திங்கள், 23 மார்ச், 2009
தனுஷ்கோடி...ஆழிப்பேரலையின் மௌனசாட்சி...!
''காலின்கீழ் உருவி இழுத்த அசுரப் பிடியில்
உலகம் சுழன்று வீழ்ந்தேன்!
கரையெங்கும் கடலின் உமிழ்நீர்..
தலைக்கு மேலே காயடிக்கப்பட்ட வானம்..
கழன்று உருளும் மேக விரைகள்
அப்போதொரு சாம்பல் நிற
மழையும் பொழிந்தது!
சொதசொதக்கும் தன் கரை மணலில்
என்னை எறிந்து ஓர் எழுத்தை எழுதியது கடல்
சற்றுப் பொறுத்துத் தானெழுதியதைத்
தானே அழித்துக் கொண்டது!
உள்ளிழுத்த செருப்புக்கள் விழுங்கிய தீவுகள்
புதைத்த பிணங்கள் போல்
கிழிந்து தொங்கிச் சிரிப்பை நிறுத்தா
அதன் உதடுகள் போல..!"
- சன்னாசி என்ற கவிஞனின் சோக வரிகள்தான் இவை!
ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தின் தீய நாக்குகளில் தன்னை அழித்துக் கொண்ட நகரம் தனுஷ்கோடி! டிசம்பர் 24&ம் தேதி தனுஷ்கோடி ஊழிக் காற்றுக்கு தன்னை இரையாக்கிய 43&வது நினைவு நாள். 1964&ம் ஆண்டு அதே தினத்தன்று 1500 பேரின் உயிரைக் காவு வாங்கி வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் தன் பெயரையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து கொண்ட தனுஷ்கோடி என்னும் நகரத்தின் இன்றைய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா?
600 பேர்! அரசு ‘வாழத் தகுதியற்ற ஊர்’ பட்டியலில் இந்த ஊரையும் சேர்த்து வருடங்கள் பலவாகியும் இங்கிருந்த மீனவ குடும்பங்கள் வாழ்ந்தாலும் செத்தாலும் இங்கேதான் என்று வைராக்கியம் காக்கிறார்கள்..
ராமேஸ்வரத்திலிருந்து திருக்கை வாலைப் போல நீளும் கருத்த தார்ச் சாலை ‘முகுந்தரையர் சத்திரம்’ என்ற குக்கிராமத்தோடு முடிந்தே விடுகிறது. அதோடு சாலை வழியான இந்திய எல்லையும்! அங்கிருந்து 8 கிலோ மீட்டர்கள் கடல் நீரும் மணல் சேரும் கலந்த அகழிகளாகவே நீள்கிறது. பிரத்யேக மோட்டார் பொறுத்தப்பட்ட வேனில் ஜனக்குவியலோடு தொத்தியபடி பயணம் செய்தால் மட்டுமே அங்கிருந்து தனுஷ்கோடிக்குப் போக முடியும்.
காலையில் ராமேஸ்வரத்தில் சாப்பிட்ட சிற்றுண்டியும் கருங்காப்பியும் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத உருண்டையாக உறுத்தி பயமுறுத்தும் சாகசப் பயணம் அது!
‘‘சார்! கெட்டியா பிடிச்சுக்கங்க.. டாப்பு மேல உட்கார்ந்திருக்கீங்க. மணல்ல ஆடி அசைஞ்சு போறப்போ உலட்டும். கொஞ்சம் எசகு பிசகானா.. உங்க கேமராவை கடல் தண்ணிக்கு தாரை வார்த்துட வேண்டியதான்!’’& பயமுறுத்தினார் வேனில் கன்டெக்டராக(?) வேலை பார்க்கும் இளந்தாரி ஒருவர்! போகும் வழியில் மணலுக்குள் அடிக்கடி டயர் புதைந்து கொள்ள மரக்கட்டையை மணலில் போட்டு டயரை நகர்த்தி நகர்த்தி பத்து நிமிட பயணத்தை முக்கால் மணிநேரமாக நீட்டித்து கூட்டிச் செல்கிறார்கள் வேன் வாலாக்கள்.
முக்கால் மணிநேர குலுக்கல் பயணத்திற்குப் பிறகு தனுஷ்கோடியில் கால் நனைத்தோம். மூன்று புறமும் பொங்கு மாங்கடலாக காட்சியளிக்கும் அந்தப் பிராந்தியமே பிரளயப் பேரழிவின் மௌனசாட்சியாக இருக்கிறது. ‘உய்..உய்!’ என்று உறுமி கொட்டும் காற்று நமக்கு ஏதோ சேதி சொல்வதைப் போலவே இருந்தது.
‘‘என்ன சார்? பத்திரிகையா.. இன்னும் எத்தனை பேருதான் வருவீங்க? எங்களுக்குத்தான் விடிவு காலம் வரமாட்டேங்குது! நீங்களாச்சும் எங்க வாழ்க்கைப் பாட்டைப் பத்தி எழுதுங்க..புண்ணியமாப் போகும்!’’ உடுத்தியிருந்த கைலியை கூதக் காத்துக்கு வாகாக போர்த்தியபடியே வேண்டுகோள் விண்ணப்பம் வைத்தார் முனியராஜ் என்ற மீனவர்!
புயலில் சிக்கி உயிர்பிழைத்தவர்களில் இப்போதும் எஞ்சியிருப்பது 85 வயசான ஜெயினுலாபுதீன் என்ற பெரியவர். புழுதிக் காட்டில் கோழிகள் வரைந்த காலடித் தடமாய் அவர் முகத்தில் சுருக்க ரேகைகளை வரைந்திருந்தது காலம்!
‘‘இன்னமும் கண்ணுக்குள்ள அந்தக் காட்சி படமா நிக்குது தம்பி. ஆகாசத்துக்கும் பூமிக்குமா அலை எழுந்து வந்ததை பார்த்து ஈரக்கொலை நடுங்க சனமெல்லாம் சடுதியில ஓடுனதை என்னனு சொல்ல..? இங்கிருக்குற ரயில்வே டேஷன், மாட மாளிகைங்க.. மாதா கோயில் சர்ச்சு.. எல்லாம் கணப்பொழுதுல மூழ்கிப் போச்சு.. அப்படியரு ஆழித் தண்ணியை என் வாழ்நாள்ல கண்டதே இல்லையப்பா.. ராத்திரி ஒரு எட்டு எட்டரை மணி இருக்கும் இந்த ஊரு கடற்கரையில குச்சு வீடு கட்டி வாழ்ந்தோம் நானும் எம் பொஞ்சாதியும்! அன்னிக்கு ராத்திரி 8 மணி இருக்கும் ஏதோ மேகம் தெரண்டு வர்ற மாதிரி இருந்துச்சு.. 20 அடி ஒசரத்துல கடல்தான் பொங்கி வருதுனு உணர்ந்து.. எந்திருச்சு ஓடுறதுக்குள்ள மடேர்னு பொடனியில அடிச்சு தூக்கி வீசிப்புருச்சு.. லைட்டாங் கம்பியில தலை மோதியிருக்கு போல மயக்கம் தட்டிருச்சு. கண்ணை தொறக்க முடியலை. தண்ணி என்னை மூழ்கடிச்சுருச்சு. நா வலுவான ஆளு தம்பி.. ஒரு கையில கம்பியவும் இன்னொரு கையில பொஞ்சாதியையும் கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். எவ்வளவு நேரம் அப்படி இருந்தோம்னு தெரியலை.. ஒரு தக்கையை பிடிச்சுக்கிட்டு மிதந்து வந்து பக்கத்துல ஒரு கட்டிடத்து மேலே ஏறிப் பார்த்தோம்..ஆத்தீ! எங்கே பார்த்தாலும் தண்ணி.. தண்ணி!’’& புயலைப் பார்த்த மிரட்சியை கண்களில் இன்னமும் தேக்கி வைத்திருக்கிறார் ஜெயினுலாபுதீன்!
‘‘அப்போ தலை நீராட்டுக்கு ஜெமினி கணேசனும் சாவித்திரியும் தனுஷ்கோடி வந்து நீராடிப்புட்டு வானம் மசங்குன நேரம் கிளம்புறாங்க.. புயல் வந்து தாக்குது. கொஞ்சநேரம் தாமசம் ஆயிருந்தாலும் அன்னிக்கு அவங்க பொணமாயிருப்பாங்க.. நானும் எம் பொஞ்சாதியும் என்னோட சேக்காளி காளியும் மட்டுந்தேன் அன்னிக்கு பாக்கி. கடற்கரையில வாழ்ந்த மனுஷ மக்கள்ல ஒரு உசுரு தங்கலையே.. தண்ணி வடிஞ்சப்புறம் மாரளவு தண்ணியில உசிரை கையில புடிச்சுக்கிட்டு போனா பொணமா மெதக்குது. கால்ல ஏதேதோ தட்டுப்படுது. இந்த ஊருல வசதியா ஆள் அம்பு சேனைகளோட இருந்தவங்கள்லாம் துக்கிப் போட நாதியில்லாம மெதக்குறாங்க.. கழுத்துல காதுல மசி இருட்டுலயும் தங்கம் பளபளக்குது.. ராமேஸ்வரம் இருக்குற தெசையை கணிக்க முடியாம வானம் மப்பா இருக்கு.. அன்னிக்கு ராப்போதும் அப்புடியே போச்சு. நம்ம கதை அம்ம்புட்டுதான்னு நெனச்சுக்கிட்டேன். ஆத்தீ.. அப்பேர்ப்பட்ட சோளக்காத்தை என் ஆயிசுக்கும் கண்டதில்லை. தண்ணியில நீச்சல் அடிச்சு.. மரக்கிளையில தொத்திக்கிட்டுனு உசிரை நானும் எம்பொண்டாட்டியும் காவந்து பண்ணிக்கிட்டோம். மெள்ள மெள்ள கழுத்தளவு தண்ணியில நடந்து மூணாம் சத்திரம் வரைக்கும் வந்தப்புறம்தான் எங்களை மாதிரி நூறு சனமாவது தப்பிச்ச சேதி தெரிஞ்சது! அப்புறமா ராமேஸ்வரம் வரைக்கும் உசிரைக் கையில புடிச்சுக்கிட்டு வந்து சேர்ந்தோம். மக்கா நாளு என்னதான் ஆகிகிடக்கு தனுஷ்கோடினு பார்த்துட்டு வர நா மட்டும் எம்பொண்டாட்டியை சத்திரத்திலயே விட்டுட்டு போனேன்.. ஆத்தீ சடைசடையா பொணத்தைக் கழுகுங்க கொத்தி தின்னதை பார்த்துட்டு அழுத அழுகை இன்னிக்கு வரைக்கும் நா அழலைப்பு! ஒரு ரயிலையே கடலு வாரிக்கிட்டு போயிருக்கு.. நூத்தி சொச்ச சனத்தோட பொணத்தைக்கூட மீட்க முடியலையே.. எய்யா! செத்தும் கருமாயப்பட்டு போன மனுஷங்களைப் பார்த்தவன்யா நானு! அதை என்னனு சொல்லுறது! இப்போ நடந்த மாதிரி இருக்கு..’’ பேசிக் கொண்டே போனவர் தீர்க்கமான பார்வையை நம் மீது படரவிட்டபடி,‘‘இப்போ சுனாமி கினாமினு பயமுறுத்துறாங்கே! நாங்கள்லாம் அறுபத்தி நாளு புயலையே பார்த்தவங்கடா!’னு நினைப்பேன். வாழ்வோ சாவோ இந்த மண்ணுலயே போகட்டும்னு இந்தக் கட்டைய இங்கேயே கெடத்தி இருக்கேன்! நான் சாவைத் தொட்டுப் பார்த்தவன்யா.. நரகத்தை எட்டிப் பார்த்தவன்யா!’’ பேசும்போதே அவரையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது.
அவரிடமிருந்து விடைபெற்று ஊரை வலம் வந்தோம். நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியதற்கான பயங்கரத்தை பறைசாற்றுவதுபோல புயல் யானை துப்பிப் போட்ட சக்கையாய்.. எலும்புக்கூடாய் நிற்கின்றன சிதிலமான கட்டிட எச்சங்கள்!
‘‘ஏய் மேன்..திஸ் ஸ்ரைன் இஸ் மேட் அப் ஆஃப் கோரல் ரீஃப்ஸ்!’’ என்று தொட்டுப் பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தனர் வெளிநாட்டுப் பயணிகள்!
‘‘வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்ப்பா! கடுக்காயும் சுண்ணாம்பும் பவளப் பாறையும் கலந்து கட்டுனது இந்த பில்டிங்! சிமெண்ட்லனா இந்நேரத்துக்கு மண்ணுதான் மிஞ்சியிருக்கும்!’’\ சிதிலமான கட்டிடங்களைப் பார்த்து வியந்து கொண்டது டூரிஸ்ட் தம்பதி ஒன்று!
தனுஷ்கோடியைப் பொறுத்தவரை மறக்க முடியாத இடம் அரிச்சல்முனை. சர்ச்சைக்குரிய ராமர் பாலம் இருப்பதும் இதன் அருகில்தான்! ராமரின் கால் பட்ட இடம் என்பதால் சாமியார்கள் எப்போதும் தனுஷ்கோடிக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
ராமேஸ்வரத்திலிருந்து வாரம் ஒருமுறையாவது தனுஷ்கோடி வந்து இங்கிருக்கும் மக்களோடு தன் நேரத்தை செலவிடுகிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விவேகாநந்தா குடில் ஆஸ்ரமத்தை நடத்தி வரும் பிரணவாநந்தா என்றார்! போகிறபோக்கில் ஒரு வெள்ளைச் சாமியாரை அறிமுகப்படுத்தினார்.
‘‘தனுஷ்கோடி மக்களுக்கு சேவை செய்றதுக்காக சிகாகோலயிருந்து வந்திருக்கார். பேரு ஆத்மரூபானந்தா!’’ என்றார்.
அங்கிருந்து 15 கடல் மைல் தொலைவில் இலங்கை தெரிந்துவிடும்.. ஊசியின் நுனிஅளவு இருக்கும் அந்த இடத்தில்தான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அகதிகளாக வந்து இறங்குகிறது ஈழத் தமிழினம்! ‘‘என்னிக்காச்சும் தடதடனு சத்தம் கேக்கும். அரிச்சல் முனைகிட்ட ஏழெட்டு தீடைக இருக்கு.. பெரும்பாலும் நடுசாமத்துல இலங்கைலருந்து அகதி சனம் வந்து நிக்கும். கூப்பாடு கேட்டு அரிச்சல்முனையிலிருந்து வல்லத்துல போயி நாங்க அவங்களை மீட்டுட்டு வருவோம். இங்கிருக்குற அம்மனை வேண்டிக்கிட்டு தீடைகளுக்குப் போனா ஒரு குடும்பமாவது கள்ளத்தோணியில வந்து நிக்கும். அம்புட்டு கண்ணு ஆத்தாளுக்கு!’’ என்று சிலிர்க்கிறார் தனுஷ்கோடியில் வீற்றிருக்கும் கூனி மாரியம்மன் கோயில் பூசாரி வீரசிங்கம்!
160 குடும்பங்களுக்குக்கும் மீன் பிடிப்பதுதான் பிரதான தொழில். சங்கெடுப்பதும்.. இங்கு வரும் டூரிஸ்ட்டுகளுக்கு அழிந்து போன தேவாலயம், ரயில் நிலையம், துறைமுகக் கட்டிடம் போன்றவற்றை சுற்றிக் காட்டுவதும் உப தொழில்கள்.
‘‘சோளக்காத்து சீசன்ல மீன் பாடு இருக்காது.. அப்போதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். மத்தபடி கடல் தாயி வத்தாத செல்வத்தை வாரிக் கொடுக்குறா.. கன்டம்டு பண்ணின ஊருல இருக்காதீங்கடானு கவருமென்டு வெரட்டுது. நடராசபுரத்துல வீடு ஒதுக்கி கொடுத்துச்சு.. கடற்கரையைவிட்டு பல மைல் தூரத்துல இருக்குற நடராசபுரம்தான் எங்களைப் பொறுத்தவரைக்கும் வாழத்தகுதியில்லாத ஊருன்னு சொல்லிட்டு நாங்க போக மாட்டோம்னுட்டோம்! தாசில்தாருங்க எத்தனையோ பேர் வந்து ‘‘ஏப்பா.. இன்னும் மூணு நாளைக்கு புயல் ஆபத்து இருக்குப்பா.. மருவாதையா பொழைச்சுக் கெடக்குற வழியைப் பாருங்க..கௌம்பி வாங்கப்பா!’னு கேட்டுப் பார்த்து ஓய்ஞ்சு மாய்ஞ்சுட்டாங்க! வாழ்ந்தாலும் செத்தாலும் எங்களுக்கு தனுஷ்கோடிதான் எல்லாமே!னு சொல்லிப்புட்டு இங்கனயே கெடக்குறோம்’’ என்கிறார்கள் இந்த மீனவ குடும்பங்கள் ஒருமித்த குரலோடு!
அறிவியல் வளர்ச்சியின் பிரதிபலிப்பாய் ஒன்றிரண்டு வீடுகளில் டி.வி இருக்கிறது. ஆனால் மின்சாரம் இல்லாததால் பேட்டரி மின்சாரத்தை வைத்துக் கொண்டு டி.வி பார்க்கிறார்கள்.
‘‘நாப்பது ரூபாய்க்கு சார்ஜ் ஏத்துனா எட்டு நாளைக்கு டி.வி பார்க்கலாம்பு!.. என்ன சன் டி.வி செயா டிவி தான் தெரியாது. பொதிகை தான் நம்ம சாய்ஸ்!’’ என்கிறார்கள் இங்கு டி.வி வைத்திருக்கும் பெரும் தனக்காரர்கள்(?) இரண்டு பேர்!
பரிணாம வளர்ச்சியில் மிகுந்த பிரயத்தனப்பட்டு இப்போதுதான் ஒரு ஆரம்பப் பள்ளியை தனுஷ்கோடி அடைந்திருக்கிறது. நாம் போனபோது ‘அம்மா இங்கே வா வா!’ பாடியபடி இருந்தனர் வாண்டு பட்டாளங்கள்!
‘‘அரசாங்கத்தோட ஈராசிரியர் பள்ளித் திட்டத்துல இப்போதான் பள்ளிக்கூடம் வந்திருக்கு சார். புயல்ல தாக்குப் பிடிக்குற மாதிரி ப்ளைவுட் பீம்ல செஞ்சுருக்கு இந்தக் கட்டடம். நானும் செல்வமுருகேஸ்வரிங்கிற லேடீஸ் ஸ்டாஃப்பும் ராமேஸ்வரத்துலருந்து இங்கே பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வர்றோம். இங்கே தினமும் வந்துட்டு போறதே ஒரு பெரிய சவால் சார்! சில நேரம் கடல் தண்ணி ஊரைச் சூழ்ந்துக்கும்.. ஆனா பயமுன்னா என்னனு கேக்குற சனங்க இவங்க.. ‘என்னது கடலு பொங்குதா..அப்படியா?’னு கேட்டுட்டு ஏதோ பொங்கல் வைக்க சொல்லிவிட்ட மாதிரி தலையாட்டிட்டு அவங்க சோலிய பார்க்க போயிடுறாங்க.. அரசாங்கம் வீடு கொடுத்தாலும் அது வேணாம்னு இங்கே உட்கார்ந்திருக்காங்க.. பாவம்! ஆனா சிப்பி பொறக்கிக்கிட்டு படிப்பு வாசனையே இல்லாம ஒரு தலைமுறை போயிருச்சேங்கிற வருத்தம் இப்போ மறைஞ்சு போச்சு சார்.. அதான் சந்தோஷமா இருக்கு! எல்லோரும் தங்களோட புள்ளைங்களை படிக்க அனுப்புறாங்க.. நாங்களும் எங்களோட பொறுப்பை உணர்ந்துக்கிட்டு கஷ்டப்பட்டாவது தினமும் வந்திடுறோம். என்ன.. வீட்டைவிட்டு 6 மணிக்கு கிளம்புனாதான் இங்கே 9 மணிக்குள்ளாற பள்ளிக்குடத்துக்கு வரமுடியுது!’’ என்று சிரிக்கிறார் தலைமை ஆசிரியர்&கம்&ஆசிரியரான அமல்ராஜ்!
மெள்ள மெள்ள இருள் கவியத் தொடங்க.. ‘‘சார் சீக்கிரமா ஊரைவிட்டு கிளம்புங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல வேன் போக்குவரத்து நின்னுப்புடும். அப்புறம் இங்கனயே தங்க வேண்டி வரும்.. புயல்ல செத்தவங்களோட ஆவி உலாத்துதுனு பேசிக்கிறாங்க! அம்புட்டுத்தேன் சொல்லுவேன்!’’ சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு பெருசு போகிற போக்கில் விளையாட்டாய் கொளுத்தி விட்டுப் போக.. பயப்பந்து வயிற்றைக் கவ்வ.. அவர்களிடமிருந்து விடைபெற்று கிளம்பினோம்.
தூரத்து குடிசையின் பேட்டரி டி.வியில் பொதிகையின் ‘வயலும் வாழ்வும்’ ஓடிக் கொண்டிருந்தது.. நம் காதில் சன்னமாக எம்.எஸ்.வி&யின் குரல் கேட்டது.
‘‘தாய் நிலம் தந்த வரம் தாவரம்
அது தழைக்க தழைக்க
மகிழ்வாரே யாவரும்!
தந்தா தானே தந்தா தானே...’’
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
தங்களின் பதிவு என்னை தனுஷ்கோடிக்கு சென்று சுற்றிப்பார்க்க தூண்டுகிறது. இன்னும் நிறைய ஊர்களைப்பற்றி தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
மூர்த்தி
சென்னை
சோகத்தை தாங்கிய அழகிய பதிவு.
8 வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் சென்ற போது நண்பனுடன் தனுஷ்கோடி சென்றிருந்தேன்.... அது சுனாமிக்கு முந்தைய காலம், ஆகவே அதன் வலி அவ்வளாக தெரியவில்லை.....
சிப்பி பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு தலைமுறையை கல்வி சற்றேனும் புரட்டி போடட்டும்...
அற்புதமான பதிவுக்கு மனம் திறந்த வாழ்த்துக்கள்
mika unnathamaana pathivu tholare....naan naalai thanushkodi selkiren.....
கருத்துரையிடுக