எப்படி இருக்கிறாய்? வேளாவேளைக்கு நீ சாப்பிட மாட்டாய் என்பதும், வேண்டும் பொருளுக்காய் வேண்டாத ஆட்களிடம் வேண்டி நிற்கமாட்டாய் என்பதும் எனக்குத் தெரியும். ஞாபகம் வந்தால் அழைத்துப் பேசு! சிறிது வயிற்றுக்கும் ஈய்துவிட்டு கனவுகளைத் துரத்து! (ஆமாம்..உன் முதுகை இப்போதெல்லாம் யார் பிடித்து விடுகிறார்கள்?)
இப்போதெல்லாம் உன் நாட்கள் உனக்கானதாய் இருக்கிறதா? இங்கு ஒழுங்கீனத்திற்குள்ளும் ஒழுங்கை கடைபிடிக்கும் உன் குணத்தை வியக்காத நாள் இல்லை நண்பா. கொஞ்சம் எழுத்து நிறைய தவறுகளுமாய் நான் வாழ்ந்து திரிந்தபோது தோள்கொடுத்த தோழன் அல்லவா நீ. ஊரையே இம்சிக்கும் உன்னை இம்சிக்கும் அரிய வாய்ப்பை எனக்கு நல்கிய நல்லவன் அல்லவா நீ. எழுத்து என்பது வனப்பேச்சி, மாயப் பிசாசு! அது கைகளுக்கு வசமானால் இந்த வானமே வசப்படும் என்பதை நீதான் எனக்குக் கற்றுக் கொடுத்தாய்! இப்படி உன்குறித்த எண்ணங்கள் அவ்வப்போது ஒரு செல்லப் பிராணியாய் பிராண்டுகின்றன.
மனமெனும் சிரங்கு சீழ் பிடித்து அலைந்து கொண்டிருந்த நேரம்.. மருந்தாய் காதல் களிம்புகள் பூசிக் கொண்டிருந்தேன். களிம்புகள் திராவகத்துளிகளாய் மாறி புண்ணாகி பின் புண்ணே உடலாகி.. ஈக்கள் மொய்க்க.. மண்ணோடு மண்ணாகிப் போய்க் கொண்டிருந்தேன். உன் நட்பென்னும் மயில் தோகை ஈக்களை விரட்டியதோடு மட்டுமல்ல என் காயத்துக்கும் களிம்பு பூசியது. 'கம்மனாட்டி.. ஒரு கரும்புக் கொல்லையவே எரிச்சுடப் பார்க்குறியேடா!' என்ற உன் எள்ளல் வாக்கியம் எத்தனை நட்பானது..அழகானது.. கவித்துவமானது! நீ அழைத்தபோதுதான் அந்த 'கம்மனாட்டி' நல்ல வார்த்தையானது. உன்னை நினைத்துவிட்டாலே என் மனவளைக்குள் சுக நண்டூருகிறதே நண்பா.
உன்னால்தான் மிக நீண்ட இரவுகளை தரிசித்தேன்.. உன்னால்தான் இரவும் பகலும் சந்திக்கும் அற்புத நிமிடங்களை உணர்ந்தேன். மேலதிக மதுவுக்காக அலைபாய்ந்த நள்ளிரவுகளையும்..விடியவிடிய கதைத்த வெண்ணிற இரவுகளையும் எங்ஙனம் மறப்பேன்? நகரவாழ்வின் இன்னொரு பக்கத்தை காட்டியவன் அல்லவா நீ! ஒரு கூர்க்காவைப்போல நடுநிசி இரவில் பெருநகர வீதிகளில் நீயும் நானும் அலைந்து திரிந்தது ஞாபகம் இருக்கிறதா? 'மனிதர்கள் இல்லாத தெருக்கள் அழகானவை' என்று அப்போதுதான் உணர்ந்தேன்.
'நைட் மீட் பண்ணுவோம்டா மச்சான்!' - நீ அழைக்கும் இரவுகள் பல அதிர்ச்சிகளைத் தாங்கி வருபவை என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். இரண்டு நாட்களுக்குத் தேவையான ஏற்பாட்டுடன்தான் நான் வெளிக் கிளம்புவேன். ஒரு சாகசப் பயணத்துக்கு ஆயத்தமாவது போல.. பகல் 12 மணிக்கு கண்விழிக்க.. அதிகாலை 3 மணிக்கு டின்னர் சாப்பிட.. என தயாராவது என்றால் சும்மாவா? மரணம்வரை சென்று திரும்பும் சாகசப் பயணங்கள் அவை. நள்ளிரவில் நடமாடும் மனிதர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை எனக்கு நீதான் காட்டினாய். (ஜானக்சாவுக்கு மோர் மிக்ஸ் பண்ணி அடித்த பெருங்குடிகாரன் ஒருவன் கோடம்பாக்கத்து வீதியொன்றில் நம்மை கத்தியுடன் கொலை வெறியோடு துரத்தியது ஞாபகம் இருக்கிறதா?) அப்படி நாம் சந்தித்தபொழுதுகளில் எத்தனை முறை இளையராஜா பி.ஜி.எம் வாசித்திருப்பார்? எத்தனைமுறை அவருக்கு புரை ஏறி இருக்கும்! எத்தனைமுறை சந்திரபாபு உயிர்த்தெழுந்திருப்பார்! எத்தனைமுறை எனக்கு எழுத்து பற்றி போதித்திருப்பாய் (உன்னையும் அறியாமல் அனிச்சையாய்) வாழ்க்கை குறித்து நீ பேசும் வாஞ்சையான வார்த்தைகள் அத்தனையும் அடிநாக்கு வெள்ளமாய் இப்போதும் மனசைக் கரைக்கிறதே நண்பா! முக்கால்வேக்காடு எழுத்துக்களை வைத்துக் கொண்டு பீற்றிக் கொள்ளும் உலகத்தில் உன்னைப் பற்றி கொஞ்சம்கூட கர்வப்பட்டுக் கொள்ளாமல் எப்படி அத்தனை இயல்பாய் இருக்க முடிகிறது? கால ஓட்டத்தில் பாதைகள் மாறி நம் கால்கள் பயணித்தாலும் முடிவெனும் பெருவெளியில் நாம் ஒன்றாகக் கரையும் நாள் வெகுதூரமில்லை நண்பா.(மூணுபுள்ளி கவுத, லுலுலு, கிண்டி ரேஸ், மிட்நைட் மசாலா, கொல்கத்தா மீல்ஸ், மின்ட் தெரு, சென்ட்ரல், காபி வித் கபோதி.. இவையெல்லாம் நம் நட்புக்கான சில சங்கேத வார்த்தைகள். என் ஆயுள்பரியந்தம் மறக்கவே முடியாது!)
காலத்தின் அளவிலா ஊசலாட்டத்தில் எங்கோ ஒரு கணத்தில் உன் வெற்றி அற்புதமாய் தீர்மானிக்கபட்டுவிடும்..அதுவரை ஆடு!
நீ ஓங்கி உலகளக்கும் நாளுக்காக காத்துக் கிடக்கிறேன்!
நெஞ்சம் நிறை,
நண்பன்,
சரண்
2 கருத்துகள்:
இரு துளி கண்ணீர்..! :(
கார்த்திகேயன்
கண்டா......லி..! புதுசாப் பொறந்துருக்கியேடா.... மூணு புள்ளி கவிதையில ஒண்ணையாவது பிரசுரம் பண்ணியிருக்கலாம்...!!
- நா.கதிர்வேலன்
கருத்துரையிடுக