சமீபத்தில் ஒருநாள் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு போய்விட்டு கீழக்கரையிலிருந்து சென்னை செல்லும் பேருந்தில் (TN 63 N 0812 குடந்தை கோட்டம் III-க்கு சொந்தமான அரசுப் பேருந்து, அதாவது பழைய மருதுபாண்டியர் போக்குவரத்துக் கழகம்) திரும்பி வந்து கொண்டிருந்தேன். ஜன்னலோர ஸீட் கிடைத்த பெருமிதத்தோடு கடைசி வரிசைக்கு முன்புள்ள ஸீட்டில் உட்கார்ந்தபடி பயணித்தேன். பேருந்து தேவகோட்டை பணிமனையைத் தாண்டியபோது வருணபகவான் தன் பார்வையை காட்டமாக வீசத் தோடங்கினான். மழை சுழன்றடிக்க.. ஜன்னல் வழியாக சாரல் உள்ளே வரத் தொடங்கியது. நான் அவசரஅவசரமாக ஜன்னல் கண்ணாடியை நகர்த்தி சாரலிலிருந்து தற்காத்துக் கொள்ள முயன்றேன். ‘ஏன்ணே!’- வடிவேலு ஸ்லாங்கில் பின்சீட்டுக்காரர் நம்மைத் தடுக்க.. அப்போதுதான் கவனித்தேன்.. இரண்டு ஜன்னல்களுக்கும் சேர்த்து ஒரு கண்ணாடி மட்டுமே இருக்கிறது என்பதை! பேருந்தின் முக்கால்வாசி ஜன்னல்களிலும் இதே நிலைமைதான்! சரி அவர் நனையக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் பக்கம் கண்ணாடியை நகர்த்திவிட்டு சீட்டை விட்டு விலகி கம்பியை பிடித்தவாறு பயணத்தை தொடர்ந்தேன். என்னுடன் கடைசி மூன்று வரிசை ‘ஜன்னல் பார்ட்டி’களும் சேர்ந்து கொண்டனர். மீதமிருப்பவர்கள் துண்டுகளாலும் கர்ச்சீப்பாலும் தலையை மறைத்தபடி பயணத்தை தொடர ஆரம்பித்தார்கள். முன்வரிசையில் இருந்தவர்கள் பின்வரிசையில் நின்றுகொண்டு பயணம் செய்த எங்கள்மீது பரிதாபப் பார்வையை வீசிவிட்டு தங்கள் தூக்கத்தை தொடர்ந்தார்கள். ஆனால் அந்தத் தூக்கம் பத்து நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை.சரியாக காரைக்குடியின் நுழைவாயிலை பேருந்து தொட்டிருந்த நொடியில் மழைநீர் மேற்க்கூரையின் இடுக்கிலிருந்து பேருந்து முழுக்க ஆங்காங்கே குளுக்கோஸ் டியூபிலிருந்து வடிவதைப் போல ஒழுக ஆரம்பித்தது. என்னையும் சேர்த்து கடைசி மூன்று வரிசையில் அமர்ந்திருந்தவர்களின் நிலைமை இன்னும் மோசம். கிட்டத்தட்ட பேருந்தின் கடைசிப் பகுதி ஷவர்&பாத் குளியல் நடத்தும் அளவுக்கு மாறிப் போயிருந்தது. நனைந்தவர்கள் அனைவரும் டிரைவரையும் கன்டெக்டரையும் பின்பக்கம் வருமாறு கத்தி கூச்சலிட்டவண்ணம் இருந்தார்கள். ‘யோவ்..! வண்டியை காரைக்குடி ஷெட்டுக்கு விடுங்கயா.. .புண்ணியமாப் போகும்!’ என்று கெஞ்சிப் பார்த்தவர்கள் ஒரு கட்டத்தில் ‘டேய்! 203 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கோமுடா..எங்களுக்கு பதிலை சொல்லுங்க.. வண்டியை காரைக்குடி ஷெட்டுல விட்டுட்டு வேற வண்டியை மாத்துங்க.. இல்லைனா நடக்குறதே வேற!’ என்று ‘டா’ போட்டு ஏக வசனத்தில் திட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் எந்த சலனமும் காட்டிக் கொள்ளாமல் கருமமே கண்ணாக வண்டியை ஓட்டியபடி இருந்தார் டிரைவர். ரோட்டை வெறித்து பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்தார் கன்டெக்டர்! கொதித்தெழுந்த பயணிகளில் சிலர் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பிக்க.. 60 சதவீதம் நனைந்திருந்த நான் டிரைவரிடமும் கன்டெக்டரிடமும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ‘இத்தனை திட்டுறப்பவும் பின்னாடி திரும்பிக்கூட பார்க்காம போய்க்கிட்டு இருக்குறது தப்பு சார்.. ஒரு ஒப்புக்காவது பின்னாடி வந்து பார்த்து உங்க இயலாமையை சொல்லி இருக்கலாம் இல்லையா?’ என்று அவர்களிடம் கேட்டேன். கிட்டத்தட்ட அழாத குறையாக பேச ஆரம்பித்தார்கள் இருவரும்!
‘‘மழைக்காலத்துல எங்களை இப்படி பயணிகள் திட்டுறதும் நாங்க அமைதியா போறதும் பழக்கமாயிடுச்சு சார்! எஙக பேரையெல்லாம் பத்திரிகையில போட்டுறாதீங்க..’’ என்றவர்கள் வண்டிவண்டியாய் சோகம் அப்பியக் குரலில் குமுறத் தொடங்கினார்கள்.
‘‘நாங்க என்ன சார் பாவம் பண்ணோம்? டிரைவர் கன்டெக்டர் ஆனதா? நீங்களாவது உங்க பத்திரிகையில நாலு வார்த்தை நறுக்குன்னு எங்க நிர்வாகத்தைப் பத்தி எழுதுங்க! எங்க நிர்வாகம்தான் இதையெல்லாம் சரி செய்யணும். கடந்த எட்டு வருஷமா இந்த ஓட்டை பஸ்தான் கீழக்கரையிலிருந்து சென்னைக்கு போய்க்கிட்டு இருக்கு. வெயில் காலமாச்சும் பரவாயில்லை. மழைக்காலத்தில இந்த பஸ்ல முதல் மூணு வரிசையைத் தவிர எல்லாமே ஒழுகும். இந்த கன்டிஷனைப் பார்த்துதான் இப்போலாம் காசு அதிகமா ஆனாலும் பரவாயில்லைனு பிரைவேட் வண்டியில மக்கள் போக ஆரம்பிச்சுட்டாங்க. இந்த பஸ் மட்டுமில்லை.. ராமநாதபுரத்திலே இருந்து சென்னைக்கு போற இரவு நேரப் பேருந்துங்க எல்லாமே ஓட்டை உடைசலாத்தான் கிடக்கு.. இந்த லட்சணத்திலே ‘டீசல் சிக்கனம் பண்ணுங்க, கலெக்ஷன் அதிகமா காட்டுங்க’ன்னு வார்த்தைக்கு வார்த்தைக்கு எங்களுக்கு கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக் கொடுக்குறாங்க. கொஞ்சம் வண்டியையும் நல்ல கன்டிஷன்ல வச்சுக்கணும்னு அதிகாரிங்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பா?’’ என்று கேட்டவர்கள் சின்ன இடைவெளிவிட்டு தொடர்ந்தார்கள்.
‘‘நாங்களும் மனுஷங்கதானே..! புதுக்கோட்டை டிவிஷன்ல ஒரு அதிகாரி டிரைவர் ஒருத்தரை டீசல் வேஸ்ட் பண்ணியதற்காக முட்டி போட வச்சு அவமானப்படுத்தின சம்பவங்களாம் நடந்தது. இவ்வளவுக்கு புதுக்கோட்டை டிவிஷன்ல ஓடுற பஸ்ல பாதிக்கும் மேல டப்பாவாத்தான் ஜன்னல்களுக்கு கண்ணாடி இல்லாம காத்தாட போய்க்கிட்டு இருக்கு.. லாபகரமா இயங்குறது சரி.. வசதியாவும் போகணும்னு பொறுப்பு வேணாமா?.. எங்களை மட்டும் குத்தம் சொல்லி என்ன ஆகப் போகுது!’’ என்று விரக்தியும் ஆவேசமும் கலந்த குரலில் சொன்னார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு ஆமோதித்த கூட்டம் லேசாக ஆசுவாசமாகி கோபத்தை நிர்வாகத்தின் பக்கம் திருப்பிக் கொண்டது.
‘‘இந்த வண்டியை காரைக்குடி ஷெட்டுக்குத் திருப்பி வேற வண்டியை மாத்திட்டு போரதெல்லாம் ஆகாத காரியம். அவ்வளவு ஏன் அங்கேயும் இதைவிட மோசமான வண்டிகள்தான் நிக்கும். சென்னைக்கு போற ‘லாங் டிராவல்’ வண்டியோட லட்சணமே இப்படின்னா.. அங்கே நிக்குற வேற வண்டிகளைப் பத்தி சொல்லித்தான் தெரிஞ்சுக்கணுமா?’’ என்று தன் கருத்தை சொன்னார் பயணி ஒருவர். நான் அங்கிருந்தவாரே நண்பர்கள் மூலமாக காரைக்குடி தலைமை அலுவலக அதிகாரிகளின் செல்போன் மற்றும் லேன்ட்&லைன் நம்பர்களை வாங்கி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றேன். இரவு நேரம் என்பதால் அனைத்து எண்களும் ‘ரிங்’ போய் கட் ஆனது. பேருந்தும் காரைக்குடியைத் தாண்டி புதுக்கோட்டை டூ திருச்சி சாலையில் மழையில் நனைந்தவாறு வேகமாக போய்க் கொண்டிருந்தது.
சரியாக ஒரு மணிநேரம் கழித்து திருச்சி புறவழிச் சாலையைப் பேருந்து தொட்டபோது மழை விட்டுவிட.. சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் பயணிகள். இருக்கைகள் காயும்வரை நின்றவாறு பயணம் செய்துவிட்டு பயணத்தை தொடர்ந்தபோது நள்ளிரவைக் கடந்திருந்தது.
மறுநாள் காலை சென்னை வந்து இறங்கியதும் முதல் வேலையாக காரைக்குடியில் இருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக குடந்தை-III-ன் பொது மேலாளர் குணசேகரனை தொடர்பு கொண்டு என் அவஸ்த்தை அனுபவத்தையும் ஊழியர்களின் குமுறல்களையும் எடுத்துச் சொன்னேன். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர்,
‘‘மிக நீண்ட தூரம் போகும் பேருந்துகளில் இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்பதை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி! இனி கீழக்கரை பேருந்து மட்டுமல்ல.. ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு போய் வரும் எங்கள் கழகப் பேருந்துகள் அனைத்தும் சீர் செய்யப்படும். அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கிறேன்’’ என்றார் பொறுப்பாக!
நல்ல விஷயம் நடந்தால் சரி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் அடுத்த சில நாட்களில் அதே பேருந்தில் ஊருக்கு போகும் அதிர்ஷ்ட(?)மான வாய்ப்பு கிட்டியது. ஆனால் இம்முறை வருண பகவான் வரம் தரவில்லை. ஆனாலும் அதே ஓட்டை உடைசலோடு, குறைந்தபட்சமாகக்கூட மாற்றியமைக்கப்படாத அதே பேருந்தில்தான் போனேன்.. விதியை நொந்து கொண்டு!
ப்ளீஸ்! ‘இது உங்கள் சொத்து’ என்று பேருந்தில் எழுதிப் போடுவதோடு முடிவடைவதில்லை அதிகாரிகளாகிய உங்களின் கடமை. அது உங்கள் சொத்து என்றும் நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கும்.. எல்லோருக்கும்.. இந்த நாட்டுக்கும் நல்லது!
- தெக்கத்திப் பையன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக