புதன், 16 செப்டம்பர், 2009

கலெக்டர் கல்யாண வைபோகமே...!




‘‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!’’
- கூடி இருந்தவர்கள் இந்த திருக்குறளை உச்சஸ்தாயியில் உச்சரிக்க.. கெட்டி மேளம் நாதஸ்வரம் ஒலிக்காமல்.. புரோகிதர்களின் மந்திரங்கள் ஒலிக்காமல் தமிழ் மணக்க நடந்தது அந்த வித்தியாச கல்யாணம். நாள் ஜூலை 2-ம் தேதி.. இடம்.. மதுரை அண்ணாநகர் அருந்தமிழர் குடியிருப்பு. (அருந்ததியர் குடியிருப்பு என்பதை அழகுத் தமிழில் இப்படி மாற்றி இருக்கிறார்கள்)

இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் 53-வது ரேங்க் எடுத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்த வீரபாண்டியனின் திருமண நிகழ்ச்சி அது! (ஆம்.. புரோட்டாக்கடையில் வேலைபார்த்துக் கொண்டே படித்து ஐ.ஏ.எஸ் வரை எட்டிப் பிடித்த மதுரைத் தமிழர்!) சட்டமேதை அம்பேத்கர், புத்தர் சிலைகளுக்கு முன்பு திருக்குறளையும் புத்தரின் பஞ்சசீலக் கொள்கையையும் சாட்சியாக வைத்து நடைபெற்ற அந்த திருமணத்தை ‘கல்வித் திருவிழா’வாக நடத்தி இருந்தனர் வீரபாண்டியன் வசிக்கும் அருந்தமிழர் குடியிருப்பு ஏரியா மக்கள். வீரபாண்டியனை வாழ்த்த தமிழகத்தின் முக்கிய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இந்த வருடம் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்ற தமிழக மாணவர்களும் சூழ சொந்த மாமன் மகள் ஆண்டாளை கரம் பிடித்தார் நாளைய ஐ.ஏ.எஸ் அதிகாரி!


பத்திரிகை அடிக்காமல் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் மற்றும் போனில் அழைத்திருந்தார் வீரபாண்டியன். நட்பின் அடிப்படையில் என்னை அவர் அழைத்ததனால் திருமணத்துக்கு போயிருந்தேன். நான் அங்கு போய் இறங்கியதும் ஆச்சர்யத்தில் திளைத்துவிட்டேன். அருந்தமிழர் குடியிருப்பு பகுதியே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அந்தப்பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு விழாவைப்போல கூடி இருந்தார்கள். மதுரையில் இருக்கும் சில மாநகராட்சி பள்ளிகள் அன்று இந்தத் திருமணத்துக்காக விடுமுறை விடப்பட்ட அதிசயமும் நடந்தது. கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களோடு கூட்டம் கூட்டமாக வந்து மணமக்களை வாழ்த்திவிட்டும் சென்றார்கள். திருச்சியிலிருந்து தன் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார் கணேசன் என்ற வருமானவரித்துறை அதிகாரி. தன் இரண்டு பசங்களுக்கும் வீரபாண்டியன் வளர்ந்த சூழலைக் காட்டவேண்டும் என்ற எண்ணத்தில் அழைத்து வந்திருந்தாராம் அவர். கல்யாணம் காதுகுத்துக்கு டிஜிட்டல் பேனர் பளபளக்கும் மதுரையில் முதல் முறையாக படு பாஸிட்டிவான வாசகங்கள் தாங்கிய பேனர்களை காண முடிந்தது. ‘வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு.. தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு!’, ‘படி.. படி... படி! வாழ்க்கையின் உயரத்தை எட்டிப்பிடி.. பிடி.. பிடி!’ ‘கற்றவருக்கு சென்றமிடமெல்லாம் சிறப்பு!’ போன்ற வாசகங்களை காண முடிந்தது. அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக ‘படிச்சாத்தான் நீ ஹீரோ!’ போன்ற பேனர்களும் அந்தப்பகுதி முழுக்க வியாபித்து இருந்தது கருத்தைக் கவர்ந்தது.
‘‘தயவு செய்து மொய்ப்பணமோ அன்பளிப்புகளோ வேண்டாம்.. விருப்பப்பட்டால் புத்தகங்களாக கொடுங்கள்!’’ என்று ஏற்கனவே அன்பு வேண்டுகோள் வீரபாண்டியன் விடுத்திருந்ததால் புத்தகங்களே பரிசுகளாக குவிந்திருந்தது. தன்னை ஐ.ஏ.எஸ் ஆக்க உதவிகள் செய்த சைதை துரைசாமி மற்றும் சித்தார்த் போன்றவர்களை விழாவில் கௌரவித்து மகிழ்ந்த வீரபாண்டியன் தன் அம்மா அப்பாவின் கரங்களால் கார்ப்பரேஷன் பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளைக் கொடுத்தார். முத்தாய்ப்பாய் அந்தப் பகுதியில் நூலகம் கட்டுவதற்கு தன் பணத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து உதவுவதாக அவர் மைக்கில் அறிவிக்க.. கூடி இருந்த ஏரியா மக்கள் கைதட்டியும் விசிலடித்தும் மகிழ்ந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் தங்களுக்கான நம்பிக்கை நட்சத்திரம் உதயமான சந்தோஷத்தை காண முடிந்தது. மணப்பெண்ணை சாரட் வண்டியில் அழைத்து வந்து அசத்தினார்கள் ஏரியா இளந்தாரிகள்!


‘‘இப்போ என் மனைவியாகிட்ட ஆண்டாள் என் சொந்த மாமன் மகள் மட்டுமில்லை.. என் வகுப்பு தோழியும்கூட. சின்னவயசுல நாங்க ரெண்டுபேரும் அண்ணாநகர்ல இருக்குற கார்ப்பரேஷன் ஸ்கூல்லதான் படிச்சோம். அவங்க என்னைவிட நல்லாவே படிப்பாங்க. நான் கடைகள்ல எடிபிடி வேலைபார்த்துக்கிட்டே படிச்சதால ஒழுங்கா நோட்ஸ் எழுத மாட்டேன். அதனால அவங்ககிட்டதான் நோட்ஸ் வாங்குவேன். என் மேல பிரியத்தை இளம்பிராயத்திலிருந்து வளர்த்துக்கிட்ட பொண்ணு அவங்க. காக்கா கடி கடிச்சு கடலை மிட்டாய் கொடுக்குறதுல ஆரம்பிச்ச அருமையான நட்புக் காலம் அது! நான் ப்ளஸ்-டூல நிறைய மார்க் எடுத்தப்போ ‘நீ கலெக்டர் ஆகணும்ப்பா!’னு நம்பிக்கையோட சொல்வாங்க.


இவங்கதான் மனைவியா வரப்போறாங்கன்னு எனக்கு அப்போ தெரியாது. ஆனா அப்பா அம்மாவைப்போலவே நான் கலெக்டராகணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க. இனம் புரியாத ஒரு பாசம் எப்பவும் அவங்க மேல அதனாலயே எனக்கு இருந்துச்சு. ப்ளஸ்-டூல மாநில அளவுல ரேங்க் வாங்கி பிறகு கலைஞர் ஐயாவோட தயவால் லயோலா காலேஜ்ல எனக்கு சீட் கிடைச்சு இங்கே வந்துட்டேன். ஆனா அவங்க மதுரை யாதவா காலேஜ்ல ஆங்கில இலக்கியம் படிச்சுட்டு இருந்தாங்க. நான் வேலை எதுக்கும் போகாம ஐ.ஏ.எஸ் பாஸாகிடணும்னு முனைப்போட சென்னையில இருந்தேன். ஐ.ஏ.எஸ் அகாடமியிலே தூங்குறதுக்கு இடம் கிடைச்சு.. செய்தித்தாள்களை தரைக்கு விரிச்சுக்கிட்டு அங்கேயே தூங்கிக்கிட்டு 5 வருஷ்மா புத்தகங்களோட வாழ்ந்துக்கிட்டு இருந்ததால ஆண்டாளோட அன்பின் ஆழம் அப்போ தெரியலை. அப்பா அம்மாவுக்கு என்னை மாலையும் கழுத்துமா பார்க்கணும்னு ஆசை. பாஸ் ஆனாதான் கல்யாணம்னு உறுதியா இருந்தேன். ஒவ்வொரு தடவையும் இன்டெர்வியூ வரைக்கும் போய் செலக்ட் ஆகாம இருக்குறதோட வலி ரொம்ப கொடுமை. வேற ஒருத்தன்னா சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு கிடைக்குற வேலைல செட்டில் ஆகி இருப்பாங்கனு நினைக்குறேன். அப்போதான் அந்த திருப்பம் நடந்தது. என்னோட ஆண்டாள் சென்னை அண்ணாநகர்ல ஒரு கம்பெனியில அட்மினிஷ்ட்ரேட்டிவ் ஆபிஸரா வேலையில சேர்ந்தாங்க.

எப்பவும் படிப்பு படிப்புனு உடல்நலம் மேல அக்கறை இல்லாம திரிஞ்ச என்னைப் பார்த்துட்டு கண்கலங்கிட்டாங்க. சின்ன வயசுப் பாசம் மீண்டும் எட்டிப் பார்த்துச்சு. ‘வேளாவேளைக்கு சாப்பிடுங்க!.. ரொம்ப நேரம் கண்விழிச்சு படிக்காதீங்க!’னு உரிமையோட எங்கிட்டே சொல்லுவாங்க.. எனக்காக கண்விழிச்சு லைப்ரரில நோட்ஸ் எடுத்துக் கொடுப்பாங்க.. ஆங்கிலத்துல சரளமா பேசுறதுக்கு திணறிக்கிட்டு இருந்த எனக்குள்ள நம்பிக்கை உண்டு பண்ணியதே ஆண்டாள்தான்! அவங்களோட அருகாமை என்னோட மன உறுதியை ரெண்டு மடங்காக்கிருச்சு. பாலைவனம் மாதிரி இருந்த வாழ்க்கையில சின்னதா பசுமை துளிர்விட ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு. வீட்டுல ஆண்டாளை நிச்சயம் பண்ணப் போறதா பெத்தவங்க கூடி தீர்மானிச்சப்போ மனசளவுல உற்சாகமா ஆகிட்டேன். ஆனா ஐ.ஏ.எஸ் பாஸ் ஆன அப்புறம்தான் கல்யாணம்கிற முடிவுல தெளிவா இருந்தேன்.

என் மனஓட்டத்தை புரிஞ்சுக்கிட்டாங்க.. ‘நீங்க ஐ.ஏ.எஸ் பாஸாக எத்தனை வருஷம் ஆனாலும் சரி.. உங்களுக்காக காத்திருக்கேன்.’னு ஆண்டாள் சொன்ன அந்த நிமிஷம் என் வாழ்க்கையில உன்னதமான தருணம்! இவதான் நம்ம மனைவினு அப்போ முடிவு பண்ணேன். ரெண்டு வீட்டுலயும் பேசி 2008 மே 10-ம் தேதி எங்க நிச்சயதார்த்தம் நடந்துச்சு. என்னை நம்பி காத்திருக்குற பொண்ணுக்காக இந்த தடவை பாஸாகிடணும்னு நினைச்சேன். 2009 மே 4-ம் தேதி என் ஆண்டாளோட காத்திருப்புக்கு பலன் கிடைச்சது. ஐ.ஏ.எஸ் ரிசல்ட்ல பாஸாகிட்டேன். திருமாலை கல்யாணம் பண்ண காத்திருந்த ஆண்டாள் போல எனக்காக என் ஆண்டாள் காத்திருந்ததன் பலன்தான் இன்னிக்கு ஐ.ஏ.எஸ் வெற்றி.. ஒரே வருத்தம் என்னன்னா இப்போ  மசூரிக்கு ஒரு வருஷம் அட்மினிஷ்ட்ரேஷன் ட்ரெயினிங் போறேன். ஆண்டாளை பிரிஞ்சு இருக்கணும்! முப்பது வயசுவரை ஒரு பெண் எனக்காக காத்திருந்தது என் பொறுப்பை கூட்டி இருக்கு..’’ என்று நெகிழ்வின் ஈரம் தொட்டு மனைவியின் முகம் பார்த்து பேசுகிறார் வீரபாண்டியன்.
பக்கத்தில் பெண்மைக்கே உரிய வெட்கத்தோடு முகம் சிவந்து இருந்த ஆண்டாளிடம், ‘‘எப்படி ஒரு வருஷப் பிரிவை தாங்கிக்க போறீங்க?’’ என்று கேட்டால் கணீரென்று பதில் தீர்க்கமாக வந்து விழுகிறது.
‘‘காத்திருப்பதில் கிடைக்குற சுகத்தை அணுஅணுவா ரசிச்சு வளர்ந்தவ நான்.. நல்ல விஷயத்துக்காகத்தானே போறார். அவர் திரும்பி வந்ததும் தமிழ்நாட்டோட தலைசிறந்த ஐ.ஏ.எஸ் ஆபிஸரா அவர் உருவாக ஒரு வாழ்க்கைத் துணையா என் பங்களிப்பை சரியா செய்யணும்! குறிப்பா ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலா எங்க குரல் ஒலிக்கும்! ’’-கணவர் வீரபாண்டியனின் முகம் பார்த்து பேசுகிற ஆண்டாளின் முகத்தில் காதலையும் தாண்டி நம்பிக்கைக் கீற்று தெரிகிறது!
வாழ்த்துக்கள்!

டெய்ல் பீஸ்:
இந்தக் கட்டுரைடயின் சுருங்கிய வடிவம் விகடனில் பிரசுரமாகியது.
என் நண்பர் திரு.வீரபாண்டியன் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் மசூரி லால் பகதூர் சாஸ்திரி அட்மினிஸ்ட்ரேஷன் அகாடமியில் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக சென்றிருக்கிறார். தமிழ்நாடு கேடருக்கு வந்து பணியாற்ற கடவுள் விரும்புவார் என்று நம்புகிறேன்.. மீண்டும் வாழ்த்துக்கள் வீரபாண்டியன்!

கருத்துகள் இல்லை: