சனி, 13 பிப்ரவரி, 2010

நச்சுனு மூணு விமர்சனம்!

இதனால் சகலமானவங்களுக்கும் தெரிவிப்பது என்னான்னா  கடுமையான  பிரிபரேஷனிலும் மறக்காம 3 படங்களைப் பார்த்துட்டேன். ஆயிரத்தில் ஒருவன், கோவா, தமிழ்ப்படம் தான் அந்த பட்டியல். ஐநாக்ஸ்,சத்யம்னு விகடன் காலத்துல என்ஜாய் பண்ணிய இந்த எண்சாண் உடம்பு புழுதி பறக்கும் ஹைவேஸ் சாலையைக் கடந்து புகை பறக்கும் ரோஹிணியில் மூன்று படங்களையும் செகண்ட் ஷோக்களாகவே பார்த்து முடித்தது விந்தையிலும் விந்தை. தியேட்டரில் மாத்திரைக்குக்கூட சுத்தம் இல்லை. இன்டெர்வெல்லில் கோல்டு காபி‍ ‍பர்கர் சாப்பிட்டவனுக்கு ரோஹிணியில்தரும் காபி படு புண்ணியமானதும் திவ்யமானதுமாகும். பின்ன என்னங்க..அந்த வஸ்து மாட்டு ஹோமியமேதான்! ரோஹிணி தியேட்டர் பற்றி தனி பதிவே போடலாம் ஆனால் அது பாவத்தை கொண்டு சேர்க்கும். எனவே ஓவர் டூ சினி மினி ரெவியூ!படங்களின் முன் பின் நவீனத்துவ விமர்சனங்களை நெட்டில் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என்பதால் இது வேற மாதிரியான நச்சுனு ஒரு ரெவியூ!
முதல்ல... ஆயிரத்தில் ஒருவன்!

சோழநாடு சோறுடைத்து என்று இளம்பிராயத்தில் படித்தது ஏனோ கசப்பாக நினைவுக்கு வருகிறது. வரலாற்று படமா? ஃபேண்டஸி படமா என்ற குழப்பம் ஏ கிளாஸிலே இருக்குதுன்னா பி எண்ட் சி‍யில் கும்மியெடுத்திருக்கும் ரிசல்ட். பாவம் செல்வா.. படத்தில் எனக்குப் பிடித்த அம்சங்கள் நிறைய‌... மிக முக்கிய இரண்டு ஒளிப்பதிவும் இசையும். ராம்ஜியின் அயராத உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஃபில்டர் போட்டு எடுத்திருக்கும் அந்த தீவுக் காட்சிகள் திகில் ரகம். கிராஃபிக்ஸை பலர் வறுத்தெடுக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். 30கோடி பட்ஜெட்டில் பாதிக்கு மேல் நடிக்கும் நடிக நடிகையர்களுக்கே போய்விடும். மீதித் தொகையில் இந்த இரண்டரை வருடத்திற்குள் இந்த கிராஃபிக்ஸ் அசத்தல்தான். பேய்த்தனமாக வேலைபார்த்திருப்பார்கள். ஷங்கர் போன்ற கோமாளி டைரக்டர்கள் ஒரே கதையை உல்ட்டா பண்ணி 100 கோடியில் எடுக்கிறார்கள் என்பதை நினைவிருத்துங்கள் மக்களே! ஜி.வி.பிரகாஷ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பை சிக்கென பற்றிக் கொண்டார். பின்னணியில் புதுப்பாதை போட்டாலும் பாட‌ல்கள் எல்லாவற்றையும்விட ஈர்க்கிறது. 'ஓ ஈசா, தாய் தின்ற மண்ணே, உம்மேல ஆசைதான்'என எல்லாமே அசத்தல் ரகம். ரீமிக்ஸ் என்ற பெயரில் ஒரிஜினலைக் கெடுத்துக் கும்மியெடுக்கும் இமான், யுவன் போன்றவர்கள் ஜி.வி.பிரகாஷிடம் பாடம் படிக்கலாம். தேவையான இடத்தில் மட்டும் ரிதம் புரோக்ராமிங் பண்ணி அசத்தலாக போட்டிருக்கும் 'அதோ அந்த பறவைபோல' ரீமிக்ஸ் செமத்தியான ஐடியா.  தூக்கம் தொலைத்து உழைத்தவருக்கு ஸ்பெஷல் கைகுலுக்கல்கள். பார்த்திபனின் பாடி லாங்குவேஜில் ஆரம்பித்து காஷ்ட்யூம் வரை நம் மனதில் உள்ள.. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திருந்த மிகை மேக்‍அப் ராஜாக்களின் பிம்பத்தை அப்படியே தவிடு பொடியாக்கிவிடுகிறது இரண்டாம் பாதி. கற்பனைதான் என்றாலும் சின்ஸியராய் அடர் கரும் பேக்ட்ராப்பில் பிரமாண்டமான பாறைக் குகைகளை செட்டாக வடிவமைத்து கவனம் ஈர்க்கிறார் ஆர்ட் டைரக்டர் சந்தானம். படத்தின் கிளைமாக்ஸ் போரும் பார்த்திபனின் எஞ்சிய சோழப்படையின் போர்நுட்பமும் வன்னிக் காட்டையும் முல்லைத்தீவையும் நினைவுறுத்துகிறது. பாலியல் வன்புணர்வுக் காட்சிகளை நாசூக்காய் காட்டினாலும் மனதுக்குள் நெருஞ்சி முள்ளைப் பாய்ச்சுகிறது. சோழனின் பயணத்தைப்போல ஈழப்போராட்டமும் தொடரும் என்பதைப்போலவே எனக்கு அந்த இறுதி டைட்டில் மனதுக்குள் தோன்றியது. மற்றபடி சோழர்களை நரமாமிசம் சாப்பிட வைத்திருப்பதும், அவர்களுக்கு கருப்பு மை பூசியிருப்பதையும் 'சோழர்கள் காலத்தின் கோலம்' என்றளவில் எடுத்துக் கொள்ளவேண்டியதே அன்றி வரலாற்று திரிபு என்று செல்வாவின் மேல் சேற்றை வாரி இறைக்க வேண்டாமே ப்ளீஸ்.(நக்கீரன்,ஜூ.விமற்றும் ரிப்போர்ட்டரில் தலா ஒரு பேராசிரியர் என்றவிதத்தில் பேட்டிகள் அல்ரெடி கொடுத்தாச்சு) இந்தக் கதைக்கு செல்வாவின் பாத்திர தெரிவுகள் கனக்கச்சிதம். ரீமா,கார்த்தி மற்றும் ஆண்ட்ரியா தங்கள் பங்களிப்பை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். ஒரே குறையென்றால் துப்பாக்கி சண்டையின் போது சில இடங்களில் ஒழுங்கற்ற வரிசையில் நின்று கொண்டு தீபாவளி துப்பாக்கியைப்போல ஆட்டி ஆட்டி எந்திரத் துப்பாக்கியைக் கையாளுகிறார்கள் சிலர். (அப்படிலாம் சுட்டா உங்க முன்வரிவசை ஆட்களுக்கே கபால மோட்சம்தான் கிடைக்கும்ப்பா!) இதுபோன்ற குறைகள் ஆங்காங்கே தென்பட்டாலும் வரலாற்றை திரும்பிப் பார்க்க வைத்த செல்வாவுக்கு ராயல் சல்யூட் அடிக்கலாம்!
ஆயிரத்தில் ஒரு சினிமா!


அடுத்து தமிழ்ப் படம்....

நல்லவேளை 'ப்'பைச் சேர்த்துட்டாங்க. இல்லைன்னா அதுக்கும் ஒரு கூட்டம் போர்கொடி..சே..போர்க்கொடி தூக்கி இருக்கும்.
ஸ்கேரி மூவீஸ் வரிசையில் மூன்றாம் பாகத்தை அடிக்கடி சோனி பிக்ஸில் பார்ப்பதுண்டு. மனோஜ் நைட் சியாமளனின் த்ரில்லர் கதைகளையும் 'த ரிங்' போன்ற திகில் படத்தையும் செமத்தியாக‌ நக்கல் அடித்திருப்பார்கள். பென் ஹர் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியங்களையும் நக்கலடித்திருப்பார்கள். உண்மையில் அந்த படங்களைப் பார்த்திருப்பவர்களுக்கு இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் அவ்வளவு சிரிப்பை வரவழைக்கும். படம் நெடுக நிறைய அடல்ஸ் ஒன்லி ஜோக்குகள் இருந்தாலும் அத்தனையும் விரசமாக தெரியாது. 'ஸ்கேரி மூவீஸ் போன்ற படத்தை ஏன் யாரும் லொள்ளு சபாவைத் தாண்டி தமிழில் எடுக்கலை'என்று முன்பு நினைத்ததுண்டு. கடவுள் புண்ணியத்தில் தமிழிலும் ஸ்கேரி மூவீ்ஸாக‌ வந்து சேர்ந்திருக்கிறது 'தமிழ்ப்படம்'!
இனிமேல் விஜய் தன் அடுத்த படங்களின் ஓப்பனிங் பாடலுக்கு ஆடி நடிக்கும்போது கொஞ்சமாவது அடக்கி வாசிப்பார். 'பச்சை மஞ்சள் கருப்பு தமிழன்' என்று விளித்திருப்பது ரஜினிவரை வீரியமாய் தாக்கினாலும் விஜய்தான் ரொம்ப அடிவாங்குகிறார். கருத்தம்மாவில் ஆரம்பிக்கும் அதகள ஆட்டம் ,தளபதி,பாட்ஷா,பாய்ஸ்,காதலுக்கு மரியாதை,7G ரெயின்போ காலனி,நாயகன்,சிவாஜி,தூள்,மௌன ராகம்,காதலன்,காக்க காக்க,அபூர்வ சகோதரர்கள்,வைதேகி காத்திருந்தாள்,மொழி,கஜினி, அந்நியன்,ரன்,கந்தசாமி,போக்கிரி என சற்றே நீள்கிறது. ஹிட்படங்களில் பார்த்த காட்சிகளை தேவைக்கேற்ப அழகாக நீட்டியும் குறுக்கியும் நையாண்டி மேளா செய்திருக்கிற‌ார்கள். ஃபேமிலி சாங், பெடல் சுற்றி பெரியவனாவது.. முகம் காட்டாமல் ரோலிங் சேரில் உட்கார்ந்து எமகாதக வேலை செய்யும் வில்லன் டி என ஒரே ராவடி அட்டகாசம்தான். தளபதி படத்தின் அதே ஃப்ரேமை நினைவுறுத்தி ஆச்சர்யப்படுத்துகிறது நீரவ்ஷாவின் கேமரா. கிண்டல்களுக்கு எல்லை வகுக்காமல் ஒரு கட்டத்தில் தங்களைத் தாங்களே நக்கல‌டித்துக்குக் கொள்வது அழகு.'ஓவரா தண்ணியடிச்சதால தலைவேற சுத்துது.. மேல இவனுங்க வேற கேமராவை ரோல் பண்ணுறானுங்க.. நான் ப்ரியாவை காப்பத்தணும்' என்று சொல்லுமிடம் செம க்ளாஸ். ராமநாராயணன் செட்டு, ராமராஜன் ஹிட்டு என கிராமத்து கிளிஷெக்களையும் கிழித்து தோரணமாக தொங்க விட்டிருக்கிறார்கள். 'தீர்ப்பை மாத்துடா.. வண்டியைப் பூட்றா...ஆரும் அன்னந்தண்ணி பொளங்காதீங்கடா'என மெண்டலாய் பொன்னம்பலம் புலம்பும் இடம் ஜூப்பரு! டைரக்டர் அமுதன் விளம்பரபடங்கள் எடுக்கும் தொழிலில் இருந்து சினிமாவுக்கு வந்தவராம். பளிச் பளிச் ஐடியாக்களுக்கும் பஞ்சமில்லை. டபுள் மீனிங்கில் பேசும் வெண்ணிற ஆடை மூர்த்தியை காக்கா கபாலத்தில் கொத்துவதும், பேக்கேஜில் கிடைக்கும் சுத்தமான சுகாதாரமான டிரேட் மார்க் கள்ளிப்பாலும், "ஓ மகசீயா.."பாட்டும் மூணு சோறு பதம். (ஆனால் சிம்பு மேல அப்படி என்ன கோபம் அமுதன்? நாட்டாமை தீர்ப்புல காய்ச்சி எடுத்துருக்கீங்க?)
க்ளைமாக்ஸ்வரை நீ....ட்..டி கதை(?) அமைத்திருந்தாலும் எந்த‌ இடத்திலும் கொட்டாவி வரவில்லை. அதுக்குக் காரணம் சிவாவின் அமர்க்களமான நடிப்பும்கூட. படத்தைவிட படத்தின் நாளிதழ் விளம்பரங்கள் கவனம் ஈர்க்கிறது. அதனாலேயே அமுதனின் அடுத்த படைப்பை எதிர்பார்க்க வைத்துவிடுகிறது!
தமிழ்ப்படம்.. செம டேஸ்ட் பப்படம்!

கட்டக் கடைசியா... கோவா!

'போட்டத் திட்டங்கள் கைகூடும் நாள்வந்தது'ன்னு ஒரு பாடல்வரி படத்துல இருக்கு. முன்பாதியில் இருந்த விறுவிறுப்பு பின்பாதியில் சுத்தமாக இல்லாததால் வெங்கட்பிரபுவின் ஹாட்ரிக் திட்டம் கைகூடவில்லை. படத்தின் டைட்டில் ஸ‌ாங் ''ஏழேழு தலைமுறைக்கும்..." பாடலை அப்படியே தன் அப்பா கங்கை அமரன் ஸ்டைலில் பாட்டு பாடி ஷூட் செய்து பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணிவிடும் வெங்கட்பிரபு இன்டெர்வெல் வரை கோலோச்சுகிறார். முன்பாதியில் வரும் பஞ்சாயத்து காட்சிகள் அவர் திறமைக்கு சாட்சி.'அடங்கொப்பன் தாமிரபரணியில தலைமுழுக' என வில்லத்தனம் பண்ணும் சண்டியர் ஆனந்தராஜில் ஆரம்பித்து மொத்தபேரையும் சீரியஸாய் பேசவிட்டே நம்மை சிரிக்க வைக்கும் அந்த டெக்னிக்கில் வெங்கட்பிரபுவின் டிரேட் மார்க் டச். ஃபாரின் கனவோடு கோவாவுக்கு வரும் நண்பர்களில் சாமிப்பிள்ளை பிரேம்ஜிக்கு மட்டும் அதிக முக்கியத்துவ‌ம் கொடுத்து பாசமான அண்ணனாகிறார் வெங்கட்பிரபு. கிடைக்கும் கேப்பில் பட்லர் இங்கிலீஷ் பேசி காமெடி ராவடி பண்ணும் ஜெய் செஞ்சுரி போடாவிட்டாலும் 50 அடித்துவிட்டு பெவிலியன் திரும்பும் கௌரவ பேட்ஸ்மேன்தான். 'டவல், கோ யா' என அவர் இங்கிலீஷில் வைபவை லந்து பண்ணுமிடம் டரியல். பியா சிக்கன‌ காஷ்ட்யூமில் சிக்கென இருக்கிறார்.
தங்களின் நிஜ லைஃப் ஸ்டைலிலேயே படம் அமைந்துவிட்டதாலே என்னவோ ஸ்கிரீனையும் தாண்டி காக்டெய்ல் வாசனை. கோவாவுல சொல்லுறதுக்கு தண்ணி, பொண்ணுகளைத் தவிர ஒண்ணுமே இல்லையா நைனா?
ஆனாலும் படத்தில் எனக்கு பிடித்த அம்சம் ஒன்று உண்டு. ஹோமோ செக்ஸுவல்ஸ் நார்மலானவர்கள் என்று அழகாக சொல்லி மிதமான காமெடியோடு சம்பத்தையும் அரவிந்த்தையும் உலாவ விட்டிருப்பதுதான் அது. அவர்களுக்குள்ளான‌ காதல்.. ஈகோ என மென்மையான பக்கங்களை காட்டி இருப்பது தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை. நல்லகாலம் அவர்களை 'வேட்டையாடு விளையாடு' டைப் சைக்கோக்களாக காட்டாமல் நல்லவர்களாக காட்டி இருப்பதற்காகவே தட்டிக் கொடுக்கலாம் வெங்கட் பிரபுவை! சிநேகா கேரக்டர் சடுதியில் வந்துபோகிறது. மீடியாவில் இதுக்கா.. இம்புட்டு பில்டப்பு என நினைக்க வைக்கிறது. மலேசியா லங்காவி தீவை அழகாக கோவாவோடு மேட்ச் பண்ணியிருப்பதிலும், கோவாவின் குளுமையை கண்களுக்குள் கொண்டு சேர்ப்பதிலும் ஷக்தி சரவணனின் கேமரா சுற்றி சுழன்றிருக்கிற‌து. யூத்ஃபுல் இசையால் படத்துக்கு பால்கோவா இனிப்பை கொடுத்திருக்கிறார் யுவன்.
இரண்டாம்பாதி பத்து லார்ஜ் உள்ளே இறக்கியதைப்போல தறிகெட்டு சுத்துவதை தவிர்த்து நச்சுன்னு நாலு ஸீன் வச்சிருந்தால் கோவா ட்ரிப் முழுமையாகி இருக்கும்.
கோவாவை எதிர்பார்த்துப் போனால் மங்களூர் வரை மட்டுமே!

2 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

உங்க ப்ளாக் க்ளிக் செஞ்சா புக் மார்க் செய்ய சொல்லுது.. அத நீக்கவும்

Dr.Rudhran சொன்னது…

i agree with all three reviews. i like your style too.