
அம்பேத்கர் நகரில் வசதி வாய்ப்பற்ற ஏழை இளைஞர்களுக்கு பாக்ஸிங் கற்றுக்கொடுத்து அதில் சிலரை மாநில அளவில் பதக்கங்களைக் குவிக்கவைத்திருக்கிறார். ''இந்த ஒலிம்பிக்ல குறைஞ்சபட்சம் குத்துச் சண்டைக்கு ஒரு மெடலாவது கிடைக்கும்னு நான் சொன்னப்போ, யாரும் நம்பலை. ஆனா இப்போ நம்ம பசங்க அங்கே மெடல் அடிச்சுட்டாங்க. விஜேந்தர்குமார் மெடல் வாங்கினதும் தலையில தூக்கிவெச்சுக் கொண்டாடுறாங்க. இதே வேகத்துல மறந்தும் போயிடுவாங்க. 1994-ல பாங்காக்ல நடந்த உலகக் கோப்பை பாக்ஸிங்ல நான் வெண்கலப் பதக்கம் வாங்கிட்டு வந்தப்போ மீடியாக்கள் புண்ணியத்தால் இதே போல பிரபலம் கிடைச்சுது. அரசியல்வாதிகள் என்னை வாழ்த்தி மேடையில் முழங்கினாங்க. அரசாங்கமும் அர்ஜுனா விருது கொடுத்துக் கௌரவிச்சுது. ஆனா, அதெல்லாம் அப்படியே போயிருச்சு. ஒரு வேலைகூட கிடைக்காம வறுமையின் பிடியில் நான் கஷ்டப் பட்டதை என்னால் மறக்கவே முடியாது. அரசாங்கம் இடம் கொடுத்தும் வீட்டுவசதி வாரியத்தோட ஒரு வீட்டுக்காக கோர்ட் வரை போக வேண்டியிருந்தது.
இப்போ நம்மகிட்டேயே நல்ல திறமையான கோச்சுங்க இருக்காங்க. நம்ம பசங்களும் இப்போ தங்களை நிரூபிச்சுட்டாங்க. இப்போ அரசாங்கத்தோட முறை. அவங்களுக்கு நல்ல வழி பண்ணிக் கொடுக்குறதோட, அடுத்த தலைமுறை பாக்ஸர்களை உருவாக்க செலவு பண்ணணும்.
இப்போ நம்ம விஜேந்தர், ஜிதேந்தர், அகில் மூணு பேரும் இந்தியாவை அடுத்த இடத்துக்குக் கொண்டுபோயிருக்காங்க. தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதான்னு ஏங்கிக்கிட்டு இருக்குற எத்தனையோ வீரர்களுக்கு அவங்கதான் இப்போ ரோல் மாடல். என்னுடன் விருது வாங்கிய முன்னாள் பாக்ஸர் குருச்சரண் சிங், இப்போ விஜேந்தர்குமாரின் குரு. இதோ நிக்குறானே செந்தில்நாதன்... இவன் விஜேந்தேர்குமாருக்கே போன வருஷம் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் 'டஃப் ஃபைட்' கொடுத்தவன்!'' - பையன்களுக்கு பாக்ஸிங் பயிற்சி கொடுத்தபடியே பேச்சைத் தொடர்ந்தார். ''இப்போ தினமும் சாயங்காலம் வியாசர்பாடி, பெரம்பூர், காசிமேடு ஏரியா பசங்க எங்கிட்ட பாக்ஸிங் கத்துக்க வர்றாங்க. இயல்பிலேயே இந்தப் பசங்களுக்கு ஓர் இனம் புரியாத மூர்க்கம் ஜீன்களில் இருக்குது. கிட்டத்தட்ட கியூபா வீரர்களைப் போல. அதை நெறிப்படுத்தினா, இங்கே நிக்குற பசங்களை நிச்சயம் ஒலிம்பிக்ல பதக்கம் வாங்கச் செய்ய முடியும். கியூபாவுல ஒரு தெருவுக்கு மூணு பாக்ஸிங் கிளப் இருக்கும். ஆனா, இவ்வளவு பெரிய சென்னையில் மூணுதான் இருக்கு.
இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். விளையாட்டை விளையாட்டா நினைக்காதீங்க. இதோ என்னைப் போல... இவனைப் போல திறமையான வீரர்களின் வாழ்க்கையாவும் பாருங்க!
கியூபா, ஜமைக்கா மாதிரி நாடுகளில் நம்மூர்ல படிக்க வர்ற பசங்களுக்கு சத்துணவு போடுற மாதிரி அங்கெல்லாம் பாக்ஸிங் கத்துக்க வர்ற பசங்களுக்கு இலவசமா சாப்பாடு போடுவாங்களாம்.
இங்கே இந்தியாவில் சமீபத்தில்தான் டென்னிஸ் வீரர் மகேஷ்பூபதி, 'மித்ராலால் டிரஸ்ட்'னு ஒரு அமைப்பை ஆரம்பிச்சிருக்கார். விஜேந்தர் அந்த டிரஸ்ட் மூலமா தத்தெடுக்கப்பட்டவர்தான். பார்த்துக்கிட்டே இருங்க... நிச்சயம் நம்ம பசங்க அடுத்த ஒலிம்பிக்ல கோல்டு மெடல் அடிப்பானுங்க!'' காற்றில் 'பன்ச்' வைத்தபடி கம்பீரமாகச் சிரிக்கிறார் தேவராஜன்!
1 கருத்து:
commen wealth gamsai india mediakkala kevalapaduthai ninachu kastama irunthadu.unga katturai pramatham.THANGA............MY,
கருத்துரையிடுக