இட்லிக்கடையிலுமிருந்தும் புரோட்டாக்கடையிலுமிருந்து தேசத்தின் நம்பிக்கை விதைகள் வெடித்துக் கிளம்பியிருப்பது சந்தோஷமான தருணம்! என் பிரார்த்தனைகள் எல்லாம் இந்த இரண்டு பேரும் எதிர்காலத்தில் இன்னும் பல உச்சங்கள் தொட்டு தேசத்தின் நம்பிக்கை முகங்களாக பரிமளிக்க வேண்டுமென்பதே!
நிச்சயம் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு..இதோ...சரத்பாபுவின் அன்னை தீபரமணியின் குரல்!
வாழ நினைத்தால் வாழலாம்!
‘‘நாம கஷ்டத்துல இருக்கறப்ப உதவி தேடி
அலையவேண்டிய அவசியமே இல்லை. நாம மட்டும்
தெளிவா வாழ பழகிட்டா, ஒவ்வொரு விஷயமும்
நமக்கான வாய்ப்புகளை நீட்டுற அதிசயம் நடக்கும்!
தகுதியுள்ளவங்களுக்கு தானாவே முன்வந்து உதவி செய்ய,
இந்த உலகத்துல எவ்வளவோ நல்லவங்க இருக்காங்க!’’’
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு...
சின்னதொரு மனஸ்தாபத்தில் கணவர் பிரிந்துபோய்விட, கையில் நான்கு குழந்தைகளோடும் மனம் நிறைய கவலைகளோடும் நிராதரவாக நின்ற பரிதாபப்பெண்மணி தீபரமணி. இளமையிலேயே தந்தையை இழந்துவிட்டதால், பிறந்த வீடு என்ற பந்தமும் இல்லை. எப்படி வாழ்வது... யார் உதவியை நாடுவது...எதுவும் புரியவில்லை. தாயாக தான் தரும் அன்பின் அரவணைப்பும் ஆசை முத்தங்களும் பிள்ளைகளின் பட்டினியைப் போக்கிவிடாது என்ற கசப்பான உண்மை உறைத்த கஷ்டமான காலகட்டம். ஆனாலும், தீபரமணியின் மனசுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது ஒரு நம்பிக்கை நெருப்பு... ‘‘நான் வாழ்ந்தே தீருவேன். என் குழந்தைகளை வளர்த்து, குடும்பத்தை நிலைநிறுத்திக் காட்டுவேன்!’’
கடந்த ஏப்ரல் 1, 2006...
அகமதாபாத்தில் உள்ள, புகழ்பெற்ற 'இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப்
மேனேஜ்மென்ட்' வளாகம்... எம்.பி.ஏ பட்டதாரியாக உயர்ந்து நிற்கும் தன் மூத்த மகன் சரத்பாபுவின் ‘ஃபுட் கிங் கேட்டரிங் சர்வீஸ்’ தொடக்க விழாவில் பூரித்துப் போய் நிற்கிறார் தீபரமணி. விழாவுக்கு வந்திருந்த ‘இன்ஃபோசிஸ்’ நிறுவனத்தின் சேர்மன் நாராயணமூர்த்தி, ‘இப்படிப்பட்ட மகனை பெற்றதற்காக நீங்களும், உங்களுக்கு மகனாகப் பிறந்ததற்காக அவரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என்று நெகிழ்ந்துபோய் சொல்ல, கண்ணீர் ததும்பி வழிகிறது தீபரமணியின் கன்னத்தில். ‘‘எந்த பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்து, படிப்பு முடித்த கையோடு ஒரு நிறுவனத்தையே நான் தொடங்கி இருப்பது பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால், என் தாயின் தியாகத்துக்கு முன்னால் அது ஒரு சிறு கடுகுதான்! நான் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் அவர்!’’ என்று சரத்பாபு பேச, அங்கு திரண்டிருந்த கூட்டமே தீபரமணியைப் பார்த்து வணங்குகிறது.
‘அன்றும்’, ‘இன்றும்’ என இரண்டு பாராக்களில் சொல்லிமுடித்து விட்டா லும், இரண்டுக்கும் இடையில் ஒரு சாமானியத் தாயாக தீபரமணி மேற் கொண்ட பயணம் அசாதாரணமானது. ஒரு பள்ளத்தாக்கிலிருந்து சிகரத்தை நோக்கிய பயணம் அல்ல அது. பள்ளத்தாக்கையே சிகரமாக மாற்றும் சிரமமான பயணம்!
நினைத்ததை முடித்துவிட்ட சந்தோஷ பூரிப்புடன் இருந்த தீபரமணியை, சென்னை மடிப்பாக்கத்தில் குறுகலான தெருவில், எளிமையாக இருந்த அவரது வீட்டில் சந்தித்தபோது, தான் கடந்து வந்த பாதையை நெகிழ்ச்சி பொங்க விவரித்தார். அது தடைகளை வென்ற ஒரு தாயின் கதை மட்டுமல்ல... சின்னதொரு கஷ்டம் வந்தாலும் ‘எனக்கு இனி வாழ்க்கையே இல்லை’ என்று தவறான முடிவுகளை நாடும் எந்த ஒரு பெண்ணுக்குமான தன்னம்பிக்கை பாடம்!
‘‘இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால, ஒரு சின்னப் பிரச்னையில கோச்சிக்கிட்டு போன வூட்டுக்காரரு வரவே இல்லை. வூட்டத் தவிர இங்க அங்கனு நாலு இடம் போயிப் பழகாதவ நான். படிப்பும் பத்தாவதுதான். நாலு புள்ளைங்கள்ல ஒண்ணுத்துக்கு அழத் தெரியும். மூணுத்துக்கு பசிக்குதுன்னு சொல்லத் தெரியும். ‘ஓ’னு அழறதைத் தவிர, அப்போ எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க’’ என்று 0சொல்லும் தீபரமணியின் பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு கூடுகிறது.
‘‘உலகம் ரொம்ப மோசமானது. கஷ்டப்படறவங்களை அது கால்ல போட்டு
மிதிக்கும்னு எல்லாம் நெறைய பேரு சொல்லுவாங்க. ஆனா, உண்மையிலயே சொல்றேங்க. நான் பார்த்த உலகம் அப்படியில்ல. நாம உழைக்கறதுக்கு தயாரா இருந்தா, நமக்கு உதவறதுக்கும் நெறைய நல்ல மனசுக்காரங்க இருக்கத்தான் செய்யறாங்க. என் கஷ்ட காலத்துல, ஸ்கூல்ல என் புள்ளைங்களுக்கு போட்ட ஒரு வேளை சத்துணவுதான் பெரிய ஆறுதல். மத்த ரெண்டு வேளைக்கும் அவங்க வயித்துக்கு வழி தெரியாமத்தான் கெடந்தேன். ஆனாலும், இப்படிப்பட்ட வாழ்க்கையை ஏன் வாழணும்னு ஒருநாளும் நான் நெனைக்கலை. ஊர் உலகமே என் புள்ளைங்களுக்கு இவ்வளவு பண்ணும் போது, நான் ஏதாவது பண்ணியே ஆகணும்ங்கிற வெறிதான் எனக்குள்ள இருந்துச்சு. பத்தாவது வரைக்கும் படிச்சிருந்ததால
பள்ளிக்கூடத்துல மத்தியானம் சமையல் வேலை செஞ்சேன். ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்தான் கூலி. அதை மட்டுமே நம்பி இருக்க முடியாததால இட்லி, பஜ்ஜி, வடைனு வீட்டு வாசல்லயே சுட்டு விக்க
ஆரம்பிச்சேன். எனக்கு ஒத்தாசையா எம்புள்ளைங்களும் வீடுவீடா கொண்டு
போயி அதை விக்குங்க. விக்காம மிஞ்சின இட்லி, வடையை சாப்பிட்டே
பல நாட்கள் உசுர் தாங்கியிருக்கோம். அப்ப எனக்குள்ள என்ன வைராக்கியம்னா, பட்டினி வேணும்னாலும் கிடக்கலாம்; ஆனா, யார்கிட்டயும் கையேந்திடக்கூடாது. அதேநேரம் காசு கஷ்டத்துனால பசங்க யாரும் தப்பான வழியில போகவும் விட்டுடக்கூடாது... அவ்வளவுதான்.
நோயிநொடினு நான் படுத்துட்டா இந்தப் புள்ளைங்க கதி என்னாகும்னு நெனைச்சு, கடுமையா காய்ச்சல் வந்தப்பகூட நான் படுத்தது கெடையாது. அதுக்கேத்த மாதிரி, எம்புள்ளைங்க ஒவ்வொண்ணும் பத்தரை மாற்றுத் தங்கங்களாத்தான் வளந்ததுங்க!
மூத்ததுங்க ரெண்டும் பொண்ணுங்க. ஏதோ என்னால முடிஞ்ச இடத்துல அதுங்
களை புடிச்சுக் குடுத்து கரையேத்திட்டேன்!’’ என்றவர் சிறிது இடைவெளி விட்டு, ‘‘மூணாவதுதான் எங்க சரத். ஆரம்பத்துல இருந்து அவன் மட்டும் எப்பவும் ஸ்கூல்லயே முதல் மார்க் எடுத்துட்டு வந்து நிப்பான். இருக்கப்பட்டவங்க வீட்டுல பையன் நல்லா படிச்சா சந்தோஷம் வரும். ஏங்கிக் கெடக்குற வீட்டுல ‘அய்யோ! இப்படி நல்லா படிக்கிற புள்ளை போயி, நெனச்சதைப் படிக்க வைக்க முடியாத இந்தப் பாவிக்கு மகனா பொறந்துருக்கே’னு கவலைதாங்க வரும். ஆனா, அவன்
எனக்கு புள்ளையில்லீங்க... ஏந்தகப்பன். ‘நாம இட்லி சுட்டு விக்கிறது கூச்சமா இருக்கும்மா!’னு கடைசி புள்ள புலம்பும்போதெல்லாம், ‘நாம உழைச்சுத் தானடா சாப்பிடுறோம்! இதுல என்னடா கூச்சம் வேண்டிக் கிடக்கு’னு சொல்வான். அவனுக்கே தெரியாம தனியா அவன் சொன்னதை நெனைச்சு நெனைச்சு நான் அழுவேன். பத்தாவதுல 957 மார்க்கும் பன்னெண்டாவதுல 1107 மார்க்கும் எடுத்து இவன்தான் ஸ்கூல்ல மொத மார்க் வாங்குனான்’’ என்கிற தீபரமணி, தன் மகன் ஒவ்வொரு வகுப்பிலும் பெற்ற மதிப்பெண்களை எல்லாம் மனதிலேயே வைத்திருக்கிறார்.
‘‘என் வாழ்க்கையில நான் உணர்ந்த முக்கியமான ஒரு விஷயம்... நாம கஷ்டத்துல இருக்கறப்ப நமக்குனு உதவுறதுக்கு நல்ல மனுஷங்களைத் தேடி நாம போக வேண்டியதே இல்லை. நாம மட்டும் தெளிவா வாழ பழகிட்டா, ஒவ்வொரு விஷயமும் நமக்கான வாய்ப்புகளை நீட்டுற அதிசயம் நடக்கும். தகுதியுள்ளவங்களுக்கு தானாவே முன் வந்து உதவி பண்ண இந்த உலகத்துல
எவ்வளவோ நல்லவங்க இருக்காங்க. அப்படித்தான், சரத்துக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட நாங்க பட்ட கஷ்டத்தைப் பார்த்துட்டு அவன் படிச்ச கிங்ஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூலோட டீச்சருங்களும் ஹெட் மாஸ்டருமே எல்லா செலவுகளையும் ஏத்துக் கிட்டாங்க. நல்லா படிக்கிற பையன்ங்கிறதால அதுக்கு மேல வர்ற சில ஃபீஸை எல்லாம் அவன்கூட படிக்கிற பசங்களே கட்டியிருக்காங்க. எம்புள்ளையும் அந்தப் பொறுப்பை உணர்ந்து படிச்சான்.
சரத் ப்ளஸ் டூ படிக்கிற வரைக்கும் எங்க வீட்டுல கரன்ட் கிடையாது. சாயந்
திரமானா, படிக்க முடியாம ரொம்பத் திண்டாடுவான். அப்போ வீட்டு பக்கத்துல
‘சத்யசாயி பாபா கமிட்டி டியூஷன் சென்டர்’னு ஒரு இலவச டியூஷன் கிளாஸ்
ஆரம்பிக்க, பசங்க எல்லாம் அதுல சேர்ந்து படிச்சாங்க. அங்கிருந்து வந்த பிறகும் சரத் விளக்கை வச்சுக்கிட்டு விடிய விடிய படிப்பான்.
பள்ளிக்கூடத்துல இருந்து வாங்கிட்டு வந்த ஷீல்டுகளையும் கப்புகளையும் அவ்வளவு பெருமையா காட்டுவான். ‘உனக்காகத்தாம்மா படிக்கிறேன்’னு அடிக்கடி சொல்லுவான். ‘ஏன் உனக்காக படிக்கலியா?’னு கேட்டா, ‘அப்பா விட்டுட்டுப் போனதும், எனக்கென்னனு எந்தத் தப்பான முடிவையும் எடுக்காம எங்களுக்காக வாழ்ற பாரு..உனக்கு பெருமை தேடிக் கொடுக்குறதுதான் நான் பொறந்ததுக்கே அழகு’னு அந்த வயசுலயே பேசுவான். அதைவிட பெத்தவளுக்கு வேற சந்தோஷம்னு என்ன இருக்கப்போகுது, சொல்லுங்க’’ என்று சொன்னவரின் கண்கள் ஏகத்துக்கும் குளமாகியிருந்தன.
பிலானியில் பி.இ. கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்த சரத்பாபு, மூன்றாண்டுகளுக்கு சென்னையில் போலாரிஸ்
நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறார். பிறகு, லோன் வாங்கி, அகமதாபாத்
ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ முடித்திருக்கிறார். இவரது திறமையை வியந்து,
சம்பளமாக லட்சங்களை கொட்ட எத்தனையோ நிறுவனங்கள் தயாராக இருந்தும், குறைந்தது 500 பேருக்காவது வேலை தருவதுதான் என் வாழ்க்கை லட்சியம்’ என்று தனியாக நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார் சரத்பாபு. ப்ளஸ்டூவோடு பாதியில் படிப்பை நிறுத்திவிட்ட தன் தம்பியை இப்போது தன் கேட்டரிங் நிறுவனத்துக்கு தயார்ப்படுத்துவதற்காக டிப்ளமோ கோர்ஸில் சேர்த்துவிடும் எண்ணத்தில் இருக்கிறாராம் சரத்பாபு.
‘‘என் சின்ன பையன் ப்ளஸ்டூதான் படிச்சிருக்கான். இப்போ அவனை கேட்டரிங்
கோர்ஸ் படிக்க வெச்சு, தன்கூடவே வெச்சுக்கμம்னு சரத்துக்கு ஆசை. தம்பியும் நீயும் எங்கூடவே வந்திடுங்கம்மா... சென்னையில நீ பட்ட கஷ்டங்கள் எல்லாம் போதும்’னு அகமதாபாத்துக்கு எங்களை கூப்பிட்டுக்கிட்டே இருக்கான்.’’ என்று சொன்ன தீப ரமணி, ‘‘எங்கம்மா இட்லி சுட்டுத்தான் என்னை படிக்க வச்சு பெரிய ஆளாக்குனாங்கனு ஊரெல்லாம் சொல்றான் என் புஷீமீள. அவனைப் பெத்ததைவிட இப்போ நான் அதிகமா சந்தோஷப்படறேன். ஆனா, வாழ்ந்துடலாம்னு ஒரு தைரியத்தோட நின்னது மட்டும்தான் நான். மத்தபடி, இந்த உலகத்துல அங்கங்க இருந்த நல்லவங்க பண்ணின உதவியும் ஆசீர்வாதமும்தான் அவனை இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. அவங்க எல்லாருக்கும் நான் எப்பவும் கடமைப்பட்டிருக்கறேன்!’’ என்று சொல்லும் தீபரமணியின் கண்களில் பொங்கி வழிந்த பாசத்தையும், கண்ணீரையும், நன்றியுணர்ச்சியையும் தாண்டி ஒரு நம்பிக்கைக் கீற்றும் நமக்குத் தெரிந்தது.
அகமதாபாத்தில் தான் ஆரம்பித்திருக்கும் கேட்டரிங்
நிறுவன வேலைகளில் மும்முரமாக இருந்த சரத்பாபுவை
செல்போனில் தொடர்புகொண்டு பேசினோம்.
‘‘உலகிலேயே மிகச் சிறந்த பெண்மணி என்ற விருது
கொடுக்க என்னை நடுவராக அழைத்தால் என்
அம்மாவைத்தான் சொல் வேன். நான் இந்த அளவு
வளர்ந்திருக்கிறேன் என்றால் என் அம்மாவின்
தன்னம்பிக்கையான வாழ்க்கைதான் காரணம். அதே
தன்னம்பிக் கையை மூலதனமாக வைத்துத்தான் இந்த
நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறேன். என்
அம்மாவுக்காக நிச்சயம் இந்தத் துறையில் சாதிப்பேன்!’’
என்றார் ரத்தின சுருக்கமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக