செவ்வாய், 19 அக்டோபர், 2010

ஜே.கே.ரித்தீஷின் தசாவதாரம்

கொஞ்சம் பழசு தான்..ஆனா இவரை பேட்டிகண்ட அந்த இரண்டு நாட்களும் எனக்கு வீரபாண்டித் திருவிழாவுக்கு தேனிப்பக்கம் போயிட்டு வந்த மாதிரியே இருந்துச்சு மக்கா... நாயகன் ரிலீஸாகி பட்டையக் கிளப்பிக்கிட்டிருந்த(?) நேரத்துல கமல் நடிச்ச தசாவதாரமும் ரிலீஸானது யார் குற்றம்? இப்படி ஒரு ஐடியா விகடன் மக்களுக்கே உரித்தானதுதான். அப்புறம் என்ன.. 'எடுறா வண்டிய'!  இப்போ படிச்சாலும் சிரிப்பு வருது. நல்ல நாஸ்டால்ஜிக் ஆர்ட்டிக்கிள்! எடிட் செய்த நண்பன் ராஜுமுருகனுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!

ஜே.கே.ரித்தீஷின் தசாவதாரம்

''வீரத் தளபதி ஜே.கே.ரித்தீஷின் 'தசாவதாரம்'... எப்பிடி இருக்கு டைட்டில். வொர்க்-அவுட் பண்ணிருவோமா..?'' விஷயத்தைச் சொன்னதும் வீரபாண்டித் திருவிழாவுக்கு வந்த வெள்ளைக்காரர் மாதிரி குஷியானார் ராஜசேகரன். யானை, கடல், ரயில், ஜே.கே.ரித்தீஷ்... இதெல்லாம் யாருக்குத்தான் பிடிக்காது!
''ஆத்தி... நம்ம கதை இலாகாவைவிட ஃபாஸ்ட்டா இருக்கீங்களே. ஆமா... கமல் அண்ணே எதாவது கோச்சுக்குவாப்லயா... அட, அவருக்கும் இது கிரெடிட்தானே!'' - உடனே கால்ஷீட் தட்டி, கலர் பலூன் கட்டினார் ரித்தீஷ். கொஞ்ச நேரத்தில் அவரே லைனுக்கு வந்து, ''கமல் அண்ணனுக்கு மேக்-அப் போடுற வெள்ளக்காரரு நம்பர் இருக்காண்ணே... அந்தாளை அமெரிக்காலேருந்து வரச் சொல்லிருவோமா?'' என அசால்ட்டாக கேட்க, அலறினோம்.
மறுநாள்... நடமாடும் ஏ.டி.எம்மின் 'தசாவதார' மெகா ஜிகா ஜிங்கிலா ரவுண்ட்-அப்...
''முதல்ல வக்கீல் கெட்-அப். 'கௌரவம்' சிவாஜி கணக்கா கலக்குறேன் பாருங்க...'' என்றவர் தடதடவென மேக்கப்பி, ராயல் லாயராய் வந்து நின்றார்.
''கணம் கோர்ட்டார் அவர்களே... என் காஸ்ட்யூமர் புஜ்ஜிபாபு, கெட்-அப்புக்காக ஒதுக்கிய பட்ஜெட்டில் 'ஒதுக்கி'க் கொண்டு வசமாக மாட்டிக்கொண்டார். அவரை ஆர்.பி.சி... அதாவது, ரித்தீஷ் பீனல் கோர்ட் சட்டப்படி நைந்துபோன நைலான் கயிறில் தொங்கவிட்டு ஊஞ்சல் கட்டி ஆடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!'' என டெர்ரர் டயலாக் பேசினார். ''அடுத்து அப்பிடியே வயலன்ஸூக்கு வாக்கப்பட்டுரலாம்ணே!'' என்றபடி, ஜிகுஜிகு லெதர் காஸ்ட்யூம், காக்கா கடுக்கன், மண்டை ஓடு மோதிரம், ராணா டார் முறுக்கு கம்பி காப்புடன் ரணகள ரவுடியாய் வந்து நின்றார். ''பன்ச் டயலாக் சொல்லுங்கப்பா'' என அடுத்த பட டைரக்டர் பாவாவிடம் கேட்க, ''நான் கொடுக்கும்போது கொடை வள்ளல், அடிக்கும்போது உதை வள்ளல்ரா'' என பாவாவும் தயிர் பச்சடியை ஊற்றினார். ''ஏய்ய்ய்... அஞ்சு வயசுல...'' என வாளைச் சுழற்றி ரித்தீஷ் எடுத்த ரவுடி அவதாரத்தில், அந்தரானார்கள் அபார்ட்மென்ட்வாசிகள்.
''இப்போ அப்பிடியே ஆள் மாறணும். வாத்தியார் கெட்-அப் ஓ.கேவா..?'' விறுவிறுவென டிக்னிட்டி டீச்சராய் கெட்-அப் மாறி, வளசரவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளிக்குள் அதிரடியாய் நுழைந்தார் ஜே.கே..ஆர் வாத்தியார்.
''டே... நாயகன்டா. நிலா நிலா ஓடி வா... நில்லாமல் ஓடிவா!'' - குட்டீஸ்கள் குஷியாகி பாட்டுப் பாட, ''குழந்தையும் தெய்வமும் ஒண்ணு. அண்ணே நாம ரீச் ஆயிட்டம்ணே. டேய்... 5,000 ரூவாய்க்கு சாக்லேட் வாங்கி இவங்களுக்குக் கொடுங்கடா...'' என அதகள ஆர்டர் போட்டார்.
அடுத்து ஆட்டோ டிரைவர். 'பாட்ஷா' ரஜினியாகி, கே.கே.நகர் 'ஜே.கே.ரித்தீஷ் ஆட்டோ ஸ்டாண்டில்' போய் இறங்க ஃபுல் ஜாலியானார்கள் ஆட்டோ டிரைவர்கள். ''அட ரித்தீஷண்ணே... இன்னிக்கு மீட்டருக்கு மேலே ச்ச்ச்ச்ச்சூடுதான்...'' - ஆட்டோக்களில் 'இருந்தாக்கா அள்ளிக் கொடு... இல்லைனா சொல்லிக் கொடு!' என 'நாயகன்' பாடலை ஓடவிட்டு விசுவாசத்தை வீசினார்கள். ''கோயம்பேட்டுக்கு ஆட்டோ வருமா?'' என்றபடி ஒரு தம்பதி என்ட்ரி ஆனது. ''நான் யார் தெரியுமா?'' என்று ஸ்டைலாகக் கேட்ட ரித்தீஷிடம், ''ஹே.. ரித்தீஷ் சார்...'' அவர்கள் காட்டிய ஆச்சர்யத்துக்கு ஆளுக்கு 1,000 ரூபாய்!
''இப்போ நான் மெக்கானிக் முருகண்ணே... எப்பிடி?'' வடைச் சட்டி ஹேர் ஸ்டைல், சோடாபுட்டிக் கண்ணாடியோடு ஒரு மெக்கானிக் ஷெட்டுக்குள் நுழைந்தவருக்கு மெக்கானிக் பாடம் எடுத்த இரண்டு தம்பிகள், தலைக்கு 500 ரூபாய் டார்க்கெட் அச்சீவ் பண்ணினார்கள்.
அடுத்த அவதாரமாய் டிராஃபிக் இன்ஸ்பெக்டராகி நின்றார். அந்தப் பக்கமாய் போன ஒரு சார்ஜென்ட்டை மடக்கி பைக்கை வாங்கியவர், அரை வட்டமடித்து சர்க்கஸ் காட்டினார். ''நான் வெடிச்சா ஆர்.டி.எக்ஸ் பாம், அடிச்சா டிராஃபிக் ஜாம்'' என பாவா அடுத்த பன்ச்சை ரெடி பண்ணித் தர, செம ரகளை.
''அண்ணே... இந்த கெட்டப்பை பார்த்து ரஜினியே மெரளணும்...'' என்றவர், கண்டக்டர் கெட்டப்பில் வடபழனி டெர்மினஸில் நின்ற பஸ்ஸில் ஏறினார். பயணிகள் சர்ப்ரைஸாக, ''என் படத்தை யாரெல்லாம் பார்த்தீங்க? கை தூக்குங்க!'' என்றார் ரித்தீஷ். ''ஹலோ, கையைத் தூக்குங்கப்பா... அப்போதான் காசு கொடுப்பாரு!'' என பக்கத்திலிருந்த ரித்தீஷின் மாமா போட்டுக் கொடுக்க, ஆளாளுக்கு அடித்துப் பிடித்து கையைத் தூக்கினார்கள். தலைக்கு 100 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட, அத்தனை பேர் முகத்திலும் 1,000 வாட்ஸ்.
அடுத்து காருக்குள்ளேயே சுறுசுறு மேக்-அப். பொளக்கும் சிவப்பு சட்டை, கிளப்பும் கறுப்பு வேட்டியில் கட்சிக் கலர் தந்தார் ரித்தீஷ். ''மக்கள் பணிதான் நமக்கு முதல்ல... தலைவர் மனசு வெச்சா, வர்ற எலெக்ஷன்ல எம்.பிண்ணே!'' என்றவர் மீனவ கெட்டப்பில் பீச்சில் புகுந்தார். மீனவர்களோடு ஐக்கியமாகி ஜாலி பண்ணியவர், 20 கிலோ மீனை தூக்கிக்கொண்டு எகிறல் போஸ் கொடுத்து ராஜசேகரன் கண்ணைக் குத்தினார்.
''கொஞ்சம் கட்டையான டோனினு கேப்ஷன் போட்டுக்கங்க!'' என்றவர், 'ஹை ஸ்பீடு பெட்ரோல்' குடித்த வண்டியாய் காருக்குள் புகுந்து மேக்-அப் போட்டு கிரிக்கெட் வீரராக வெளியே குதிக்க... கண்ணகி சிலை வரை டிராஃபிக் ஜாம்.கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த பொடிசுகள், ''டே ரித்தீஷ்டா... டோர்னமென்ட்டுக்கு டொனேஷன் கேட்டுரணும் மச்சான்!'' எனக் குஷியானார்கள். அவர்களோடு 'ஒரு' ஓவர் மேட்ச் விளையாடினார் ரித்தீஷ்.
''டே, அவரு சிக்ஸர் அடிக்குற மாதிரி ஸ்லோவா போடு. அப்பத்தான் டொனேஷன் தருவாரு...''- பசங்களின் ஓப்பன் காமென்ட்டுகளைக் கேட்டு ஜாலியானவர் 5 பந்துகளை பவுண்டரிக்குப் பறக்கவிட்டு, கடைசி பாலில் க்ளீன் போல்டானார். தன்னை அவுட்டாக்கிய பையனை அழைத்து 500 ரூபாயைத் தந்தவர், டோர்னமென்ட்டுக்கு 5,000 ரூபாய் அன்பளித்தார். மொத்த பசங்க ளும் கோரஸாய் சொன்னார்கள், ''வாரா வாரம் வந்துருங்கண்ணே..!''
நாயகனின் கடைசி கெட்டப்... தள்ளுவண்டி இட்லி வியாபாரி. நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்சக் கொட்டை, பூப்போட்ட கைலி என ரெடியான ரித்தீஷ், ஒரு தள்ளுவண்டியை கையகப்படுத்தினார். பிளாட்ஃபார்ம் பார்ட்டிகளுக்கு ஆவி பறக்கும் இட்லி இலவசமாய் தர, கூட்டம் கும்மியது. என்னவோ, ஏதோவென 'போலீஸ் பேட்ரோல்' பதறி வர, 'வாளமீன்' தண்டாயுதபாணி எஃபெக்ட்டில் ரித்தீஷ் கையைக் காட்டி வழியனுப்பிவைத்தார். ஆளாளுக்கு ரவுண்ட் கட்டிச் சாப்பிட்டு, காசு கொடுக்காமல் போக, கடை அம்மணி முகத்தில் கலவரம். 3,000 ரூபாயை எடுத்து நீட்ட, கலவரம் பரவசமானது.
''நம்ம அடுத்த படத்துக்கு 'வேட்டைக்காரன்'னு டைட்டில் பிடிச்சோம். பார்த்தா அதை விஜய் வெச்சுட்டாப்ல. 'பாயும் புலி'ன்னு வைக்கலாம்னா, ஏ.வி.எம்ல அந்த டைட்டிலைக் குடுக்கலை. விடுவோமா நாங்க? ரெண்டையும் மிக்ஸ் பண்ணி 'வேட்டைப் புலி'ன்னு வெச்சுட்டோம்ல! இப்போ உங்களோட வந்தப்போ கிடைச்ச ரெஸ்பான்ஸைப் பார்த்தா, அதுல இருபது கெட்-அப் போட்றலாம் போல இருக்குண்ணே. ஒரு பன்ச் கேளுங்க... 'உள்ளத்தால பாசக்கிளி, உறுமினா வேட்டைப் புலிடா...'' - படுபயங்கர திட்டத்தைச் சிரித்தபடி ரித்தீஷ் சொல்ல, ''நாளைய இந்தியா ரித்தீஷ் வாழ்க வாழ்க..!'' எனத் திடீர் குரல்கள்!

பின்குறிப்பு-  இந்த பேட்டிக்காக நானும் புகைப்படக்காரர் ராஜசேகரன் அவர்களும் சல்லிக்காசுகூட வாங்கவில்லை என்பதை கொஞ்சம் பெருமிதத்தோடும் நிறைய  வருத்தத்தோடும் தெரிவித்துக் கொள்கிறேன்!  

1 கருத்து:

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

// தமிழ்மொழி வளர்கிறாள்... //

என் மகளுக்கு நான் வைக்க நினைத்த அழகுபெயர். உங்கள் மகளுக்கு என் வாழ்த்துகள்.