சனி, 16 டிசம்பர், 2006
தற்கொலை சொன்ன ரகசியம்..
ஜாசன் செல்சி..19-வயதான இங்கிலாந்தைச்சேர்ந்த இந்தப் பாலகனுக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு தலைசிறந்த ராணுவ வீரனாக வேண்டும் என்பதுதான் பெருங்கனவு.. ஆனால் அவனது வாழ்க்கைக்கு கோரமாக முடிவுரை எழுதிவிட்டது
அவனது தற்கொலை! இன்று உலகளாவிய விவாதமாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதுதான் விஷயமே! போரின் நிஜ,குரூர முகத்தை வெளிச்சமாக்கியது அவனது மரணம்.
பல கனவுகளோடு ராணுவத்தில் சேர்ந்தவனுக்கு அளிக்கப்பட்ட போர்பயிற்சிகள் நிறைய அவனை சிந்திக்க வைத்திருக்கிறது. அவனது பயிற்சி அதிகாரிகள்,'ஈராக்கில் நீங்கள் போரிடும்போது ஈவுஇரக்கமற்ற முறையில் போரிட்டுத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் எதிரிகள் நம்மை அளிக்க 3 வயதுக் குழந்தைகளைக் கூட ஆயுதமாக அனுப்புவார்கள். அதனால் சந்தேகப்படும்படி குழந்தைகளைப் பார்த்தால் சுட்டுப் பொசுக்குங்கள்..இல்லையேல் நம் வீரர்களில் ஒருவரை இழக்க நேரிடும்..சுருக்கமாகச் சொன்னால் உங்கள் நண்பருக்காக உங்கள் மனசாட்சியை அடகு வைத்துத்தான் ஆகவேண்டும்!'-இதுதான் அவர்கள்
ஜாசன் செல்சி போன்ற இளம்வீரர்களுக்கு எடுத்த பயிற்சியின் சாரம்..
கிட்டத்தட்ட குழந்தைகளை எப்படி அழிக்க வேண்டும் போன்ற போர்(?)ப் பயிற்சிகளைத்தான் அங்கு பாடமாக சொல்லிக் கொடுத்தார்கள்.
'சைல்ட் இஸ் எ டெட்லி வெப்பன்!' என்ற அவர்களின் தாரக மந்திரம் ஜாசனை நிலைகுலையச் செய்தது..புத்தி பேதலித்துப் போனான். சரியாக 5 மாதங்கள்வரை பொறுத்துப் பார்த்த அவன் ஒருநாள் அளவுக்கு அதிகமாக பெயின் கில்லர் மாத்திரைகளை விழுங்கியதோடு தன் மணிக்கட்டை அறுத்துக் கொண்டும் படு கோரமாக இறந்தும் போனான். ஜாசன் மரணத்தை சாதாரணமாக மனித உரிமை ஆர்வலர்கள் எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஜாசனது மரணத்துக்கு நான்கு நாட்களுக்கு முன் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் 1541 ராணுவ வீரர்கள் மனச்சிதைவு, மன அழுத்தம் மாதிரியான பிரச்னைகளில் அவதிப்படுவதாக புள்ளிவிபரத்தில் சொல்லியிருந்தார்கள்.
ஜாசனைப் பொறுத்தவரை குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே பார்க்கும் மனநிலையோடு ஒரு சராசரி மனநிலையோடு இருந்திருக்கிறான். இது அவனது சீனியர் அதிகாரிகளை எரிச்சல் உண்டு பண்ணியிருக்கிறது. குரூரமாக பல பாடங்களை அவன் மனதிற்குள் விதைக்க முற்பட்டிருக்கிறார்கள்..ஒருகட்டத்தில் அவனால் ராணுவத்தோடு மனமொன்றிப் போக முடியவில்லை. அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து இந்த மன அழுத்தத்துக்கு முடிவு கட்டியிருக்கிறான். இப்போது இந்தப் பிரச்னை ராணுவத்திற்கு கடுமையான தலைவலியை உண்டு பண்ணியிருக்கிறது. இவர்களின் எண்ணெய் வர்த்தக சித்து விளையாட்டில் குழந்தைகளின் உயிர்களும்..இதுபோன்ற அப்பாவி வீரர்களின் உயிர்களும் பகடைக்காய்களாக ஆக்கப் ப்ட்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான சோகம்..குழந்தைகளை ஆயுதங்களாக பயன்படுத்தும் கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணும் இதே வேளையில் குழந்தைகளை கொல்ல பயிற்சியளிக்கும் ராணுவ முறைகளுக்கும்..குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தும் தீவிரவாதத்துக்கும் என்றுதான் முடிவுரை எழுதப்படுமோ என்ற சிந்தனையும் எனக்குள் எழுகிறது. பதில் சொல்லுங்கள் நண்பர்களே..!!
கண்ணீருடன்..
ஆனியன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
நிறைய தகவல்களை உள்ளடக்கிய நல்ல கட்டுரை...தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக