ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

நான் மகான் அல்ல‍- விமர்சனம்

முன்குறிப்பு:
படம் பார்ப்பது அரிதாகிவிட்ட சூழலில் நண்பர்கள் பரிந்துரை செய்திட்ட படங்களை மட்டும் பார்க்கலாம் என்ற தீர்க்கமான முடிவில் இருக்கிறேன் நான். ஏகமாய் நான் எதிர்பார்த்த படங்களில் பாண்டிராஜின் 'வம்சம்' முக்கியமான ஒன்று. எதிர்பார்ப்பில் பொய்த்துவிட்டது என்பதால்,'எப்பாடுபட்டாவது வம்சத்தை பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம்' என்ற முடிவில் நான்,'நான் மகான் அல்ல' மட்டும் பார்த்தேன். 

வெண்ணிலா கபடிக்குழு பார்த்த‌ இரவொன்றில் தமிழ் சினிமாவுக்கு பாலா போன்று இன்னொரு மகான் கிடைத்துவிட்டார் என்றே நினைத்திருந்தேன். 'சேச்சே.. நான் மகான் அல்ல!' என்பதை அதே தலைப்பிடப்பட்ட படத்தின் மூலம் தகர்த்தெறிந்திருக்கிறார் சுசீந்திரன்.அவரைத் தவிர இந்தப்படத்தை யார் எடுத்திருந்தாலும் மிகமிக சந்தோஷம் கொண்டிருப்பேன். ஓ.கே.. கமர்ஷியலாகவும் தன்னால் படம் கொடுக்க முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக படம் போட்டு காட்டி விட்டார். வணிகம் சார்ந்த சிந்தனை அவரை அப்படி ஆக்கியிருக்கக்கூடும்! எதார்த்த சினிமா தொனியில் அமைந்த பெர்ஃபெக்ட் மசாலா ரிவன்ஜ் தான் நான் மகான் அல்ல! தன் ஸ்பெஷல் டச்சாக இந்தப் படத்தில் சுசீந்திரன் கையாண்டிருக்கும் ஒரு விஷயம் தமிழ் சினிமாவுக்குப் புதுசு. நமக்கே தெரியாமல் நம்மைச் சுற்றி ஒரு மாய‌வலை( வெப்சைட் அல்ல) இருப்பதையும் சிறு பின்னம்கூட சமூகம் குறித்த மதிப்பீடுகள் இல்லாமல் போதையும் காமமுமாக ஒரு மிருகத்தின் மனநிலையோடு நம் அருகே வசித்துக் கொண்டு இருக்கும் விடலைப் பசங்களைப் பற்றியும் இதில் பேசியிருக்கிறார். சமீபநாட்களில் செய்தித்தாளில் வரும் கொலை கொள்ளை கற்பழிப்புக் குற்றவாளிகளில் பலர் பதின்ம வயதில் கல்லூரி மாணவர்களாக இருப்பதை நாம் இதோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளும் திரைக்கதை. படத்தைவிட படத்தின் ட்ரெயிலர் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. குற்றம் நிகழ்ச்சியின் ப்ரொமோ போலவே ஒரு 'அழ‌கான' மற்றும் 'ப்ளாக்' கம்போஸிஷன் அது. 'நகரத்தில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணின் உடல் பாகங்கள்..' என்று துவங்கும் அந்த ட்ரெயிலர்.. முத்தத்துக்கு இடையூறு செய்யும் சுண்டல்காரனைக் காட்டி பொறி கலங்க தலையில் யாரையோ கம்பியால் கார்த்தி தாக்கி அழிக்கும் காட்சியோடு முடிவடைகிறது. படம் பார்க்கபோகும் ரசிகனுக்கு இதனாலேயே முதல் ரீலில் அந்த வாலிபர்கள் பண்ணும் கொடூர காட்சிகளுக்கு சற்றும் சம்மந்தமில்லாமல் ரொமாண்டிக்காக அடுத்தடுத்த கா‌ட்சிகளில் கார்த்தியைக் காட்டும்போது இவர்கள் எந்தப் புள்ளியில் மோதிக் கொள்ளப்போகிறார்கள் என்ற பதைபதைப்பு ஏற்படுகிறது. முதல் பாதி காமெடியால் நகர்ந்தாலும் அந்த போதை வாலிபர்கள் பண்ணும் கொடூரங்கள் அவர்கள்மீது ஒருவித வெறுப்பை உண்டு பண்ணுகிறது. இந்த உளவியல் உத்தியால் கார்த்தியோடு அவர்கள் உரசிக்கொள்ளும் காட்சிக்காக ஏக்கம் கொள்ளவைக்கிறது. தந்தை கொலையுண்ட போது அவர் தவிக்கும் தவிப்பும் அதனால் அவர் எடுக்கும் முடிவும் ஆடியன்ஸுக்கு அந்த பசங்களை கார்த்தி நார்நாறாக கிழித்தெறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது. ஆனால் அங்கே உரசல் எதுவும் உடனடியக வைத்து விஜய் அஜீத் படங்களைப்போல மொக்கைப் படமாக்காமல் எதார்த்தத்துக்கு பக்கத்தில் இருந்து யோசிப்பதைப்போல கார்த்தி அவர்களை எளிதில் அணுக முடியாதவராய் தவிக்கும் தவிப்பை இறுதி வரை அழகாக கடத்தி ரௌத்ரமான ஒரு க்ளைமாக்ஸில் கார்த்தி அவர்களை சூரசம்ஹாரம் செய்வதோடு நமக்கும் வெறியட‌ங்க படம் முடிவடைகிறது. காஜல் அகர்வால் என்னவானார்? கார்த்தி‍யின் காதல் இனி என்னவாகும்? கார்த்தி மனசாட்சிக்கு பயந்து போலீஸுக்கு போய் உண்மையை விளம்பி ஜெயிலுக்குப் போவாரா? இல்லை அந்த சம்பவத்தை மறந்துவிட்டு 'பேங்க் ஆபிஸர்'வேலைக்குப் போய் அப்படியே காஜலுடன் இன்னொரு டூயட் பாடும் மனநிலைக்கு மாறுவாரா? அப்படியே அவர் மாறினாலும் ஸ்காட்லாந்து யார்டு அளவுக்கு பேசப்படும் தமிழ்நாடு போலீஸுக்கு இந்த வாலிபர்களின் உடல்கள் கடைசிவரை கிடைக்காதா? என்றெல்லாம் தமிழ் சினிமா ஃபார்முலா கேள்விகள் தொக்கி நிற்கின்றன. படத்தின் டைரக்டர் சுசீந்திரன் என்பதால் இந்தக் கேள்விகளை நாமே அடக்கிக் கொண்டு எழ வேண்டி இருக்கிறது. வெண்ணிலா கபடிக்குழுவில் நாயகன் இறந்தது தெரியாமல் நாயகி செல்லும் காட்சியோடு கவித்துவமாக முடிகிற படத்தை தந்தவர் அல்லவா. எதார்த்த பாணியில் சொல்லியிருப்பது ஆடியன்ஸுக்கு கொஞ்சம் புதுசு என்பதோடும் கார்த்தியின் வெற்றிக் கணக்கில் கூடுதலாக‌ ஒன்று என்ற அளவீட்டிலும் படம் ஒரு எண்டெர்டெய்னர் என்று நாமே சொல்லிக் கொண்டு அடங்கிய வெறியோடு ஸீட்டிலிருந்து எழுந்திருக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவே..! இதுபோன்ற படமெடுக்கவே அவதாரமெடுத்த லிங்குசாமி போன்றவர்கள் இந்தப் படத்தை தந்திருந்தால் 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடி ரசித்திருக்கலாம்தான்!
இருப்பினும் இந்த மூணு பாட்டு...ஒரு ஃபைட்டு ஃபார்முலாவுக்கு பலம் சேர்த்தவர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பிட்ட‌ இருவர் மதியும் யுவனும். முன்னவர் கேமரா கோணங்களில் மிரட்டுகிறார். பின்னவர் பின்னணி இசையில் தந்தையை மிஞ்சியிருக்கிறார். குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கு யுவன் போட்டிருக்கும் பின்னணி இசை மிரட்டல். 'இறகைப்போலே..' பாடலின் இசைக்கு, யுகபாரதியின் அழகிய வரிகளும் அதில் யுவனின் பழகிய ஹை பிட்ச் வாய்ஸும் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கில் அழகான ஸ்வீட் ஜெர்ரி! 'அனல் அரசு' அமைத்திருக்கும் லாஜிக்கலான அக்ஷன் கொரியோகிராபியும் அசத்தல் ரகம். வில்லத்தனம் செய்யும் அந்த விடலைப் பசங்க உண்மையில் ரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார்கள். கார்த்தியை ஆக்ரோஷமாக அவர்கள் தாக்கும் காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்! கார்த்தி கொஞ்சம் கொஞ்சமாக பருத்திவீரன் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறார் என்பது நடிப்பில் தெரிகிறது. இது அவருக்கு சுக்ரதிசை காலம். (காமெடி கரகம் நல்லா வருது பாஸ்..கீப் இட் அப்!) கார்த்தியின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் நடிக்க வந்ததே ஒரு விபத்து என்கிறார்கள். அழகிய விபத்துதான்!
மற்றபடி 'ரோலர் கோஸ்டர் சவாரி' என்று இந்தப் படத்தை வர்ணிக்கிறார்கள். மேலேறுகிறபோது போட்டுவிட்டுப்போன கொலுசையும் சாவிக்கொத்தையும் மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளும் 'லேசா பறக்குது மனசு' தந்த ரங்க ராட்டின சவாரி அளவுக்கு இல்லாமல் வயிறு கலங்க வைக்கும் இந்த ரோலர் கோஸ்டர் சவாரி எனக்கு பெரிதுவக்கவில்லை.

மொத்தத்தில் படத்தை ஒருமுறை நிச்சயம் பார்க்க‌லாம். ஆனால் அவரது அடுத்த படமான அழகர்சாமியின் குதிரை நிச்சயம் இந்த எல்லைகளைத் தாண்டி மனசை வசீகரிக்கும் பாருங்களேன்!



பின்குறிப்பு:
'மகதீரா' பார்த்தபோது கருஞ்சாந்திட்ட‌ கெண்டை மீன் கண்ணழகி காஜல் அகர்வால் மீது காதலும், பழனி படத்தில் அவரை பாழடித்த பாதி வெந்த பேரரசு மீது கொலைவெறியும் வந்தது. இந்தப் படத்தில் மேற்குறிப்பிட்ட எந்த உணர்வும் வரவில்லை.
அப்புறம்.. அண்ணனைப்போலவே கார்த்திக்கும் ஆந்திர காட்டில் அடை மழை. ஆயிரத்தில் ஒருவன், பையாவை தெலுங்கில் கொண்டாடிய ரசிகர்கள் இந்தப் படத்தையும் கொண்டாடுவார்கள் என்பதால் கோடிகளில் ரைட்ஸ் வாங்கி வைத்திருந்த ரவி தேஜாவின் 'விக்ரமார்க்குடு' தமிழ் ரீமேக்கை ட்ராப் செய்யும் உத்தேசத்தில் இருக்கிறாராம் கார்த்தி.

1 கருத்து:

Unknown சொன்னது…

நான் மகான் அல்ல (படம் வெற்றி என்று ஊடகங்கள் தான் முடிவு செய்கின்றன ?)
வம்சம் இயல்பாக உள்ளது... (உண்மை கிராமங்களை பிரதிபலிகின்றது...)
என் கருத்து - வன்முறையை நியாப்படுத்தும் படங்கள் பொருளாதார அடிப்படையில் மட்டுமே வெற்றி பெற்றிருகின்றது...