செவ்வாய், 21 செப்டம்பர், 2010

என் கையெழுத்து காரணகர்த்தாக்கள்!


சின்னவயதில் இருந்தே அழகாய் எழுதவேண்டும் என்ற உந்துதல்(சரி சரி.. கையெழுத்தை மட்டும்தான் சொல்றேன்) எனக்கு உண்டு. அதற்கு விசேஷமான காரணமாக நான் கருதுவது அந்தந்த காலகட்டத்தில் பழகி இன்றும் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியவர்களின் கையெழுத்தைத்தான் நான் களவாடி மகிழ்ந்திருக்கிறேன். (இந்தப் பதிவுக்கு தலைப்பு களவாடிய பொழுதுகள்னு வச்சிருக்கலாமோ?) எனக்கே இதில் ஆச்சர்யம் உண்டு. டவுசர் போட்டுத் திரிந்த நாட்களில் என் ஆதர்ச ஹீரோவின் பெயர் சுதாகர். என்னைவிட நான்கைந்து வயது மூத்தவர் என்றாலும் அவர் என்மீது காட்டிய பிரியம் அளப்பரியது. மீசையில்லாத கமலஹாசன் போன்ற தோற்றம். அதே கண்களை வரமாக வாங்கி வந்திருப்பவர். தன் அழகு குறித்து தன்னகங்காரம் எதும் இல்லாமல் திரிவார். எங்கள் ஏரியாவிலேயே மிக வசதியான குடும்பம் அவர்களது. ஆனால் அந்த பந்தா எதுவும் இல்லாமல் அழுக்காகத் திரியும் என்னை ஒருநல்ல நாளில் கண்டுகொண்டார். ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா அவர். தெரியாத துறையே இருக்காது. தற்காப்புக் கலைகளை அவ்வளவு நேசித்து எங்கெங்கோ போய் கற்றுக் கொண்டுவந்து எனக்கு சொல்லிக் கொடுப்பார். அவர் வயதையொத்த நண்பர்கள் எனக்கும் நண்பர்கள் ஆகினர். கடைக்குட்டியாய் நான் மட்டும் எல்லார்க்கும் இனியனாய் அவர்களோடே திரிவேன். மணிமேகலை பிரசுரத்தின் ப்ரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறில் ஆரம்பித்து தலையணை சைஸில் ஆங்கில புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார். பெரும்பாலும் அவை 'ஜூட்கெனேதோ, ஒக்கினோவா இஷின்ரியோ, குங்பூ, ஜூஜுட்ஸு,கொபுடோ' என தற்காப்புக் கலைகளின் ஆங்கில வடிவ மொழிபெயர்ப்பு புத்தகங்களாக இருக்கும். நான் அடிக்கும் ஜோக்குகளுக்கு ரசிகர். கொலைவெறிக் கவிதையின் 'நீர் கண்டு அமர்! அப்போது காலைக்கடன் கழிக்கபோகும் அதிகாலைப் பயணத்தில் நான் சொன்னபோது அவர் சிரித்த சிரிப்பு இப்போதும் கேட்கிறது. கமலஹாசனுக்கும் அவருக்கும் வித்தியாசம் உணரமுடியாமல் நான் திணறிய நாட்கள் அவை. நாங்கள் தேவர் மகன் பார்த்துவிட்டு வந்து சிலம்பம் தெரிந்த ஒருவரை துன்புறுத்தி கொஞ்சமே கொஞ்சமாய் கற்றுக் கொண்டோம்..சுதாகர் மட்டும் விதிவிலக்கு. அனாயசமாக கம்பு சுற்றக் கற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து சைக்கிள் செயினை இடுப்பில் கட்டிக் கொண்டு சண்டைக்கெல்லாம் போய் அடிவாங்காமல் நான்மட்டும் தப்பி வந்திருக்கிறேன். (என் தோற்றம் பார்த்து பரிதாபப்பட்டு விரட்டிவிட்டான் ஒரு தடித் தாண்டவராயன்!) 'ஏதாச்சும் பெருசா பண்ணனும் மீனாட்சி'(அவரின் உற்ற தோழன்..கொஞ்சம் தொடை நடுங்கி) என்பார். சேதுபதி மன்னர் காலத்து வாள் ஒன்றை சிரமப்பட்டு திருடி வந்தார். வித்தியாசமான பட்டாக்கத்தி, சுருள் கத்தியை கம்மாய்க்குள் வளர்ந்து கிடக்கும்... செடிக்குள் பதுக்கி வைத்திருப்போம். கடைசிவரை வீரசாகசத்துக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுமோ என்று நான் ஏங்கிய தவிப்பும் கொலைவெறியும் இப்போதும் எனக்கு ஆச்சர்யம். அவர் வீட்டில் அவருக்கென்று இருக்கும் அறையில் அசெம்பிள் ஆகி நாங்கள் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் உலகத்தரமானதாய் இருக்கும். வெங்காய வெடிகள், நாட்டு வெடிகுண்டெல்லாம் எனக்கு அப்போதே பரிச்சயம். ஒருமுறை காயம்பட்ட புலிகளுடன் தொடர்பிலிருந்த ஒருவர் அங்கு வந்திருந்ததும் அவர் வாயிலாக இவர் தனி ஆளாக எங்களைத் தவிர்த்து (அந்நாட்களில் அவர் போராளி இமேஜில் இருந்ததால் எங்கள் வீட்டில் அவருடன் பழக தடை போட்டார்கள்) செய்த‌ உதவிகள் கட்டுரைக்கு தேவையில்லாததும் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதும் ஆகும். ஐ.டி கார்டெல்லாம் தயார் செய்து கத்துக்குட்டித்தனமாய் வளர்ந்த அந்த இயக்கம் ஒருநாள் இரவில் சாத்வீக கோலம் பூண்டு 'ஆன்ம நேய அன்பர்களாக' மாறியது.

இசைஞானி இளையராஜா வந்திருந்தபோது என்னையும் அழைத்துச் சென்று இசைஞானியுடன் பேசவைத்தார். அந்த‌ அரைமணிநேரத்தில் நாங்கள் நெக்குருகிப் போனோம். நான் கொடுத்த 'லாக்டோ கிங்' சாக்லெட்டை இசைஞானி பத்திரமாக வைத்திருப்பதாய் அப்போதெல்லாம் நம்பினேன். சுதாகர் அண்ணனின் சொந்தக்காரப் பயல் ஒருவனை தன் வீட்டு வேலைக்காக‌ அழைத்துச் சென்றார் இசைஞானி. (அவன் அந்த வீட்டின் கோவில் போன்ற அமைதி பொறுக்காமல் ஒருநாள் சுவரேறிக் குதித்து ஓடிவந்து அவரை சங்கடப்படுத்தினான்)   அவர் அடிக்கடி, 'உன் கையெழுத்து என்னை மாதிரியே இருக்குடா சரவணா!' என்பார். அவர் கையெழுத்தை பிராக்டீஸ் செய்து எழுதுகிறேன் என்பது அவருக்குத் தெரியுமா என்று இப்போதும் எனக்கு தெரியாது. அதன்பிறகு காலஓட்டத்தில் அவர் எங்கெங்கோ போய் பொறியியல் பட்டதாரியான அவர் போலீஸ் தேடும் ஆளாக மாறிப்போய் விட்டிருந்தார். நாங்களெல்லோரும் அவரை மறந்து போய்விட்டோம். ஹவாலா மோசடி என்றெல்லாம் அடிபட்டு மிதிபட்டு இடையில் அவர் குடும்பம் அவரை பேக் செய்து சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டது. விகடன் விமர்சனக்குழு பணிக்காக டி.பி.கஜேந்திரனின் சினிமா ஒன்றில் இன்டெர்வெல்லில் வைத்துப் பார்த்தேன். அதே கம்பீரம் உருக்குலையமல் அப்படியே இருந்தது. சட்டை மட்டும் கசங்கலாக உடுத்தி இருந்தார். அவருடன் அவருக்கு சம்மந்தமே இல்லாத தடித்தடியாய் நான்கைந்து ஆட்கள் பாடிகார்டுகளைப்போல இருந்தார்கள். என்னிடம் அவசரவசரமாக நம்பர் மட்டும் வாங்கிவிட்டு இன்டெர்வெலுக்குள்ளே அந்தக் கும்பலுடன் கிளம்பிப் போய்விட்டார். ஓடாத சினிமாக்கள் கிரிமினல்களின் மீட்டிங் பாய்ண்ட் என்றான் போலீஸ் நண்பன் ஒருவன். ஆதர்ச ஹீரோ இப்போது எங்கிருக்கிறானோ தெரியவில்லை.அதன்பிறகு நான் பள்ளிநாட்களில் கரைந்துபோய்க் கொண்டிருந்தேன். ப்ளஸ்‍ஒன்னில் பின்நவீனத்துவ பாணியில் ஆங்கில பாடமெடுத்த ஜவஹர் ஃபாரூக் அழகிய கையெழுத்துக்குச் சொந்தக்காரர். என் ஆங்கில கையெழுத்து அச்சு அசல் அவருடையதைப்போலவே இருக்கும். நான் அங்கில மீடியத்துக்கு மாறி திணறித் தவித்த வேலையில் எனக்கும் சேர்த்து பத்து பசங்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் இலவசமாக சொல்லிக் கொடுத்தார். (நான் ஃபீஸே கொடுக்க மாட்டேன்..நானாக பரிதாபப்பட்டு கொடுத்தால்தான் உண்டு. அப்படி ஒரு வியாதி எனக்கு) பெண்கள் இல்லாத வகுப்பென்பதால் செக்ஸ் பற்றியெல்லாம் மெச்சூர்டாக பேசுவார். என்மீது பிரியம் வைத்த உற்ற தோழன் அவர் . எங்கள் எல்லோருக்கும் பிரியமானவர் அவர். என்னவேண்டுமானாலும் பேசலாம் அவரிடம். 'ஏன் சார் டக் இன் பண்ணாமலே வர்றீங்க? உங்களுக்கு சூப்பரா இருக்கும்' என்று கேட்போம்.

எனக்கு ஒண்ணுக்குப் பிடிச்சு இருக்கத் தெரியாது. அவசரவசரமாய் நான் முடிச்சுட்டு வர..நீங்க 'டே ஜவஹர் புள்ளி வச்சுட்டு வந்திருக்கான்டா'னு கிண்டல் பண்ணுவீங்க..அதான்' என்பார். (பேதமுறா வெண் சீருடைப் பள்ளி அது!)கோபத்தில் அவர் கோங்க்ரா சட்னி. பின்னிப் பெடலெடுத்துடுவார். 'எஸ்ஸே' படித்துவிட்டு வரச் சொல்லி இருந்தார். அவர்மீது நாங்கள் கொண்ட சலுகையால் படிக்காமல் அப்படியே வந்திருந்தோம். எல்லோரையும் பேப்பர் எடுத்து மரத்தடியில் உட்கார்ந்து எழுதச் சொன்னார். பத்து புத்த‌கத் தும்பிகள் மட்டும்  படித்து வந்திருந்தார்கள். படிக்காமல் வந்தவர்களை எழுந்து வரச்சொன்னார். ஆறுதல் பட்டுக் கொண்டு வழிசலுடன் எழுந்து போன முப்பது சொச்ச மாண‌வர்களுக்கு காட்டடி கிடைத்தது. பிரம்பால் விளாசித் தள்ளுவதைப் பார்த்துவிட்டு கமுக்கமாய் உட்கார்ந்து விட்டேன். அரைமணிநேரம் கழித்து வரிசையாய் பேப்பரை வாங்கிப் பார்த்தபடி இரண்டு மடங்கு கூடுதல் உக்கிர விளாசல் சிலருக்குக் கிடைத்தது. அடி பொறுக்காமல் ஒருவன் கிரவுண்டுக்குள் ஓடினான்.  கட்டக்கடைசியாய் என்னிடம் வந்தார். நான் அவர் கையெழுத்தில் ஏதேதோ கற்பனைச் சிறகில் கட்டுக்கதைகளை எழுதி இருந்தேன். கோபமாய் பார்த்தார், 'நான் உன்மேல் வச்சிருந்த‌ நம்பிக்கையை கொன்னுட்டியே சரவணா!' என்றவர் என்னை மட்டும் அடிக்காமல் போய்விட்டார். அடிக்காத அடி இன்னும் வலிக்கிறது.அதன்பிறகு எங்கெங்கோ உலகம் சுற்றிய அந்த அற்புத மனிதர் மொரீஷியஸிலிருந்து சமீபத்தில் என் செல்பேசி எண்ணை எப்படியோ பெற்று பேசினார். 'டே..நீ விகடன்ல இருக்கியாமே..எனக்கு அப்பவே தெரியும்டா.. பெருமையா இருக்குடா...இன்னும் உச்சத்துக்கு போவேடா!' என்று வாழ்த்தினார். நானும் விகடனைவிட்டு விலகியதைச் சொல்லி அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை. ஆச்சு..வருடங்கள் பல‌. காலமெனும் அச்சில் பூமி சுற்றிச் சுற்றி கோட்டமே விழுந்துவிட்டது. கையெழுத்து மட்டும் ஜவஹர் ஃபாரூக்கையும் சுதாகரையும் நினைவுபடுத்திக் கொண்டே வந்தது. இப்போது என் கையெழுத்து எப்படி இருக்கிறது.. யோசித்துப் பார்க்கிறேன்.எனக்குப் பிடித்தவர்களின் கையெழுத்தை அந்தந்த காலகட்டத்தில் இமிட்டேட் செய்து வந்திருக்கிறேன். இப்பொது என் அழகிய கையெழுத்துக்குச் சொந்தக்காரர் .. ரா.கண்ணன்! மானா பாஸ்கர் சார், 'கண்ணன் எழுத்தைப் போலவே இருக்கு உங்க எழுத்து!' என்று சொன்னது ஞாபகம் வருகிறது. சுதாகரை ஜவஹர் ஃபாரூக்கில் பார்த்ததன் பாதிப்பு மறைவதற்குள்  ஜவஹர் ஃபாரூக்கை ரா.கண்ணனில் பார்க்கிறேன். ஒருவேளை மூணுபேரும் எனக்கு ஒண்ணோ.. மூணுபேரின் கையெழுத்தும் கிட்டத்தட்ட ஒன்றுதான்...மூணுபேரிலும் நான் என்னைத் தேடுகிறேன்  என்பதுதான் இங்கு நிதர்சனம்! 

குறிப்பு: ரயிலேறும் அவசரத்தில் டைப் செய்து எழுதியது இந்தப் பதிவு../ வார்த்தைகள் முன்பின் தடம் மாறி இருந்தால் அது ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் நிகழ்ந்த தவறே அன்றி வேறில்லை....மன்னிப்பீர்களாக!

கருத்துகள் இல்லை: