முழுநீள காமெடி படம் இப்போ வந்து எவ்வளவு நாளாச்சு! சீரியஸாக எடுக்கப்படும் படங்களே டரியல் காமெடியாகி கிழிந்து தொங்கும்போது தமிழில் பட்டையைக் கிளப்பிய முழுநீள காமெடி படம் எதுவா இருக்கும்..? என இல்லாத மூளையை கசக்கியதில் என் மனதுக்குப் பிடித்த 5 காமெடி படங்கள் சிக்கியது. ஆண்பாவம், சபாபதி, சிங்காரவேலன், மைக்கேல் மதன காமராசன், காதலிக்க நேரமில்லை தான் அந்த பட்டியல். (இதில் சபாபதி என் பாட்டன் காலத்துப் படம். காதலிக்க நேரமில்லை என் அப்பா காலேஜ் கட் அடித்து பார்த்த படம்) மிஞ்சிய மூன்றில் நான் விழுந்துவிழுந்து ரசித்த படம்.. மை ஆல் டைம் காமெடி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் படம் ஆண் பாவம். 1985ல் ரிலீஸான இந்தப் படத்தை இயக்கி ஹீரோக்களில் ஒருவராக நடித்தும் இருப்பது பாண்டியராஜன்.இது பார்ட்டிக்கு ரெண்டாவது படம்! அதுக்கு முந்தி கன்னிராசின்னு பிரபு ரேவதியை வைத்து 22 வயதில் ஒரு படம் எடுத்துவிட்டார். ஆண் பாவம் படத்தை இயக்கும்போது 23 வயதாம் அவருக்கு! படத்தில் இவர் அடிக்கும் லூட்டிகள் வயிற்றை பதம் பார்ப்பவை. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் பாண்டியராஜனை அழைத்து விருந்து வைத்து, 'ரொம்பநாளாச்சுப்பா இப்படி நான் சிரிச்சு!'என கட்டிப்பிடித்து வாழ்த்தினாராம். இந்தப் படத்தின் ஸ்பெஷலே திரைக்கதையை காமெடியாகவே அமைத்திருப்பதுதான். ஒவ்வொரு ஸீனும் சிரிக்க வைப்பவை. படத்தின் ஆரம்பத்திலேயே அண்ணன் பாண்டியனும் தம்பி பாண்டியராஜனும் கட்டிப்புரண்டு சண்டைபோடுவார்கள். வி.கே.ராமசாமி வந்து கேட்க்கும்போது, 'என் ஜட்டியை எடுத்து மாட்டிக்கிட்டான்!' என்பார் பாண்டியன். 'இல்லவே இல்லை'என சாதிப்பார் பாண்டியராஜன். கடைசியில் செம கூலாக, 'ராஸ்கோலுகளா.. அதை மறதியா நாந்தேன் எடுத்துப்போட்டேன்' என்பார். அங்கு ஆரம்பித்து படம் நெடுக காமெடி கலாட்டாதான். சித்தப்பாவாக வரும் ஜனகராஜ் ஊருக்குள் கனகராஜ் கஃபே என ஒரு ஓட்டலை வைத்து படும் பாடு செம காமெடி. சமையல் மாஸ்டராக வரும் உசிலை மணி அடிக்கடி.. 'அதுல ஒரு தொழில் ரகசியம் என்னன்னா?' என்று மொக்கை போடுவார்.
பாண்டியராஜன் கொடுத்த ஐடியாவை வைத்து டி.வி வாங்கி வைத்து ஒளியும் ஒலியுமோடு ஓட்டலை நடத்துவார் ஜனகராஜ். சாப்பிட்டுவிட்டு இருட்டுக்குள் எஸ்கேப் ஆகிவிடும் கும்பல்..
'நீ மட்டும் எங்க அம்மாவை கட்டிக்கிட்ட...நான் உங்க அம்மாவை கட்டிக்கக் கூடாதா?' என பாட்டியை வைத்து வி.கே.ராமசாமியை லந்து பண்ணும்போது கிச்சுகிச்சு மூட்டுவார் பாண்டியராஜன். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தவக்களை, கொல்லங்குடி கருப்பாயி, ரேவதி வரும் சீன்களும் அப்படித்தான். க்ளைமாக்ஸ் வரை அதகளம் பண்ணி இருப்பார் மனிதர். (படத்தின் உதவி இயக்குநர்கள் பெயரில் முதலிடத்தில் இருப்பார் நம்ம ரமேஷ் கண்ணா)
இசை நம்ம இசைஞானிதான். 'இந்திரன் வந்தது.. சந்திரன் வந்தது இந்த சினிமாதான்...' என டைட்டிலிலேயே அட்டகாசம் பண்ணி இருப்பார். அவரே பாடிய 'காதல் கசக்குதய்யா...' அப்போது பட்டிதொட்டியெல்லாம் இளசுகள் முணுமுணுத்தது. (டவுசருடன் திரிந்த காலங்களில் அந்தப் பாடலை அடிக்கடிப் பாடி ஊரில் என் அத்தையிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டு!)...'என்னைப் பாடச் சொல்லாதே..' 'குயிலே குயிலே..' என ஜானகியும் குழைந்து பாடி இருப்பார்.
மொத்தத்தில் லோ பட்ஜெட்டில் வந்த மெகா ஹிட் படம் அப்போது அதுதான் என்று நினைக்கிறேன். சிலவருடங்கள் கழித்து பகவதியம்மன் கோவில் திருவிழாவில் இந்தப் படத்தை திரைகட்டி ஒளிஒலி பரப்பியபோது கிட்டத்தட்ட ராமநாதபுரம் லெட்சுமிபுர ஏரியாவே அங்கு கூடி ரசித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. இப்படிப்பட்ட படத்தை தந்த பாண்டியராஜன் என்ற இயக்குநர் அதோடு சோடைபோய்விட்டார் என்பதுதான் எனக்கு வருத்தமே!
அதெல்லாம் இருக்கட்டும்.. காரை ரிவர்ஸ் எடுக்க நண்பர்களுக்கு நீங்கள் உதவி செய்யும்போது பாண்டியராஜன் ரிவர்ஸ் எடுக்க உதவும் காட்சி நினைவில் வந்துபோகிறதா இல்லையா?
1 கருத்து:
யாராலையும் இந்த கட்டுரைகளை படிக்கமுடியாதளவுக்கு இருப்பதால் இதற்கு எந்த கருத்துரைகளும் வராது என்னுடைய இந்த ஒரு மறுமொழியை தவிர.தயவுசெய்து picture window-வை மாற்றுங்கள்
கருத்துரையிடுக