ஞாயிறு, 7 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா...எனக்குப் பிடிச்சிருக்குப்பா!

"ஜெஸ்ஸி.. ஐயம் இன் லவ் வித் யூ..அன்ட் ஐயம் க்ரேஸி எபௌட் யூ!"
"இது சரியா வராது கார்த்திக்..அப்பாவுக்கு தெரிஞ்சா கொன்னு போட்டிருவார்.. விட்டுரு கார்த்திக்!"
"ஜெஸ்ஸி.. ஐயம் இன் லவ் வித் யூ..அன்ட் ஐயம் க்ரேஸி எபௌட் யூ!"
"இது சரியா வராது கார்த்திக்..அப்பாவுக்கு தெரிஞ்சா கொன்னு போட்டிருவார்.. விட்டுரு கார்த்திக்!"
 - திரும்பத் திரும்ப இதே தொனியில் படம் நெடுகிலும் ஹஸ்கி வாய்ஸில் பேசிக் கொள்கிறார்கள் 22 வயது சிம்புவும் 23 வயது த்ரிஷாவும்! வழக்கமான ஸ்டைலில் ஆங்கிலத்திலலேயே டயலாக் எழுதி இதிலும் கொஞ்சம் படுத்தி எடுத்திருந்தாலும் ப‌டமாக்கியவிதத்தில் கௌதம் மேனன் ஜெயித்திருக்கிறார்.
"உலகத்திலே எத்தனையோ பொண்ணுங்க இருக்குறப்போ ஜெஸ்ஸிய மட்டும் ஏன் நான் லவ் பண்ணேன்?" என்று படம் நெடுகிலும் சிம்பு தனக்குத்தானே கேட்டுக் கொள்வது கவிதை. சிம்புவுக்கு நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்திருக்கிறார். சிம்புவின் கேரியரில் த பெஸ்ட் மூவி! இப்படியே நடிப்பைத் தொடர்ந்தால் டீன்டிக்கெட்டுகளின் ஏகதேச தலைவனாக மாறிவிடுவார். ஹாட்ஸ் ஆஃப் சிம்பு!   த்ரிஷாவை கியூட்டாக காட்டி இருப்பது கேமராமேன்தான்! படத்தின் இரு பெரும் பலங்கள் மனதை வருடும் இசையும், நெஞ்சை நிறைக்கும் ஒளிப்பதிவும்தான்!ஆலப்புழாவாகட்டும் ஆஸ்திரியாவாகட்டும் (ஒரு ரைமிங்குக்காக ஆனாவுக்கு ஆனா போட்டேன். ஓமணப்பெண்ணேவும் ஹோஸன்னாவும் மால்டாவில் படமாக்கப்பட்டது) கேமராவால் படத்துக்கு ரிச்னெஸ் கொடுத்திருக்கிறார்  மனோஜ் பரமஹம்ஸா. ஈரத்தில் டார்க் டோனில் நம்மை மிரட்டியவர் இதில் காதலின் வண்ணத்தை குழைத்து தந்திருக்கிறார். முழுப்படத்தையும் ரொமான்டிக்காக நீலம் மற்றும் வெள்ளைக் கலர்கள் டாமினேட் செய்ய ஒளிப்பதிவு செய்திருப்பதில் கவனம் ஈர்க்கிறார். இசை..ரஹ்மானின் மாஸ்டர் பீஸ்! ஒவ்வொரு பாடலிலும் எக்ஸ்பிரிமெண்ட் செய்து படத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறார் இசைப்புயல்.
படத்தின் இசைக்கென்று தனிப்பதிவே போடலாம். அவ்வளவு உயிர்ப்பான பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. பாடல்களில் 'ஹோஸன்னா'வில் ப்ளாஸேவின் ராப்பையும் விஜய் பிரகாஷின் மெலோடியையும் கதகளி ஆடவிட்டிருப்பதில் ரஹ்மானின் இசை ஆளுமை தெரிகிறது.மெட்டுக்குள் சிக்காத தாமரையின் வரிகளில் ஓமணப் பெண்ணே'‍ இந்தவருடத்தின் டாப் ஒன் லாலிபாப் மெலோடி!சிம்பு கொடுக்கும் உதட்டு முத்தத்தை காமாந்தமாக்காமல் ரொமான்டிக்காக்கியிருப்பதும் இசைதான்! உற்சாகமாக பாடி இருக்கிறார்கள் பென்னிதயாளும், கல்யாணி மேனனும்! ஸ்ரேயா கோஷல் துவங்கி வைக்கும் 'மன்னிப்பாயா' பாடலின் நடுவே இன்ப அதிர்ச்சியாக ஏ.ஆர் ரஹ்மானின் குரல் கேட்டதும் ராமநாதபுரத்திலும் முன்வரிசை ரசிகர்க‌ள் கைதட்டி மகிழ்கிறார்கள். நரேஷ் ஐயரின் 'கண்ணுக்குள்..', தேவனின் 'அன்பில் அவன்...' வழக்கமான ரஹ்மான் மெட்டுக்கள்! திருக்குறளை 'அன்பில் அவனில்' பாடலாக்கி இருப்பது சிறப்பு!கௌதம் மேனன் கேட்காமலே ஸ்பெஷல் கிஃப்ட்டாக 'ஆரோமலே..' பாட்டை தந்தாராம் ரஹ்மான். கேரளத்தில் நாட்டுப்புறப்பாடல் பாடுவதில் கில்லாடியான அல்போன்ஸை சரியாக‌ ஞாபகம் வைத்து பாடும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். பின்னணியில் கிடாருடன் அல்போன்ஸின் உச்சஸ்தாயி குரல் பாடலை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது.

இசை தவிர படத்தில் சில அம்சங்கள் புதுசாய் இருக்கின்றன. சிம்புவை காதலிக்க தூண்டிவிடும் கேமராமேன் கணேஷ் கேரக்டர் (படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராமே!) வாய்ஸ் ஓவரில் பேசும்போதுகூட மெல்லிய சிரிப்பு நமக்கு தானாய் வருகிறது. 'பேசு..நல்லா செல்போன்ல பேசு. ஒர்க்ல இருக்குறப்போ செல்போன்ல பேசுனா என்னை செருப்பால அடிக்கிற மாதிரி" என்று டைரக்டராகவே வரும் கே.எஸ்.ரவிக்குமார் கேரக்டரரை ஸ்கிரீன்ப்ளேயிலும் லீட் எடுத்துக் கொடுக்க பயன்படுத்தி இருப்பதில் கௌதம் மேனன் டச் தெரிகிறது. சிம்பு த்ரிஷா கல்யாணத்துக்குப் பிறகு வரும் ட்விஸ்ட் அருமை. ஆங்கில வார்த்தைகள் அதிகம் கலக்காமல், பின்பாதியை கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் படம் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். இன்றைய பெண்கள் காதலை புத்திசாலித்தனமாகவே அணுகுகிறார்கள்.. அதை அப்படியே காட்டுகிறேன் என்று த்ரிஷா கேரக்டரை கொஞ்சம் குழப்பி லூஸுப் பெண்ணாகவே காட்டி விட்டார் கௌதம். கொஞ்சம் சரிசெய்திருக்கலாம்.  காதலர்களுக்கு பிரச்னை வெளியில் இல்லை தாங்களேதான் என்பதில் சிம்புவின் கேரக்டர் அழகாய் நேரேட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சிம்புவைவிட்டு த்ரிஷா  விலகிச் செல்ல ஸ்கிரீன்ப்ளேயில் அழுத்தமான ஒரு காரணத்தை பளிச்சென  சொல்லவில்லை. திரும்பத் திரும்ப "இது நடக்காது கார்த்திக்" என்று த்ரிஷா ஒதுங்குவது வேதாளம் முருங்கைமரம் கதையாகத்தான் இருக்கிற‌து.ஆனாலும் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வியை எல்லா இளைஞர்களும் தங்களின் காதல்களோடு ஒப்பீடு செய்து பார்க்க வைத்திருப்பதில் கௌதம் மேனனுக்கு இது சக்ஸஸ்ஃபுல் சினிமா!
டி.வி.டிகள் பார்த்து படம் எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்தப் படத்தின்மூலம் பதில் தந்திருக்கிறார் கௌதம். அடுத்த தலைமுறை இளம் உதவி இயக்குநர்களின் பெர்ஷனல் கலெக்‌ஷனில் இந்தப் படத்தின் டி.வி.டி 'க்ளாஸிக்கல்' வகையில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும்!
விண்ணைத்தாண்டாவிட்டாலும் மண்ணைக் கவ்வவில்லை!

குறிப்பு:
படத்தை தெலுங்கிலும் 'யே மாய சேஸாவே!' என்ற பெயரில் எடுத்திருக்கிறார் கௌதம் மேனன்.
சிம்பு த்ரிஷாவுக்குப் பதில் நாக சைதன்யா(நம்ம நாகார்ஜூன்-அமலா பையனேதான்!), சாமந்தா. படத்தில் சிம்பு டைரக்ட் பண்ணும் படத்தின் ஹீரோ, ஹீரோயினாக வருகிறார்களே.. அவர்களேதான். தெலுங்கு வெர்ஷனில் சிம்பு த்ரிஷா நடிகர்களாக கெஸ்ட்ரோலில் வருகிறார்கள்!

கருத்துகள் இல்லை: