சனி, 18 ஏப்ரல், 2009
சென்னை தாராவி!
சென்னை சென்ட்ரலுக்கு முன்னே இருக்கும் மேம்பாலத்தை கடக்கும்போது ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.. பூங்காநகர் ரயில்நிலையத்துக்குப் பக்கத்தில் கூவத்தின் கரையை ஒட்டி இருக்கும் சத்தியவாணிமுத்துநகர்.. அடிக்கடி என் கவனம் கலைக்கும் இடம்! சென்னையின் நரம்பாக பின்னிப் பிணைந்து கிடக்கும் கூவம் நதியின் கரையில் ஆஸ்பெஸ்ட்டாஸே வானமாய் வியாபித்துக்கிடக்கும் அந்த பரந்த சேரிப்பகுதியை சென்னையின் தாராவி என்றும் சொல்லலாம்! (இந்த நாத்தத்துல எப்படி இவங்க வாழுறாங்க!) சத்யவாணிமுத்து நகர்&காந்தி நகர் கிட்டத்தட்ட ஹைதராபாத்&செகந்தராபாத் போல அருகருகே இருக்கும் இரட்டைச் சேரிப்பகுதி.. ஆனால் இப்போது அப்படி சொன்னால் நம்மை அடிக்க வருவார்கள்! காரணம் சத்தியவாணிமுத்துநகரின் ஒருபகுதியில் மிடில்க்ளாஸ் குடும்பங்கள் இப்போது வாழ்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு அற்புதமான மனிதர் அங்குதான் வசிக்கிறார். ஆனால் கூவத்தின் கரையை ஒட்டி கிட்டத்தட்ட 2964 குடும்பங்கள்.. 15000 மக்கள் குட்டிக்குட்டி வீடுகளில் வசிக்கிறார்கள்.. அதில் பாதி பேர் 18 வயது நிறையாத சிறுவர்&சிறுமிகள்! அந்த சென்னையின் தாராவிக்கு போய்வர வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை சமீபத்தில் நிறைவேறியது.
ஒருநாள் காலையில் டோனி பாய்லை விஞ்சிவிடத் துடிக்கும் எண்ணத்தோடு அங்கே கிளம்பினேன்.
சூரியன் தன் பிஞ்சுக் கதிர்களை பாய்ச்ச எத்தனித்த ஒரு காலைப் பொழுதில் சத்தியவாணி முத்து நகருக்குள் நுழைந்தேன். புதுப்பேட்டை பாடலைப்போல கூறுபோட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மல்லிப்பூவிலும் கூவத்தின் வாசம் அப்பிக் கிடந்த ரகளை ஏரியாவென்றால் சும்மாவா? உள்ளே நுழையும்போதே காற்றினில் வரும் வாசமாய் முதலில் கூவம் கமகமத்தது. குழந்தைகளும் பெண்களும் குழாயடியில் குடங்களை பரத்தி வைத்து தண்ணீருக்கு வரிசைகட்டி நிற்கிறார்கள். சில பெண்கள் வீட்டின் வாசலில் அடுப்பை வைத்து தோசை.. பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தார்கள். நடந்து செல்லும் பிரதான சிமெண்ட் சாலையின் இருபக்கமும் அவசரத்துக்கு ஒதுங்கி இடத்தை அசுத்தமாக்கி வைத்திருந்தன ஏரியா வாண்டுகள்!
தொண்டு நிறுவனம் கட்டிக் கொடுத்துள்ள கழிவறை பீக் அவர் பிஸியில் இயங்கிக் கொண்டிருந்தது. பக்கத்திலேயே ஆயா ஒருவர் சுடச்சுட இட்லி&சட்னியையும், ஆப்பம்&தேங்காய்ப் பாலையும் ஓரமாக கடைவிரித்து பரபரப்பாக போணி பண்ணிக் கொண்டிருந்தார்.
‘‘ஏ.. சீக்கிரமா கொடுங்குறேன்ல.. பச்சப்புள்ளைய தொட்டில்ல போட்டுனு வந்துருக்கேன். வூட்டு ஆளு கௌம்பிடுவாரு ஆயா.. லேட்டாயிக்கினே இருக்கு பாரு! எட்டு ஆப்பம் ஸ்பீடா கொடு..’’ என்று அதட்டி வாங்கிச் செல்கிறார் ஒரு பெண்.
‘‘பார்த்து வாங்க சார்! அசிங்கம் கிடக்கு!’’ என்று எச்சரிக்கை மணி அடித்து அழைத்துச் சென்றார் ஒரு இளைஞர். கிட்டத்தட்ட பூ மிதிக்கும் உற்சவ எஃபெக்ட் கொடுத்தபடி தாவித்தாவி நடந்து கூவத்தின் கரையோரம் இருக்கும் அந்த நீ...ண்...ட 1000 மீட்டர் நீளம் 200 மீட்டர் அகலம் உள்ள தாராவி பகுதிக்குள் நுழைந்தேன். பத்துக்கு பத்து அளவில் மிகக்குறுகிய அறைகள்.. ஒரு சில வீடுகள் மட்டும் விதிவிலக்காய் சற்றே பெரிதாய் இருக்க.. நீளமாய் சங்கிலித் தொடர்போல குடியிருப்புகள் போய்க் கொண்டே இருக்கிறது.. ஒவ்வொரு வீட்டை கிராஸ் செய்யும் போதும் புதிதாய் ஒரு முகம்.. மலர்ச்சியாய்..மிரட்சியாய்..கேள்விக்குறியாய் பல கதைகள் சொன்னது!
எந்தத் தெருவில் ஆரம்பித்தேன்.. எங்கே நிற்கிறேன் என்று குழப்பி எடுத்துவிடும் ஆர்க்கிடெக்ட்.
‘‘கலீஜா இருக்குதுனு பர்க்குறீயா? எப்புடி இருக்கு எங்க ஏரியா.. மெர்சலா இருக்கா? இப்படித்தான் வாழ்றோம்..’’ வெண்கலக் குரலும் திமிங்கல உடம்புடன் பேசும் செல்வி ஒரு திருநங்கை!
‘‘கொஞ்சம் ஸ்பீடா வந்திருந்தேன்னு வச்சுக்கோ நீயும் அமீரை பார்த்திருக்கலாம் சார்! ராத்திரி முச்சூடும் ஷ¨ட்டிங் போச்சு. இப்போதான் அமீர் கார்ல ஏறிப் போறாரு!’’ என்று வாயில் நுரையுடன் சேர்த்து ராத்திரி ஷ¨ட்டிங் பார்த்த உற்சாகத்தையும் கொப்பளித்தார் பல்விளக்கிக் கொண்டிருந்த பாலு!
‘‘சார் நாஸ்ட்டா பண்ணு சார்!’’ என்றபடி பாசத்தோடு தோசை கொடுத்தார் அங்கிருந்த பாப்பம்மா என்ற பாட்டி! சற்றே நடுக்கத்தோடு வேண்டாம் என்றேன்.. பக்கத்தில் ஒரு சிறுமி கர்ம சிரக்தையாக இயற்கை உபாதையை போக்கிக் கொண்டிருக்க.. எனக்கு அடிவயிற்றுக்குள் என்னவோ பண்ணியது. ‘பரவாயில்லை..வேணாம்’ என்றபடி அவசராவசரமாய் மறுத்தேன்!
‘‘இன்னா சார் மெர்சலாயிட்டியா? துன்றப்போ அத்த ஏன் சார் நீ நெனக்குற..இன்னா பண்ணுறது கூவக்கரையில கருவாட்டுக்கவுச்சியல வாழ்றவங்க சார் நாங்க! இதெல்லாம் பழகிருச்சு.. சரி ந்தா.. இந்த டீயவாவது குடி!’’ மாவா தெறிக்க பாசமாய் பேசுகிற முருகன் நான் அந்த டீத் தண்ணியை குடித்து முடிக்கும்வரை என் பயோடேட்டாவைக் கேட்டு இன்புற்று ரிக்ஷா வலிக்க கௌம்பிப் போய்விட்டார்.
ஈசல் புற்றுக்குள்ளிருந்து விடுபடுவதைப் போல 8 மணிக்குள்ளே ஆண்கள் பிழைப்பைப் பார்க்க சாரைசாரையாக கிளம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். பெண்கள் தங்கள் குழந்தைகளை குளிப்பாட்டி சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்ப பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல சுட்டிக் குழந்தைகள் அடம்பிடித்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி ஓடிப் பதுங்கின்றன!
‘‘ஏ ஸ்வேதா! நல்ல புள்ளை தானே நீயி! பட்சாதான் டாக்டர் ஆவ முடியும் கண்ணு.. ஆயாவுக்குலாம் ஊசி குத்த முடியும்.. இல்லாங்காட்டி ஆயா நோவுல செத்துப்பூடும்ல.. கிளம்புடா எந்தங்கம்! பள்ளிக்கூடத்துக்கு சமர்த்தா போகலைனா மாமாகிட்டே உன்னை வித்துருவேன்...’’ என்று என்னைக் காட்டி தன் பிள்ளையை பயமுறுத்தினார் கல்பனா என்ற பெண். நானும் ‘பெப்பே’ காட்டி கண்களை உருட்டி முழிக்க.. அந்தக் குழந்தை எழுப்பிய கதறல் கூவம் தாண்டிச் செல்லும் ரயில் வரை நிச்சயம் கேட்டிருக்கும்!
‘‘எல்லா மதத்து ஆளுங்களும் இங்கே இருக்காங்கோ சார்.. எங்களுக்குள்ள எந்த சண்டையும் இதுநா வரை வந்ததில்லை.. சர்ச்சு, மாஸ§,கோயிலு எல்லாம் ஒரே எட்த்துல இர்க்கு பாரேன்! சிட்டியில 500 ரூபா வாடகைக்கு வூடுனா இங்கேதான் வந்தாகணும் தெர்மா! அடவு வைக்க கபூர் (சேட்டு) குடும்பம் இங்கே இருக்கு! முக்கால்வாசி பேரு கூலிவேலைக்கு போறவங்கதான். ரிச்சா ஓட்றது, கொழுத்து வேலை, கூலி வேலைனு இருக்கோம்.. ஒரு சில பேரு கவருமெண்டு வேலை வரைக்கும் இருக்காங்கோ! பொறந்ததுலயிருந்தே இங்கேதா கெடக்கோம். கவருமென்ட்டு எங்களுக்கு கரெண்ட் வசதி தண்ணி வசதி மட்டும் செஞ்சு கொடுத்திருக்கு.. ஆனா பாதி பேருக்கு மேலே ரேஷன் கார்டு இல்லை சார்.. ’’ என்றார் ஏகாம்பரம் தாத்தா பொக்கை வாயுடன்!
‘‘அப்பப்போ ஏதாவது தொண்டு நிறுவனத்து ஆளுங்க உள்ளே வந்து பார்த்துட்டு சுகாதாரமா இருக்கணும் மக்களே.. ‘கக்கூஸ்ல கக்கா போங்க..’, ‘வூட்டுக்குப்பின்னே உச்சா போங்க..’ன்னு வந்து கூவிக்கினு இருப்பாங்கோ. இங்கே இருக்குற சனங்களுக்கு ரெண்டே ரெண்டு கக்கூஸ்தான் இருக்கு.. அதுவும் நாலு வருஷத்துக்கு முன்னாடி தொண்டு நிறுவனம் கட்டிக் கொடுத்தது. ஆனா இப்போ அவங்களும் வர்றதில்லை. சனத்தொகை பெருகிப் போச்சு சார்!..’’ என்றார் தாமு என்ற இளைஞர். இவர் காந்திநகர் பகுதி ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பாளராக இருக்கிறார்.
‘‘என்னிக்காச்சும் ஓட்டுக்கோசரம் கட்சிக்காரங்க வருவாங்க.. அவ்ளோதான்! ரேஷன் கார்டு கேட்டு போய் நின்னாக்கா ஆபிஸருங்கோ ஏதோ பிச்சைக்காரங்கள பார்க்க சோல விரட்டுற மாதிரி அடிச்சி வெரட்டுறாங்கோ! கிஸ்னாயில், அரிசி இல்லாம இன்னாத்த சோறு காச்சுறது? ஏதோ கிடைச்சதை வச்சுக்கினு அன்னின்னிக்கு கஞ்சியைக் குடிச்சுகினு முடக்கிக்கலாம்னு பார்த்தா அதுக்கும் இந்த கவருமெண்ட்டு வக்கில்லாத வாழ்க்கையைத்தான் தருது!’’ உலர்ந்த சிரிப்போடு சின்னராசு என்பவர் சொல்ல ஆமோத்தித்து தலையாட்டினேன்.
‘‘என்னண்ணா சாராண்ட போய் நம்ம கஷ்டத்தை சொல்லி ஃபீலிங் காட்டுறே.. நாங்க இங்கே சந்தோஷமா தான் சார் இருக்கோம்..’’ என்றார் ‘கல்லறை’கருப்பன் என்ற வாலிபர்..ஏரியாவின் அறிவிக்கப்படாத ஆர்.ஜே. யார் கேட்டாலும் நின்று நிதானித்து ஒரு கானா பாட்டு எடுத்துவிட்டுச் செல்வதுதான் இவர் ஸ்பெஷாலிட்டி! அந்தப் பக்கம் கிராஸ் செய்தது ஷேர் ஆட்டோ ஒன்று ‘ஷேர்&ஆட்டோ பத்தி பாடு தலீவா!’ என்றேன்.
‘‘ஷேர் ஆட்டோ ஷேர் ஆட்டோ..
ஜனங்களுக்கு ஷேர் ஆட்டோ..
அஞ்சு ரூபா காசைக் கொடுத்தா
பறக்குறானே பிளேனாட்டம்!
ஏறிக்கம்மா ஏறிக்கம்மா ஏறிக்கம்மா
அந்த காசிமேடு, ராயபுரம் கல்மண்டபம்’’
& என்று ரகளையாக ‘மீனாட்சி மீனாட்சி..’பாடலை சபேஷ் குரலில் பாடி பட்டையைக் கிளப்பினார்.
‘‘இங்கிருக்குறவனுங்க ஒவ்வொருத்தனுக்கும் லவ் இருக்கு சார்.. நாகூட ஒரு ஃபிகரை டாவடிச்சேன்.. செம ஜிலாக்கி சார் அவ! ஹஸ்பன்ட் ஒஃய்பாவே வாழ்ந்தோம்னு வையி.. அவ பேரை நெஞ்சுல பச்ச குத்திக்கினு அலைஞ்சேன் சார். ஒர்நா..‘ஏ கருப்பா உனக்கு படிப்பு போதாது..என்னைய மறந்திடு!’னு பட்டுனு சொல்லிட்டு பறந்திட்டா! அவ நினைப்பாவே புத்தி பேதலிச்சு மென்டல் கணக்கா டோப்பு வலிச்சுனு திரிஞ்சேன் சார்! அப்பாலிக்கா உக்காந்து சுருவா யோசிக்காசொல்லொதான் ஒண்ணு வெளங்கிச்சு.. அவ மின்னாடி வாய்ந்து காட்டணும்னு.. கானாவ வெறி பிடிச்சு பாடிட்டு திர்ஞ்சேன்.. அவளை திட்டியே நூறு பாட்டுக் கட்டி இருக்கேன்.. கலைஞர் டி.வி கானாக்குயில் பாட்டு வரைக்கும் போய்ட்டு வன்ட்டேன்.. இப்போ இதே ஏரியாலதான் அந்த ‘டிச்சு’ இருக்கா.. ரெண்டு குழந்தைக்கு தாயாப்பூட்டா.. அப்புறமா மெல்லமா வந்து உரசப் பார்த்தா.. போடி சாவுகிராக்கினு சொல்லிட்டேன் சார்!’’ பெருமிதத்தோடு கலகலவென பேசுகிறார் கருப்பன்.
‘‘இப்போ போன மாசம் என் லவ் மேட்டரையெல்லாம் தெர்ஞ்ச பொண்ணை கண்ணாலம் கட்டிகினேன். வாழ்க்கை டக்கரா போய்க்கினு இருக்கு!’’ என்றவர்,
‘‘எங்க சேரியில பெருசா ப்ராப்ளம் எதும் இல்லை சார்.. பொஞ்சாதிகூட சந்தோஷமா இருந்தா பக்கத்துக்கு வூட்டுல தெரிஞ்சுப்புடும்னு ஒரு பயம் எப்பவும் இருந்துனே இருக்கும்! கோவாலு அண்ணா காலையில கண்ணடிச்சு சிரிக்கும்.. ‘நீ மட்டும் லேசா.. அன்னிக்கு மட்ட மத்தியானத்துல மேட்டினி ஷோ ஓட்டுனவன்தானே நீயி’!னு சொல்லி ஓட்டுவேன்.. அதெல்லாம் ஜாலிக்கு சார்! இவன் பொண்டாட்டியை அவன் வச்சுனுக்கிறான்.. அவன் புருஷனை இவ வச்சுனிக்கீறானு உங்க நூஸ் பேப்பர்ல போடுவீங்களே.. அப்படி கள்ளக் காதல் கண்றாவிலாம் இங்க கெடையாது சார். உழைச்சமா வந்து தூங்குனமா.. மறுநா பொயப்புக்கு போனோமானுதான் எங்க வாழ்க்கை ஓடுது.. இதுவரைக்கும் சாதிச்சண்டையோ.. மதச்சண்டையோ இங்கே வந்ததில்லை.. எவனாவது கஞ்சா வித்தான்.. மப்படிச்சு மல்லாந்தான்னுதான் போலீஸ§ பொட்டி கேஸ் போடும்! எங்கேயாவது ஊருநாட்டுல இருந்து ஓடியாந்த பசங்க பேப்பர் பொறுக்கிக்கினு மெல்ல மெல்ல இங்கே வந்து செட்டிலாகிருவானுங்க.. நந்தி சிலை மாறி எங்க ஏரியாவும் பெர்சாயிட்டு இருக்கு.. கடைசி வூட்டுல பலப்பம் கேட்டு அழுற கொழந்தை.. பொண்டாட்டிகிட்டே கட்டிங்குக்கு காசை உஷார் பண்ண கெஞ்சுனுக்கீற புருஷன், கொழம்புல பல்லி விழுந்துருச்சுனு கத்தினுக்கீற நாலாவது வூட்டு ஆயா, ஏப்பம் விடுற பக்கத்து வூட்டுக்காரர்னு ஒரு செகன்டுல லைன் வூடுல இன்னா நடந்தாலும் தெர்ஞ்சுபுடுதுல்லீயா. இப்படி கசகசனு கூட்டமா வாழ்றதான் சார் சொகம்!’’ என்று சொல்லி சிரித்தார்.
குப்பென்ற கூவத்தின் வாடை நாசியில் ஏற..மூக்கை எதேச்சையாக பொத்தினேன்.
என்னைப் பார்த்து தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த ராமசாமி என்ற பெருசு எழுந்து வந்தார்..
‘‘ந்தா.. இந்த கூவம் நாத்தம்தான் எங்களை நிம்மதியா வச்சுருக்கு! இது மட்டும் இல்லைனா பணக்கார கம்னாட்டிங்கோ இந்த எடத்தை ஃப்ளாட் போட்டு வித்து எங்க வாழ்க்கைல மண்ணை அள்ளிப் போட்டிருப்பானுங்கோ! நீங்கள்லாம் மூக்கைப் பொத்திக்கினு போறவரைக்கும்தான் நிம்மதியா பொயப்ப பார்க்க முடியும் வாத்யாரே!’’ என்று போகிற போக்கில் அதிர்ச்சியான மேட்டரை வீசிவிட்டுப் போனார்.
‘‘உண்மைதான் சார்! கூவம் நதி மட்டும் அழுக்கா இல்லைனா இந்நேரம் இந்தக் குடியிருப்புங்க எல்லாமே பில்டிங்கா ஆகி இருக்கும்! இதே கூவக்கரையில அடுக்கு மாடிக்கட்டிடங்கள் முளைச்சிருக்கும்.. எங்க சனங்கள்ல பாதிபேர் ப்ளாட்ஃபார்முக்கு வந்துர வேண்டியதான்! சொல்லப்போனா எங்க சனத்தை முதலாளித்துவ வர்க்கத்தோட ஆக்கிரமிப்பில இருந்து பாதுகாக்குற கவசமாதான் கூவம் இருக்கு!’’ கலைமணி என்கிற கம்யூனிஸட் தோழர் சொல்லச் சொல்ல சுற்றிலும் நின்றிருந்த அத்தனை ஜனங்களும் சிரிப்போடு தலையாட்டி ஆமோதிக்கிறார்கள்.
அங்கிருந்து கிளம்புவதற்கு முன் அந்தக் காற்றை ஆழ்ந்து சுவாசித்துவிட்டே வந்தேன்..
அந்த நெடி.. மக்களின் புழுக்கம், வீடு வந்து சேர்ந்த பின்னும் மனசைவிட்டு அகலவில்லை!
அடுத்தமுறை சென்டரல் போகும் வழியில் வலப்பக்கம் பார்த்தேன். அங்கே குடிசைகள் இல்லை.. எல்லாம் கோபுரங்களாய் தெரிந்தது எனக்கு!
பின் குறிப்பு:
இந்தப் பதிவுக்கு படங்கள் தந்து உதவும் பொருட்டு என்னைப்போல சத்யவாணி முத்து நகருக்கு விசிட் அடித்த அன்புத் தம்பி...நாளைய ஒளி ஓவியன் மாதேஷுக்கு நன்றிகள் பல!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக