வியாழன், 9 ஏப்ரல், 2009

சே குவேராவும் காரா சேகுவேராவும்!


தலைப்பைப் படித்து குழம்பிவிடவேண்டாம். இன்றைய தேதியில் கோடம்பாக்கம் முட்டு சந்துகளிலும் மூத்திர சந்துகளிலும் ஆஃப்பாயில் வித் ஆஃப் மானிட்டர் சரக்கு அடிக்கும் மப்பு மாப்பிள்ளைகளின் ஏகதேச அடையாள வார்த்தையாகிப் போனார் எர்னெஸ்ட்டோ சே குவேரா! அர்ஜென்டினாவில், கியூபாவில், பொலிவிய காடுகளில் புரட்சி முழக்கமிட்ட தோழர் சே குவேராவின் வாழ்க்கை சரித்திரம் இங்கு தேவையில்லை. சீமான் போன்ற தோழர்களால் அடிக்கடி நினைவூட்டப்பட்ட சே‍‍‍‍ குவேராவை அக்குவேரா ஆணிவேரா மாற்றிப்போட்ட பெருமை நம் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு சில‌ குவார்ட்டர் கோமான்களுக்கும் உண்டு. அவர்களைப்பற்றி மட்டும் இங்கு எழுத விரும்புகிறேன். சே குவேரா பேரைச் சொல்லி இங்கு அடிக்கும் கூத்துக்களை வெளிச்சமாக்கவோ அல்லது நாந்தான் சே வின் உண்மை விசுவாசி என்று கூறவோ இந்த பதிவில் விழையவில்லை. சற்றே என் ஆதங்கத்தை கொ(கு)ட்டும் எண்ணம் மட்டுமே என் நோக்கம்! என் ந‌ண்பன் ஒருவனே ஆகச்சிறந்த உதாரணம். நண்பர்களை உரிமையோடு குற்ற‌ம் சொல்லலாம் என்கிற அளவீட்டை உரிமையாக்கிக் கொண்டு இதை எழுதுகிறேன். என் நண்பனுக்கு நான் வைத்திருக்கும் பேர் காரா சேகுவேரா! பெயரா முக்கியம் சொல்ல வேண்டிய சங்கதிதானே ரொம்ப முக்கியம்! சில வருடங்களுக்கு முன்பு பழக்கமானான். நாளைக்ககே உலகம் அழிந்துவிடுவதைப்போல குடிப்பான். நடுநிசி 2 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்புவான். தூக்க களக்கத்தில் எடுத்துப் படித்தால், 'பொலிவியா காட்டில் புரட்சி வெடிக்குமா?' என்று ஒற்றைவரி ஆர்டிஎக்ஸ்! விடிந்ததும் அவனிடமே இதைப்பற்றிக் கேட்டால், ''நண்பா! நேத்து கொஞ்சம் மப்பு ஓவராயிருச்சு! சே மட்டுமே மனசில நின்னார். அதான் உங்களுக்கு மெஸேஜ் தட்டிவிட்டேன். எனக்கு என்னமோ ஒரு வைப்ரேஷன்...!" என்று ஜல்லியடிப்பான். ஆளும் தாடியும் சே வை நினைவுறுத்தும் அப்படி ஒரு ஆள் அவன். பாசம் வந்தால் கட்டிப் பிடிப்பான். மனசுக்குள் சில பல கெட்டவார்த்தைகளை உகுப்பேன். எப்போதும் ஒருவித பரபரப்போடு அழுக்குப் பையனாகவே திரிவான். கேட்டால், ''புரட்சிக்காரனுக்கு தூக்கம் ஏது குளியல் ஏது? எனக்கென்ன உங்களைப்போல காதலியா இருக்கு?" என்று எதிர்க்கேள்வி கேட்பான். ''இப்படி அழுக்கா திரியணும்னு சே சொன்னாரா?" என்று கேட்டால் முறைப்பான். உதவி இயக்குநராக துடிக்கும் அவனுக்கு
எந்த நேரமும் சரக்கடிக்கவேண்டும் என்ற ஆர்வம் எட்டிப்பார்த்துக் கொண்டே இருக்கும். சுப்ரமண்யபுரம் படத்தைப்போல 'பழக்கத்துக்காக' இவனை சகித்தே ஆக வேண்டிய கட்டாயம்! திடீரென்று லேண்ட் லைனிலிருந்து போன் பண்ணுவான். எடுத்துப்பேசினால் சரக்கு வேண்டல் விண்ணப்பம்!
உதாசீனப்படுத்தி கண்டுகொள்ளாமல் விட்டால் சே குவேரா உதிர்த்த வார்த்தைகளை தேடிப்பிடித்து எஸ்.எம்.எஸ் செய்துவிட்டே தூங்குவான். இவனுக்காகவே சே குவேராவின் பொன்மொழிகளை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.. பதில் எஸ்.எம்.எஸ்கள் அனுப்புவதற்காக! உலக இலக்கியம் கலக இலக்கியம் என்று ஏதேதோ பேசுவான். ஆனால் மொக்கையாக இருக்கும். அது வந்த மூலம் எனக்கு தெரியும். நிஜமாகவே கொஞ்சம் போதையும் நிறைய சே வைப் பற்றி பேசும் நண்பர்களை இவனை சந்திப்பதற்கு முன்பே சந்தித்தவன் நான்! நான் அறிமுகப்படுத்தி வைத்த அந்த நபர்களின் சாயலில் பேசுவது இவன் வழக்கம். வயதில் சின்னவன் என்றாலும் 60 வருஷ அனுப உரைகளை உகுப்பான். இதனாலேயே இவன் பெயரை என் செல்போனில் மொக்கை என்றே பதிவிட்டிருக்கிறேன். ஒருமுறை அவன் பெயரை நான் எப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதைப்பார்த்து, ''இந்த உலகம் புரட்சியாளனை அங்கீகாரிக்காதுன்னு எனக்கு தெரியும் நண்பா" என்றான் அப்பாவியாய்!
கைநிறைய சமபளம் புரளும் வேலையை உதறித் தள்ளிவிட்டு கோடம்பாக்கத்து முட்டுசந்துகளில் பீர் பாட்டிலோடு திரிவதில் அலாதி பிரியம் அவனுக்கு. ''நாளைக்கு உங்களுக்கும் ஒரு படம் வாய்ப்பு தரலாம்னு நினைக்கிறேன்!" என்று பிளாக் மெயில் செய்வான்.
''நண்பா இன்னிக்கு மதியானம் சாப்பாடு வாங்கிக் கொடுங்க.. என்னது காசில்லையா? பொதுவுடமைக் கொள்கைனா என்னனு தெரியுமா உங்களுக்கு? தயவு செஞ்சு சே குவேராவை படிங்க! இப்படி அதிகார வர்க்க பிரதிநிதியாக இருக்காதீங்க‌" என்றெல்லாம் பிதற்ற ஆரம்பிப்பான். கோபமாக கட் பண்ணிவிடுவேன். (பின்னே சட்டைப்பையில் 5 ரூபாய் சில்லரைகளை மட்டுமே வைத்திருக்கும் என்னை முதலாளி வர்க்கமாய் சித்தரித்தால்!)
சிறிது நேரத்தில் லைனுக்கு வந்து, ''ஹலோ நண்பா.. இப்படி அதிகார வர்க்க ஆளா இருக்கீங்களே.. கொஞ்சம் இந்த ஏழையையும் கண்டுக்கங்க!" என்று சொல்வான். எனக்கு பாவமாக இருக்கும். யார் பெத்த பிள்ளையோ இப்படி ஆயிருச்சே என்று. சாப்பாடோ சரக்கோ வங்கிக் கொடுத்தால் நம்மையும் கூல் செய்வதைப்போல, ''நீங்களும் ஒரு சே தான் நண்பா!" என்று தடாலடியாக சொல்வான். ''சே வை ஏன் நண்பா காரா சேவு மேட்டருக்கெல்லாம் இழுக்குறீங்க.. உங்களுக்கு உண்மையிலே சே பிடிக்கும்னா முத்துக்குமரனுக்கு வீர வணக்கம் செய்ய ஏதாவது பண்ணுங்க! இல்லைனா கள்ள‌த் தோணி ஏறி வன்னிக்காட்டுக்கு போங்க! பொலிவியா காடும், வன்னிக்காடும் இப்போ ஒண்ணுதான்" என்பேன். ''அடங்கொக்கமக்கா பின்னுறீங்க நண்பா! நீங்களும் ஒரு க்ம்யூனிஸ்ட்தான்" என்பான் ஒருவித ஆற்றாமையால். ஒரு அசாதாரணமான சந்தர்ப்பத்தில்
''தயவு செஞ்சு நீ சே வை முழுசா படிச்சுட்டு எனக்கு பாடம் எடுடா மொக்க!" என்று கோபத்தோடு கண்கள் சிவக்க நான் பேசியதைக் கேட்டு பொறி கலங்கிப் போய் இந்தப்பேச்சுகளுக்கு சமீபகாலமாக முற்றுப்புள்ளி வைத்து விட்டான். முற்றுப்புள்ளியா.. கமாவா என்பது இனிமேல்தான் தெரியும். இபோதெல்லாம் சே வைப் பற்றி என்னிடம் அவன் கதைப்பதில்லை. அவன் பார்வையில் நான் பெருந்தனக்காரனாக, முதலாளி வர்க்க பிரதிநிதியாக இப்போது நான் தெரிவதில்லையா அல்லது பாவம் போதும் என்று விட்டுவிட்டானா என்று தெரியவில்லை!
சமீபத்தில் என் சொந்த ஊர் ராமநாதபுரத்துக்கு போயிருந்தேன். நடந்தே ஊரின் நான்கு எல்லையையும் தொட்டுவிடலாம் என்கிற அளவில் இருக்கும் இந்த ஊரில் பைக்கில் ஊர்சுற்றுவது என்பது எனக்கு பிடித்தமான விஷயம்! அங்கு ஒரு மட்ட மத்தியான வேளையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு என் பைக்கை இடைமறித்தார் ஒரு குவார்ட்டர் வாலா.''மிஸ்டர்.. உங்க பேர் என்னனு தெரியாது. நான் கொஞ்சம் ஆல்கஹால் எடுத்திருக்கேன். ஆனா பரவால்ல.. கையை முதல்ல கொடுங்க! ஏன்னா நீங்க என் தானைத் தலைவனோட டீ‍‍‍‍ஷர்ட் போட்டிருக்கீங்க" என்று புறங்கையில் முத்தமிட்டார். ''ரொம்ப நன்றி தோழர்!" என்றதும் அவர் கண்களில் குபுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது.
''தோழர்ங்கிற வார்த்தையைக் கேட்டு எத்தனை நாளாச்சு. பெருமையா இருக்கு... டீஷர்ட்டுக்கு மட்டும் கிடையாது. என்னை தோழர்னு கூப்பிட்டதுக்கும் சேர்த்து ஒரு உம்மா!" என்று இன்னொரு 'பச்சக்' கொடுத்துவிட்டு நடையைக் கட்டியவர் எட்ட‌டி தூரத்தில் குப்புற விழுந்தார். நல்லவேளை தோழருக்கு மீசையில்லை!
குடிப்பதும் குடிக்காமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சம்மந்தப்பட்டது. அவ்வளவு ஏன் அடிப்படை உரிமை சம்மந்தப்பட்டதும்கூட! சே குவேராவின் பெயரைச் சொல்லி போதையில் தள்ளாடி தன்னிலை மறந்து நடுவீதியில் தோழர் விழுந்ததைப் பார்த்தபோது தவறாக டியூன் செய்யப்பட்ட என் நண்பன் காரா சேகுவேராவின் ஞாபகம் வந்தது!
தயவு செஞ்சு சே குவேராவை முழுசா படிங்கடா!

2 கருத்துகள்:

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

Solid thinking & writing..

Pl pay attention for typo errors

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஆஹா... பொறிஞ்சு தள்ளிட்டீங்க :)