வலைப்பூக்களில் பெண் எழுத்து: (Ecriture feminine in blogs)
'ஒரு பெண்ணாக எனக்கு நாடில்லை
ஒரு பெண்ணாக எனக்கென்று
ஒரு நாடு வேண்டாம்
ஒரு பெண்ணாக
இந்த உலகமே என் நாடு!'
- வெர்ஜீனியா வுல்ஃப்
வலைப்பூ.. ஒரு எளிய அறிமுகம்:
வலைப்பூக்கென தனி மொழி இல்லை. தனி உதவி ஆசிரியன் இல்லை, வடிவமைப்பாளன் இல்லை.எந்தவித கட்டுப்பாடும் இல்லை. நீங்களே பிரம்மா. நுணுகல் எழுத்துக்களில் கட்டுரையோ கவிதையோ புனைவோ என்ன இழவோ தன் பெயருடன் வெளிவரும் பிராப்தி எத்தனை பேருக்கு கிட்டும்?பிற எந்த ஊடகங்களிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் வலைப்பூக்களில் உண்டு. அது பின்னூட்டங்கள். உங்கள் கருத்துக்களுக்கு ஆதரவாகவும் எதிர£கவும் வந்து குவியும் கருத்துக்கள்... உங்களை உற்சாகமூட்டும், திருத்தும், செதுக்கும். ஓர் இலக்கியப் பத்திரிகையில் எழுதினால், அதை வாசித்தவர்களின் எண்ணிக்கையை நாம் கணிக்கக்கூட முடியாது. ஆனால், பிளாக்கில் எழுதிய சில மணி நேரங்களில் உடனுக்குடன் எதிர்வினைகள். பாராட்டு, திட்டு, விமர்சனம் என்று பலவாறாகக் குவியும். அவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதும் எளிது. அப்படி பிளாக் மூலம் தொடங்கும் உறவுகள் நட்பாகத் தொடர்வது வலையுலகத்தின் பாசிட்டிவ் பக்க விளைவு.ஆரம்பத்தில் வலைப்பூக்களில் விளையாட்டாக எழுதத் தொடங்குபவர்கள், பிறகு மற்ற வலைப்பூக்களைத் தேடித் தேடிப் படிக்கப் பழகுகிறார்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்றைய தலைமுறையினரிடம் குறைந்து வருகிற நிலையில், அந்த இடைவெளியை நிரப்புகின்றன வலைப்பூக்கள். வலைப்பூக்களில் பெண்களின் எண்ணிக்கை பெருகி வரும் சூழலில் இக்கட்டுரையின் நோக்கம் எளிமையனதும் அவசியமானதுமாகும்!
வலைப்பூவுலகில் பெண்ணியம்:
பெண் எழுத்து என்பது ஆண் முதன்மையை சிதைப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்குகிறது. பெண்ணியலார் சிக்ஸஸ், ''ஆண்மையவாதிகளால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் தந்தைவழி மொழியின் பிரிவுகள் பெண்ணை வெளிப்படுத்தும் திறன் அற்றவை' என்கிறார். நடைமுறையில் இருக்கும் மொழிக்குள்ளும் அதன் பாவனை வெளிக்குள்ளும் பெண்ணானவள் அவளது அத்தனை இயல்பம்சங்களுடன் இயக்கமுறுவது சாத்தியமற்றது எனவே அவள் தனக்கான தனி மொழி உட்பட அனைத்தையுமே எழுதிக் கண்டடையவேண்டியிருக்கிறது. எனவே பெண்கள் எழுத்தை கேடயமாக மட்டும்அல்ல திருப்பித் தாக்கும் ஆயுதமாகவும் மாற்றிக்கொண்டு இயங்குவதுகூட நவயுக பெண்களின் மாற்றுச் சிந்தனைதான். சில காலம் முன்பு வரை தமிழ் மாதமிரு முறை இதழ்களின் பக்கங்களை நிரப்புவதற்கு தோதான பூமாதேவியின் பொறுமையையும் கடலை கட்லெட் செய்முறை விளக்கங்கள் உள்ளிட்ட சமையல் குறிப்புகளையுமே பெண் எழுத்து என பொய்யான கற்பிதத்தை ஒரு சாரார் நம்பிக் கொண்டும் நம்பவைத்துக் கொண்டும் இருந்தார்கள். இப்போது நிலைமை தலைகீழ். அருவருப்பான விஷயங்கள் என்று சமூகம் முகச் சுளிப்போடு சுட்டிக் காட்டிய பெண்ணின் உடலை தாங்களாகவே முன்வந்து கொண்டாடி தங்களுக்கான உரிமையையும் அடையாளத்தையும் மீட்டெடுத்திருக்கிறார்கள். முகச் சுளிப்போடு பார்க்கப்பட்ட அவளின் செங்குருதி இப்போது தங்கள் படைப்புலகின் படையல் அமிர்தமாயிற்று.
தமிழ்ச்சூழலில் பெண் எழுத்து:
டெல்லியில் பணிபுரிந்துகொண்டே தமிழில் வலைப்பதிவு எழுதும் விக்னேஷ்வரிக்கு டெல்லிக்கும் தமிழகத்துக்குமான இடைவெளியைக் குறைப்பது அவரது வலைப்பூவே. "காகிதங்களில் எழுதிக் கிறுக்கிக் கசக்கி எறிந்து, இறுதியில் எழுதியதைப் பலமுறை அடித்துத் திருத்திப் பொக்கிஷமாக வீட்டு அலமாரியில் நிரப்பி வந்த நாட்களைக் கடந்துவிட்டோம். மனதில் தோன்றுவதைக் கணினியில் தட்டத் தட்ட வார்த்தைகள் உயிர்ப்பிக்கின்றன. மறுபடி... மறுபடி வாசிக்கிறோம். திருத்துகிறோம். ஒரு சொடுக்கலில் வலைப்பூக்களின் மூலம் நண்பர்களுடன் பகிர்கிறோம். உடன் வரும் ஊக்கங்களையும், தோள் தட்டுதல்களையும், தவறுகளுக்குக் குட்டும் கரங்களையும் நம் கணினித் திரையில் பெறுகிறோம். இது படைப்பாளிகளுக்கு உள்ளபடியே உற்சாகமான சங்கதி!" என்கிறார். 'உலகின் அழகிய முதல் பெண்' என்ற ஒற்றை வலைப்பூவில் தன் உடலைப் பற்றி் பகிரங்கமாக எழுதியதால் எதிர்ப்புகளையும் அதேநேரம் ஆதரவையும் ஒரே நேரத்தில் சம்பாதித்திருக்கிறார் கவிதாயினியும் குறும்பட இயக்குநருமான லீனா மணிமேகலை. குட்டி ரேவதி,தமிழ்நதி,ஃபஹிமா ஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன்,கலகலப்ரியா, நயா, கிருபாநந்தினி, தாரணி பிரியா, மதுமிதா, பெரியார் தமிழச்சி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா, மு.வி.நந்தினி, இன்பா சுப்ரமண்யன், கவின் மலர், ஆமிரா, தான்யா மற்றும் மீனா கந்தசாமி போன்ற நூறு்றுக் கணக்கான பெண் வலைப் பதிவர்கள்தங்கள் வலைப்பூக்களின் வாயிலாக பெண் எழுத்தை ஓரளவு பகிரங்கப்படுத்துகிறார்கள். இதில் மீனா கந்தசாமி தமிழ்ப் பெண்ணாய் இருந்தாலும் தன் ஆங்கில மொழி ஆளுமையைப் பயன்படுத்தி ஆங்கிலத்திலேயே தன் குரலைப் பதிவு செய்து தன் கவனத்தை உலக அளவில் ஈர்த்து வருகிறார்.
வலைப்பூக்கள் கட்டறுக்கும் உடலரசியல்:
பெண் எழுத்து தனது வெளிக்குள் இயங்கினாலும் ஆண் ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் நிராகரித்துக் கடந்து மீற வேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது. ஆண் சமூக ஒழுங்கினால் வலியுறுத்தப்படும் ஒற்றைப் பாலியல், பாலியல் வரைமுறைகள் என்பவற்றுக்கு மாறான மாற்றுப் பாலியல்கள், உடல் என பெண் எழுத்து விரிகிறது. தனது உடலை எவ்வித அருவருப்போ தயக்கமோ இன்றி கொண்டாடும் பாலியல் சுயாட்சியை நோக்கி நகர்வதனூடாக பெண்ணை மிக அடிப்படையான ஒரு கட்டில் இருந்து விடுவிக்கிறது. இந்த எழுத்து வெளியில் ஆண் சமூக ஒழுங்கின் கற்பிதங்கள் சிதைக்கப்படுகின்றன. வழக்கமான ஆண் பிரதிகளில் காணப்படும் பாலியல் கிளர்வுக்கான ஈர்ப்புடன் திறந்து வைக்கப்பட்டிருக்கும் மயிர்கள் அகற்றப்பட்ட வழவழப்பான யோனி பெண் எழுத்தில் டீ செக்ஸுவலைஸ் செய்யப்பட்டதாக (ஆணுக்கு மாத்திரம்) மாறுகிறது. 'முலைகள்' என்ற தலைப்புக்காகவே சாடலுக்குள்ளான குட்டிரேவதிக்கு ஆதரவாக தான்யா என்ற வெளிநாட்டு வாழ் தமிழச்சி வைக்கும் கலகக் குரல் கவனம் ஈர்க்கிறது. பெண்கள் தங்கள் உடலை தாங்களே எழுத விழையும்போது ஆணாதிக்க மனோபாவம் கொண்ட படைப்பாளிகள் வெளிக்கிளம்புகிறார்கள் என்கிறார்.
'அவலட்சணமான
அந்த அறிவுஜீவிப் பெண்ணைப்
புணர்ந்தேன்
தணிந்தது
அறிவைப் புணரும் வேட்கை' என்ற மகுடேஸ்வரனின் கவிதையை மேற்கோள் காட்டும் அவர் வரைமுறைக்குள் எழுத குட்டி ரேவதிக்கு அறிவுறுத்திய பிரம்மராஜனையும் மகுடேஸ்வரனையும் கடுமையாகவே சாடுகிறார்.
'பெட்டை' என்கிற பெயரில் எழுதும் பதிவர் பெண்ணியம் பேசும் எழுத்தாளுமை மிக்க ஆண்கள் மிக ஆபத்தானவர்கள் என்கிறார். எழுதுவதைத் தவிர எதையும் செய்ய ஆர்வமற்றவர்கள் தம்மை மாபெரும் செயற்பாட்டாளர்களாக விளிம்புகளை அறிந்தவர்களாகக் காட்டிக் கொள்ள முனைவது மோசமான செயல். பெண் சார்ந்த ஒன்றாக தன்னை நினைப்பதும் தனக்குத்தானே ஊக்குவித்துக் கொண்டு தன்னை உயர்த்திக் கொள்வதும், ஆண்தன்மைகளை களைவதாய் எண்ணுவதும் அதன் மூலம் தன்னை ஆணாய் இருப்பதற்கு வெட்கப்படும் ஒரு ஆளாக வடிவமைத்துக் கொள்வதும் குள்ளநரித்தனம்தான் என்கிறார்.
''நீ என்னதான் கதறி அழுதாலும் நீ எப்போதும் ஆண்குறியுள்ள ஓர் ஆணாகத்தான் இருக்கிறாய்!" என்கிறார் கவிமொழியில்.
நமக்கு கமலாதாஸ் குறித்த ஜெயமோகனின் இந்த வலைப்பூ வரிகள் நினைவுக்கு வரவே செய்கிறது: ''கமலாதாஸ்.. கருப்பான குண்டான அவலட்சணமான பெண்..தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்த விளம்பர வெறியர்"
பெண் எழுத்து எதிர்கொள்ளும் சிக்கல்கள் :
திட்டமிட்டோ திட்டமிடப்படாமலோ தன் உடலை முன்னிறுத்தி லீனா தன் வலைப் பூவில் தன் உடல் சார்ந்த கவிதைகளை பெருமளவில் பகர்கிறார். லீனாவின் கவிதைகள் மட்டுமல்ல, இன்றைக்கு கலாசார கட்டமைப்புகளை எதிர்க்கிற, தன்னுடைய பாலியல் வேட்கைகளையெல்லாம் தன்னுடைய பிரதிகளில் அள்ளித் தெளிக்கிற அத்தனை பெண்களின் எழுத்துக்களும் தாய்வழிச்சமூகத்தின் எழுத்துக்களாகத்தான் இருக்கும் என்ற அளவில் வலைப்பதிவர்கள் பலர் உடலை மையப்படுத்தி எழுதத் துவங்கி விட்டார்கள்.
''ஆம் நான்தான்
உலகின் அழகிய முதல் பெண்
ஒரு நாள்
என் தோலைக் கழற்றி வீசினேன்
கூந்தலை உரித்து எறிந்தேன்
துவாரங்களில் ரத்தம் ஒழுகும்
மொழுக்கைப் பெண்ணென
காதல் கொள்ள அழைத்தேன்
காதலர்கள் வந்தார்கள்
கரிய விழிகள் கொணட அவர்கள்
நெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள்
குருதியை நூலாக்கித் திரித்து
செந்நிறத்தின் ஊடுபாவிய வலையை
எட்டுக் கால்களில் விரித்தார்கள்
அந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான்
அப்பொழுதும் சொன்னேன்
நான் பூரணமாய் காதலிக்கப்பட்டவள்
மறுபடி நானே
உலகின் அழகிய முதல் பெண்'' என்று லீனா எழுதிய கவிதைகள் அடங்கிய வலைப்பூ எழுத்துக்கள் இணையத்தில் 'தீ' வைத்ததற்கு சமமாக பேசப்பட்டது. சென்னை கமிஷனர் வரை சென்று 'கலாச்சரத்தை சீரழிக்கும் லீனாவின் எழுத்தை தடை செய்யுங்கள்' என புகார் அளித்தனர் இந்து மக்கள்கட்சியினர். கலைப் பரப்பில் இயங்கும் ம.க.இ.க-வின் ஆதரவு இணையதளம் லீனாவை கடுமையாக விமர்சித்து எழுதி இருந்தது. இவையெல்லாவற்றிற்கும் சேர்த்து தன் பதிலாக 'மனிதனின் மொழி' என்ற தலைப்பில் தணிக்கை செய்யாமல் தன் வலைப்பூவில் இப்படி எழுதி இருக்கிறார் லீனா.
''காலங்காலமாக ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலக்கியத்தையும் மொழியையும் பெண்கள் கைப்பற்றும்போது ஆணாதிக்கம் அதிகாரமும் துடித்துப் போகிறது. அவள் தனது உடலையும் விருப்புகளையும் இச்சைகளையும் இலக்கியத்தில் பேசும்போது கலாச்சாரம் கெட்டுவிட்டதாக ஆண்கள் கொதிக்கிறார்கள். பெண் விடுதலை குடும்பத்தின் வன்முறை சுதந்திரக் காதல் ஒழுக்கத் தடைமீறல்கள் இவற்றையெல்லாம் வியக்கத்தக்க முறையில் காலத்தைத் தாண்டிச் சிந்தித்து அறிவித்த தந்தை பெரியாரின் மண்ணில் இன்று கவிதை இந்துத்துவ சக்திகளால் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வெறுமனே புகார் மிரட்டல் என்று இதை நான் அலட்சியம் செய்ய மாட்டேன். இவ்வாறான கலாச்சார அடிப்படைவாதிகள் மிரட்டல்களில் தொடங்கிக் காலப்போக்கில் கொலைகளில் முடிப்பார்கள் என்பதே வரலாறு. மெல்ல வளரும் கலாச்சாரப் பாஸிசத்தின் தொடக்கப் புள்ளியாகவே நான் இதை அடையாளம் காண்கிறேன்...இங்கே மட்டுமல்ல உலகம் முழுவதுமே விடுதலையை எழுதும் பெண்கள் எதிர்கொள்ளும் நிலை இது தான். அவதூறு, மிரட்டல், கைது, வன்முறை, கொலை, நாடுகடத்தல், இல்லாமல் ஆக்குதல்,ஃபத்வா, என்று அதிகாரத்தின் ஆயுதங்கள் பெண்கவிகள் மீது எறிந்த ஆயுதங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல." என்று நீள்கிறது அவரது முழக்கம்.
பெண் தன் உடலைக் கொண்டாட விரும்பாத ஒரு சமூகம் படைப்புலகுக்குள்ளும் இயங்கிறது என்கிறார் அவர். 'என் கவிதைக்கு எதிர்ப்பென பெயரிடு' என்ற தலைப்பில் தன் எதிர்ப்பை கடுமையாகவே தொடர்ந்து சாடியும் வரும் அவர் எழுத்து பரவலாக ஆணாதிக்க மனோபாவத்தில் இருப்பவர்களாலும் தொடர்ந்து வாசிக்கப்படுகிறது என்பதை பின்னூட்டங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
லீனாவுக்கு ஆதரவாக மீனா கந்தசாமி என்ற எழுத்தாளப் பதிவர் உரக்கக் குரல் கொடுக்கிறார். தன் வலைப்பூவில் இவர் அனதில் உள்ள எண்ணங்களை வடிகட்டாமல் அப்படியே எழுதுகிறார். தன் குடும்பத்தினரையும் அதில் விட்டுவைக்கவில்லை இவர். லீனாவின் கவிதை குறித்து அவர் எழுதிய இந்த வரிகளே அதை கட்டிய கூறுகின்றன.
''முதன்முறையாக இந்தக் கலாசாரம் என் மீது சுமத்தியிருந்த அத்தனை குற்ற உணர்ச்சிகளிலிருந்தும் இந்த கவிதை தொகுப்பு என்னை நீக்கியது. நான் பருவமடைந்த காலத்திலிருந்து இத்தனை ஆண்டுகளாக என் உடல் மீது எனக்கு குற்ற உணர்ச்சி தான் இருந்தது. எனக்கு டைபாய்ட் வந்தபோதும், நான் வாந்தியெடுத்தபோதும் கூட என்னை என் அம்மா ஒதுக்கி வைத்ததில்லை. ஒரு நல்ல நாளில் எனக்கு பீரியட்ஸ் வந்தால் அவ்வளவு அருவருப்பாக பார்ப்பாங்க. “அப்பவே அந்த மூலையெல்லாம் ஒழுங்கா பெருக்குன்னு சொன்னேனே கேட்டியா. பார் இப்போ நாளும் கிழமையுமா நீ மூலையில் உட்கார்ந்திருக்கே" என்று சொல்வாங்க. அது என் தப்பு என்று தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அற்புதமான தூமை ரத்தத்தை , அதனுடைய தூய்மையை கருவறையின் ரத்தத்தை முதன்முறையாக லீனாவின் கவிதை கொண்டாடியபோதுதான் என்னுடல் விடுதலையை அறிந்தது. இவ்வளவு நாளாக நான் குற்ற உணர்ச்சியில் இருந்தேன் என்பதும், கற்பிதங்கள் என் உடல் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அப்போதுதான் முதன்முறையாகவே உணர்ந்தேன். அதைத்தான் லீனாவின் கவிதை சொல்கிறது. இந்தச் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கான விடுதலை நிச்சயமாக அந்த எழுத்துக்களில் கிடைக்கும் என்று நான் சொல்கிறேன்."
பெண் எழுத்தில் பாலியல் சுயாட்சி (செக்ஸுவல் அட்டானமி):
கடந்து மறைந்து போன முற்காலங்களை விட, இன்றைய நாட்களில் பெண்ணியம் அதிகம் பேசப்படுகிறது.அல்லது, முன் சென்ற காலங்களில், எவற்றிலும் ஈடுபடுத்திக் கொள்ளாத தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்ததால், பெண்ணியம் என்ற தனித்த வடிவம் குறித்து கவனம் கொள்ளாதிருந்திருக்கலாம். எப்பொழுதுமே, ஆண், பெண் என்ற தனிப்பிரிவாக எந்த ஒரு படைப்பையும் அணுகாமல், ஒட்டுமொத்தமாக நல்லதா, கெட்டதா என்ற வகைப்படுத்தலின் உள்ளே அனைவரையும் அடக்க முயற்சித்ததனால் இருக்கலாம்.
லீனா மணிமேகலையின் ‘ஒற்றையிலையென’ என்ற கவிதைப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய சுகுமாரன், இவ்வாறு குறிப்பிடுகிறார்.
‘பத்தாண்டுகளுக்கு முன் எழுதி வெளியான கட்டுரையொன்றில் (பெண் கவிதை மொழி – கணையாழி, ஏப்ரல் 1994) புதிய தமிழ்க்கவிதையில் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாகவோ தீவிரமானதாகவோ இல்லை என்ற தொனியில் எழுதியிருந்தேன். பெண் அனுபவங்களில் அர்த்தம் கொண்டதும் அவளது உணர்வுகளில் ஒலி பெற்றதுமான ஒரு கவிதைமொழி உருவாகவில்லை என்ற புகாரையும், உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கட்டுரை வெளிப்படுத்தியது. அந்தக் கருத்தை முன்னிறுத்திய தருணத்தில் ‘பெண்ணெழுத்து’ என்ற கருத்துருவம் தமிழில் வலுப் பெற்றிருக்கவில்லை. வெளியாகியிருந்த ஓரிரு பெண் கவிஞர்களின் தொகுப்புகளும் ஒற்றையான உதாரணங்களாக இருந்தனவே தவிர பொதுக் கருத்தாடலுக்கான விரிவு கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளதை இன்று மகிழ்ச்சியோடு உணர முடிகிறது. தமிழ்க் கவிதையில் இப்்போது கேட்கும் அசலானதும் தீவிரமானதுமான குரல்களில் சில பெண்களுடையவை. அவற்றுள் பொருட்படுத்தக் கூடிய ஒன்றாக லீனா மணிமேகலையின் கவிக்குரல். காலமும் சூழலும் பெண்ணெழுத்து என்ற பிரிவினையை யதார்த்தமாக்கியிருக்கிறது. ஆணாதிக்க சிந்தனையே கலாச்சார மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் அமைப்பில் இந்தப் பாகுபாடு இயல்பானதும் கூட.
இரண்டு முக்கியமான செய்திகளை இங்கு காணலாம். ஆணாதிக்க சிந்தனைகள் கட்டியெழுப்பும் கலாச்சார மதிப்பீடுகளுக்கு மாற்றான பெண்சிந்தனைகள் எழுந்து கொண்டிருக்கின்றன பெண்களிடமிருந்தே என்பதுவும், அத்தகைய சிந்தனைகளை முன் வைக்கும் ‘பெண் கவிதை மொழி’ அதற்கான அத்தியாவசிய தேவையினால் உருவாகி இருக்கிறதும் என்பது தான். பத்திரிக்கை ஊடகங்களில், இத்தகைய மாற்றங்களைத் தேடி அலையும் ‘பெண் கவிதை மொழியையும், ‘சிந்தனையையும் தேடாமல், வலைப்பதிவில் மட்டுமே இயங்கும் நமது சகபெண்வலைப்பதிவர்களின் ‘பெண் கவிதை மொழியையும், சிந்தனைகளையையும் பார்க்கலாமா?
நிவேதாவின் வலைத் தளத்தில், புகையெனப் படரும் பிணங்களின் வாசம் என்ற கவிதை:
'விரகம் புலியென வெறிகொண்டெழும் இரவுகளில்
இறுக்கிய தொடைகளின் இடுக்கில்
குரல்வளை நெரித்துக் கொன்ற தாபம்
பற்றைகளின் ஆழங்களில் புதையுண்டு கிடக்கிறது
ஒரு நெடுங்கால மர்மத்தைப் போல
யோனியெனுமொரு பாம்பு நீட்டிய நாக்குடன்
கால்களினூடு கசிய
என் கனவுகளெங்கும் பிணவாசம்
புகையெனப் படர்ந்தது
இனி, அகாலம் விடியும் வேளையில்
என் படுக்கையின் மீது
நிணக்கூழ் வடியும் கண்களுடன்
பிணமொன்று தவழும்
மழலையென'
‘அடக்கியொடுக்கப்பட்டு மரித்துப் போன (பெண்ணின்) தாபங்கள் பிறக்கலாம் மழலையென இது தான் பெண்மொழியாக இருக்கின்றது. பெண் தன் தாபங்களை மூன்றாமவர் அறியும் படியாக பேசக் கூடாது என்ற ஆண்சிந்தனை தான் இதுநாள் வரையிலும் பெண்களுக்கான மொழியையும் படைத்து வந்தது. ஆனால், இன்றைய பெண்கள் தங்களின் உணர்வுகளைப் படைப்பதற்கு ஆண்கள் தேவையை நிராகரித்து விட்டு, தங்களின் மொழியைத் தாங்களே பேசத் தொடங்கிவிட்டனர். ‘மூன்றாமவர் என்ன, அனைவரும் அறிந்து கொள்ளுங்கள் எங்களுக்குள்ளும் தாபங்களிருக்கின்றன. காமம் இருக்கின்றன. அவற்றை நெரித்து பிணமாக எங்கள் கருவறைக்குள் தள்ளினீர்களென்றால், அந்தப் பிணங்களே மழலையாக பிறக்கும் தங்கள் உணர்வுகளை ஒதுக்கித் தள்ளும் ஆண்கள் பிணங்களைப் பிறப்பிப்பவர்களாக மாறிவிடுகின்றனர் என்பது எத்தனை வலிமையான சாடல்!
சமூக கட்டமைப்புகளைத் தோற்றுவிக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிராக எழும் பெண்மொழி, ஆணின் வன்மத்தை மறுக்க, தன்னை முன்னிலையில் வைத்து அடையாளப்படுத்துவதற்கு தனது பெண் பாலியியல் அடையாள உறுப்புகளை முன்வைத்து பேசுகையில், ஆணின் வன்மத்தை மறுப்பதற்கு மற்றொரு தளத்திலும் ஒரு மொழி கிளம்பியெழுகிறது. விளிம்பு நிலை மனித குரலாய் ஒலிக்கும் அந்த பெண் மொழியின் கவிதை அடையாளப்படுத்தும் உறுப்பு இருபாலாருக்கும் பொதுவானது என்றாலும், அதன் மீதும் ஆண் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வக்கிரத்தைச் சாடும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் - மகளிர் தின சிறப்பு கவிதை இப்படிப் போகிறது:
'ஒரு ஜிப்ஸியைப் போல துவங்கும் மறுபிறப்பில்
காதைப் பிளக்கும் தட்டல் ஓசை . . .
வன்மங்களின் தாக்குதலில்
காய்த்துப் போன குதங்கள்
மாரைக் கீறி ரத்தம்
கேட்கும் குரூர நயவஞ்சகங்கள்
ஆற்றாமையின் கணங்களை
அளக்கும் நிராகரிப்புகளுமாய்
சொர்க்கம் வரை தொடர்கிறது
சில துர்சொப்பனங்கள்!'
இவ்வுலக வாழ்க்கையின் தங்கள் மீதுள்ள விசுவாசத்திற்கு பரிசாக மதங்களால் நிர்மாணம் செய்யப்பட்ட மறு உலக சொர்க்கம் கூட ஒரு துர்சொப்பனமாக மாறிவிடுகிறது – மதங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு, அதை தங்கள் விருப்பம் போல வளைத்து ஒரு சாரரை அடக்கியொடுக்கும் விதிகள் புகுத்தி பீடத்தில் ஏறி அமர்ந்து கொள்ளும் வர்க்கத்தினால் பெண்மொழிகளின் தன்மைகளை உள்ளடக்கிய பெண்ணை அடையாளப்படுத்தி பெரும்பாலும் பரபரப்பூட்டும் தலைப்புகளுடன் எழுதும் மற்றொரு எழுத்து மொழி. தமிழச்சியினுடையது. ஆனால், தமிழச்சியின் எழுத்துகள் சுயத்தை அடையாளப்படுத்துவதை விட, சமூக கோபத்தை ஆங்காரத்துடன் இடித்துக் காட்டும் வகையிலே தான் அமைந்திருக்கின்றன. என்றாலும் பெண் மொழியைக் கையாளுகிறார்.
'தூமை' என்ற வார்த்தை தமிழ் கூறும் நல்லுலகில் அருவருப்பான வார்த்தை அதிலும் ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு மகோன்னத கெட்ட வார்த்தை. தூமை என்ற பெயரிலேயே ஒரு பெயரிலி பெண் வலைப் பதிவிடுகிறார். அவரின் மொழிநடை அவர் ஒரு கனடிய, நார்வேஜிய புலம்பெயர்ந்த தமிழ்ப் பெண்ணி்ன் மொழிநடையை ஒத்திருக்கிறது. இச்சமூக தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இந்தத் தலைப்பு. 'தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும் சாதிப் பிரயோகங்களும் ஏராளம். கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதியால்தான் பிறப்பு நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால் தூமை மட்டும் கேவலமா? என்ற கேள்வியை முன்வைத்திருப்பதோடு தீட்டு என்ற வார்த்தைக்கு உகந்த தூமையையே தலைப்பாக வைத்து பெண்ணரசியல் பேசுகிறது. வெறும் வசைச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வரும் அந்தக் குருதியின் ஈரத்தில் ஆணாதிக்க சிந்தனை ஈரமாகி்ப் போய் பிசுபிசுத்துக் கிடப்பதை மறுப்பதற்கில்லை.
நன்றி: அனைத்து பெண் வலைப்பதிவர்கள் மற்றும் வலை தள நிர்வாகிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக