ஞாயிறு, 14 மார்ச், 2010

ஐ.பி.எஸ் டூ ஐ.ஏ.எஸ் வழி: மொரதாபாத்!- ஒரு டானிக் ஸ்டோரி!



''நல்ல நட்பு என்னெல்லாம் பண்ணும்.. துன்பங்கள்ல துவள்றப்போ தோள் கொடுக்கும்.. கஷ்டத்துல கலங்குறப்போ கை கொடுக்கும். அப்படிப்பட்ட நட்பே நம்ம வாழ்க்கைத் துணையா அமைஞ்சா...? வானத்தையே வசமாக்கும் இல்லையா?  நான் இன்னிக்கு ஐ.ஏ.எஸ் பாஸாகி நிக்குறேன்னா அதுக்கு என் அம்மா அப்பாவோட என் மனைவியும் முக்கியமான காரணம். என்னோட நட்பே வாழ்க்கைத்துணையா அமைஞ்ச கொடுப்பினையால் இது சத்தியமாச்சு!"‍நெகிழ்வின் ஈரம்தொட்டு பேசுகிறார் ராஜலிங்கம் ஐ.ஏ.எஸ்.
ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக பிஸியான‌  பணியின் போது படித்து ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுவது மிகவும் கடினமான விஷயம். இந்த வருடம்  இந்தவகையில் ஒரு பணியில் இருந்தபடியே நாட்டின் மிக உயர்ந்த போட்டித் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் ராஜலிங்கம்! உத்தரகாண்ட் மாநிலம் மசூரியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் தேர்வானவர்களுக்கான கல்லூரியிலிருந்து (லால் பகதூர் சாஸ்திரி ஆட்சிப்பணி பயிற்சி மையம்) தற்போதுதான் டிரெயினிங் முடித்து வந்திருக்கிறார். தான் ஏற்கனவே  பணியாற்றிய உ.பி கேடருக்கு இம்முறை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக‌ தேர்வாகி உள்ள‌ார்
‘‘உழைப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி இந்த மூன்று விஷயங்களோடு என் மனைவியின் அன்பும் சேர்ந்து கட்டிய பெரிய பொட்டலம்தான் என் சீக்ரெட் அஃப் சக்சஸ்! நான் கடையநல்லூர்க்காரன். படித்தது திருச்சி மத்திய அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கெமிக்கல் என்ஜினீயரிங். அங்கேதான் நித்யா எனக்கு அறிமுகமானாங்க. அரசியலில் ஆரம்பித்து சினிமாவரை  பல விஷயங்களை பகிர்ந்துப்போம். சுகதுக்கங்களை ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துப்போம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. 2003‍ல் படிப்பு முடிஞ்சதும் ஒசூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த வேலையில் என் மனம் லயிக்கவில்லை. சமுதாயத்துக்கு ஏதாவது என் பங்களிப்பை செய்யணும் என்ற நினைப்பு மனசுக்குள் ஓடியது. அப்பா‍ அம்மாவுக்கு நல்ல மகனா இருக்கணும்னு எப்பவும் நினைப்பேன். அதுக்காக ஐ.ஏ.எஸ் தேர்வை எழுத முடிவு செய்தேன். அப்போ மனசுக்குள்ள ஒரே குழப்பம். இது முடியுமானுட்டு. நித்யா ரொம்ப நம்பிக்கை வார்த்தைகள் பேசுனாங்க. அவங்களுக்கு் என்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா பார்க்கணும்னு ஆசை. அவங்கதான் தைரியமா ஓசூர்ல நான் பார்த்துக்கிட்டிருந்த வேலையை ராஜினாமா பண்ணச் சொன்னாங்க. அப்போல்லாம் ரெண்டுபேர் மனசுலயும் காதல் இல்லை. ஆனா ஒரு அழகான.. பவித்ரமான நட்பு இருந்துச்சு.
 என்னோட ஒவ்வொரு தேர்வுக்கும் பென்சில் சீவிக் கொடுக்குறதுல ஆரம்பிச்சு எக்ஸாம் ஹால் வரைக்கும் வந்து வெளியில நின்னு என்கரேஜ் பண்ணுற அளவுக்கு எனக்கு நல்ல தோழி. ஆரம்பத்துல இதெல்லாம் சாத்தியமான்னு கேட்பேன்.. 'உங்களால முடியும்ப்பா'னு சீரியஸா சொல்வாங்க‌. எங்க வீட்டுலயும் ஒரு கட்டத்துல அவங்க செல்லமா ஆகிட்டாங்க. அப்பாவுக்கு அம்மாவுக்கும் நித்யாவை ரொம்ப பிடிச்சுட்டது. ஆரம்பத்துல நண்பர்களா இருந்த நித்யாவும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு செஞ்சதும் ஒரு திருப்பம்தான். அப்போ ஐ.பி.எஸ் கிடைச்சு உ.பி‍க்கு கிளம்ப வேண்டிய சூழல். எங்கூட இருந்து நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. என்னதான் ஐ.பி.எஸ் அதிகாரியா என்னோட டூட்டியை சரியா செஞ்சாலும் மனசுக்குள்ள எனக்கும் நித்யாவுக்கும் ஐ.ஏ.ஆஸ் ஆக முடியலையேனு சின்னதா ஒரு நெருடல். 'நீங்க எழுதுங்கப்பா!'னு செம சப்போர்ட் கொடுத்தாங்க. பொதுவா புதுசா கல்யாணம் முடிச்சவங்க‌ ஹனிமூனுக்கு கிளம்புவாங்க.. ஆனா நான் ஐ.ஏ.எஸ் எக்ஸாமுக்கு கிளம்புனேன். ஒரு பக்கம் கடுமையான பணிச்சூழல்..இன்னொரு பக்கம் படிப்பு! என்னை அழகா தாங்கிப் பிடிச்சுக்கிட்டங்க நித்யா. ஒவ்வொரு கட்டமா தேர்வாகி இன்டெர்வியூ போய் 222‍வது ரேங்க் கிடைச்சு இப்போ  ஐ.ஏ.எஸ் ஆகவும் ஆகிட்டேன். அப்பா அம்மா ஆசையை நிறைவேத்த வச்ச என் மனைவியை இப்போ நான் நன்றியோட நினைச்சுப் பார்க்கிறேன். அவங்க இல்லைனா வெற்றி இந்த அளவுக்கு கிடைச்சிருக்குமானு சந்தேக‌ம்தான். தாங்க்ஸ் நித்யா!’’ மனைவியைப் பற்றி உற்சாகமாக பேசுகிற ராஜலிங்கத்துக்கு ஐ.ஏ.எஸ் பட்டம் அவ்வளவு எளிதில் வசமாகவில்லை.. ஏழுகடல் ஏழு மலை தாண்டி புதையலை எடுத்துவிடும் பிரயத்தனமும் அவரிடம் இருந்திருக்கிறது.அதை எப்படி சாத்தியமாக்கினார் என்பதை அவரே சொல்கிறார் பாருங்கள்..
 ‘‘கிட்டதட்ட 4 வருஷம் விடாமல் துரத்தி இன்னிக்கு பாஸாகி இருக்கேன். முதல் வருஷ முயற்சியில அடிப்படை மற்றும் முக்கியத் தேர்வை  பாஸ் செய்து விட்டேன். அதோட தனியா மத்திய உளவுத்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கானத் தேர்வையும் எழுதி இருந்தேன். அதற்கான இன்டெர்வியூவுக்கு கூப்பிட்டிருந்தாங்க. ‘நல்லதாச்சே’னு உடனே மூட்டை முடிச்சுகளோடு டெல்லிக்கு போனேன். அங்கே போய் சேர்ந்தா வீட்டுல இருந்து போன்.. ஐ.ஏ.எஸ் நேரடித் தேர்விற்கான கடிதம் வீட்டுக்கு வந்திருக்கு. இதனால, சப்&இன்ஸ்பெக்டர் பயிற்சி தரும் ஆபிஸ் ரிஷப்ஷன்ல இருந்து சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு போன் செய்து, ஒரு வாரம் கால அவகாசம் கேட்டேன் அனா, அவர் ‘ஒரு நாள்கூட தர முடியாது. வேண்டுமானால், ஆறு மாதத்திற்குப் பின் துவங்கும் அடுத்த பயிற்சியில் வந்து சேர்ந்து கொள்ளலாம்!’ என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். சப்&இன்ஸ்பெக்டர் வேலையை விட்டுட்டு ஐ.ஏ.எஸ் இன்டெர்வியூக்கு போன எனக்கு ரிசல்ட்டில் தோல்விதான் கிடைத்தது. மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு. ஆனா ஃபீனிக்ஸ் மாதிரி கிளம்பிட்டேன். அடுத்த வருஷம் இன்னும் உத்வேகத்தோட ஐ.ஏ.எஸ்ஸின் முதல் இரண்டு கட்டங்களை எழுதி பாஸ் பண்ணேன். மீண்டும் டில்லியிலிருந்து மத்திய உளவுத்துறை சப்&இன்ஸ்பெக்டர் பயிற்சிக்கு என்னை தேர்ந்தெடுத்து கூப்பிட்டிருந்தாங்க. அது இறுதியான வாய்ப்பாக இருந்தும் எனக்குக் கிடைத்த தன்னம்பிக்கையை வைச்சு தைரியமா நிராகரிச்சேன். ஐ.ஏ.எஸ் இன்டெர்வியூல கலந்துக்கிட்ட எனக்கு அந்த வருஷம் ஐ.பி.எஸ் ரேங்க் கிடைச்சது. உத்தரபிரதேச கேடர்ல அலிகார்ல ஏ.எஸ்.பியா டிரெயினிங்ல இருந்தேன். மனசுபூரா ஐ.ஏ.எஸ் உட்கார்ந்திருந்ததால அடுத்த வருஷமும் ஐ.ஏ.எஸ்&க்கு பரீட்சை எழுதினேன். அந்த வருஷமும் ஐ.பி.எஸ் ரேங்க்தான் கிடைச்சது. அதுக்குள்ள என்னை முராதாபாத்ல ஏ.எஸ்.பி&யா போஸ்ட்டிங் போட்டுட்டாங்க. இப்போ முன்னைவிட பணிச்சுமைகள் அதிகமாயிடுச்சு. இந்த சான்ஸைவிட்டா அடுத்ததா எஸ்.பி‍யா புரொமோஷன் கிடைச்சிடும் அதன்பிறகு அந்த பதவிக்குனு இருக்குற பொறுப்புகளை நாம மதிக்கணும். அதன்பிறகு ஐ.பி.எஸ்தான் நமக்குன்னு எடுத்துக்கணும். கடைசியா ஒரு முயற்சினு நித்யாவும் உற்சாகம் கொடுத்தாங்க.. கடவுள் கிருபையால் இந்த வருஷம் ஐ.ஏ.எஸ் ரேங்க் கிடைச்சிருச்சு. இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.’’ என்கிறார் ராஜலிங்கம்.

‘‘ஐ.பி.எஸ்ங்கிறது பலருக்கு பெருங்கனவு.. அது கிடைச்சும் விடாம ஐ.ஏ.எஸ்ஸை ஏன் துரத்தினீங்க?’’
‘‘இந்த இரண்டு சர்வீஸ§மே ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சதில்லை. சொல்லப்போனா ஐ.ஏ.எஸ்ஸைவிட ஐ.பி.எஸ் கடினமானது... பொறுப்புகளும் கூடுதலானது. அதோட உடனடி தீர்வைத் தரக்கூடிய பணியும்கூட. ஆனா ஒரு பாலிஸி மேக்கரா.. பலதிட்டங்களை கொண்டு வரணும்கிறது என் கனவு. நான் போடுற ஒரு கையெழுத்து ஒரு கிராமத்தோட.. ஒரு ஊரோட.. ஒரு மாவட்டத்தோட தலையெழுத்தையே மாத்தும்னு நம்புறேன். இந்த 2 வருஷ ஐ.பி.எஸ் அனுபவம் மக்களோட அடிப்படை பிரச்னைகளை எனக்குப் புரிய வச்சிருக்கு.. ஐ.ஏ.எஸ் அதிகாரியா என்னால பல நல்ல விசயங்களை மக்களுக்கு பண்ணித் தர முடியும்னு நம்புறேன்!’’‍ கம்பீரமான குரலில் மிடுக்காய் பதில் சொல்கிறார் ராஜலிங்கம் ஐ.பி.எஸ்...இல்லை இல்லை ராஜலிங்கம் ஐ.ஏ.எஸ்!
சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு ராஜலிங்கம் ஐ.ஏ.எஸ் ஒரு ரோல்மாடல் பெர்சனாலிட்டி!

பின் குறிப்பு:
ராஜலிங்கத்தின் தந்தை சுப்பையா சொன்ன ஒரு விஷயம் சிலிர்ப்பானது.
‘‘கடையநல்லூர் முனிசிபாலிட்டியில் ஒரு சாதாரண பில் கலெக்டரா இருந்தப்போ உயர் அதிகாரிகளின் அறைக்கு போறப்போ செருப்பைக் கழட்டிட்டுதான் போகணும். ரொம்ப அவமானமா இருக்கும். எப்படியாச்சும் படிச்சு நல்ல பதவிக்கு போகணும்னு நினைப்பேன். அதுக்காக கஷ்டப்பட்டு படிச்சு பி.ஏ பாஸ் பண்ணி வங்கித் தேர்வு எழுதி இந்தியன் பேங்க்ல வேலைக்கு சேர்ந்தேன். என் அளவுக்கு அது பெரிய சாதனையா இருந்துச்சு. நம்ம மகனும் பெரிய நிலைமைக்கு வரணும்னு நினைச்சேன். என் மகன்கிட்டே எப்பவும் மார்க்குக்காக.. ரேங்குக்காக திட்டினதில்லை. சின்னவயசுல குறைஞ்ச மார்க் வாங்கிட்டு வந்து நின்னப்போகூட ‘நமக்குப் படிப்பைத் தவிர எந்த சொத்தும் இல்லைப்பா. உன்னுடைய வாழ்க்கையை நீதான் தீர்மானிக்கணும்னு மட்டும் சொன்னேன். இன்னிக்கு ஐ.பி.எஸ் அதிகாரியா ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணி சாதிச்சுட்டான்!’’ என்று ஈன்ற பொழுதிற் பெரிதுவந்தார்.

1 கருத்து:

Happy Smiles சொன்னது…

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 

(Pls ignore if you get this mail already)