செவ்வாய், 31 அக்டோபர், 2006

ஒரு கடுதாசியும் ஒரு சேதியும்..


இப்பல்லாம் பசங்க இன்ஜினீயரிங் படிக்கிறேன்னு சொல்லிட்டு அலையுறது ஃபேஷனா போச்சு...முன்னெல்லாம் பசங்க கொஞ்சம் விடலைத்தனங்களுக்கான வாலிப குசும்புகளோட பள்ளிக்கூடத்துல திரிஞ்சா விவசாயம் கிவசாயம் பார்க்க சொல்லிட்டு உடனே சட்டுபுட்டுன்னு அத்தைப் பொண்ணையோ மாமன் பொண்ணையோ இல்லை எவனாவது மஞ்ச மாக்கான் பொண்ணையோ கல்யாணம் பண்ணி வச்சு கால்க்கட்டு போட்டுவிடுவாங்கே. இப்ப அதெல்லாம் பழசாயிடுச்சு...என்ஜினீயரிங் காலேஜ்ல சேர்த்து விட்டுர்றாங்கே.. தமிழ்நாட்டுல புற்றீசல் கணக்கா பெருகிப் போய் கிடக்கிற எதாவது ரைஸ் மில் வாடகைக் கட்டிட என்ஜினீயரிங் காலேஜ்ல சேர்த்து விட்டுர்றாங்கே.. இவனுங்களும் ஒருவித ‘அதப்போட‘ படிச்சுட்டு ஒவ்வொரு செமஸ்டர் லீவுக்கு ஊருக்கு வர்றப்பவும் ஸ்டைல்லா பேகை தூக்கி முதுகுப் பக்கம் போட்டுக்கிட்டு ‘படையப்பா’ ரஜினி கணக்கா சிங்க நடை போட்டு ஊருக்குள்ள வந்து அலப்பற விடுறானுங்க. (செமஸ்டர் முடிஞசதும் மாப்ளைங்க அண்ணா யுனிவர்சிட்டி சிலபஸ்ல கப்பை தூக்க போறானுங்கங்கிறது தனி கிளைக் கதை! அது கொஞ்சம் சோகம்..அதைவிட சோகம் படிச்சு முடிச்சதும் சென்னைக்கு வந்து வேலை தேடுறது )ஸாரி பசங்களா! நானு நிஜமாலுமே கணக்குல ஜீனியஸா இருக்குற வருங்கால முழு இன்ஜினியர்களை அர்த்தம் பண்ணி சொல்லலை.. ஜஸ்ட் லைக் தட் நானும் படிச்சே ஆகணும்னு வெத்து கௌரவத்துக்காக ஒரு டஜன் அரியர்ஸோட இருக்குற ஹாஃப் பாயில்டு இன்ஜினியரிங் ஸ்டூடண்ட்ஸைத் தான் சொல்லுறேன். அப்படி என்னோட எண்ணத்துல உதயமானதுதான் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் க(வி)தை. ஜஸ்ட் என்ஜாய் இட்!
ஆடு மேய்ச்சு கெட போடுற செங்கோடன் மவன் கோவாலு இஞ்சினீருக்கு படிக்கிறானாம்...அப்பனுக்கு எழுதிய கடுதாசியில... ‘அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு! நான் நல்லமுறையில் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு உங்கள் ஞாபகமாகவே இருக்கிறது. ஊருக்கு எப்போது வருவேன் என்று நினைக்கத் தோன்றுகிறது. கடந்தமுறை நீங்க வந்தபோது சுட்டுக் கொண்டு வந்த சுவியம் நல்லா இருந்ததாக சிநேகிதன் சொன்னான். நீங்கள் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் எப்பவுமே உங்களையே நினைச்சுக்கிட்டே இருக்கேன்.நிற்க! தாங்களறிவது என்னவென்றால் எனக்கு அவசரமாக காஸ் தீட்டா வாங்க ரூபாய் ஆயிரம் தேவைப்படுகிறது. இதற்கு முந்தி நீங்கள் மொளகாய் வித்த காசுல ஆயிரம் ரூபாய் அனுப்பி வச்சிருந்தீங்கள்ல அதுல ஸைன் தீட்டா வாங்கிட்டேன். மற்றபடி உடம்பை நன்கு கவனித்துக் கொள்ளவும். அடுத்த மாசம் டேன் தீட்டா வாங்க ரூபாய் ரெண்டாயிரம் அனுப்பி வைக்கவும்! என்னை நினைத்து கவலைப்பட்டு அம்மா உடம்பை பாழாக்கிக் கொள்ளாமல் இருக்கச் சொல்லுங்கள்! நீங்களும் காசை கண்டபடி செலவு பண்ணாமல் கொஞ்சம் சேர்த்து வையுங்கள்..
இப்படிக்கு,
தங்கள் பாசமகன்,
எஸ்.கோபால்

கருத்துகள் இல்லை: