சனி, 28 மார்ச், 2009

நான் கடவுளை புதைத்த ராச‌ய்யா!



முன்பு ஒருமுறை பாலச்சந்தரோ பாரதிராஜாவோ சொன்ன ஒரு விஷயம். 'இளையராஜாவின் இசை பழுத்து விட்டது!' எவ்வளவு உண்மை. பழம் தின்று கொட்டை போட்டவர் நான் கடவுளில் கொட்டையை மட்டுமே போட்டிருக்கிறார். நான் கடவுளை ஒருமுறைக்கு மேல் பார்க்க முடியாத‌ போதும் என் அபிமானி இளையராஜாவுக்காக படத்தை இரண்டாவது முறை பார்க்கப் போனேன். பழுத்த அந்த பழம் காய்ந்து போன வறட்சி இசையை தந்திருக்கிறது என்பதை இசையை மட்டுமே கவனித்தபோது தோன்றியது. சின்ன வயதிலிருந்து எனக்கு இளையராஜாவின் இசைமீது பெருங்காதல் உண்டு. பாடல்களை மட்டுமே நேசிக்க தொடங்கிய முன் பனிக்காலத்து வயது, பின்னாளில் அவரின் பின்னணி இசையையும் சேர்த்து ரசிக்க கற்றுத் தந்தது. அவரது எத்தனையோ படங்களின் பின்னணி இசை நம்மை பெரு மயக்கத்துக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக அந்த 'மௌன ராகம்' அந்நாளைய சிகர~இமயங்களின் படங்களை பின்னணி இசை இல்லாமல் பார்க்க நேர்ந்தால் இது உங்களுக்குப் புரியும். படத்துக்கான 'மேக்கிங் கிராஃப்ட்' இந்த இயக்குநர்களிடம் இருந்ததைப் போல இளையராஜாவிடம் இசையால் படத்தை இன்னொரு தளத்துக்கு தூக்கிச் செல்லும் ஆளுமை இருந்தது விளங்கும். இப்போதும் கடலோரக் கவிதையை மியூட் செய்து பார்த்தால் உயிரே இல்லாமல் இருக்கும். ஜீவ சுருதி பிசகாத அந்த பின்னணி இசை சில வருடங்கள் முன்புவரை ராஜாவிடம் உயிர்ப்பாக இருந்தது. அநேகமாக பிதாமகன் தான் அந்த பிரவாக இசையின் அந்திமக் காலம். நான் கடவுள் இசைக்கு மட்டுமே நான் எதிரி என்றாலும் சில முன்னுதாரண‌ இசையை இங்கு சொல்லிக் கொள்வது சிறிது கட்டாயமாகிறது. என் பார்வையில் அவரது கடைசிப் படமான 'பிதாமகன்' படத்தில் டைட்டில் கார்டில் துவங்கும் அந்த மகோன்னத புல்லாங்குழல் இசை ஒரு உதாரணம். படம் முடியும் வரை நம்மை வேறொரு உலகத்துக்கு இட்டுச் சென்றது. 'போடிநாயக்கனூர்' என்று கழுகுப்பார்வையில் விரிந்து அந்த சுடுகாட்டு சூழல் வரை அந்த இசையும் காட்சியோடு நம்மை மண்மீது பாவிவிடாமல் அங்கே தூக்கிச் சென்ற அற்புத இசை அது! கஞ்சா காடுகளுக்குள் வில்லன் நுழையும்போது ஒரு மெல்லிய ஆனால் மனதை அறுக்கும்.. கணப்பொழுதே வரும் ஒரு இசையை அங்கு பாய்ச்சி இருப்பார். திகில் கூட்டும் அந்த இசையை இளையராஜாவால் மட்டுமே தர முடியும் என்பது என் எண்ணம். இளையராஜாவின் பின்னணி இசை உத்தி அவருக்கு மிக எளிதாக வந்த கலை. படம் முழுவதும் தனக்குத் தெரிந்த வித்தைகள் அத்தனையும் காட்டாமல் கதைக்கு தேவையன ஒரு துண்டு இசையை மட்டுமே சற்றே நீட்டி வியாபிக்க வைத்து படம் நெடுக ஒரு வண்ணத்தை குழைத்து பூசும் இசைப்பாணி அவருடையது. அவர் நினைத்திருந்தால் எக்கச்சக்க வயலின்களை‌யும் இன்ன பிற கம்பிக்கருவிகள், டிரம்ஸ் உள்ளிட்ட தோல் கருவிகளையும் உருட்டி எடுத்து புது பாணியை உருவாக்கி இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை.இளையராஜா ஒரு மயிலிறகு வருடி! கூர்ந்து கேட்டால் படம் முழுவதும் ஒரே பின்னணி இசைதான் மைய நீரோட்டமாக ஓடும். அவர் அதிகம் பார்வையாளனை குழப்புவதில்லை. ஜெயிலில் நையப்புடைக்கப்பட்டு கிடக்கும் சூர்யாவை விக்ரம் பர்க்கும்போது வரும் 'யாரது யாரது..?' என்ற இளையராஜாவின் பாடல் 'இளங்காற்று வீசுதே...' பாடலின் அதே மெட்டுதான் என்ற போதிலும் அந்த நட்பின் ஆழத்தைக் காட்ட பின்பு வரும் அந்தப் பாடலை பயன்படுத்தி இருப்பது நல்ல உத்தி! க்ளைமாக்ஸில் குரல்வளையை கடித்துத் துப்பி விக்ரம் நடந்துபோகும்போது போடிநாயக்கனூரை கழுகுப்பார்வையில் காட்டியபோது கொடுத்த அதே இசைதான்...ஆனால் மனதுக்குள் சென்று என்னமோ பண்ணுகிறது. திரைக்கதைக்கு தேவையான ரசவாத இசை! என் மனதை மயக்கிய 'மௌன ராகம்' படத்தில் இதே இசை உத்தியைத்தான் அவர் ஃபாலோ செய்திருப்பார். கார்த்திக்கை காட்டும்போது பீறிட்டு வரும் உத்வேக இசைப் 'பிட்டு' ஒன்று கார்த்திக் வரும் ஃபிளாஷ்பேக் முழுவதும் வியாபித்துக் கிடக்கும். ஆனால் அதே இசையை கொஞ்சம் நீட்டி சோக ராகத்தில் மோகன்‍~ ரேவதி சம்மந்தப்பட்ட காட்சிகளில் உபயோகப்படுத்துவார். இந்த இரண்டே இசைதான் படம் முழுவதும். ஆனால் இந்தப்பட‌த்தின் பின்னணி இசை உலகத் தரத்துக்கு ஒப்பானது. இந்த இசைப்பிட்டுகளை... இந்த பின்னணி இசைக்கோர்வையை அவர் சில நிமிடங்களில் உருவாக்க முடியும்.

பிதாமகன் படத்தில் 'படத்தின் நிஜ‌ பிதாமகன் இளையராஜா தான்' என்றெல்லாம் பாலா புகழ்ந்து தள்ளியதற்கான காரணமும் அந்த இசைக்கோர்வைக்காகத்தான். வாய்ப்பு வரம் கிடைத்த சந்தோஷம் பாலாவுக்கு அப்போது கிடைத்திருக்கும். அந்தக்் கதைக்குள் ராஜா தன் இசையை பொருத்திப் பார்த்திருக்கும் அழகு கணப்பொழுதில் நிகழ்ந்த அதிசயத்தை உணர்ந்திருப்பார். இத்தனை நாள் இளையராஜாவுக்குள் ஒளிந்திருந்த இசை கதைக்கு ஏற்றபடி 'ஓவர் ஃப்ளோ' ஆகி இருக்கிறது என்பது மட்டுமே நிஜம்! அவ்வளவே! (பாலாவுக்கும் இது நல்லாவே தெரியும்) இது சரியா தவறா என்ற பட்டிமன்ற பாணியில் கேள்விகள் கேட்டால் தவறு என்பது பலரின் வாதம். இளையராஜா மனதில் உதித்ததை செய்கிறார். நான் இப்படித்தான் என்று வெளிப்படையாக சொல்லக் கூடியவர் அவர்.'நான் கடவுளில்' ராஜா சொதப்பி இருப்பதும் இந்த 'ஓவர் ப்ளோ'வால்தான். பாலா என்னதான் மூன்று வருடங்கள் இழைத்திருந்தாலும் இளையராஜா அந்த நேரத்தில் அவர் யோசித்த கணப்பொழுது இசையைத்தான் தந்திருக்கிறார். இல்லையென்றால் வேறு சில மனோரீதியான குழப்பங்கள் இருந்திருக்கலாம் ராஜாவுக்கு! அவருக்கு மொத்த படமும் பிடித்திருக்காதோ என்றே என்றே தோன்றுகிறது. 'நான் கடவுள்' என்ற கான்செப்ட்டே பிடிக்காத ஆத்தீக அம்பி அவர். 'தூமைன்னா என்னானு தெரியுமாடி?' என்று பெற்ற தாயைப் பார்த்துக் கேட்கும் ஹீரோவை மட்டுமல்ல‌ டயலாக்கை எழுதிவிட்டு தன்முன் நிற்கும் பாலாவை 'கிறுக்குப் பய.. ஏண்டா இப்படி படம் எடுக்குறே..இனிமே இப்படி எடுத்தா இசையமைக்க மாட்டேன்' என்று கடிந்து கொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது. இப்படி மனசு லயிக்காத ஒன்றை‌ பாலாவுக்காக செய்ததன் விளைவுதான் நான் கடவுளின் 'டுஸ்கான்' மியூஸிக்! 'பேதோஸான' இடங்களில் கிதார் கம்பிகள் புரள ரொமான்டிக் இசையை போட்டுக் கொடுக்க அவர் மனம் ஏனோ இடம் கொடுத்து விட்டிருக்கிறது, அவரையும் அறியாமல்! 'பெரியார்' படத்தை தவிர்த்தது போல பாலாவையும் மண்டையில் குட்டி 'அடுத்த படத்தில இணைவோமே பாலா' என்று சொல்லி இருந்தால் நிச்சயம் பாராட்டி இருக்கலாம். சேதுவில் பாண்டி மடம் அறிமுக இசையை எடுத்து இங்கே தாண்டவன் அறிமுகத்தில் தூவி விட்டிருக்கிறார். 'பாலாவே அதே போல காட்சியை வச்சிருக்கான்.. நமக்கென்ன வந்துச்சு!' என்ற நினைப்பில் போட்ட இசை. 'மாதாவின் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்...' என்ற பாடலை ஏன் கேசட்டில் சேர்த்தார்கள். ஏன் படத்தில் இல்லை என்ற பெருங்குழப்பம் எல்லார்க்கும் எழுந்ததைப்போல எனக்கும் எழவே செய்தது. 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...' பாட்டைப் பாட பூஜாவின் ஒரிஜினல் வாய்ஸை பயன்படுத்தி இருக்கலாம். அந்தப்பாடலில்கூட ஓரளவு நம்பகத்தன்மை இருக்கும் பட்சத்தில், ஏன் 'தாயின் சிறந்த கோவிலும் இல்லை', 'அம்மாவும் நீயே..' பாடல்களை ரேடியோவில் ஓட விட்டு பின்னணி இசையாக சேர்த்தார்கள் என்றும் விளங்கவில்லை. அந்தக் குழப்பத்துக்கு ராஜாவை காரணமாக கண்டிப்பாக சொல்ல முடியாது. காரணம் அது பாலாவின் அதீத ஆர்வக் கோளாறு. படத்தில் மனம் ஒன்றாத பகுதிகளில் மிக முக்கியமான இடம் அது!
அப்புறம் காசியில் அகோரிகளைக் காட்டும்போது அத்தனை உக்கிரமான இசை ஓ.கே தான். ஆனால் பிதாமகனில் ஊடறுத்த அந்த மெல்லிய புல்லாங்குழல் பயமுறுத்திய தோரணையில் பாதிகூட இல்லை. அந்த உடுக்கை இசையும் காட்சியும் சின்னப்பிள்ளைகளின் ஃபேன்ஸி டிரஸ் போட்டியை ஞாபகபடுத்த தவறவில்லை. உடுக்கையடி அடித்தால்தான் அகோரி எஃபெக்ட் கிடைக்கும் என்பதால் இத்தனை பேரிரைச்சலா? 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்...?' பாடல் யாருக்கு? படத்தில் பிச்சைக்காரர்களைக் காட்டும்போது உற்சாக மூடுக்கு வரும் அவரின் பின்னணி இசை பாடலில் சோக ராகத்தை ஏன் மீட்டுகிறது. பிதாமகனில் 'பிறையே பிறையே' பாடிய மதுபாலகிருஷ்ணணை பாட வைத்திருப்பதும் ரிப்பீட் ரிவீட்! என்னைக் கேட்டால் இந்தப்படத்துக்கு இதைவிட நல்ல பின்னணி இசையை அவரின் இளவல் யுவன் கொடுத்திருக்க முடியும். பின்னணி இசையில் தனக்குத் தெரிந்த வித்தைகளை ராஜாவை அள்ளித் தெளிக்க வைத்த பாலாவை நோவதா? நான் கடவுளில் நானே கடவுள் என்று இசையமைத்த ராஜாவை நோவதா தெரியவில்லை...மிகக் கடுமையான கதைக் களன் என்று அவரே நினைத்துக் கொண்டுவிட்டார்போலும். அப்பா‍~மகன் சம்மந்தப்பட்ட காட்சியின் போதும் அம்மா~மகன் சம்மந்தப்பட்ட காட்சியின்போதும் வழக்கமான சவசவ ஃபீலிங் பிகிடி இசை. அந்நியமான கதைக்கு எத்தகு இசையை அமைக்க வேண்டும் என்பதில் ராஜாவுக்கு நிறைய குழப்பங்கள் போல!
மொத்தத்தில், பாலாவின் திரைக்க‌தை ஓட்டையை ராஜாவின் இசையால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதுதான் பரிதாப உண்மை! படத்தில் ஒரு இடத்தில்கூட மனதைக் கரைக்க இவரால் முடியவில்லை. குறைகளை தன் நிறை கொண்டு பூரணமாக்க பார்த்திருக்கிறார் ராஜா! அது 'ஓவர் ப்ளோ' ஆவதற்கு பதில் 'ஓவர் ரியாக்டிங்' ஆகி விட்டது. மொக்கைப் படங்களுக்கு தன் இசையால் முட்டுக் கொடுத்த இளையராஜா இந்த வீக்்கான திரைக்கதை உள்ள (பாருங்கள் பாலாவின் தீவிர ரசிகன் நான்! பாலாவின் திரைக்கதை தான் வீக்கே தவிர இவர் காட்டிய உலகம் இன்னொரு உச்சம்) படத்தை தன் இசை ஆளுமையாலேயே மேலும் அதள பாதாளத்தில் தள்ளி மண் அள்ளி மூடி இருக்கிறார் என்பதே என் எண்ணம்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ராஜா!

கருத்துகள் இல்லை: