திங்கள், 25 டிசம்பர், 2006

ஒரு பாடம் போதாதா?

டிசம்பர் 3-ஐ ஞாபகம் இருக்கிறதா? ஆம். விஷவாயு என்னும் கொடூர அரக்கனின் கரங்களில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாக ஆன நாள்..1984 போபால் விஷவாயுக் கசிவு சம்பவம் வரலாற்றின் கறை படிந்த கருப்பு அத்தியாயங்கள். 22 ஆண்டுகள் முடிந்துவிட்ட சூழலில் நாம் ஏதாவது பாடம் கற்றுக் கொண்டோமா? இந்தக் கேள்விக்கு பதில் நம்மிடம் இல்லை நண்பர்களே..சுமார் 16ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம்பேர் வரை கொடூரமாக இறந்து போனதன் பின்னணியில் இருந்தது என்பது சூழ்ச்சியோ சதித்திட்டமோ இல்லை..'அலட்சியம்' என்ற ஒற்றை வார்த்தையின் பலனாக நிகழ்ந்த உலகின் மோசமான துயர சம்பவம் தான் இது! வரலாற்றில் மனிதர்களின் உச்சபட்ச அலட்சியத்தால் மோசமான பேரை போபாலுக்கு வாங்கிக் கொடுத்த இந்த சம்பவத்தைப் பற்றி கொஞ்சம் ப்ளாஷ்பேக்கில் சென்று பார்ப்போமா? யூனியன் கார்பைடு என்ற பூச்சிக் கொல்லி தயாரிப்பு நிறுவனம், போதுமான கட்டமைப்புகள் தொழில்நுட்பங்கள் இல்லாமல் வடிவமைக்கப்பட்ட மோசமான உற்பத்தி ஆலையை கொண்டிருந்தது. முதன்முதலில் 1978-ல் அலாரம் அடித்தது போல தொழிற்சாலையில் சின்னதாக தீப்பிடித்து இந்த விஷயத்தை எச்சரிக்கை செய்தது.. அந்த முதல் சம்பவமே பின்னால் நடக்கப்போகும் விபரீதத்தை மறைமுகமாக உணர்த்தியது. விஷ வாயு ஒரு லேயராய் போபால் எங்கும் பரவியதை ஒருவித துர்நாற்றம் காட்டிக் கொடுத்தது. நிலைமையின் விபரீதத்தை ராஜ்குமார் கேஸ்வானி என்ற பத்திரிகையாளர் மட்டும் உணர்ந்திருந்தார். அவர்தான் முதன்முதலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தைப் பற்றி 'ஜன்சட்டா' பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே எழுதினார். உள்ளே சென்று படங்களுடன் ஆதாரபூர்வமாக எழுத நினைத்தவரை போலீஸின் இரும்புக்கரம் கொண்டு அடக்கின பண முதலைகள். 1981 டிச.23-ம் தேதியன்று தொழிற்சாலையில் ஒரு இடத்தில் லேசாக விஷவாயு கசிந்து அதை சுவாசித்த ஒரு தொழிலாளி பலியானார். யூனியன் கார்பைடு கம்பெனியின் நிர்வாகத் தலைவர் வாரன் ஊமர் இது பணியாளரின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட சிறுவிபத்து என்று கூறி பணத்தை பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு கொடுத்து சரிக்கட்டினார்.
1982 பிப்ரவரி 10-ம் தேதி மீண்டும் விபத்து ஏற்பட்டு விஷவாயு கசிந்து 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். நிர்வாகம் இம்முறை இது எந்திரக் கோளாறு என பூசி மெழுகியது. அதோடு இந்த பூச்சிக் கொல்லி மருந்து ஆலை எல்லா தொழிற்சாலைகளும் வெளியிடும் அளவை விட குறைவாகவே நச்சுப்புகையை exhaust வழியாக விடுகிறது என்றும், கசிந்த வாயுவில் அனுமதிக்கப்பட்ட அளவில்தான் நச்சுத்தன்மை இருக்கிறது என்றும் போலியான ரிப்போர்ட்டை அரசிடம் சமர்ப்பித்து நல்ல பெயரை வாங்கிக் கொண்டது.
கடந்த 1982 நவம்பர் 5-ல் மீண்டும் ஒருமுறை விஷவாயு கசிவு ஏற்பட..இம்முறை பத்திபத்தியாக இந்நிறுவனத்தின் பேராபத்தைப் பற்றி எழுதினார் ராஜ்குமார் கேஸ்வானி
"யூனியன் கார்பைடு நிறுவனம்..போபால் மக்களின் உடலில் கட்டப்பட்ட டைம் பாம் போன்றது..எந்நேரம் வேண்டுமானாலும் வெடிக்கலாம்!"..என்று எச்சரித்திருந்தார்.
தொழிற்சங்கங்களும் இவருடைய குரலை பிரதிபலித்தன.மக்களிடையே வீதி நாடகம்,துண்டுப் பிரசுரம் என்று தங்கள் உக்கிரத்தை காட்டின. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அர்ஜுன்சிங் தலைமையிலான அரசாங்கம் 'இதெல்லாம் தேவையற்ற பயம்' என்று சப்பைக் கட்டு கட்டியது.மத்திய அரசு இந்நிறுவனத்தை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்தது. உண்ணாவிரதங்கள் கோஷங்கள் என்று தொழிற்சங்கங்கள் முனைப்புக் காட்டியதை பொறுத்துக் கொள்ளாத நிறுவனம், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் தடை செய்தது. எதிர்த்து பேசிய வாய்கள் எல்லாம் பணத்தால் அடித்து மூடப்பட்டன. இந்த பணமுதலைகளுக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் அடங்கிப் போனார்கள். ராஜ்குமார் கேஸ்வானி இந்தத் தொழிற்சாலையால் வரக்கூடிய ஆபத்துகளைப் பற்றி டாக்டரேட் பண்ணும் அளவுக்கு பத்திரிகைகளில் விரிவாக எழுதினார்.எல்லாம் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்காகவே போனது. பொதுநல வழக்கு,மனுக்கள் மேல் மனுக்கள் கொடுத்து ஓய்ந்து போனார்.முதல் அமைச்சர் அர்ஜுன்சிங், மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி போன்றோர்கூட இவரின் மனுவை பைத்தியக்காரனின் கூக்குரலாகவே கருதினார்கள். "நிர்வாகம் சீர்திருத்தப்படும், எந்திரங்கள் புதிதாக வாங்க வலியுறுத்தப்படும்" என்றெல்லாம் சொன்னார்களே தவிர பெரிதாய் ஒரு சிறு துரும்பைக்கூட இந்த விஷயத்தில் கிள்ளிப் போடவில்லை. "கார்பைடு தொழிற்சாலை வெளியிடும் மெத்தைல் ஐஸோ சயனேட்(MIC) அத்தனை கெடுதியானதல்ல. அது பற்றி போபால் மக்கள் கவலைப்படத் தேவையே இல்லை. அது தயாரிக்கும் வாயு.. விஷவாயுவே அல்ல." என்றார்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும்விதமாக! பத்திரிகையாளர் கேஸ்வானி இந்தூருக்கு தன்குடும்பத்தை அழைத்துக் கொண்டு கண்ணீரோடு கிளம்பிப் போனார். அவர் போன சில நாட்களில் அந்த சம்பவம் நடந்து உலகையே உலுக்கிவிட்டது. விழித்துக் கொண்ட மத்திய அரசு, ஆய்வு மேற்கொள்ள.. மாநில அரசின் மெத்தனப் போக்கு வெட்ட வெளிச்சமானது. கம்பெனி சேர்மனை இந்தியாவுக்கு வரவழைத்துக் கைது செய்தார்கள். "கூப்பிடும் போதெல்லாம் இந்தியா வருகிறேன்" என்றவரை அதற்குமேல் இந்தியாவில் பார்க்க முடியவில்லை.
இத்தனைக்கும் காரணமான யூனியன் கார்பைடு என்ற அந்த பன்னாட்டு கம்பெனி அரசிடம் ஒரு மன்னிப்புக் கூட கேட்கவில்லை. 470 மில்லியன் டாலர் நஷ்ட ஈட்டை மத்திய அரசிடம் கொடுத்தது. அது இன்னும் பாதிக்கப்பட்ட மக்களின் கைகளுக்கு கிடைக்கவில்லை என்பது தனிக்கதை! போபால் மக்கள் காந்திய வழியில் இன்னும் போராடி வருகிறார்கள். போதுமா ப்ளாஷ்பேக்..? அதுகிடக்கட்டும்.. இதேபோல இன்னொரு போபால் ஆகும் வாய்ப்பு தமிழ்நாட்டிலும் ஒரு ஊருக்கு இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆச்சர்யமாக இருக்கிறதா..?யூகிக்க முடிகிறதா? 'கடலூர்'தான் அது!இங்கிருக்கும் 'சிப்காட்' ஒரு உறங்கும் எரிமலையாகத்தான் இருக்கிறது. சிறிதும் பெரிதுமாய் முளைத்துவிட்ட தொழிற்சாலைகள் வெளிப்படுத்தும் விஷவாயு, கழிவு நீர் போன்றவை அருகிலிருக்கும் பல கிராம மக்களை கடுமையாக பாதித்துள்ளது. சமீபத்திய மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் வெளியிட்ட சர்வே ஒன்று பல அதிர்ச்சி அலைகளை எழுப்பி உள்ளது. இன்னொரு போபால் ஆகும் வாய்ப்பு கடலூருக்கு இருக்கிறது என்றும், அரசு இதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. உதாரணமாக 'சோனாஞ்சாவடி'என்ற கிராமத்தில் 8 வயது பெண் குழந்தைகள் பெரிய பெண்ணாகும் உடல்ரீதியான கோளாறுகளைக் கண்டறிந்துள்ளது. சிப்காட்டை ஒட்டியுள்ள பல கிராமங்களில் பலருக்கு மரபுசார்ந்த பிரச்னைகளையும் சில தொழிற்சாலைக் கழிவுகள் உண்டு பண்ணுகிறது என்கிறது இன்னொரு தனியார் சர்வே ஒன்று.
'DISASTER MANAGEMENT' எனப்படும் பேரிடர் மேலாண்மை என்பது நாசிக்கில் இருந்து கொண்டு 'சுனாமி, புயல் வரும்போது வெட்டவெளியில் படுப்பேன்..மரத்தடியில் நிற்க மாட்டேன்' என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக(?) நாளிதழில் விளம்பரம் கொடுப்பதுடன் தீர்ந்துவிடும் விஷயமில்லை.. வரும்முன் காப்பதுதான் அதன் முதல் தலையாய பணி. நெகட்டிவாக, லேட்டரலாக யோசிப்பது என்று இதன் அர்த்தம் ஆகாது! ஏனென்றால் சுனாமி என்பதே தமிழ்நாட்டில் பல உயிர்களைக் காவு வாங்கிய பிறகுதான் நமக்கு பரிச்சயமானது. அதற்கு முன் சுனாமி என்ற வார்த்தையே நமக்கு தெரிந்திருக்காது. எப்போதும் நாம் மோசமான நிகழ்வுகளுக்குப் பிறகுதான் பாடங்கள் கற்றுக் கொள்கிறோம்.
இன்னொரு சுனாமி வந்தால் தாங்காது என்று தெரியும் நம் புத்திக்கு..இன்னொரு போபாலையும் தாங்க முடியாது என்பது மட்டும் ஏன் விளங்கவில்லை..?
ஒரு பத்திரிகைக்காரனின் கூக்குரலை உணராததால் கிடைத்த மோசமான பாடம் ஒன்றே போதாதா?
- தெக்கத்திப் பையன்

கருத்துகள் இல்லை: