வெள்ளி, 2 ஏப்ரல், 2010
'அங்காடித்தெரு'வுக்குள் தொலைந்துபோனேன்..!
கிடைத்த கொஞ்சநேர அவகாசத்தில் இந்த படத்தை பார்ப்பதற்கு முன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரு வருட அயர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. காரணம் ஊரில் சின்னச் சின்ன குறும்படங்கள் எடுத்துக் கொண்டு திரியும் ஒரு நண்பன் இந்தப் படத்தை இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு 'மொக்கை' என்று நள்ளிரவு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவன் தூங்கிவிட்டான். அகப்பட்டவன் நானல்லவா? விடிவதற்குள் என் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் 'how is angaaditheru?' என்ற குறுஞ்செய்தியை அனுப்பி காத்திருந்தேன். பலர் தூக்கத்திலும் என்னை மதித்து பதில் அளித்திருந்தார்கள்.விகடன் நண்பன் கலீல் 'நல்ல படம் உனக்கு பிடிக்கும்டா!' என்று அனுப்பியிருந்தான். என்னை நன்கறிந்தவன் என்பதால் அதுதான் படத்தின் 'உண்மை'யாகயிருக்கும் என்ற நினைப்பில் தூங்கிவிட்டேன். மறுநாள் நான் மதிக்கக்கூடிய மற்றவர்களும் பதில் அனுப்பி இருந்தார்கள். எல்லோரின் ஏகோபித்த பாராட்டுகளை தாங்கி வந்திருந்தன 'அங்காடித்தெரு' குறுஞ்செய்திகள். இருப்புகொள்ளாமல் புத்தகத்தை தூரவைத்துவிட்டு படத்தை தியேட்டரில் பார்த்தேன். (இணையதளத்தில் பார்க்கும் வசதிகள் இருந்தும் இதுபோன்ற படங்களை அப்படிப் பார்க்க மனம் விரும்புவதில்லை)
சென்னையின் படா பிஸி ஏரியாவான ரங்கநாதன் தெருவின் கதகதப்பான அங்காடித் தெருவுக்குள் சத்தமே இல்லாமல் வலம்வந்து அங்கு பார்த்த மனித உரிமை மீறல்களைப் பற்றியும் அந்த மனிதர்களின் சுகதுக்கங்களைப் பற்றியும் இரண்டரை மணிநேரம் கேண்டிட் பார்வையில் பேசுகிறது படம். நெல்லை தேரிக்காட்டில் கவலையின்றி திரியும் இளசுகள் குடும்பச் சூழலுக்காக அதே தேரிக்காட்டிலிருந்து போய் சென்னை தி.நகரில் பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவி இருக்கும் அண்ணாச்சியின் கடைக்கு வேலைக்கு அழைத்து வரப்பட்டு எப்படி மென்னி நெரிக்கப் படுகிறார்கள் என்று சற்றே அதிர்ச்சி கலந்த ட்ரீட்மெண்ட்டோடு கதை சொல்லி இருக்கிறார் வசந்தபாலன். வெயிலைவிட இந்தப் படம் சமூக அக்கறையுள்ள படம். வெயில் எதார்த்தத்துக்கு பக்கத்தில் வேண்டுமானால் வைக்கலாம். தலைப்பில் மட்டும் 'மாற்றி யோசித்து' சூடு போட்டுக் கொண்டவர்களுக்கு மத்தியில் அங்காடித்தெரு உண்மையில் மாற்றி யோசித்த சினிமாதான்! படத்தில் யாருமே நடிக்கவில்லை. அத்தனை இயல்பாக கதையோடு பொருந்திப் போகின்றன ஒட்டுமொத்த பாத்திரங்களும்! லிங்குவாக வரும் மகேஷ், சேர்மக்கனியாக வரும் அஞ்சலி, 'கருங்காலி' மேனஜராக வரும் ஏ.வெங்கடேஷ், மாரிமுத்துவாகவரும் 'கனாகாணும் காலங்கள்' பாண்டி, அண்ணாச்சியாக வரும் பழ.கருப்பையா, தோழிகளாக வரும் ஷோபியா, தற்கொலை செய்து கொள்ளும் செல்வராணி என படத்தில் 'காஸ்ட்டிங் மேளா' நடத்தி இருக்கிறார் வசந்தபாலன். கதையின் நாயகன் மகேஷுக்கு ஒளிமயமான எதிர்காலம் படத்தில் தெரிகிறது. இட்டாமொழி பையனுக்கே உரிய உடல்மொழி தெரிகிறது. எல்லோரும் சொல்வதை நானும் வழிமொழிகிறேன். மகேஷுக்கு இது முதல்படம் போல இல்லை. அத்தனை லாவகமாக நடிக்கிறார். நாயகி அஞ்சலியை காதலிக்கத் தோன்றும் அளவுக்கு அசத்தியிருக்கிறார். மேனேஜரிடம் பாலியல் வக்கிரத்துக்கு ஆளாகிவிட்டு அதை கஸ்டமர்களிடம் வெளிக்காட்டாமல் அழுகையை மறைக்க முயற்சிக்கும்போது அவர் நடிப்பு பிரமாதம். அப்போது குற்ற உணர்வில் மன்னிப்பு கேட்கும் மகேஷின் நடிப்பும் அங்கு போட்டி போடுகிறது. படத்தில் அதுபோன்ற பல காட்சிகளில் இருவரும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். அந்த வியர்வை பிசுபிசுப்புக்கும் கருங்காலிகளின் உக்கிரமான கொடுமைகளுக்கு நடுவிழும் முகிழ்க்கும் காதல் அதி அற்புதம்! இவ்வளவு நடிக்கத் தெரிந்த பெண் ஏன் கேரியரில் சொதப்பித் தொலைக்கிறார் என்றுதான் விளங்கவில்லை. (அஞ்சலியோட கார்டியன் சரியில்லையா? ) படத்தின் ஆரம்பகாட்சிகள் பயங்கரமான உலகத்துக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. 'இப்படி ஒரு உலகம் இதே ரங்கநாதன் தெருவுக்குள் இருக்கா? ' என பார்வையாளர்களை பதறவைக்கிறார்கள். அடுத்தடுத்த காட்சிகளில் பாண்டியின் காமெடியால் இயல்பாக பயணிக்கிறது கதை! பாண்டிக்கு நல்ல எதிர்கலம் இருக்கிறது.
முதலாளிகளின் அடிவருடிகள் எப்படிப்பட்ட ஈனப்பொழைப்பு பிழைக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது கருங்காலி மேனஜர் கேரக்டர். சோடாப்புட்டி கண்ணாடிக்குள் உருட்டி மிரட்டும் கண்களோடு அவர் கேமராவைப் பார்க்கும்போது நமக்கு பகீர் என்கிறது. ஹீரோ மகேஷிடம் அவர் அடிவாங்கும் காட்சியில் கைதட்டி மகிழத் தோணுகிறது. 'இன்னும் அடி!'என கத்துகிறார்கள் முன்வரிசை ரசிகர்கள். அருமையான.. தேர்ந்த நடிப்பு. பேச்சாளராக எல்லோருக்கும் பரிச்சயமான பழ.கருப்பையா அந்த அண்ணாச்சி கேரக்டரில் பின்னுகிறார். படத்தில் முக்கிய கேரக்டர்கள்தவிர ஆங்காங்கே ஊடாக வரும் கண்பார்வையற்ற தாத்தா, கட்டணக் கழிப்பிடத்தை வைத்துப் பிழைக்கும் புத்திசாலி இளைஞர், பாலியல் தொழில் செய்து மனம் திருந்தி வாழும் பெண், அவரது குள்ள கணவர், வெரிக்கோஸிஸ் வந்து இறந்துபோகும் இளைஞர், காதலியின் சாவுக்கு காரணமாக இருந்துவிட்டு குற்ற உணர்ச்சியில் பரிதவிக்கும் இளைஞர் என பலர் மனதை நிறைக்கிறார்கள்.
படத்தில் பல இடங்களில் குறியீடுகளாய் காட்சிகளை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர். ஜானி படத்தில் தீபா கேரக்டரோடு ஷாப்பிங் செல்வார் நம்ம ரஜினி. அங்கு வசதிபடைத்த ஒருவரை தீபா பார்ப்பார். அந்த இடத்தில் ஒரு ஆங்கில புத்தகத்தின் அட்டையில் 'ஃபியூச்சர் ஷாக்' என்று எழுதி இருக்கும். அதுபோன்ற காட்சிகள் இந்தப் படத்தில் நிறைய இருக்கிறது. ஆரம்ப காட்சியில் காதலனின் கால்களோடு கால்கள் மிதித்து விளையாடுவது, 'ஜோடி எப்படி?' என கேட்கும்போது சடுதியில் 'ஜோடி நம்பர் ஒன்' டி.வி விளம்பர பேனர் தெரிந்து மறைவது, வக்கிரத்துக்கு ஆட்பட்டு படியில் இறங்கி வரும் நாயகியின் பின்னணியில் தெரியும் சினேகாவின் பெரிய போர்ட்ரெய்ட், ஒரு துண்டு சீட்டு கிடந்தாலும் அதை கணக்கு எழுத பயன்படுத்திக் கொள்ளும் மேனேஜரின் கஞ்சத்தனம், அண்ணாச்சி மொபைலின் கந்தசஷ்டி கவசம் ரிங்டோன், ரத்தக் கறையை கழுவிவிட்டு அதே இடத்தில் போடப்படும் அடுத்தடுத்த நாட்களின் கோலங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். அப்போ படத்தில் குறையே இல்லையா? ஏன் இல்லாமல் இல்லை.. நிறையவே இருக்கிறது. ஆனால் திரைக்கதையும் பாத்திரங்களின் நடிப்பும் அவையெல்லாம் 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று நம்மை பாடச் செய்துவிடுகிறது. இதுபோன்ற படத்துக்கு பின்னணி இசை இளையராஜா அமைத்திருந்தால் படம் இன்னும் சில உச்சங்களைத் தொட்டிருக்கும். 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை!' பாடலின் வரிகளில் நா.முத்துக்குமார் வசீகரிக்கிறார். 'உன் பேர் சொல்லும் போது..' பாடலின் இசையில் ஈர்க்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். தி.நகரின் ஜனசந்தடி மிக்க இடங்களுக்கு நம்மையும் அழைத்துச் சென்று காட்டும் உணர்வை ஏற்படுத்துகிறது ரிச்சர்டு மரிய நாதனின் கேமரா கோணங்கள். தொய்வில்லாத ஷ்ரிகர் பிரசாத்தின் எடிட்டிங் கூடுதல் பலம். இயல்பான மிகையில்லா வசனங்கள் ( உதாரணம்: "கனியிருப்பக் காய் எதற்கு?", ''விக்கத் தெரிஞ்சவன் வாழ்றான்!''...) அந்தந்த கேரக்டர்களை மனசுக்குள் நெருக்கமாக உலாவ விடுகின்றன. ஜெயமோகனின் நான் கடவுளுக்கு இது ஆயிரம் மடங்கு நல்ல பேர் வாங்கித் தரும்.
குறைகளாக நண்பர்கள் சொன்னவை சில உண்டு: ' ' ஃப்ளாஷ்பேக்கில் வரும் மகேஷின் காதல் தோல்விக்கான காரணம் ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்கு நண்பா.. குசு போடுவதால் காதல் முறிஞ்சிடுமா?.. அப்படின்னா மகேஷ் காதலிக்கும் அஞ்சலிக்கு 'அது' வந்தா ஓடிப்போயிடுவாரா?''என்று சீரியஸாய் கேட்டார். ''குசுவால் இன்டெலெக்ச்சுவல் நட்பு பிரிந்த கதை ஒன்று எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும் என்பது என் நண்பர்களுக்கும் தெரியும். யதார்த்த சினிமாக்களில் சமீபகாலங்களில் இதுபோன்ற படையல் அமிர்தங்கள் தென்படவே செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை ஆட்டோகிராப்பில் கையாண்டதைவிட இதில் வக்கிரமில்லை என்று தோன்றுகிறது. நண்பர்களின் நகைப்புக்கு ஆளான காரணத்தால்தான் மகேஷ் காதலியை விட்டு ஓடுவார். தவிர அது பகட்டான பளபளப்புக்கு பின்னால் இருக்கும் நாத்தம் பிடித்த சமூகத்தின் குறியீடாக பாருங்கள்.. அது ஒரு பப்பி லவ். இதுக்கெல்லாமா வாய்தா போடுறது?" என்று லேசாக மொக்கையைப் போட்டேன். மனிதர் பேசவே இல்லை. போகிறபோக்கில் கொசுத்தொல்லைபோல 'இந்த குசுத் தொல்லை தாங்கமுடியலைப்பா' என்று இதுபோன்ற காட்சிகளுக்கும் யாராவது சென்ஸார் கேட்பார்கள் போலிருக்கு.
அதேபோலஆரம்ப காட்சிகளில் சோத்துக்கு அடித்துக் கொள்பவர்கள் அடுத்தடுத்த காட்சிகளில் அமைதியாக உட்கார்ந்து சாப்பிடுவார்களாம். அதற்கும் வசந்தபாலன் சார்பாக நானே பதில் சொல்ல வேண்டிய நிலைமை. 'மதியானம் சாப்பாட்டு இடைவெளி நேரம் என்பது கம்மி நண்பா. இரவில் அந்த அவசரம் யாருக்கும் இருக்காது.. நல்லா கவனிச்சுப் பாருங்க..அதேபோல ஒருநாள் கூட்டமா இருக்க பல காரணங்கள் இருக்கலாம். ஷிஃப்ட்.. அதுஇதுனு. மறுநாள் இல்லாமல் இருக்கும் இல்லையா?' என ஏதேதோ கூறி சமாளித்தேன். (அடப்பாவீகளா.! இதெல்லாமா உங்களுக்குக் குறையா தெரியுது?)அதேபோல க்ளைமாக்ஸ் ஊகிக்க முடிந்ததாக இருந்தது சின்ன மைனஸ்தான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை யதார்த்த படங்களுக்கே இருக்கும் அதிர்ச்சி க்ளைமாக்ஸ் தராமல் பாஸிட்டிவாக யோசித்து அந்தக் குறையை போக்கிவிட்டார் வசந்தபாலன். ! குறைகளை நிறைகள் கொண்டு பூரணமாக்கிவிட்டார். தவிர படத்தில் அவர் சொல்லியிருக்கும் தன்னம்பிக்கை சின்னக் கஷ்டத்துக்கே ரயில்பூச்சியாய் சுருங்கிப்போகும் பலருக்கு தேவையானதும்கூட! அதேபோல குட்டிக்குட்டிக் கதையாக படத்தோடு சம்மந்தமில்லாத கேரக்டர்கள் வந்துபோகின்றன என்றும் குறை பட்டுக் கொள்கிறார்கள். 'ஹல்லோ.. இது 'அங்காடித் தெரு'... தலைப்புக்கு நியாயம் செய்தால்கூட தப்புன்னு சொன்னா எப்படிப்பூ? உங்களுக்குல்லாம் சன் டி.வில நிமிஷத்து மூணுதடவை 'சுறா' போட்டுவிட்டாதான் இந்த கேள்விகள் கேட்குறதை நிறுத்திவீங்க. :) இதுபோன்ற படங்களை மைக்ரோஸ்கோப் கொண்டு பார்க்காமல் கொண்டாடவேண்டியது தமிழ் ரசிகனாகிய ஒவ்வொருவரின் கடமை. அப்போதுதான் உற்சாகமாக பலர் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
என்னதான் 'படத்தில் வரும் சம்பவங்களும் காட்சிகளும் யாரையும் குறிப்பிடுவன அல்ல..கற்பனையே!' என்று சொன்னாலும் படம் யாரைப்பற்றி என்ன சொல்ல வருகிறது என்பது கண்கூடு. ஒளிவுமறைவில்லாமல் சிநேகாவை வைத்து 'அள்ளிக்கோ..அள்ளிக்கோ' என 'எடுத்துக்கோ எடுத்துக்கோ..'வை உல்ட்டா பண்ணி கனக்கச்சிதமாய் காரியத்தை முடித்து வெளிச்சம்போட்டு காட்டி, 'சொன்னது பாதி.. சொல்லாமல் விட்டது மீதி இருக்கிறது' என்று வேறு பேட்டி அளித்துள்ளார் வசந்தபாலன். படம் ரிலீஸானதும் தொழிலாளர் நலத்துறையிலிருந்து இப்போது கடைகளுக்கு ரெய்டு போகிறார்கள். கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை உண்டு என்கிறார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன். வரவேற்கப்படவேண்டிய விஷயம். நடவடிக்கை எடுக்காவிட்டாலும்கூட குறைந்தபட்சம் அடுத்தமுறை சரவணா ஸ்டோர்ஸ் போன்ற நெடிதுயர்ந்த பிரம்மாண்டமான கடைகளுக்கு போகும்போது அங்கு உங்களுக்கு புடவையோ டீஷர்ட்டோ எடுத்துப்போடும் பையன் மீதோ பொண்ணுமீதோ உங்களுக்கு ஒரு கரிசனப் பார்வை வரும்தானே? அதுதான் இந்தப் படத்தின் வெற்றி!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
அய்யா,
கொஞ்சம் பத்தி பிரித்து எழுதுங்கள்,
மற்றபடி உங்கள் விமர்சனும் எழுத்து நடையும் நன்றாகவே இருக்கு பூபதி துபாய்
athisa & yuva....
This is the real review.
அங்காடி தெரு படம் நேற்று பார்க்க தொடங்கினேன். முழுதும் பார்க்கும் பொறுமை இல்லை, மன்னிக்கவும் என் விமர்சனதிற்கு.அபிப்ரயதிற்கு.
அந்த படத்தில் உள்ள வழக்கு மொழி நாகர்கோயில் வழக்கு மொழியாக உள்ளது.
ஆறுமுகநேரி, திருச்செந்தூர், உடன்குடி, இட்ட மொல்ழி , சாத்தன் குளம் தமிழே வேறு. மேலும் உணவு கூடம் எல்லாம் மிகுந்த மிகை படுத்தல்.
பதிவர்களை நம்பி இனிமேல் படம் பார்க்க கூடாது என்பது நான் கற்ற பாடம்.., எல்லாரும் ஆஹா ஓஹோ என்று எழுதி உள்ளனரே என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன்.
அதுவும் சூப்பர் விசர் நடிப்பு ஆகா ஓஹோ என்ற விமர்சனம்,
எனக்கு அவர் கதா பாத்திரம் ஒட்டவே இல்லை.
என் பார்வையில் இதுவும் ஒரு பாண்டஸி சினிமாவே. கருங்கல்லா போட்டா உரல் கல்லா வரும், ராகு காலமா போன்றவை எல்லாம் நாகர்கோயில், மார்த்தாண்டம், திருவட்டார் தமிழ். உடன்குடி, ஆர்முகநெறி, குரும்பூர், eral, umarikkadu, chaayarpuram paguthikalil pesum peche veru
அதுவும் பழ கருப்பையா செம காமெடி அவர் பேச்சில் காரைக்குடி தமிழ் விளையாடுகிறது, முன்பு மதிமுகவில் இருக்கும் போது எப்படி பேசுவோரோ அதே தமிழ். அவரை நெல்லை, தூத்துக்குடி சார்ந்த முதலாளி என்று என்னால் நம்பவே முடிய வில்லை.
ஆரம்பமே ஏமாற்றம் இதுதான், திருசெட்னூர், உடன்குடி, திசையன் விலை மக்கள் மிகுந்த விபரம் அறிந்தவர்கள் இன்று. சென்னை ஏதோ அண்டார்டிகாவில் இருப்பது போலவும் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதது என்பது எல்லாம் டூ மச்
maranaththai pathi eluthanumna sethutu than eluthanumnu solveenga polaye ramji...intha valiyum vedhanayum unmai...santhegam irunthal konjam chennai t nagar.thiruchi theradi veethi.madurai nethaji road poittu vanga
maranam patri eluthanumna oru thadave sethutu vanga nu solveenga pola ramji....athukku sudukaadu poittu vanthale podum..intha padam unmayin pathivu...edhukkum oru thadava chennai la t nagar, trichy theradi veedhi.madurai nethaji road poittu vanga
கருத்துரையிடுக