வெள்ளி, 4 செப்டம்பர், 2009

நினைவு அஞ்சலி...மாவீரர் சடலவாடா உமேஷ் சந்த்ரா ஐ.பி.எஸ்...




ஆந்திரமாநில போலீஸாரால் பெரிதும் இன்றளவும் மதிக்கப்படும் நேர்மையான காவல்துறை அதிகாரி. இப்போது உமேஷ் சந்த்ரா உயிருடன் இல்லையென்றாலும் காவல்துறை மீது பேரன்பு கொண்ட வருங்கால சந்ததியருக்கு சடலவாடாவின் வாழ்க்கை முன்மாதிரி. நக்ஸலைட் தீவிரவாதிகளால் ஹைதராபாத் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சடலவாடா உமேஷ் சந்த்ராவின் வாழ்க்கை ஒரு சரித்திரம்!
’கடப்பா டைகர்’ என்றழைக்கப்பட்ட சடலவாடாவின் நினைவு நாள் இன்று. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு சின்ன பதிவு!
குண்டூர் மாவட்டத்தில் பெடப்புடி என்ற கிராமத்தில் 1966-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதி சடலவாட வேணுகோபால ராவ்- நயனதாரா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் உமேஷ். பெகும்பேட்டில் பள்ளிக் கல்வியையும், பி.ஏ எக்கனாமிக்ஸ் நிஜாம் கல்லூரியிலும், எம்.ஏ எக்கனாமிக்ஸ் புகழ்பெற்ற ஒஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் முடித்தார். அதிலும் எம்.ஏ-வில் கோல்டு மெடலிஸ்ட்டாக!
1991-ம் ஆண்டு ஐ.பி.எஸ்ஸாக தேர்வு பெற்றார். 1992-லிருந்து 1994 வரை வாரங்கல் மாவட்டத்தில் ஏ.எஸ்.பியாக பணியில் இருந்தார். நக்ஸலைட்டுகளின் கூடாரமாக திகழ்ந்த வாரங்கல் மாவட்டத்தை மாற்றிக்காட்டிய பெருமை இவருக்கு உண்டு. அதற்காக இவர் பயன்படுத்திய உத்தி மிகவும் பேர் பெற்றது. ’ஜன ஜாக்குருதி’ என்ற அமைப்பை தோற்றுவித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு நாடகங்கள் பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தியாவின் ஒற்றுமையையும் காவல்துறையின் மாண்பையும் போற்றும்விதம் இவர் உருவாக்கிய இந்த அமைப்பில் பல நக்ஸலைட்டுகள் மனம் மாறி உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

வறுமையும் கல்வியின்மையும்தான் நக்ஸல் இயக்கங்கள் மண்ணில் வேரூன்ற காரணமாகிவிடுகின்றன என்பதால் அதைப்போக்க தன் சக அதிகாரிகள் மற்றும் நண்பர்களுடன் களத்தில் குதித்தார். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் பல கொடூரமான நக்ஸல் அமைப்புகள் இவர் தலைக்கு நாள் குறித்தன. அதைப்பற்றியெல்லாம் உமேஷ்சந்த்ரா கவலைப்பட்டதாக தெரியவில்லை. இடையில் புலிவந்தலாவுக்கு மாறுதலாகிப் போய்விட நக்ஸலைட்டுகளின் கொட்டம் மனம் மாறிய அப்பாவி மக்கள் பக்கம் திரும்பியது. இதனால் இவரை மாநில அரசு ஸ்பெஷலாக வாரங்கல் மாவட்டத்துக்கு நக்ஸல்களை ஒழிக்கும் அஸைன்மெண்ட்டைக் கொடுத்தது. சாத்வீக குணம் கொண்டிருந்தாலும் உமேஷ் ஒரு கண்டிப்புமிகுந்த கோபக்கார அதிகாரி. இம்முறை பல தீவிரவாத இயக்கங்களின் தலைகள் களையெடுக்கப்பட்டன. தன் உறுதியான அணுகுமுறையால் வட மாநிலங்களுக்கு தப்பி ஓடினர் பலர். அதன்பிறகு எஸ்.பி-யாக கடப்பாவிலும், கரீம் நகரிலும் 1998 வரை பணியாற்றினார். இந்த இரண்டு மாவட்டங்களிலும் இவர் ஒரு ஹீரோவாக அப்போது கொண்டாடப்பட்டார். 1998 ஏப்ரல் மாதம் இவர் காவல்துறை தலைமையிடத்துக்கு ஏ.ஐ.ஜி (விளையாட்டு மற்றும் நலத்திட்டம்)-யாக பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில் இவர் தலைக்கு விலை பேசிய சில நக்ஸல் அமைப்புகள் இவரைக் கொன்று தீர்க்க துடித்தன. தனக்கு இந்த விஷயம் தெரிந்தும் தைரியமாக ஹைதரபாத்திற்குள் வலம் வந்தார் உமேஷ். ஆனால் மாநில அரசு இவருக்கு விசேஷ பதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. அதாவது இவர் வீட்டிலிருந்து காலையில் கிளம்புவதற்கு முன் இவர் போகும் சாலை வழிகளில் டிராஃபிக் க்ளியர் செய்யப்பட்டு விடுமாம். எந்த சிக்னலிலும் உமேஷின் கார் நிற்கக்கூடாது என்பதை கவனமாகக் கொண்டு காவல்துறையின் தலைமை இவர் உயிரின் மதிப்பு உணர்ந்து செயல்பட்டிருக்கிறது. பல மாதங்களாக வேவு பார்த்த 4 தீவிரவாதிகள் ஒரு நாள் (செப்டம்பர் 4-ம் தேதி 1999-ம் வருடம்) இவர் கார் எதேச்சையாக ஒரு சிக்னலில் நிற்க.. இவர் கார்மீது கண்மூடித்தனமாக சுட்டனர். பாதுகாப்புக்கு இருந்த கன்மேனும், டிரைவரும் சம்பவ இடத்தில் பலியாகிவிட தப்பிக்க பார்த்திருக்கிறது அந்த முரட்டு கும்பல். ஆனால் உமேஷ் அவர்களைத் துரத்திச் சென்றிருக்கிறார். உமேஷின் கெட்ட நேரம் எதிரிகளின் சாதகமான நேரம் எப்போதும் பிஸ்டலுடன் வலம்வரும் உமேஷ் அன்று பிஸ்டலை எடுத்து வரவில்லை. பின்னால் தங்களைத் துரத்தும் உமேஷிடம் ஆயுதம் இல்லை என்பதை தாமதமாக தெரிந்து கொண்ட அவர்கள் உமேஷை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். சாலையில் பட்டப் பகலில் தெலுங்கு சினிமாக்களில் வரும் காட்சியைப்போல நடந்து முடிந்தது அந்த சம்பவம். நக்ஸல் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய உமேஷ் சந்திரா இறந்துபோனதும் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் கான்ஸ்டபிள்களிலிருந்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை பல பேர் தாமாக முன்வந்து இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு வீரவணக்கம் செய்தார்கள். இவர் முன்பு பணியில் இருந்தபோது ‘கான்ஸ்டபிள்களின் கடவுள்’ என்று மீடியாக்களால் அழைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சக மனிதனை மதிக்கின்ற பண்பும், காவல் துறைக்கே உரிய தைரியமும் அவரது சொத்துக்கள். அவரது ஜனஜாக்குருதி பாடல்கள் இப்போதும் வாரங்கல், கரீம் நகர், கடப்பா மாவட்ட கிராமப்புறங்களில் சில வீடுகளில் கேட்கமுடிகிறது. பல குடிசைகளில் ஃபோட்டோவாக சிரித்துக் கொண்டு கடவுளைப் போல அவர்களுக்கு காட்சி தருகிறார் உமேஷ். எல்லாவற்றுக்கும் மௌனசாட்சியாக ஹைதராபாத்தின் பரபரப்பான சஞ்சீவ ரெட்டி நகர் சந்திப்பில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறார் சிலையாக... !


பின் குறிப்பு:  சினிமா டைரக்டர் கௌதம் மேனன் ஒரு பேட்டியில் ’’சடலவாடா உமேஷ் சந்திராவின் வாழ்க்கைதான் தனக்கு ‘காக்க காக்க ’ படத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்!

கருத்துகள் இல்லை: