சனி, 23 டிசம்பர், 2006
கவிதைகள் சொல்லவா..?
வணக்கம் நண்பர்களே..நாளுக்குநாள் மில்லி மைக்ரான் அளவுக்கு என்னுடைய பிளாக் மெறுகேறுவதைப் பார்த்து எனக்கே என்னைப் பார்த்து ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. நான் வலைதளங்களின் மீதும் இலக்கிய உலகத்தின் மீதும் அதிகம் பரிச்சயமில்லாதவன். படித்தது என்ஜினீயரிங் என்றபோதிலும் நான் ஆளவந்தானாய் படிப்பு பாதி எழுத்து பாதி என்று இரண்டும் கெட்டானாகவே வளர்ந்தேன். ஒருவேளை கலைப் பிரிவில் கல்லூரி நாட்கள் கரைந்திருந்தால் இந்நிலைமை எனக்கு வந்திருக்காது. ஆனால் அந்த சூழல் எனக்கு வாய்க்கவில்லை. சே குவாராவைப் பற்றி என் கல்லூரிநாட்களின் இறுதியில்தான் முதல் வாசிப்பே நிகழ்ந்தது. ஜெயகாந்தனோ, புதுமைப்பித்தனோ அதுவரையில் நான் வாசித்ததில்லை. (ஜெயகாந்தனின் படங்களை மட்டும் முன்பே பார்த்திருக்கிறேன்.) ஈழப்பிரச்னையின் ஆணிவேர் புரிபட எனக்கு வெகுநாட்கள் ஆனது. எல்லா வாய்ப்புகளும் மிக தாமதமாக வாய்க்கப்பட்ட ஒரு தற்குறியாகத்தான் இப்போதும் வாழ்கிறேன். தன்னடக்கமல்ல..நிஜமும் அதுதான்! ஆனால் என்னுள் ஒரு தேடல் எப்போதும் இருக்கிறது. அதுதான் என்னை இயக்குகிறது. வல்லிகண்ணனையோ.. நாஞ்சில்நாடனையோ தேடிப் போய் வாசிக்க வைக்கிறது. மிக சமீபத்தில் சாணை பிடிக்கப்பட்ட கத்தியாக இருக்கிறேன்..(அதைவிட புதுச் செருப்புன்னு சொல்லலாமா?)என் இந்த வலைப்பக்கத்தில் மனதிற்குள் ஊறிய வார்த்தைகளை வடிகட்டாமல் அப்படியே பதிவு செய்யவே நான் விரும்புகிறேன். அது என்னை நானே சுயபரிசோதனை செய்து கொள்ளவும், என் எழுத்தின் தேர்ச்சியை முன்பு எழுதியதோடு ஒப்பீடு செய்து தெரிந்து கொள்ளவும் வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனாலேயே எந்தவிதமான rough draft-ம் எழுதிப் பார்த்துக் கொள்வதில்லை. பொறுத்தருள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இந்தப்பதிவில் என் முதல் கவிதைகளை உங்களுக்கு படையலிடுகிறேன். முன்பு ஒருமுறை முயற்சி செய்தது..இப்போது எழுதிப்பார்த்தபோது இன்னும் எனக்கு எழுத்து வசப்படவில்லையோ என்றே தோன்றுகிறது. என் கவிதைகள் வெகுசுமாராக இருப்பதாகவே தோன்றுகிறது. படித்துவிட்டு உங்கள் கருத்தை பின்னூட்டமிடுங்கள். அது எனக்கு ஊட்டச்சத்தாக இருக்கும்.
குறிப்பு: சிலவருடங்களுக்கு முன்பு இந்தக் கவிதைகளில் இரண்டை அண்ணன் அறிவுமதி அவர்கள் படித்துவிட்டு வெகுவாக பாராட்டி என்னை தொடர்ந்து எழுதச் சொன்னார். அவர் சொன்னதை இப்போதாவது நிறைவேற்ற முடிகிறதே என்று மனம் மகிழ்கிறேன்..
அதனால் என் கவிதைகள் அனைத்தும் அண்ணன் அறிவுமதிக்கே சமர்ப்பணம்!
-தெக்கத்திப் பையன்
------தேர்தல்------
பெயர்தான்
தேர்தல்
ஆனால்
இன்னும்
தேறியபாடாய்த் தெரியவில்லை!
----விபச்சாரி------
சிறுவயதில்..
தன் தம்பிகளை
உப்புமூட்டை
தூக்கிய அனுபவம்
உபயோகமானது
பின்னாளில்
பல உடல்களை
சுமப்பதற்கு!
---நான் பார்த்த கம்யூனிஸ்ட்?----
கசங்கல் சட்டை..
கிழிந்து நைந்துபோன உள்ளாடை..
சோப்பு பார்க்கா முகம்
முகமூடியாய் முகமுடி!
அரைசாண் வயிறு வற்றி
அரைஞாண் கொடி கழன்ற தேகம்
பிஞ்சுப்பார்வையில்
நச்சுக் கனல்!
ஜாதி பிரித்த காதலால்
பாதி கருகிய இதயம்!
முணுக்கென்றால்
முணுமுணுக்கும் உதடுகள்!
போதையின் விளிம்பில்
தள்ளாட்டம் கண்டு
வில்லாகிப் போன கால்கள்!
'கேபிடலிஸம்,இம்பீரியலிஸம்'
பேசத் தெரிந்த பாழாய்ப்போன மூளை!
தனிமை காண்டால்
வெறிக்கும் தீட்சண்ய விழிகள்!
உலகத்தின் பார்வையில்..
'பைத்தியக்காரன்!'
----சாதி----
'பறப்பய புள்ள..
பள்ளப்பய மவனே..'
-ரெட்டியாருக்கும்
செட்டியாருக்கும்
நடந்த சண்டையில்
நசுக்கப்பட்டன
நசுக்கப்பட்டன
என் பாட்டன் முப்பாட்டன்களின்
வீரிய விதை!
---சூத்ரதாரி---
கார்ல் மார்க்சு, லெனினுடன் திராவிடமும்
ஏகாதிபத்தியம், ஜனநாயகத்துடன்
கொஞ்சம் தமிழீழமும்
மேடையில் முழங்கும்-எங்கள்
மாண்புமிகு அரசியல் அபிமானி
சற்றே வீறுகொண்டு எழுவார்
ஒவ்வொருமுறை
பெண்களின் பின்புறத்தை
பார்க்கும்போது!
---நிதர்சனம்---
அசீத் குமாரு..
புள்ளி வச்ச சட்ட..
அரக்கு கலரு டவுசரு..
கேட்டுக் கேட்டு
அழுது அடம்பிடித்து..
அசந்து
ஓய்ஞ்சு போய்
தூங்குறான்
அம்மணமாய்!
நீ
உயர்ந்து ஜாதியா
நான்
உயர்ந்த ஜாதியா
என்ற பேதத்தில்
நாமிருவரும் தாழ்ந்துபோகிறோம்
அதளபாதாளத்தில்!
வந்தாரை வாழவைக்கும்
தமிழ்நாடு..
வாழவேவிடாது
தமிழனை மட்டும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
//'பறப்பய புள்ள..
பள்ளப்பய மவனே..'
-ரெட்டியாருக்கும்
செட்டியாருக்கும்
நடந்த சண்டையில்
நசுக்கப்பட்டன
நசுக்கப்பட்டன
என் பாட்டன் முப்பாட்டன்களின்
வீரிய விதை//
நல்ல கவிதை...தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்..
கருத்துரையிடுக