின் ஒவ்வொரு அவென்யூவுக்கும்  ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் வந்திரும். ஐ.ஏ.எஸ் படிக்க வர்றவங்களை பயமுறுத்தாம எளிமையான கேள்விகளை தேர்வுகளில் கேட்டு அவங்களை தன்னம்பிக்கை அடைய வைகிறதுதான் எங்களோட பணி. சீனியர் ஆபிஸர்ஸ் இங்கே படிச்சுட்டு போனவங்களை வச்சு கோச்சிங் கொடுக்குறோம். ரொம்ப ஆர்வத்தோட கடல்ல நீந்த வர்றவங்களுக்கு கலங்கரை விளக்கம் போல இருக்குறது மட்டும்தான் எங்களோட வேலை. நீந்திக் கடக்குறது அவங்கதான். பெரும்பாலும் எல்லா அகாடமியும் அண்ணா நகர் ஏரியாவுக்குள்ள இருக்குறதால படிக்க வர்றவங்களுக்கும் இது வசதியா போயிடுது! எங்களுக்கு பணத்தைவிட தமிழ்நாட்டுக்கு நிறைய அதிகாரிகளை உருவாக்கிக் கொடுக்க முடியுதேனு கிடைக்குற சந்தோஷம்தான் ரொம்ப பெருசு!’’ என்கிறார்கள் ஒருமித்த குரலில்!

கருத்துகள் இல்லை: