செவ்வாய், 24 மார்ச், 2009

யாவரும் நலம்- சற்றே தாமதமான விமர்சனம்


சமீப காலங்களாக என் கண்ணைச் சுற்றி ‘ரத்தக் கண்ணீர்’ எம்.ஆர்.ராதா ரேஞ்சுக்கு ஒரு கருவளையம் உருவாகி விட்டது. உடனே இந்தப் பதிவை படிப்பவர்கள், ‘அட பயங்கர வேலைக்காரனா இருப்பானோ?’ என்று நினைக்க வேண்டாம்! விஜய், சிம்பு வகையறா படங்களுக்குப் போய் கும்மாங்குத்து வாங்கியதால் வந்த ‘கறு’வினை அது! ‘யாவரும் நலம்’ படத்துக்கும் இப்படித்தான் நண்பர்களோடு ஒரு கட்டாயத்தோடு செல்ல வேண்டிய சூழல். சத்யம் தியேட்டர் இன்டெர்வெல் ஸ்நாக்ஸ§க்காகவாவது இந்த தியாகத்தை செய்யலாம் என்ற நினைப்பே அப்போது மேலோங்கி இருந்தது. ( ஏனென்றால் நான் படம் பார்த்தது ரிலீஸ் தேதி.. ஈவ்னிங் ஷோ!)
படம் முடிந்தபிறகுதான் தெரிகிறது இந்தப்படத்தைப் பார்த்த ‘யாவரும் நலம்’ என்று! தியேட்டரில் அப்ளாஸ் மழை! அத்திபூத்தாற்போல பூத்து நிற்கிறது தமிழ் சினிமா தோட்டத்தில் ஒரு ‘த்ரில்லர்‘ பூ!
இதோ அடியேனின் சற்றே தாமதமான அதே சமயம் சுவாரஸ்யம் குறையாத விமர்சனம்:
ஹாலிவுட் ஆரம்பித்து வைத்த அதே 13 நம்பர் பேய்வீட்டுக் கதை தான் ‘யாவரும் நலம்’. ஆனால் திரைக்கதை திருப்பங்களிலும் டெக்னாலஜி ட்ரீட்மெண்ட்டிலும் ரோலர் கோஸ்டர் சவாரி எஃபெக்ட் கொடுக்கிறது இந்த பேய் வீடு!
அழகான என்ஜினீயர் மாதவன்.. தன் மனைவி, அம்மா, தங்கை, அண்ணன், அண்ணி, குழந்தைகளோடு லோன் போட்டு வாங்கிய 13 பி அப்பார்ட்மெண்ட் பிளாட்டில் குடியேறுகிறார். வீடு குடியேறிய முதல் நாளில் இருந்து பல அமானுஷ்ய சம்பவங்கள் மாதவனுக்கு நிகழ்கிறது.
பால் திரிவதில் ஆரம்பித்து தனக்கு மட்டும் லிப்ட் இயங்காமல் மக்கர் பண்ணுவது, செல்போன் கேமராவில் தான் எடுக்கும் படம் அஷ்டகோணலாய் தெரிவது என மாதவன் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது அடுத்தடுத்த சம்பவங்கள். பக்கத்து பிளாட்டில் வசிக்கும் பார்வையற்ற நபரின் நாய் வீட்டுக்குள் நுழையாமல் தலைதெறிக்க ஓடும் நிமிடத்தில் மாதவன் பொறி கலங்கிப் போகிறார். தன் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் விபரீதங்களுக்குக் காரணம் என்னவென்று கண்டுபிடிக்க விழைகிறார்.
‘யாவரும் நலம்’ என்ற ஒரு சீரியல் தன் வீட்டில் இருக்கும் டி.வி&யில் மட்டுமே ஒளிபரப்பாகிறது என்பதையும் அந்த சீரியலில் வரும் குடும்பம் அச்சுஅசலாய் தன் குடும்பத்தைப் போலவே இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். சீரியலில் தினமும் நடக்கும் சம்பவங்கள் மாதவனின் குடும்பத்திலும் தினந்தினம் எதிரொலிக்க... ஒருகட்டத்தில் சீரியலில் கொலைகள் விழுவதாக வர மாதவன் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கிறார். அந்த சீரியலில் வரும் நபர்கள் 30 வருடங்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டவர்கள் என்றும் அந்த குடும்பத்தைக் கொலை செய்தது யார், மாதவனுக்கும் அந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு. தனக்கும் தன் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் நிகழப்போகும் அந்த பயங்கரமான முடிவிலிருந்து தப்பித்தாரா? குடும்பத்தைக் காப்பாற்றினாரா? என்பதுதான் உறையவைக்கும் க்ளைமேக்ஸ். ஆனால் அந்த க்ளைமேக்ஸை சொல்வதற்குள் நம்மை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறார் இயக்குநர் விக்ரம்.கே.குமார் ( இவர் ஏற்கனவே சிம்புவை வைத்து ‘அலை’ என்ற மொக்கைப் படத்தை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)
‘த ரிங்’, ‘ஒன் மிஸ்டு கால்’ போன்ற ஆங்கிலப் படங்களின் தழுவலாக இருந்தாலும் இந்திய சினிமாவுக்கு இது ரொம்பவே புதுசு. ஹாலில் தேமேவென்று இருக்கும் டி.விக்கும் இத்தனை பயங்கரங்களுக்கும் என்ன சம்மந்தம் என்ற 30 வருடத்துக்கு முந்தைய பயங்கர ஃப்ளாஷ்பேக் மூலம் காட்டுவது நல்ல திரைக்கதை உத்தி. வெள்ளுடை மங்கை, ட்ரை ஐஸ் எஃபெக்ட்.. கோரமுக கொடூர டிராகுலாக்கள். என க்ளேஷயாய் எதையும் காட்டாமல் ஒரு டி.வி-யையும் அதில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலை மட்டுமே காட்டி பயமுறுத்தியதற்காக இயக்குநர் விக்ரம் கே குமாரை கியூவில் நின்று கைகுலுக்கலாம்!
மாதவனுக்கு இந்தப்படம் மைல் கல். டி.வி சீரியல் விபரீதத்தை தன் குடும்பத்தினருக்கு சொல்லவும் முடியாமல், எதிர்கொள்ளவும் முடியாமல் கதிகலங்கும் கேரக்டரில் பின்னுகிறார் மனிதர். 13-வது ஃப்ளோருக்கு படியேறி வந்து மூச்சுவாங்கி பரிதாபப்படவைக்கும் மாதவன், ‘சமையல் புத்தகம்’ என்று சொல்லி மனைவி நீத்து சந்திராவிடம் காமசூத்ரா கிஃப்ட் கொடுத்து ‘விருந்து’ கேட்குமிடத்தில் காலேஜ் பொண்ணுங்களை போகிற போக்கில் பொறாமை பட வைக்கிறார். அச்சம், குழப்பம், பரிதவிப்பு, பரிதாபம் என்று கலவையாய் உணர்ச்சிகளைக் கலந்துகட்டி நடிப்பில் சிக்ஸர் அடித்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நகர்த்திச் செல்வதில் மேடி மெனக்கெடல் அபாரம்! வெல்டன் மேடி!
மனைவியாக வரும் நீத்து சந்திரா வடக்கத்திய வயாகரா. பாடல் காட்சியில் மட்டும் தாராளம். அம்மா சரண்யாவும் அவரது சீரியல்மோகமும் அப்படியே தமிழ்ப் பெண்களின் பிரதிபலிப்பு. முழுப்படமும் மாதவனைச் சுற்றியே நடப்பதால் மற்ற யாவரும் கேரக்டர்களாகவே வந்து போகிறார்கள்.
ஃப்ளாஷ்பேக்கில் தக்கனூண்டு நேரம் சீரியலில் வரும் குடும்பம்தான் என்றாலும் நடிகர் வசந்த் அன்ட் கோ குடும்பம் கண்களில் மின்னலாக மின்னி மறைகிறார்கள். திடுக் திருப்பங்களோடு சீரியஸாய் நகரும் திரைக்கதையில் மாதவனின் சப்&இன்ஸ்பெக்டர் நண்பராக வருபவர் லேசாக சிரிக்க வைக்கிறார். ‘‘டெய்லி சீரியலைத் தவறாம உன் குடும்பத்தைப் பார்க்கச் சொல்லுடா. முக்கியமா அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு ஏதாவது ஆபத்துன்னா சொல்லச் சொல்லுடா’’ என்று மாதவனிடம் சொல்லும் காட்சி செம காமெடி.
க்ளூக்களோடு நகரும் திரைக்கதை உத்தி தமிழ் சினிமாவுக்கு ஃப்ரெஷ் ஐடியா! பின்னர் சஸ்பென்ஸ் உடையும் காட்சிகளால் முதல் பாதியில் இருந்த தொய்வைப் போக்கி இரண்டாம் பாதிக்கு விறுவிறுப்பு கூட்டுகிறது.
படத்தின் ஹீரோ பி.சி.ஸ்ரீராம் தான் என்று நினைக்கத் தோன்றுகிறது. டைட்டிலில் பி.சி.ஸ்ரீராம் பெயர் போடும்போது சத்யம் ரசிகர்கள் கை தட்டி மகிழ்கிறார்கள். ( ‘எப்படியும் நீ எங்களை மயக்கி அசத்தப்போறே!’ என்ற நினைப்பின் விளைவு இது!) கதையோட்டத்துக்காக இந்தப் படத்தில் பி.சி பயங்கர பிஸி. தன் கேமரா கோணங்களாலேயே திகில் கிளப்புகிறார். உறைய வைக்கும் அந்த ரத்தமய ப்ளாஷ்பேக் காட்சிகளை ப்ளாக் அன்ட் ஒயிட்டில் காட்டி இருப்பதில் தெரிகிறது அவர் ஆளுமை!
மனைவியை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு அவள் பிழைப்பாளா, இல்லையா என்று தெரிந்துகொள்வதற்காக அவசர அவசமாக வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்து வீட்டில் மாதவன் சீரியல் பார்க்கும்போது தியேட்டரில் திகிலையும் தாண்டி சிரிப்பு வருவது திருஷ்டி பரிகாரம்.
நல்ல திரைக்கதையில் சில லாஜிக் பொத்தல்கள். மாதவனைவிட தினமும் வாடிக்கையாக சீரியல் பார்ப்பது அவர் வீட்டுப் பெண்கள்தான். ஆனால் அவர்களுக்குச் சீரியலுக்கும் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விபரீதங்களுக்கும் இருக்கும் தொடர்பு கடைசி வரை புரியாமல் போவது பெரிய புதிர்தான். எதுவுமே தெரியாமல் சோபாவில் உட்கார்ந்து அவர்கள் டி.வி பார்ப்பது ஓவர்டோஸ்தான். அதேபோல சீரியல் பற்றி மணிக்கணக்கில் தோழிகளிடம் போனில் அரட்டை அடிக்கும் அவர்கள் ‘யாவரும்நலம்’ என்ற சீரியல் தங்கள் வீட்டில் மட்டுமே ஒளிபரப்பாவதை எப்படி தெரியாமல் போவார்கள்? ‘காகிதமலர்‘ சீரியலைப் பற்றி ஊரில் உள்ள உறவினர்களிடம் ஃபோன் செய்து விசாரிக்கும் சரண்யா, ‘யாவரும் நலம்’ சீரியலைப் பற்றி மட்டும் டிஸ்கஸ் பண்ண மாட்டாரா என்ன?
திகில் படத்தின் பலமே பின்னணி இசைதான். ஓரளவு ஓ.கே சொல்ல வைத்திருக்கிறது டப்பி&பரிக் கூட்டணி இசை! ஸ்ரீகர் பிரசாத்தின் கட்டிங் எடிட்டிங் படத்தின் மற்றொரு பலம். சங்கர்- இஷான்- லாய் மியூஸிக்கில் படம் முடிந்த பிறகு வரும் டைட்டில் கார்டு பாட்டு செமத்தியாய் ஈர்க்கிறது.
மொத்த கதையும் லாஜிக் மீறிய சம்பவங்களின் கேர்வைதான். ஆனாலும் படு சுவாரஸ்யமான படம்! ஆவி அமானுஷ்யம் பற்றிய குடும்ப டாக்டரின் சற்றே நீளமான லெக்சர் ஆரம்பத்தில் கொட்டாவியை வரவழைத்தாலும் அவர் லெக்ச்சரால் ஏற்படும் திடுக் திருப்பங்கள் மொத்தப் படதையும் தம் கட்டி இழுத்துச் செல்கிறது.
முன்பாதி கதை பழுதான லிஃப்ட் என்றால் பின்பாதிக் கதை சீறிப்பாயும் ஜெட்!
சரி படம் ரிலீஸாகி இத்தனை நாளாச்சு படம் சிட்டியில் மட்டும்தான் நல்லா ஓடுதா என்ற நினைப்போடு ராமநாதபுரத்துக்கு போன் போட்டால் நண்பன் சொன்ன வார்த்தைகள் இதுதான்:
‘‘நண்பா! அல்ஃபுர்க்கான் பிரியாணி சாப்பிட்ட ஃபீலிங்! தியேட்டர்ல கை தட்டி பின்னி எடுக்குறானுங்க!’’

அப்போ... யாவரும் நலம் படம் பார்த்த பிறகு நம் மனமும் உடலும் (காசும் நேரமும்கூட) நலமே!

1 கருத்து:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

படம் பார்ப்பதை பொல எழுதியுள்ளீர்கள்..