சனி, 28 அக்டோபர், 2006
அறிமுகம்:
வணக்கம். நாந்தாங்க தெக்கத்திப் பையன்! பொறப்பால தாழ்த்தப்பட்ட பயனு அடையாளப்படுத்தப்பட்டவன். .. ஆனால் இந்தியாவின் உயர்ந்த பதவியான ஐ.பி.எஸ் ஆகவேண்டும் என்ற கனவுகளுடன் திரிபவன். ஒரு முன்னணி பத்திரிகையில் நிருபராக பணியில் இருந்தாலும் காக்கி காதலன். வருங்காலத்தில் ஒரு நேர்மையான அதிகாரியாக இந்திய மண்ணில் பணிபுரிய அதீத ஆர்வம்.. இந்த வலைப்பதிவுலகில் சஞ்சாரிக்குற எண்ணத்துல இதோ புதுசா ப்ளாக் தொடங்கிட்டேன்.எனக்கு பூர்வீகம் தண்ணியில்லா காடு..அதான் நம்ம ரானாரம்(ராமநாதபுரம்)..காய்ஞ்சு கெடுக்கும்..அல்லது பேய்ஞ்சு கெடுக்கும் கெட்ட சாதிப்பய ஊருங்க அது!
என்னோட சின்னவயசுல பள்ளிக்கொடத்துல நடந்த ஒரு விஷயம் இப்ப ஞாபகத்துக்கு வருது. முதல் முதல்ல சாதிப்பேரு கேட்டு ஒரு டீச்சர் எங்களோட வகுப்புக்கு வந்தாங்க. (ரெண்டாப்பா மூணாப்பான்னு ஞாபகம் இல்லீங்க..) என்னோட சாதி என்னன்னு அதுவரைக்கும் தெரியாது. என்னோட முறை வந்ததும் 'கோக்கனாரு'ன்னு சாதிப்பேரை சொல்லி வச்சேன்..கொல்லுன்னு சிரிச்சுச்சுங்க கூடப் படிக்கிற பயபுள்ளைங்க. என்னோட வகுப்பு டீச்சர் காஞ்சனா மிஸ்ஸுக்கு மட்டும் நான் என்ன சாதின்னு தெரியும். ஏன்னா அவங்க எங்க தெருவுலதான் குடி இருக்காங்க.."சாந்தி மிஸ்..இந்தப் பையன்..தாழ்த்தப்பட்ட சாதி..எனக்கு நல்லா தெரியும்..இவங்க அம்மா எனக்கு நல்லா பழக்கம்..பள்ளனோ பறையனோனு சொல்வாங்க..சரியா ஞாபகம் இல்லை."னு சொன்னவங்க,'' உங்க அம்மாகிட்ட பள்ளனா பறையனானு கேட்டுட்டு வாங்க ராஜா"ன்னு என்னைப் பார்த்து சொன்னது இன்னமும் ஆழமா பதிஞ்சுருச்சு. அதனாலேயே ஜாதிகள் இல்லாத உலகைக் கனவு காண்கிறேன்.
எங்க ஐயா மோசமான கெட்டவார்த்தையாலதான் என்னை தூக்கி கொஞ்சுவாரு..சித்தப்பனுங்க அடிதடிக்கு பேர்போனவனுங்க. அடிக்கடி பெண்டாள நினைச்சு ஊரு மத்தியில பஞ்சாயத்துல தீர்வை கட்டுற அளவுக்கு தெனவெடுத்தவனுங்க.( இப்ப ரெண்டு பேரும்.. மிக முக்கிய இரு பெரும் கட்சிகளோடகிளைக் கழக செயலாளர்களாகவும் இன்னொருத்தர் ஊர் வெட்டியானாவும் இருக்காங்க. அதனால மரியாதை நிமித்தமா சித்தப்பர்கள்னு சொல்றேன்.
சின்ன வயசுல பரண்மேல தூத்துக்குடி நாட்டு வெடிகுண்டை ஒரு சித்தப்பர் அறிமுகப்படுத்தி வச்சார். சீமைச் சரக்கு, கறுக்கருவாவால நுங்கு சீவுற மாதிரி கையைசீவுறதுன்னு பல ஏரியாக்கள்ல அவங்க விற்பன்னர்கள். அனாலும் பாசக்கார பங்காளிங்களா இருப்பாங்க!
எங்க அப்பத்தா பனங்கருப்பட்டி செய்யுறதுல கில்லாடி..கருப்பட்டி கலர்லயே அப்பத்தாவும் இருக்கும். சின்னவயசுல அப்பத்தாவை கருப்பட்டி அப்பத்தானுதான் கிண்டல் பண்ணுவேன். அந்த பசுமை நினைவுகளையும் சில வலிகளையும் கொஞ்சம் பதிவு பண்ணப் போறேன்..இன்னும் நிறைய மனசை பாதிச்ச இத்யாதிகள்னு எல்லாம் கலந்த கலவையா என்னோட இளம்பிராயம் இருந்ததைப் போல என்னோட இந்த சரண்ஜி ரெயின்போ காலனியும் இருக்கும்..
அப்புறம் அதென்ன சரண்ஜி ரெயின்போ காலனின்னு நீங்க கேட்குறீங்கதானே..
பேர்ல என்ன இருக்கு..சும்மா வார்த்தை வசீகரத்துக்காகத்தான் இந்த பேரை தேர்வு செஞ்சேன். சீரியஸான சில விஷயங்களை தமாஷாவும், தமாஷான சில விஷயங்களை சீரியஸாவும் பேசலாம்னு இருக்கேன்.
படிச்சுட்டு உங்களுடைய பதிலை பின்னூட்டத்தில் மறக்காமல் தட்டுங்க நண்பர்களே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
வருக நண்பரே...வளர வாழ்த்துக்கள்..
Hello who are you?
Where are you?
உங்கள் ப்ளாக்கில் உங்களைப் பற்றிய அறிமுகம் படித்தேன்.படித்த பிறகு என் மனது வலித்தது ஏன் என்று தெரியவில்லை.சகோதாரா நீங்கள் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள், ப்ளாக் உலகில் எனது முதல் பின்னூட்டம் உங்களுக்குதான். வாழ்க நண்பா! ஜ.பி.ஸ் ஆபிஸ்சர் ஆனால் என்னை மறக்க வேண்டாம்.
கருத்துரையிடுக